கடவுளைப் பற்றி சில அறிஞர்கள்
கடவுளைத் தன்னில் காணாதவனுக்குக் கடவுள் இல்லை.
- டால்ஸ்டாய்
மக்களிடையே கடவுளை நாடுக.
- நோவாலிஸ்
நானில்லையானால் கடவுளும் இருக்க முடியாது.
- எக்கார்ட்
கோவிலில் வைத்துக் கும்பிடும் கடவுளை மனிதனே சிருஷ்டித்தான். அதனால் மனிதன் தன்னைப் போலவே கடவுளையும் படைத்திருக்கிறான்.
- ஹெர்மீஸ்
கடவுள் கோவில் கட்டும் இடத்தில் எல்லாம் சாத்தானும் ஒரு கோவில் கட்டிவிடுகிறான். அதுமட்டுமா? அவன் கோவிலுக்கே அடியார்களும் அதிகம்.
- டீபோ
மனிதனுக்கு எத்துணைப் பைத்தியம்! ஒரு புழுவைச் சிருஷ்டிக்க முடியாது. ஆயினும் கணக்கில்லாத கடவுளரைச் சிருஷ்டித்துக் கொண்டேயிருக்கிறான்.
- மான்டெய்ன்
கடவுள் தகுதியுடையவர்க்குத் தாட்சண்யம் காட்டுவார். தகுதியற்றவர்களே நியாயத்தை மட்டும் வழங்குவர்.
- பிளாட்டஸ்
தெய்வபக்தி லட்சியமன்று, சாதனமே. அந்தச் சாதனத்தால் ஆன்ம விருத்தி அடையலாம். வேஷதாரிகளே தெய்வபக்தியை லட்சியமாகச் செய்து கொள்வர்.
- கதே
பரிபூரண நிலையில் ஆன்மாவுக்கு ஏற்படும் சொற்ப அவாவை வைத்தே கடவுள் இருப்பதைக் கணித சாஸ்திர முறையைக் காட்டிலும் அதிகமாய் நிரூபித்துக் காட்டலாம்.
- ஹெம்ஸ்டர் ஹூஸ்
'அவன்' என்னும் மொழி அவனைக் குறைத்து விடுகிறது.
- டால்ஸ்டாய்
ஆண்டவன் இலன் எனினும் அறநெறி நிற்போம் என்பவரே அவன் அடியராவர்.
- ராபர்ட் பிரெளனிங்
ஒருவன் கடவுள் பக்கம் இருப்பின், அவன் ஒருவனே பெரும்பான்மைக் கட்சி ஆகிவிடுவான்.
- வெண்டெல் பிலிப்ஸ்
ஆன்மாவுக்கு வெளியே கடவுளைத் தேடினால் கடவுளின் விக்கிரகங்களை மட்டுமேக் காண்பாய். ஆன்மாவை ஆராய்ந்தால் அங்குள்ள உணர்ச்சிகளும் எண்ணங்களும் ஆண்டவனை அறிவிக்கும். அயலார்க்கு நன்மை செய்யும் பொழுதுதான் ஆண்டவனைத் துதிப்பதாகக் கூறமுடியும்.
- ஸ்வனரோலா
தேவைகள் குறையும் அளவுக்கே தெய்வத்தன்மை அடைவோம்.
- சாக்ரடீஸ்
பரிபூரணமே தேவரை அளக்கும் கோல். பரிபூரணத்தில் பற்றே மனிதரை அளக்கும் கோல்.
- கதே
ஆன்ம எளிமை கண்டே ஆண்டவன் மகிழ்கிறான். எளிமைக் குணத்தைக் கண்டுதான் மகிழ்கிறான்; இறக்கும் குணத்தைக் கண்டன்று.
- கதே
குழந்தை இயல்புடையவர்-அதாவது எளிதில் மகிழ்பவர், அன்பு செய்பவர், பிறர்க்கும் மகிழ்வூட்டுபவர். இவர்க்கே கடவுள் ராஜ்யம்.
- ஆர். எல். ஸ்டீவன்ஸன்
கடவுள் பார்ப்பதைப் போல் எண்ணி மனிதரோடு வாழ்க மனிதர் கேட்பதைப் போல் எண்ணிக் கடவுளோடு பேசுக.
- ஸெனீகா
மனிதர் அறிய விரும்பாதது எதையும் கடவுளிடம் கேட்காதே. கடவுள் அறிய நீ விரும்பாதது எதையும் மனிதனிடம் கேட்காதே.
- ஸெனீகா
வட்டத்தில் எந்தவிடத்திருந்தும் மத்திக்குச் செல்ல வழியுண்டு. எவ்வளவு பெருந் தவறானாலும் இறைவனிடம் செல்ல வழியுண்டு.
- ரூக்கர்ட்
கடவுளை அறிதல், கடவுளிடம் அன்பு செலுத்துதல் இரண்டிற்கும் இடையிலுள்ள தூரம் எவராலும் இவ்வளவு என்று சொல்ல முடியாது.
- பாஸ்கல்
கடவுளை அறிந்துவிடுவோமென்று எதிர்பார்க்க இயலாது. ஆனால், கடவுளை அறியாமல் வேறு எதையும் அறியவும் எதிர்பார்க்க இயலாது.
- பூடின்
மனிதர்க்குப் பேருணர்ச்சி தந்து போருக்கு நடத்திச் செல்லும் மூன்று மொழிகள் கடவுள், நித்யத்வம், கடமை என்பன. முதல் விஷயம் அறிவுக்கு அப்பாற்பட்டது. இரண்டாவது நம்ப முடியாதது, மூன்றாவது ஒரு காலும் அலட்சியம் செய்ய முடியாதது.
- மையர்ஸ்
ஏதேனும் பழுதிலாத ஒன்றை இயற்ற முயல்வதைப்போல் ஆன்மாவைப் புனிதமாக்குவதும் சமயவாழ்வு வாழச் செய்வதுமானது வேறெதுவும் இல்லை. ஏனெனில் பரிபூரணமே கடவுள். அதனால் பூரணத்தை நாட முயல்பவன் கடவுள் தன்மையை நாடுபவனாவான்.
- மைக்கேல் எஞ்சலோ
கடவுளின் நீதி மெதுவாகத்தான் நகரும். ஆனால் ஒருபொழுதும் வழியில் தங்குவதில்லை. தவறு செய்தவனைச் சேர்ந்தேவிடும்.
- ராபர்ட் பிரெளனிங்
தொகுப்பு: உ. தாமரைச்செல்வி.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.