பழைய ஏற்பாட்டின் பெரும்பாலான முற்பகுதி நூல்களின் மூலமொழி யூதர்களின் மொழியான எபிரேயம் ஆகும். ஒருசில பிற்பகுதி நூல்கள் எபிரேயத்தின் கிளை மொழியான அரமேயத்தில் எழுதப்பட்டவை. இஸ்ரவேல் மக்கள் பழைய ஏற்பாடடில் உள்ள நூல்களையும் தள்ளுபடி ஆகமத்தில் காணப்படுகின்ற சில நூல்களையும் சேர்த்து தேவன் தங்களுக்கு மட்டுமே தந்த வேதம் என்று கருதுகிறார்கள். இந்த யூதர்களின் வேதம்
தானக் (Tanakh) என்றழைக்கப்படும். இது
தோரா (Torah =Teaching or Law),
நெவிம் (Neviim = Prophets),
கெட்டுவிம் (Ketuvim = Writings) என்ற மூன்று பிரிவுகளைக் கொண்டது. இயேசுவானவர் படித்த வேதமும் உடன்படிக்கைப் பெட்டியில் வைக்கப்பட்ட வேதமும் இதுதான். இதனை
ஹிபுரு பைபிள் (Hebrew Bible) என்றும் அழைப்பர்.
இதில் யூதர்களின் தெய்வத்துக்கு உபயோகிக்கப்பட்ட பதம்
ஏல் (El) என்பதாகும். இதன் கருத்து ‘வல்லமையுள்ளவர்’ என்பதாகும். இதிலிருந்து ‘எல்கானா’, ‘சாமுவேல்’, ‘இஸ்ரவேல்’, ‘பெத்தேல்’ என்ற பெயர்கள் வந்தன. இஸ்ரவேலரின் கடவுளைக் குறிக்க இந்த பதம் பழைய ஏற்பாட்டில் 221 முறை கையாளப்பட்டுள்ளது. பல முறை இந்த ‘ஏல்’ பதத்துடன் ஓர் அடைமொழியையும் சேர்த்துக் கொண்டனர். எடுத்துக்காட்டாக,
ஏல் ஷாடை (El Shaddai) ‘சர்வ வல்லமையுள்ள கடவுள்’ (எண் 24:4),
ஏல் எலியோன் (El Elyon) ‘உன்னதமான கடவுள்’ (ஆதி 14:18),
ஏல்ரோய் (El Roi) ‘அரணான கடவுள்’ (ஆதி 16: 13),
ஏல்ஓலம் (El olam) ‘என்றுமுள்ள கடவுள்’ (ஏசாயா 40: 28-31). ஏல் என்பதின் இன்னுமொரு மரியாதைப் பதம்,
ஏலோஹிம் (Elohim) ‘ஆற்றல்மிகுந்த கடவுள்’ (ஆதி 1:1) என்பதாகும். இந்த வார்த்தை பழைய ஏற்பாட்டில் 2,000 முறைக்கு மேல் உபயோகிக்கப்பட்டிருக்கிறது. இவைகள் யாவும் கடவுளின் காரணப் பெயர்களாகும்.
இஸ்ரவேலரின் கடவுளின் சொந்தப் பெயர் (Proper name) அல்லது இடுகுறிப் பெயர், எபிரேய மொழியில்
யாவே (YHWH / Yahweh), அதாவது,
….. இருக்கிறவராக இருக்கிறேன் (யாத்தி 3:14) என்பதாகும். இப்பதம் பழைய ஏற்பாட்டில் ஏறக்குறைய 6661 முறை உபயோகிக்கப்பட்டிருக்கிறது.
