அறிஞராவதற்கு புத்தகங்களைப் படிக்க வேண்டுமா?
ஒரு பொழுது கூடத் திறக்காவிடினும் சரி, ஒரு மொழி கூடப் படிக்காவிடினும் சரி, நூல்களைப் போல வீட்டை அலங்கரிக்கும் அழகான பொருட்கள் வேறு கிடையாது.
- ஸிட்னி ஸ்மித்
நூலை உண்டாக்கியவருடைய ஆன்மாவைப் போலவே நூலும் உயிராற்றல் உடையதாகும்.
- மில்டன்
நல்ல புத்தகமே தலைச் சிறந்த நண்பன் இன்று போலவே என்றும்.
- மார்டின் டப்பர்
உண்மையிலேயே நல்ல நூல்கள் காட்டில் மலரும் பூக்களைப்போல இயற்கையானதும், எதிர்பாராத அழகானதும், காரணம் கூற முடியாத பூரணமானதுமான வஸ்துக்கள் ஆகும்.
- தோரோ
தன் பெயரை அச்சில் காண்பது அனைவருக்கும் சந்தோஷமே. புத்தகத்தில் விஷயம் ஒன்றுமில்லாவிடினும் புத்தகத்தைப் புத்தகமில்லை என்று யார் கூறுவர்?
- பைரன்
வாசிக்கத் தகுந்த நூல் வாங்கவும் தகுந்ததே.
- ரஸ்கின்
மருந்தைப் போலவே நூல்களையும் விவரமறிந்தோர் யோசனை கேட்டு உபயோகிக்க வேண்டுமேயன்றி விளம்பரத்தைப் பார்த்தன்று.
- ஸ்கிரன்
என்னையா ஏழை என்று கூறுகிறாய்? என்னிடமுள்ள நூல்கள் இராஜ்யத்திலும் உயர்ந்தன அல்லவோ?
- ஷேக்ஸ்பியர்
தான் படிக்கக்கூடிய அளவு நூல்களை வாங்க முடியாதவன் தரித்திரம் மிஞ்சியவனாகவே இருக்க வேண்டும்.
- ஆவ்பரி
இதயத்திலிருந்து உதிக்கும் நூலே இதர இதயங்களையும் கவர வல்லது. அது முடியுமானால் வேறு கலைத்திறமை எதுவும் அவசியமில்லை.
- கார்லைல்
ஒருமுறை படிக்கத் தகுந்த அநேக நூல்கள் இருமுறை படிக்கத் தகுந்தவைகளாகவும் இருக்கும்.
- மார்லி
தீமையோடு நம்மைப் பழக்கப்படுத்தும் நூல்கள் எல்லாம் தீயவைகளே.
- ஆவ்பரி
சாத்தானுடைய நட்பைத் தரும் நூல்களைப் படிக்காதிருப்பது சாலவும் நன்று.
- நீபூர்
நண்பரைப் போலவே நூல்களும் தேர்ந்தெடுத்த சிலவே தேவை.
- ஜயினரியான
சாதாரணமாக நூல்கள் என்பன நம்முடைய தவறுகளுக்குப் பெயரிடுவதைத் தவிர வேறொன்றும் செய்வதில்லை.
- கதே
புத்தகங்கள் எவ்வளவு நல்லவையாயினும் எப்பொழுதுமே சந்தோஷம் தந்து கொண்டிராது. அறிவு எப்பொழுதும் ஆகாரத்தில் தேடக் கூடியதாக இருப்பதில்லை.
- க்ராப்
சில நூல்களைச் சுவைத்தால் போதும், சில நூல்கள் விழுங்கவும் வேண்டும். ஆனால், வெகு சில நூல்களே மென்று ஜீரணிக்கத் தகுந்தவை.
- பேக்கன்
அறிஞனாகவும் சான்றோனாகவும் செய்வது பல நூல்களைப் படிப்பதன்று, சில நூல்களை முறையாகக் கற்பதேயாகும்.
- பாக்ஸ்டர்
மனிதனைக் கொல்பவன் அறிவுள்ள பிராணியை ஆண்டவன் பிம்பத்தைக் கொல்கிறான். ஆனால் புத்தகத்தைக் கொல்பவனே அறிவை, ஆண்டவன் பிம்பத்தின் கண்ணைக் குத்திக் கொல்பவனாகிறான்.
- மில்டன்
அவன் சாமர்த்தியசாலியாக இருக்கலாம். ஆனால், நான் அறிந்தமட்டில் அவன் மூளை வேலை செய்ய முடியாத அளவு அநேக புத்தகங்களைத் தலையில் ஏற்றிவிட்டான்.
- ராபர்ட் ஹால்
என் மனத்துக்குகந்த நூல்களை மட்டும் கொடுத்து என்னை என் வாழ்வு முழுவதும் சிறையிட்டாலும் நான் கஷ்டப்படமாட்டேன்.
- மாஜினி
சான்றோர்களுடைய நூல்களுடனேயே பழகு, சால்பின்றி சாமர்த்தியம் மட்டும் உடையவர்களுடைய நூல்களைக் கையால் தொடக்கூடச் செய்யாதே.
- மெல்வில்
ஆண்டவனுக்கு வந்தனம் உணவு உண்ணுமுன் கூறுவதினும், புது நூலொன்று வெளிவந்ததும் கூறுவதே பொருந்தும்.
- லாம்
படிப்பில் பிரியமில்லாத அரசனாயிருப்பதை விட ஏராளமான நூல்களுடைய ஏழையாயிருப்பதையே விரும்புவேன்.
