கிறித்தவ வழிமுறை முதன்மையானது ஏன்?
பேராசிரியர்.எ.சிட்னி சுதந்திரன்.
உலகில் பல்வேறு சமய வழிமுறைகள் இருப்பினும், அவற்றுள் கிறித்தவ சமய வழிமுறை உலகெங்கும் பரவி முதன்மையான இடத்தைப் பெற்றிருக்கிறது. இயேசு உயிர்த்தெழுந்ததும், அதைத் தொடர்ந்து கிறித்துவின் மீது நம்பிக்கை கொண்டும், கிறித்தவ வழிமுறையை ஊக்குவித்தும் எழுதப்பட்ட கடிதங்களே கிறித்தவ சமயம் எனும் வழிமுறையை முதன்மை பெறச் செய்திருக்கிறது.
இயேசுவின் காட்சிகள்
மாற்கு நற்செய்தி நூலின் கடைசி அதிகாரத்தில் வாரத்தின் முதலாம் நாள் அதிகாலையில் உயிர்த்தெழுந்த இயேசுவானவர் மூன்று நிலைகளில் அவரோடு மிகவும் நெருக்கமாய் இருந்தவர்களுக்குத் காட்சியளித்தார் எனப் பார்க்கிறோம்.
முதலாவதாக, மகதலேனா மரியாளுக்குக் காட்சியளித்தார். அவள் புறப்பட்டுப்போய் இயேசுவானவர் உயிரோடிருப்பதையும், அவரைத் தான் கண்டதையும், துக்கத்தில் இருக்கும் இயேசுவானவரோடு உடனிருந்தவர்களிடம் கூறினாள். ஆனால் அவர்கள் அந்தச் செய்தியை நம்பவில்லை (மாற்கு16: 9-11)
இரண்டாவதாக, இயேசுவானவர் உயிரோடிருக்கிறார் என்ற செய்தியை மகதலேனா மரியாள் மூலம் கேள்விப்பட்ட இருவர் ஒரு கிராமத்துக்கு நடந்து செல்கையில் அவர்களுக்கு இயேசுவானவர் மறுஉருவமாய்க் காட்சியளித்தார். அவர்கள் மற்றவர்களுக்கு அதை அறிவித்தும் அதை அவர்கள் நம்பவில்லை (மாற்கு16: 12-13)
மூன்றாவதாக, போஜனபந்தியில் இருந்த பதினொரு பேருக்கும் இயேசுவானவர் காட்சியளித்ததுடன், அவர்களின் விசுவாசமின்மையையும், இருதயக்கடினத்தையும் கடிந்துகொண்டதோடு, ‘…. அவர்களை நோக்கி; நீங்கள் உலகெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்’ (மாற்கு16: 15) என்றார். இந்தக் கட்டளையைச் சீடர்களும் அப்போஸ்தலர்களும் தங்களின் தலையாயப் பணியாக ஏற்று, ‘அவர்கள் புறப்பட்டுப்போய், எங்கும் பிரசங்கம் பண்ணினார்கள். கர்த்தர் அவர்களுடனேகூடக் கிரியையை நடப்பித்து….’ (மாற்கு16: 20) என்று பார்க்கிறோம்.
கடிதங்கள்
அதன் பயனாகச் சீடர்களும் அப்போஸ்தலர்களும் ஆதித்திருச்சபைகளைக் கொரிந்து, பிலிப்பி, கொலோசெ போன்ற பட்டணங்களிலும், கலாத்தியா, பொந்து, கப்பத்தோக்கியா, ஆசியா, பித்தினியா போன்ற தேசங்களிலும் நிறுவினர். அச்சபை மக்களுக்குச் சோதனைகளும் துன்புறுத்தல்களும் மிகுதியாக ஏற்பட்டன. எனவே பவுலடியாரும் அப்போஸ்தலர்களும் சபையினருக்கு அடிக்கடி கடிதங்கள் (நிருபங்கள்) எழுதி வந்தனர். சபையினர் கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தில் உறுதியாய் நிலைத்திருக்கும்படியாக அவர்களை ஊக்குவித்தும், ஆறுதல் கூறியும் இக்கடிதங்களை அனுப்பினர். சபைகளில் அவ்வப்போது ஏற்பட்ட பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கவும், சபையினருக்கு நற்போதனைகள் அளிப்பதற்கும், சபைகள் நிலைகுலைந்து வீழ்ச்சியடைந்து போகாமல் இருப்பதற்காகவும் கடிதங்களை எழுதி ஆட்கள் மூலமாய் அனுப்பி வைத்தனர். இந்தக் கடிதங்களைச் சபையினர் பத்திரமாய்ப் பாதுகாத்து வைத்தனர். இந்தக் கடிதங்களில் சபைகளுக்குத் தேவையான அனைத்துச் செய்திகளையும் நெறிமுறைகளையும் காணலாம். இவைகளே திருச்சபையின் வளர்ச்சிக்கு ஆதார நூல்கள் என்றால் மிகையாகாது.
