வயதானவர் வாழ்க்கை!
பேராசிரியர்.எ.சிட்னி சுதந்திரன்.
தோற்றம்
“ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்” (ஆதி.1:1). நான்காம் நாளில், “பின்பு தேவன்: பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் உண்டாகத்தக்கதாக வானம் என்கிற ஆகாயவிரிவிலே சுடர்கள் உண்டாகக் கடவது, அவைகள் அடையாளங்களுக்காகவும், காலங்களையும், நாட்களையும், வருஷங்களையும் குறிக்கிறதற்காகவும் இருக்கக்கடவது என்றார்” (ஆதி.1:14). அவ்விதமாய் காலங்களும், அவைகளுக்கு அளவுகோலாய்ப் பகல், இரவு, காலை, மாலை, நாட்கள், வருஷங்கள் என்பனவும் தோன்றின.
நோவாவின் காலத்தில் ஜலப்பிரளயத்தால் பூமி முழுவதும் சேதப்பட்ட பொழுது, கடவுள், “பூமி உள்ள நாளளவும் விதைப்பும், அறுப்பும், சீதளமும், உஷ்ணமும், கோடைக்காலமும், மாரிக்காலமும், பகலும், இரவும் ஒழிவதில்லை என்று தம்முடைய உள்ளத்தில் சொன்னார்” (ஆதி.8:22). ஆம், அதுபோல் இன்றளவும் பூமி தன் காலங்களை வெகு நேர்த்தியாய் வெளிப்படுத்தி வருகிறது.
ஞானவானாகிய சாலொமோன், “ஒவ்வொன்றிற்கும் ஒரு காலமுண்டு. வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு சமயமுண்டு” (பிரசங்கி.3:1) என்கிறார். மேலும் அவர், “பிறக்க ஒரு காலமுண்டு” என்று தொடங்கி …….. “சமாதானம் பண்ண ஒரு காலமுண்டு” என்று 29 வகையான காலங்களைப் (பிரசங்கி.3:2-8) பட்டியலிடுகிறார். அதோடு, “அவர் சகலத்தையும் அதினதின் காலத்திலே நேர்த்தியாகச் செய்திருக்கிறார்” (பிரசங்கி.3:11) என்று வியப்பெய்துகிறார்!
சங்கீதக்காரன், “என் காலங்கள் உமது கரத்திலிருக்கிறது” (சங்.31:15) என்றும், “கர்த்தாவே நான் எவ்வளவாய் நிலையற்றவன் என்று உணரும்படி என் முடிவையும், என் நாட்களின் அளவு இவ்வளவு என்பதையும் எனக்குத் தெரிவியும்” (சங்.39:4) என்றும், “இதோ என் நாட்களை நாலு விரற்கடையாக்கினீர். என் ஆயுசு உமது பார்வைக்கு இல்லாதது போலிருக்கிறது. எந்த மனுஷனும் மாயையே என்பது நிச்சயம்” (சங்.39:5) என்றும், “எங்கள் ஆயுசு நாட்கள் எழுபது வருஷம், பெலத்தின் மிகுதியால் எண்பது வருஷமாயிருந்தாலும், அதின் மேன்மையானது வருத்தமும் சஞ்சலமுமே; அது சீக்கிரமாய்க் கடந்து போகிறது, நாங்களும் பறந்து போகிறோம்” (சங்;.90:10) என்பதாகக் கூறுகிறார். இங்கு மனிதனின் நிலையாமைக்குறித்தும், அவன் ஆயுசு நாட்களைப்பற்றியும், அதில் அவனுடைய முதுமைக் காலம் வருத்தமும் சஞ்சலமும் நிறைந்தது என்பது பற்றியும் அவர் தெளிவாய்ச் சொல்லுகிறார்.
