மருத்துவ(ர்) பழமொழிகள்
காலம்தான் தலைச்சிறந்த மருத்துவர்.
- யூதர்
ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன் (மருத்துவன்).
- தமிழ்நாடு
மருத்துவரின் மரங்களுக்கு நம் கண்ணீர்தான் தண்ணீர்.
- இந்தியா
நீதிபதி, மருத்துவர் இருவரிடமிருந்தும் இறைவன் என்னைக் காப்பானாக.
- துருக்கி
உடலைக் குணப்படுத்தலாம், மனதைக் குணப்படுத்த முடியாது.
- சீனா
மருத்துவர் தூரத்திலிருந்து கொண்டே மருந்து அனுப்புதல், குருட்டுக் கண்ணால் பார்ப்பது போலாகும்.
- யூதர்
நோயைச் சொன்னால்தான், குணமாக மருந்து கிடைக்கும்.
- பிரான்ஸ்
மெத்தப் படித்த மருத்துவரை விட, ஆக்கமுள்ள மருத்துவர் மேல்.
- ஜெர்மனி
மருத்துவர் இளமையாயிருந்தால், எப்பொழுதும் மூன்று சவக்குழிகள் தயாராயிருக்க வேண்டும்.
- ஜெர்மனி
தனக்குத்தானே வைத்தியம் செய்து கொள்ளும் நோயாளி மூடன்.
- இங்கிலாந்து
பல மருத்துவர்கள் பார்த்தால், மரணம் நிச்சயம்தான்.
- செக்
தண்டனையடையாமல் கொல்லக்கூடியவர் மருத்துவர் ஒருவரே.
- ஹங்கேரி
ஒரு தொழிலும் தெரியாதவன் மருத்துவனாகிறான்.
- இத்தாலி
மருத்துவர்கள் அதிகமானால், நோய்கள் பெருகும்.
- போர்ச்சுகல்
மருத்துவர்களும் நீதிபதிகளும் பயமில்லாமல் கொலை செய்கிறார்கள்.
- ரஷ்யா
ஒவ்வொரு நோய்க்கும் மருத்துவரை நாடவேண்டாம்; ஒவ்வொரு வழக்குக்கும் வழக்குரைஞரை நாட வேண்டாம்.
- ஸ்பெயின்
நீ மருத்துவரை வெறுத்தால், நோயையும் வெறுக்க வேண்டும்.
- ஆப்பிரிக்கா
மருத்துவர்களில் வயதானவர், வழக்குரைஞர்களில் வாலிபர்.
- இங்கிலாந்து
மருத்துவரிடத்திலும், வழக்குரைஞரிடத்திலும் உண்மையை மறைக்காதே.
- இத்தாலி
மருத்துவனுக்குக் கொடுப்பதை நல்ல வாணியனுக்குக் கொடு.
- தமிழ்நாடு
ஒன்றும் தெரியாத மருத்துவன் கொலைகாரனைத் தவிர வேறில்லை.
- சீனா
இளம் நாவிதன், இளம் மருத்துவன் இருவரிடமும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
- இங்கிலாந்து
மருத்துவருக்குக் கொடுப்பதை ரொட்டிக்காரனுக்குக் கொடு.
- பிரான்ஸ்
நல்ல மருத்துவர் எவரும் தாம் மருந்து உண்பதில்லை.
- இத்தாலி
மருத்துவர் மனத்திற்கு ஆறுதலளிப்பவரைத் தவிர வேறில்லை.
- லத்தீன்
சூரியன் ஒரு போதும் வராத இடத்திற்கு வைத்தியர் அடிக்கடி வருவார்.
- செக்
தொகுப்பு:- மு. சு. முத்துக்கமலம்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.