* நூறு கிணறுகள் வெட்டுவதை விட, ஒரே ஒரு குளம் வெட்டுவது சிறந்தது. நூறு குளங்கள் வெட்டுவதை விட, ஒரு யாகம் செய்வது சிறந்தது. நூறு யாகங்கள் செய்வதை விட, ஓர் உத்தம மகனைப் பெறுவது சிறந்தது. நூறு உத்தம புத்திரர்களைப் பெறுவதை விட, வாய்மையைக் கடைப்பிடிப்பது சிறந்தது.
* ஒரு தராசில், ஆயிரம் அச்வமேத யாகங்களின் புண்ணியத்தை ஒரு தட்டிலும், உண்மையைச் சொல்பவனுக்குக் கிடைக்கும் புண்ணியத்தை மற்றத் தட்டிலும் வைத்தால், உண்மையைச் சொல்பவனின் புண்ணியம் வைக்கப்பட்டுள்ள தட்டுத்தான் கீழே இறங்கும்.
* விஷய (லௌகிக உலக) ஆசை அதை அனுபவிப்பதனால் குறைவதில்லை. தீயில் நெய்யை ஊற்றியதும், அது எப்படி மேன்மேலும் கொழுந்து விட்டு எரிகிறதோ, அது போலவே அனுபவிக்க அனுபவிக்க ஆசை அதிகரிக்கத்தான் செய்யும்.
* அறிவாளிகள் எட்டாத பொருளுக்கு ஆசைப்படுவதில்லை. கையை விட்டுப் போன தகவல்களைப் பற்றி வருத்தப்படுவதில்லை.
* எவர் செயல்களை எண்ணித் துணிகிறார்களோ, காலத்தை வீணாக்குவதில்லையோ, மனதைத் தம் வசம் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறார்களோ அவர்களே அறிவாளிகளாவர்.
* கல்வியின்றிக் கர்வம் கொள்பவர், வறுமையில் வாடிக் கொண்டிருந்தும் மனக்கோட்டைகள் கட்டுபவர்கள், வேலை செய்யாமலே பணம் சம்பாதிக்க விரும்புகிறவர்கள். இவர்களை மூடர்கள் என்றுதான் அறிஞர் கூறுவர்.
* தங்களிடம் குற்றம் இருந்தும், பிறரிடம் குற்றம் கண்டுபிடிப்பவர்களும், தாங்கள் சாமர்த்தியமில்லாதவர்களாக இருந்தும், பிறர் மீது கோபம் கொள்கிறவர்களும் மகாமூடர்கள்.
* தம்மை விடப் பலசாலிகளுடன் விரோதம் கொண்டுள்ளவர்களுக்கும், எல்லாப் பொருள்களையும் இழந்தவர்களுக்கும், காம ஆசை கொண்டவர்களுக்கும், திருடர்களுக்கும் இரவில் தூக்கம் வராது.
* நியாய வழியில் சம்பாதித்த பொருளை இரண்டு வழிகளில் துஷ்பிரயோகம் செய்யலாம். ஒன்று, தகுதியுள்ளவர்களுக்குக் கொடுக்காமல் இருத்தல், மற்றொன்று, தகுதியற்றவர்களுக்குக் கொடுத்தல்.
* வல்லமை பெற்றிருந்தும் கோபம் கொள்ளாதவர்களும், வறியவர்களாக இருந்தும் தானம் செய்பவர்களும் சுவர்க்கத்திற்கும் மேலான பதவியை அடைவார்கள்.
* தன் குடும்பத்தைச் சேர்ந்த வயது வந்தவர்கள், நல்ல குடும்பத்தில் பிறந்து, இப்பொழுது கஷ்டநிலையில் இருப்பவர்கள், பொருளற்ற நண்பர்கள், மக்கட்பேறு இல்லாத சகோதரி ஆகியோரை மனிதன் என்றும் காப்பாற்ற வேண்டும்.
* பொறுமைசாலிகளை மற்றவர் சாமர்த்தியமற்றவர்கள் என்று நினைத்துக் கொள்ளலாம். ஆனால், அதைப் பொறுமைசாலி பொருட்படுத்தக் கூடாது. சாமர்த்தியமற்றவர்களுக்குப் பொறுமை குணமாக இருக்கலாம். ஆனால், சாமர்த்தியசாலிகளுக்கோ அது ஓர்அழகிய ஆபரணமாகும்.