முதுமைக் காலம்
“வாலிபனே! உன் இளமையிலே சந்தோஷப்படு, உன் வாலிப நாட்களிலே உன் இருதயம் உன்னைப் பூரிப்பாக்கட்டும்……” (பிரசங்கி. 11:9) என்று சொன்ன சாலொமோன் ஞானி, “….. இளவயதும் வாலிபமும் மாயையே” (பிரசங்கி.11:10) என்றும், “நீ உன் வாலிபப் பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை…..” (பிரசங்கி.12:1) என்றும் சொல்கிறார். ஏனென்றால் இளமைக் காலத்தைத் தொடர்ந்து வரும் முதுமை காலத்து நாட்கள் “எனக்குப் பிரியமானவைகள் அல்ல என்று நீ சொல்லக் கூடிய வருஷங்கள் சேராததற்கு முன்னும்” (பிரசங்கி.12:1) என்று ஆரம்பித்து, முதுமைக் காலத்து நாட்களில், “வீட்டுக் காவலாளிகள் (கைகள்) தள்ளாடிப் போவர்; பெலசாலிகள் (கால்கள்) கூனிப் போவர்; எந்திரம் அறைக்கிறவர்கள் (பற்கள்) குறைவுபட்டுப் போவர்; பலகணி வழியாய்ப் பார்க்கிறவர்கள் (கண்கள்) இருண்டு போவர்; எந்திர சத்தம் தாழ்ந்து போதலால் தெருவாசல் கதவுகள் (காதுகள்) அடைபட்டுப் போகும்; குருவியின் சத்தத்துக்கும் (அதிகாலை நேரம்) எழுந்திருக்கும் நிலமை; கீதவாத்தியக் கன்னிகைகள் (குரல்வளை நரம்புகள்) அடங்கிப் போகுதல்; மேட்டுக்காக அச்சமுண்டாகுதல்; வழியில் பயங்கள் தோன்றுதல்; வாதுமைமரம் பூ பூத்தல் (தலைமுடி நரைத்தல்); வெட்டுக்கிளிகள் பாரமாதல்; பசித்தீபனம் அற்றுப் போதல் போன்ற ஒரு விருப்பமில்லாத தீங்கு நாட்களோடு கூடிய முதுமைக்கால வாழ்க்கையை ஞானி எளிமையாகவும், யதார்த்தமாகவும், கவித்துவத்தோடும் படம்பிடித்து சித்தரிக்கிறார் (பிரசங்கி. 12:3-5).
இன்றைய முதியோரின் நிலை என்ன?
தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ஏ. மார்க்ஸ் என்பவர் கூறுகிறார்,
20 வயது வரை -என் தேவைக்கேற்ற துணிமணிகள், வயிரார உணவு, எல்லாவற்றுக்கும் கொஞ்சம் மேலாகவே என்னிடம் வசதி இருந்தது.
20 - 50 வயது வரை -நான் அமைதியாக ஓய்ந்திருந்து, நான் சம்பாதித்து வைத்திருந்ததைப் பார்த்து திருப்தியோடு இருந்தேன்.
60 - 70 வயது வரை - நான் சேமித்ததையும், உடைமைகளையும் மற்றவர்களுக்குக் கொடுத்தால் தான் நான் பராமரிக்கப்படுவேன் என்றாகி விட்டது. எவ்வளவு கையிலிருந்து கொடுக்கிறேனோ அந்த அளவு சந்தோஷத்தைத் தந்தார்கள்.
70 வயதைக் கடந்த நிலையில் - என்னிடம் மூன்றே மூன்று உடமைகள் மட்டுமே மிச்சப்பட்டு இருக்கின்றன. அவைகள், என் பைபிள், என் மூக்குக் கண்ணாடி, என் பொய்ப் பல்செட்.