எலியா தீர்க்கத்தரிசியின் பலியை வானத்திலிருந்து வந்த அக்கினி பட்சித்த போது, ஜனங்கள் எல்லாரும் முகங்குப்புற விழுந்து ‘யாவேஹூ ஏலோஹீம்’ எனச் சத்தமிட்டார்கள். ‘யாவேயே கடவுள்’ (1 இராஜா 18: 39) என்பது அதன் பொருள். ‘ ….. கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக’ (யாத்தி 20: 7) என்ற மூன்றாம் கற்பனையின்படி இறைவனின் பெயரை வாயால் உச்சரிப்பது அபச்சாரம், பாவம் என்று யூதர்கள் கருதிய வழக்கத்தின் காரணமாக, அவர்கள் ‘யாவே’ என்று வருகின்ற இடங்களிலெல்லாம்
அதோனை (Adonai) என்ற சொல்லை உச்சரிப்பர். இச்சொல் பழைய ஏற்பாட்டில் கடவுளைக் குறிக்க 337 முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த ‘யாவே’ என்ற சொல் எழுத்து வழக்கில் மாத்திரமே நெடுங்காலமாக இருந்து வந்தது. இன்றும் யூதர்கள் அப்பெயரை உச்சரிப்பதே இல்லை. அதன் காரணமாக அதன் உச்சரிப்பும் நாளடைவில் மறந்து போய் பிற்காலத்தில், அதாவது கி.பி. 1518ஆம் ஆண்டுக்குப் பின்பு அச்சொல்
யெகோவா என்று உச்சரிக்கப்பட்டுள்ளது. யெகோவா என்னும் பதம் மூலமொழியில் இல்லை.
புதிய ஏற்பாட்டு நூல்கள் அனைத்துமே கிரேக்க மொழியில் எழுதப்பட்டவை. பழைய ஏற்பாட்டு மொழியான எபிரேயமும் அரமேயமும், புதிய ஏற்பாட்டு மொழியான கிரேக்கமும் தான் வேதாகமத்தின் மூன்று மூல மொழிகளாகும். இவற்றிலிருந்து தான் உலகின் பிற மொழிகளுக்கு ‘யூத - கிறிஸ்தவ’ வேதம் கிடைத்தது. யூத வேதத்தை பழைய ஏற்பாடு என்றும், கிறிஸ்தவ நூல்களைப் புதிய ஏற்பாடு என்றும் அழைப்பர்.
16ஆம் நூற்றாண்டில் இந்தியா வந்த இயேசுசபைக் குரு அன்டிரிக்ஸ் கடவுளின் பொதுப் பெயராகத்
தம்பிரான் (தன் + பிரான் = தன்னுடைய தலைவன்) என்ற சொல்லைத் தம் எழுத்துக்களில் பயன்படுத்தினார்.
17ஆம் நூற்றாண்டில், ராபர்ட் டி நொபிலி
ஈஸ்வரன் என்ற பதத்தோடு
சர்வ என்ற அடைமொழியைச் சேர்த்து உருவாக்கின
சருவேசுரன் என்ற பதத்தை, ரோமான் கத்தோலிக்கர்கள்
தம்பிரான் என்ற சொல்லுக்குப் பதிலாக உபயோகிக்கத் தொடங்கினர். அதற்கு
எல்லாம் வல்லவர்,
எல்லாவற்றுக்கும் மேலானவர் என்பது பொருள்.
297 ஆண்டுகளுக்கு முன்பு முதல் தமிழ் வேதாகம மொழிபெயர்ப்பாளர் சீகன்பால்க் தன் மொழிபெயர்ப்பில் எபிரேய
ஏலோஹிம் என்ற சொல்லை
சருவேசுரன் என்றும்,
யாவே என்ற சொல்லை
கர்த்தர் என்றும் மொழிபெயர்த்தார்.
சைவப் புலவர் தாயுமானவரின் "பராபரக் கண்ணிகள்" கவிதைத் தொகுப்பில் உள்ள ஒவ்வொரு இசைப் பாடலும் "பராபரமே" என்று முடியும். அவரின் சமகாலத்தவரான எர்னஸ்ட் வால்தர் (Ernst Walther) சர்வேசுரனுக்குப் பதிலாக ‘பராபரமே’ என்ற பதத்தை ‘அன்’ விகுதி கொடுத்து
பராபரன் என்று மாற்றி வேதத் திருப்புதலுக்குள் கொண்டு வந்தார். இந்த பராபரன் என்ற சொல்லை பப்ரிஷியஸ் ஐயரும் (Fabricius) இரேனியஸ் ஐயரும் தங்கள் மொழிபெயர்ப்புகளில்,
முழுமுதற் கடவுள்,
ஒரே கடவுள் என்று பொருள் வரக்கூடிய இடங்களில் பயன்படுத்திக் கொண்டனர். காலப்போக்கில் இப்பதத்தை ஏனைய புராட்டஸ்தந்து சபையார் கைவிட்ட போதிலும், தமிழ் லுத்தரன் சபையார் மட்டும் இன்றும் உபயோகித்து வருகின்றனர்.