- மக்காலே
நூல் கற்பவன். அவனுக்காகவே உலகம் ஆக்கப்பட்டுள்ளது. அவன் எந்த தேசத்திலும் இருப்பான், எல்லாக் காலங்களிலும் வாழ்வான்.
- ஹெர்ஷல்
படித்துக்கொண்டே இருந்தால் அறிவு பெருகும் என்று எண்ணுவது, உண்டு கொண்டே இருந்தால் பலம் பெருகும் என்பதை ஒக்கும்.
- புல்லர்
படிப்பானது அறிவு தரவேண்டிய விஷயங்களையேத் தரும். படித்தவற்றைச் சிந்தித்தலே படித்தவற்றை நமக்குச் சொந்தமாகச் செய்யும்.
- லாக்
மற்றவர்களைப் போலவே நானும் படித்திருந்தால், அவர்களைப் போலவே நானும் முட்டாளாய் இருந்திருப்பேன்.
- ஹாப்ஸ்
நூல்களை முறையாகக் கற்றல் நன்மை தரும். ஆனால் இன்பம் அளிப்பது முறையின்றிக் கற்றலே.
- ஸெனீக்கா
நூல்களைப் படிப்பது ஒன்றிலேயே காலம் முழுவதையும் செலவுசெய்வோர் சோம்பேறிகளில் பெரிய சோம்பேறிகள்.
- ஸிட்னி ஸ்மித்
சிந்தியாது படிப்பது சீரணியாது உண்பதை ஒக்கும்.
- பர்க்
படித்தல் விஷயங்கள் நிறைந்த மனிதனாகச் செய்யும். சம்பாஷித்தல் எந்தச் சமயத்திலும் பேசத்தக்க மனிதனாகச் செய்யும். எழுதுதல் எதிலும் திட்டமான கருத்துக்கள் உள்ள மனிதனாகச் செய்யும்.
- பேக்கன்
சிந்தியாது படித்தல் மூளையைச் செழிப்புள்ளதாகச் செய்யுமேயன்றி ஒருநாளும் தெளிவுள்ளதாகச் செய்யாது.
- நாரிஸ்
எவ்வளவு படித்தாலும் பலதிறப்பட்ட நூல்களைப் படிப்பதே நல்லது. ஒரே வகை நூல்களை மட்டுமே படிப்பவன் தவறான அபிப்பிராயங்கள் உடையவனாவான். அறிவு வளர்ச்சி சம்பந்தமாய் எனக்குள்ள திடமான அபிப்பிராயம் இது.
- டாக்டர் அர்னால்டு
படிப்பின் நோக்கம் ஆட்சேபம் செய்தலும், ஆராயாது நம்பிக்கை கொள்ளுதலும், வாதம் செய்தலும் அல்ல. ஆய்ந்து சீர்தூக்கித் தீர்மானித்தலே.
- பேக்கன்
வண்டுக்கு ஏழை முற்றத்திலுள்ள ஒரே செடியில் கூடத் தேன் கிடைக்கும். வண்ணத்துப் பூச்சிக்கோ அரசர் தோட்டத்தில் கூட அணுவளவு தேனும் அகப்படமாட்டாது.
- எட்வர்ட் புல்லக்
படிப்பு அறிவிற்கான உபகரணங்களாக மட்டுமே உதவும்: படிப்பதை நமதாக்குவது சிந்தனையே. நாம் அசைபோடும் இனத்தைச் சேர்ந்தவர். விஷயப் பெரும் சுமையை நம்மிடம் திணித்துக் கொண்டால் மட்டும் போதாது. அதை மறுபடியும் சுவைத்தாலன்றி போஷணையும் பலமும் உண்டாகாது.
- லாக்
சிலர் வாழ்நாள் முழுவதும் படிக்கிறார்கள். இறப்பதற்குள் எல்லாவற்றையும் படித்துத் தீர்த்தும் விடுகிறார்கள். யோசனை செய்வதைத் தவிர.
- டோமேர்கு
கற்றவற்றையும் கற்க வேண்டியவற்றையும் கருத்தில் வைப்பவனேக் கல்வியில் விருப்பமுடையவன்.
- கன்பூஷியஸ்
முட்டாள்களுக்கு அர்த்தமாவதேயில்லை. சாதாரணமான அறிவுடையவர் சந்தேகமற அறிந்து விட்டதாக எண்ணிக்கொள்வர். பேரறிஞர்க்கு விளங்காத பகுதிகள் இருந்தாலும் இருக்கும். சாமர்த்தியம் காட்ட விரும்புவோர் தெளிந்தவற்றைத் தெளிவாயில்லை என்பர், தெளிவாயில்லாதவற்றை அர்த்தமாக்கிக் கொள்ள முயல்வர்.
- லா புரூயர்
கற்பவை கற்கவும், அஞ்சுவதஞ்சவும், நிச்சயமாக நன்மை வரும் என்று நம்பவும், நன்மை அருளும்படி பிரார்த்திக்கவும், நன்மை செய்ய முனையவும் கொடுத்து வைத்தவரே பேரின்பம் துய்ப்பவர். தர்க்கம் செய்யவேண்டும் என்பதற்காகவோ ஏளனம் செய்ய வேண்டும் என்பதற்காகவோ கற்பவர் பிறவாமலே இருந்தால் எத்துணை நன்மையாயிருக்கும்.
- ஸ்காட்
படிக்கத் தெரியாதவனைப் போலவே படிக்கத் தகாதவைகளைப் படிப்பவனும் நிரட்சர குட்சியே ஆவன்.
- தோரோ
தொகுப்பு:- மு. சு. முத்துக்கமலம்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.