அறிவிலாதவனும், பொய்யுரைப்போனும், வெளிவேஷம் போடுவோனுமான குருவைவிட்டு விலக வேண்டும். தனக்குச் சாந்தி பெற அறியாத அவன் பிறர்க்கு எவ்வாறு சாந்தியை அளிப்பான்?
- குரு கீதை
முத்தி பெற விரும்பினால், குழந்தாய், ஐம்புலப் பொருள்களை விஷமாக எண்ணித் தியாகம் பண்ணுக; இரக்கம், நேர்மை. திருப்தி, வாய்மையென்பவற்றை அமுதமாகப் பற்றுக.
- அஷ்டாவக்ர கீதை
இதெல்லாம் அந்த ஒரே ஆத்மனே; இதில் வேற்றுமையோ வேற்றுமையின்மையோ இல்லை; அது ஸத்தா அஸத்தா என்று எவ்வாறு சொல்லமுடியும்? அது எனக்கு ஆச்சரியமாக மட்டும் உள்ளது.
-அவதூத கீதை
கருமம் செய்யாது எவனும் ஒரு கணம்கூட உண்மையாக இருக்க முடியாது. பிரகிருதியின் குணங்களால் ஒவ்வொருவனும் தன் வசமின்றிக் கருமமியற்றுபவனாகிறான்.
- பகவத் கீதை
எங்கும் நிலையான சுகம் காணமுடியாது; என்றும் நீடித்திருக்கும் ஒரு நிலை எங்கும் இல்லை. மிக்க துயரத்தாலும் வருத்தத்தாலும் அடையப்படும் ஒரு பெரும் பதவியினின்றும் கீழே வீழ்தல் மீண்டும் மீண்டும் ஏற்படுகிறது.
- அனுகீதை
தருக்க ரீதியாக ஆராய்ந்து 'நான் அலையல்லேன், கடலே' என்று ஒருவன் உணரும் போது அந்த அலை ஓர் அலையாக இருக்க இயலுமா?
- பிரம்ம கீதை
எந்தப் பொருள்களில் மனிதன் தனது அன்பை நிலைநாட்டுவானாயினும், அப்பொருள்களே அவனை விரைவில் நாசமாக்குவதற்கு மூலங்களாக மாறுகின்றன.
- ஜனக கீதை
ஒளி மயமாயுள்ள, சுத்த இரண்டற்ற ஞானத்தால் அஞ்ஞானம் நாசமடைந்து விட்ட போது, அது மறுபடியும் தோன்ற இயலாது; சுருதிகளின் மூலம் பெறும் ஞானத்தால் அது ஒருமுறை அழிந்து விடும் போது, அவித்தையால் எப்படிச் செயல்கள் கிளம்பும்?
- ராம கீதை
இனிமையற்றது இனியதாகிறது; மனிதனுக்கு இனியதில் அருவருப்பு ஏற்படுகிறது. ஆரம்பத்திலும் நடுவிலும் முடிவிலும் ஒரே மாதிரி இனிமையாயிருக்கும் உணவு யாது?
- ரிபு கீதை
எவனொருவன் எல்லா நம்பிக்கைகளையும் ஆசைகளையும் தியாகம் பண்ணி, பற்றும் பேராசையும் ஆகிய விசக் கொடிகளை வேரோடு வெட்டி விடுகிறானோ, அவனுக்கே பரம பலன் (ஆன்ம ஞானம்) கை கூடுவதாகும்.
- ஸித்த கீதை
ஒரு ஞானி, எல்லாப் புத்தகங்களையும் படித்து, எல்லா அறிவையும் ஞானத்தையும் பெற்ற பின்னர், அரிசியைப் பெற்ற பின் உமியைத் தூர எறிவது போல், எல்லாப் புத்தகங்களை எறிந்து விட வேண்டும்,
- உத்தர கீதை
ஸம்ஸார நாடகம் முழுவதும் பொய்யாகும் போது, வாழ்க்கையில் என்ன நோக்கம் இருக்க முடியும்? சுவர்க்கமும் மோக்ஷமும் மலடியரின் குமரர்களைப் போல, வெறும் வார்த்தைகளாக மட்டும் அமையும்.
- வசிஷ்ட கீதை
தொகுப்பு:- மு. சு. முத்துக்கமலம்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.