வியாதிகளோடும், இயலாமையோடும், தள்ளாமையோடும், ஒதுக்கப்பட்டவர்களாய், வெறுக்கப்பட்டவர்களாய், தனித்தும், பயந்தும், ஏக்கங்களோடும், எதிர்பார்ப்புகளோடும், ஏமாற்றங்களோடும் வாழும் எண்ணற்ற முதியோர்களைப் பற்றிய நம் கரிசனை என்ன? ஒரு தந்தை பத்து குழந்தைகளைக் காப்பாற்றுகிறான். பத்துக் குழந்தைகள் ஒரு தந்தையைக் காப்பாற்றுவதில்லை! “மகனே! நீ இருக்க என் கருவறை இருந்தது… நான் இருக்க ஒரு அறைகூடவா இல்லை உன் வீட்டில்?” - என்று முதியோர் இல்லத்தில் தள்ளப்பட்ட தாயிடமிருந்து எழும் இந்த வேதனை நிறைந்த கேள்விக்கு என்ன பதில் சொல்வது? “பழகிய மனைவி, பழகிய நாய், சேமித்து வைத்த பணம் ஆகியவைகளே முதுமையில் நம்பிக்கைக்கு உரியவர்கள்” என்ற கூற்றினை கிறிஸ்தவ சமுதாயம் ஏற்றுக் கொள்ளுகிறதா? திருச்சபை மக்களாகிய நாம் இதற்கு என்ன தீர்வு காணப் போகிறோம்? சிந்திப்போமா?
இந்த நாள்
“காலம் மட்டும்தான் மாற்றீடு செய்ய முடியாத ஒன்று - அதை வீணாக்கிவிடாதே!” (Time alone is irreplaceable - Waste it not!).
“இது ஒரு புரியாத நாளின் துவக்கம்.
என் விருப்பப்படி பயன்படுத்த கடவுள் இதை
எனக்குக் கொடுத்துள்ளார்.
நான் இதை வீணாக்கலாம் - அல்லது
நல்லவிதமாகப் பயன்படுத்தலாம்.
நான் இன்று என்ன செய்கிறேன் என்பது முக்கியமானது;
ஏனெனில் நான் அதற்காக
என் வாழ்நாளின் ஒரு நாளைப் பரிமாற்றம் செய்கிறேன்
.
நாளை வந்ததும், இந்த நாள் முற்றிலுமாகப் போய்விட்டிருக்கும்.
அதில் அது என்னோடு பரிமாறிக் கொண்டதை
விட்டுச் சென்றிருக்கும்.
நான் அதற்குக் கொடுத்த விலை குறித்து
வருந்தாமல் இருக்க வேண்டுமானால்,
அது பயனுள்ளதாக இருக்க வேண்டும்”.
ஆம்! இந்த நாள் அப்படிப் பயனுள்ளதாய் இருக்க நாம் என்ன செய்யலாம்? அன்றாடம் வேதம் வாசித்து, தியானித்து, ஜெபம் செய்யும் நாம், பின்வரும் பாடலின் கருத்துக்களை ஒவ்வொரு நாளும் செயல்முறைப் படுத்தலாமே!
பாடல்
“இந்த நாளை நான் சமர்ப்பிப்பேன்
ஏசுவின் திருப்பாதத்தில்
காலை முதல் மாலை வரை
காக்கும் கர்த்தர் நமது ஏசு
காலைத் தள்ளாட என்றுமே விடார்.
இனியவார்த்தை எப்போதும் பேச ஏசு நடத்திடும்
இடுக்கண்ணில் இருப்போர் யாரையும் மீட்க ஏசு காட்டிடும்
இன்பத்தை வெறுத்து துன்பத்தை நாட ஏசு போதியும்
இன்முகம் காட்டி இறங்கி நோக்க ஏசு கற்பியும் - இந்த நாளை…
பிறர் என்ன செய்ய விரும்புவேனோ அதையே செய்யவும்
பிறர் எனக்கு மன்னிப்பதையே அவர்க்கு மன்னிக்கவும்
பிறர் நலம் கருதியே சதா உழைக்கவும்
பிறருக்காக என்னை ஒடுக்கி நான் மரிக்கவும் - இந்ந நாளை…
(கருத்துமிகு இப்பாடல் எழுதிய ஆசிரியர்க்கு பாராட்டுதல்கள்).
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.