* முத்தமிழ், சூழ்நிலையை மனித வாழ்வின் சூழ்நிலையை, வளப்படுத்தும் வகையிலே பண்படுத்தப்படவேண்டும்; பரப்பப்படவேண்டும்; பயன்படுத்தப்படவேண்டும்.
* அறிவு ஒரு தொடர்கதை! அதற்கு ஆசிரியர்கள் தொடர்ந்து தோன்றியபடி இருக்கிறார்கள்; இனியும் தோன்றுவார்கள். உள்ளங்கவர் புத்தகங்கள் மேலும் பலப்பல வெளி வந்தபடிதான் இருக்கும்.
* தமிழில் எல்லாவகைக் கருத்துக்களும், வாழ்வை வளப்படுத்தும் எல்லா முறைகளும் எழுதப்பட வேண்டும்.
* தமிழரைத் தட்டியெழுப்பும் தன்மான இலக்கியங்கள் தேவை! தன்னம்பிக்கையூட்டும் ஏடுகளே தேவை! மதியைப் பெருக்கி, விதியைத் தொலைத்திடும் விளக்க நூல்கள் ஏராளமாகத் தேவை!
* கால வேகத்திற்கு ஏற்ற முறையிலே, விஞ்ஞானம் வளர்ந்து முன்னேறி வரும் இந்த நாளிலே, அகில உலகின் நிலையையும் விளக்கிடும் ஏடுகளைத் தமிழில் தமிழர்கட்குத் தரவேண்டும்.
* தமிழில் தலைசிறந்த கருத்துக்கள் யாவும் தரப்பட வேண்டும். தமிழில் தன்மானக் கருத்துக்கள், மனிதாபிமான எண்ணங்கள் கொண்ட ஏடுகள் எழுதப்பட்டு மக்களிடையே மறுமலர்ச்சியை உண்டாக்க வேண்டும்.
* இலக்கியம் மனிதனது அறிவை வளர்க்கிறது; மனிதனுக்குத் தெளிவை ஏற்படுத்துகிறது; நன்மை தீமைகளை எடுத்துக் காட்டுகிறது; மனிதனது சிந்தனையைக் கிளறி விடுகிறது.
* எந்த இலக்கியமானாலும் அதன் கருத்தை, அது தரும் பாடத்தை, போதனையை, நல்லறிவைப் பொறுத்துத்தான் அதன் சிறப்பு, அதனது தேவை அமையும்; அமைந்திடவும் முடியும்!
* புத்தகங்கள் மூலம் பழங் கருத்துக்களை, பாசிபடிந்த எண்ணங்களைப் போக்கி, நல்வாழ்வுக்கான நல்லறிவுக் கருத்துக்களை புதுமை எண்ணங்களை ஏற்படுத்த முடியும். எளிதில்!
* சாதாரண மக்கள். பாமர மக்கள் தெளிவு பெறும் வழியிலே, இலக்கியங்களை இயற்றுங்கள்.
* அழகு, இன்பம், காதல், மாந்தோப்பில் மங்கை நல்லாளைச் சந்திப்பது போன்ற கதைகள். சுவை தருகின்றன; சில சமயம் பயனும் தருகின்றன. ஆனால் அந்த ஏடுகளிலேயே நாம் தேடும் இலட்சியம் முழுவதும் இருப்பதில்லை, மாறுகிறது.
* ஆற்றல் வளரும் பருவத்தை அடைந்ததும், வீரச் செயல்கள், களக்காட்சிகள், அரசு அமைக்கும் அருஞ் செயல்கள் ஆகியவைகளைப்பற்றிப் புத்தகங்கள் பெரிதும் கவர்ச்சி தருகின்றன.
* மகிழ்ச்சியூட்டும் புத்தகம், செயலாற்றும் திறனைத் தந்தே தீருமென்றே புதிய எண்ணத்தைத் தூவும் ஏடு, மகிழ்ச்சி ஊட்டக்கூடிய இனிய நடை அழகுடன் இருந்தே தீருமென்றோ கூறமுடியாது.
* உள்ளம் வளருகிறது--சிந்தனையால், உலகில் உலவும் எண்ண அலைகளால், வாழ்க்கை எனும் ஆசிரியன் புகட்டும் பாடங்களால் இலட்சியங்கள், புதிது புதிதாகப் பிறக்கின்றன. இவைகளுக்கேற்ற வண்ணம், அறிவுத் தாகம் ஏற்படுகிறது. அந்தத் தாகத்தைத் தீர்க்கும் ஏடுகளை நாடுகிறோம்.
* நாட்டு நிலை, உலக நிலைக்கு ஏற்ப வளர்ந்தாக வேண்டும். இதற்கு வீட்டு நிலை மாறவேண்டும். "வீட்டிற்கோர் புத்தக சாலை" என்ற இலட்சியம், நாட்டுக்கோர் நிலை ஏற்படச் செய்யவேண்டும் என்ற திட்டத்துக்கு அடிப்படை.
* வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடம், அலங்காரப்பொருள்களுக்கும், போக போக்கியப் பொருள்களுக்கும் தரப்படும் நிலைமாறி. புத்தக சாலைக்கு அந்த இடம் தரப்படவேண்டும். உணவு, உடை, அடிப்படைத் தேவை--அந்தத் தேவையைப் பூர்த்தி செய்தானதும், முதல் இடம், புத்தகசாலைக்குத் தரப்படவேண்டும்.
* புலியை அழைத்துப் பூமாலை தொடுக்கச் சொல்ல முடியாது. சேற்றிலே சந்தன வாடை கிடைக்குமென்று எண்ணக் கூடாது.
* நமக்கு உண்மை உலகைக் காட்ட, நமக்கு ஒழுக்கத்தையும், வாழ்வுக்கான வழிகளையும் காட்ட வீட்டிற்கோர், திருக்குறள் கட்டாயமாசு இருக்கவேண்டும்.