* விக்கிரகம் கடவுளே என்று கூறலாம். கடவுளே விக்கிரகம் என்று நினைக்கும் தவறைத் தவிர்க்க வேண்டும்.
* இயற்கையை வெல்வதற்கே மனிதன் பிறந்திருக்கிறான், அதற்குப் பணிந்து போவதற்கல்ல.
* நன்மையிலும் தூய்மையிலும் வலிமை உள்ளது.
* நீ உன்னை நம்புவதற்கு முன் கடவுளை நம்ப முடியாது.
* மிருகத்தை மனிதனாகவும், மனிதனைக் கடவுளாகவும் உயர்த்தும் கருத்தே மதம்.
* உண்மையை ஆயிரம் விதமாகக் கூறலாம், அவை ஒவ்வொன்றும் உண்மையே.
* உண்மைக்காக எதையும் துறக்கலாம், ஆனால் எதற்காகவும் உண்மையைத் துறக்கக் கூடாது.
* எல்லோரிடமும் அன்பாயிரு. துன்பப்படுபவர்களிடம் பரிவுகொள். எல்லா உயிர்களையும் நேசி. யார்மீதும் பொறாமைப் படாதே. பிறரது குற்றங்களைக் காணாதே.
* உண்மையில் இருப்பது ஒரே ஆன்மாதான், மற்றவையெல்லாம் அதன் தோற்றங்களே.
* சுவைப்புலனை அதன் விருப்பப்படி விட்டால், மற்ற புலன்களும் கடிவாளமின்றி ஓடும்!
* ஞானம், பக்தி, யோகம், கர்மம் இவை முக்திக்கு அழைத்துச் செல்லும் நான்கு பாதைகள். தனக்கு மிகவும் ஏற்புடைய வழியையே ஒருவன் பின்பற்ற வேண்டும். இந்தக் காலத்தில் கர்மயோகத்தை வலியுறுத்த வேண்டும்.
* உண்மையான மதத்தின் எல்லைக்குள் நூலறிவிற்கு நுழைய உரிமை இல்லை.
* நீ ஏதாவது தீமை செய்ய விரும்பினால், உன் பெரியோர்களின் முன்னிலையில் அதைச் செய்!
* குருவின் அருளால் சீடன் நூல்களைக் கற்காமலேயே அறிஞன் ஆகிறான்.
* பாவம், புண்ணியம் என்று எதுவும் இல்லை. உள்ளதெல்லாம் அறியாமை மட்டுமே. இரண்டற்ற ஒன்றை உணர்வதால் இந்த அறியாமை விலகுகிறது.
* துறவு பூணும் வலிமை பெற வேண்டுமானால், உணர்ச்சிவசப் படுவதைக் கடக்க வேண்டும். உணர்ச்சி மிருகங்களுக்கு உரியது. விலங்கினம் முற்றிலும் உணர்ச்சியால் ஆனது.
* சொந்தப் பிள்ளைகளுக்காகச் செய்கின்ற தியாகம் உயர்தரத் தியாகம் அல்ல. மனிதத் தாய் செய்வது போன்ற தியாகங்களை மிருகங்களும் இயல்பாகச் செய்கின்றன. அது உண்மையான அன்பின் அறிகுறி அல்ல, அது கண்மூடித்தனமான உணர்ச்சி.
* பலவீனத்தைச் சக்தி போல், உணர்ச்சியை அன்பு போல், கோழைத்தனத்தை வீரம் போல் காட்டவே நாம் எப்போதும் முயன்று வருகிறோம்.
* வீண் ஆடம்பரம், பலவீனம் முதலியவை தோன்றும்போது, ‘இது உனக்கு உகந்ததல்ல, உனக்கு இது தகாது’ என்று மனத்திற்குக் கூறு.
* எல்லோரிலும் இறைவன் உள்ளான், ஆன்மா இருக்கிறது; மற்றவையெல்லாம் கனவு, மனமயக்கம்.
* கடவுளை அறிய உதவும் எந்தப் பிரிவும் விரும்பத்தக்கதே. இறையனுபூதியே மதம்.
* நாத்திகன் கொடையாளியாக இருக்கலாம், ஆன்மீகவாதியாக இருக்க முடியாது. ஆனால் ஆன்மீகவாதி கொடுக்கும் பண்பு உடையவனாக இருந்தாக வேண்டும்.
* குரு ஆவதற்கென்று பிறந்தவர்களைத் தவிரப் பிறர் குரு ஆவதற்கு விரும்பி அழிந்து போகின்றனர்.
* மிருகத் தன்மை, மனிதத் தன்மை, கடவுள் தன்மை இவற்றின் கலவையே மனிதன்.
* பொருட்களில் மாற்றம் செய்வதால் அவை முன்னேறுவதில்லை, நாமே முன்னேறுகிறோம்.
* உண்மைக்காக நான் வாழ்கிறேன். உண்மை ஒருபோதும் பொய்யுடன் இசைந்து செல்ல முடியாது. உலகனைத்தும் என்னை எதிர்த்தாலும், இறுதியில் உண்மையே வெல்லும்.
* மகிழ்ச்சி தன் தலை மீது துயரக் கிரீடத்தை அணிந்தே மனிதனின் முன்னால் வருகிறது. மகிழ்ச்சியை வரவேற்பவன் துயரத்தையும் வரவேற்றேயாக வேண்டும்.
* இந்தப் பிறவியில் முக்தி பெற இயலாவிட்டால், அடுத்த பிறவியில் அல்லது பிறவிகளில் முக்தி பெறுவதற்கு என்ன உத்தரவாதம்?