தேனியிலுள்ள சுயநிதிப் பொறியியல் கல்லூரி ஒன்றில் நிர்வாக மேலாளர் மற்றும் செயலாளர் (கூடுதல் பொறுப்பு) நிலையில் பணியாற்றிப் பின்னர் நிர்வாகத்தினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், அப்பணியிலிருந்து விலகிய எழுத்தாளரான தேனி மு. சுப்பிரமணி, பொருளாதாரம் பாடத்தில் முதுநிலைப் பட்டம் (M.A), இதழியல் மற்றும் மக்கள் தகவல் தொடர்பியல் பாடத்தில் முதுநிலைப் பட்டயம் (P.G.D.J & M.C) மற்றும் ஆய்வியல் நிறைஞர் பட்டம் (M.Phil), தொழிலாளர் நலச் சட்டம் மற்றும் நிர்வாகச் சட்டம் பாடத்தில் பட்டயம் (D.L.L & A.L) ஆகியவைகளைப் பெற்றிருக்கிறார்.
தேனித் தமிழ்ச் சங்கத்தின் தலைவர், சென்னையைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ‘சங்கம் தமிழ் அறக்கட்டளை’யின் செயலாளர், கணித்தமிழ்ச் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் எனப் பல்வேறு அமைப்புகளின் பொறுப்புகளில் இருந்து வருகிறார்
தமிழில் வெளியாகும் பல்வேறு அச்சிதழ்களில் நான்காயிரத்துக்கும் அதிமான துணுக்குகள் மற்றும் சிரிப்புகள், ஆயிரத்துக்கும் அதிகமான பொதுக்கட்டுரைகள் மற்றும் நேர்காணல்கள், முன்னூறுக்கும் அதிகமான கணினி மற்றும் இணையம் தொடர்பான கட்டுரைகள், இருபத்திரண்டு சிறுகதைகள், முன்னூறுக்கும் அதிகமான புதுக்கவிதைகள் என இவரது படைப்புகள் வெளியாகி இருக்கின்றன. மேலும், தினத்தந்தி நாளிதழின் ஆன்மிகம் இதழில் இவரது ‘அற்புத மகான்கள்’ எனும் தலைப்பிலான தொடர் 57 வாரங்களும், ‘சாப - விமோசனக் கதைகள்’ எனும் தலைப்பிலான தொடர் 50 வாரங்களும் வெளியாகி இருக்கின்றன. தமிழ் கம்ப்யூட்டர் மாதமிருமுறை இதழில் இவரது ‘விக்கிப்பீடியாவில் எழுதலாம் வாங்க!’ எனும் தொடர் 24 இதழ்களில் வெளியாகி இருக்கிறது. தமிழில் வெளியாகும் பல அச்சிதழ்களில் ஆன்மிகம், கல்வி, சுயமுன்னேற்றம், கணினி மற்றும் இணையம் தொடர்பான ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகள் வெளியாகி இருக்கின்றன.

இதுவரை இவர் எழுதிய பதின்மூன்று நூல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்நூல்களில் ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்குத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு கிடைத்திருக்கிறது. தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் பல்வேறு அமைப்புகளின் விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.