பீட்டர் பெர்சிவல் (Peter Percival) பரிசோதனை பதிப்பில்,
பராபரன் என்று வருகிற இடங்களில் எல்லாம்
தேவன் என்ற சொல்லை பயன்படுத்தினார். இச்சொல்லை ஆறுமுக நாவலர் அறிமுகம் செய்தார். ஹென்றி பவரும் தன்னுடைய ஐக்கிய மொழிபெயர்ப்பில்,
தேவன் என்ற சொல்லையேப் பயன்படுத்துகிறார்.
‘தேவன்’ என்பதன் வேர்ச் சொல் ‘தே’ என்பதாகும். மிகவும் பழமை வாய்ந்த இச்சொல்லின் பொருள் ‘ஒளி’ , ‘பிரகாசம்’ என்பதாகும். ‘மனிதரினின்று உயர்ந்தது’, ‘வணங்கப்படத்தக்கது’ என்றும் பொருள்படும். சமஸ்கிருதத்தில் இச்சொல் உண்டு. கிரேக்க மொழி வேதத்தில்
தியொஸ் (Theos), இலத்தின் வேதத்தில்
டேயுஸ் (Deus) ஆகிய இரு சொற்களும் ‘ஒரே கடவுள்’ என்ற பொருளைத் தரும். இவற்றின் வேர்ச் சொல்லும் ‘தே’ என்பதே ஆகும். ‘தே’ என்ற மூலச் சொல்லின் அடிப்படையில் பிறந்த சொல் தான் ‘தெய்வம்’ ஆகும். தமிழ் வேதாகமத்தில் ‘தேவன்’, ‘தேவாதி தேவன்’, ‘தெய்வம்’ போன்ற சொற்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளதைக் காணலாம்.
‘பராபரன்’ என்ற வடமொழிச் சொல்லின் தமிழ் சமன்பாடு ‘கடவுள்’ ஆகும். அது கட+உள் என்று விரியும். ‘அனைத்தையும் கடந்த ஆனால் உள்ளேயும் உறைகின்ற’ (transcendent and immanent) என்ற பொருளைத் தரும்.
யூதர்களின் வேதத்தில் கடவுளுடைய சொந்தப் பெயர்
யாவே என்றும், அந்த சொல்லுக்குப் பதிலாக
அதோனை என்ற காரணப் பெயரை லத்தீனில்
Dominus என்றும், ஆங்கிலத்தில்
Lord என்றும், ஜெர்மன் மொழியில்
Herr என்றும் மொழிபெயர்த்துள்ளார்கள். இது தமிழில்
கர்த்தர் என்று பப்ரிஷியஸ் ஐயரால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இது ‘கிறி’ (செய்கிற) என்னும் சமஸ்கிருத மூலத்திலிருந்து வந்தது. ஆகவே ‘கர்த்தர்’ என்ற பதத்திற்கு ‘செய்கிறவர்’ என்று பொருள் - (உதாரணம் - ‘கருமகர்த்தர்’). இம் மூலத்திலிருந்து ‘கருமம்’, ‘கிரியை’ ஆகிய சொற்கள் வருகின்றன. கர்த்தர் என்னும் சொல், ‘அதிபதி’, ‘ஆளுகிறவன்’, ‘ஆண்டவன்’ என்னும் கருத்துக்களையும் கொடுக்கும். ‘ஆளுகிறவன்’, ‘ஆண்டவன்’ போன்ற சொற்களை கிறிஸ்தவர்கள் ‘ஆளுகிறவர்’, ‘ஆண்டவர்’ என்று மரியாதை நிமித்தம் மாற்றிப் பயன்படுத்துகின்றனர்.