வேதாகமம்
இந்த 22 கடிதங்களும் எழுதப்பட்ட பின்னரே, 4 சுவிசேஷங்களும், வெளிப்படுத்தின விசேஷமும் எழுதப்பட்டன. இவைகள் கி.பி. முதலாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கிரேக்க மொழியில் எழுதப்பட்டன. இவைகள் யாவும் சேர்ந்ததுதான் புதிய ஏற்பாடாகும். கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் கிறிஸ்தவர்கள் இந்த சுவிசேஷங்களையும், கடிதங்களையும் யூத வேதத்துக்கு இணையாகக் கருதத் தொடங்கினர். யூத வேதத்தைப் ‘பழைய ஏற்பாடு’ என்றும், சுவிசேஷங்களையும், கடிதங்களையும் ‘புதிய ஏற்பாடு’ என்றும் அழைக்கத் தொடங்கினர். மனிதனின் விமோசன வழிமுறை இந்த இரண்டு ஏற்பாடுகளிலும் அடங்கியிருக்கிறது என்று நம்பினர். இறைவன் யூதர் என்கிற ஒரு குறிப்பிட்ட மக்கள் தொகுதியினருடன் செய்து கொண்ட உடன்படிக்கையைப் பழைய ஏற்பாடும், உலகின் அனைத்து மக்களோடும் செய்து கொண்ட உடன்படிக்கையைப் புதிய ஏற்பாடும் எடுத்துரைக்கின்றன என்று ஏற்றுக் கொண்டார்கள். எனவே இரண்டு ஏற்பாடுகளும் இணைக்கப்பட்டு, ‘யூத - கிறிஸ்தவ’ வேதம், அதாவது இன்று நம் கைகளில் இருக்கும் வேதாகமம் உருவானது.
சமயம்
இக்காலத்தில் கிரேக்க மொழியின் ஆதிக்கம் குறைந்து ரோம சாம்ராஜ்யத்தின் அதிகாரம் உச்சத்திலிருந்தது. கி.பி. நான்காம் நூற்றாண்டில் அரசு ஆதரவுடன் கிறித்தவம் வளர்ந்து பெருகி ஐரோப்பா எங்கும் வியாபித்தது. பின்வந்த சில நூற்றாண்டுகளில் ஐரோப்பாவெங்கும் ஒரே போப்பாண்டவரும் ஒரே கிறித்தவ ரோமச் சக்கரவர்த்தியும் என்ற நிலை இருந்தபடியால் ரோமன் கத்தோலிக்கத் திருச்சபை மேலும் வளர்ந்தது.
சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு, ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த மார்ட்டின் லூத்தர், சீர்திருத்தத் திருச்சபையைத் தோற்றுவித்தார். அதன் பின்னர் சீர்திருத்தத் திருச்சபைகள் எல்லா நாடுகளிலும் வேரூன்றி வளர்ந்தன. ஆக இன்று உலகளவில் வியாபித்துள்ள கிறித்தவ வழிமுறைகளில் கத்தோலிக்கத் திருச்சபையும் சீர்திருத்தத் திருச்சபைகளும் பெரும்பங்கு வைக்கின்றன.
உயிர்த்தெழுந்த இயேசுவானவரின் மூன்றாவது காட்சியும், அவருடைய வாயிலிருந்து வந்த கடைசிக் கட்டளை வார்த்தைகளுமே இன்றையக் கிறித்தவ வழிமுறை உலகளவில் பெருகியிருப்பதற்கு முக்கியக் காரணமாகும்.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.