ஒரு நாள் இரவு மருத்துவமனையின் மகப்பேறுப் பிரிவில் ஒரு தாய்க்கு உதவும் பொருட்டு நான் கடுமையாக உழைத்தும் எதுவும் செய்ய முடியவில்லை. தான் பெற்றெடுத்த குறைமாத சிசுவையும் (Premature baby), சதா அழுகிற தன் இரண்டு வயது மகளையும் விட்டுவிட்டு அந்தத்தாய் இறந்து போனாள். பிறந்த சிசுவைக் காப்பாற்றுவதில் எங்களுக்கு சிரமங்கள் இருந்தன. காரணம் எங்களிடம் அடைகாப்புக்கருவி (Incubator) இல்லை. (இருந்தாலும் அதை இயக்க மின்சாரமில்லை). குழந்தைக்கு உணவூட்டும் சிறப்பு வசதிகளுமில்லை.
நாங்கள் நிலநடுக்கோட்டுப் (Equator) பகுதியில் இருந்தபோதிலும், இரவு நேரங்களில் கடுங்குளிர் வாட்டியது; காற்றின் வேகம் அச்சுறுத்தும் விதத்தில் இருந்தது. ஒரு பயிற்சிக்கால மருத்துவச்சி, குழந்தைகளை வைத்துக் காப்பாற்ற உதவும் பெட்டியையும், குழந்தையின் உடலின் மேல் சுற்றுவதற்கான பஞ்சையும் எடுத்துவரச் சென்றாள். மற்றொருத்தி கணப்பிற்கு எரியூட்டவும், சுடுநீர்ப்புட்டியில் நீர் நிரப்புவதற்கும் சென்றாள். சென்றவள் சற்று நேரத்தில் திரும்பிவந்து, புட்டி வெடித்து உடைந்துவிட்டதாக என்னிடம் கூறினாள். (வெப்பமண்டலப் பகுதிகளில் இரப்பர் எளிதாகச் சிதைந்து விடும்). அதுதான் எங்களிடமிருந்த கடைசி சுடுநீர்ப்புட்டி என்றும் அவள் அதிர்ச்சியுடன் தெரிவித்தாள். புதிதாக புட்டி வாங்குவதற்கு நாங்கள் இருந்த காட்டுப்பகுதியில் மருந்துக்கடைகளும் இல்லை.
“சரி, ஆனது ஆகட்டும்; குழந்தையைக் கணப்பிற்கு எவ்வளவு அருகாமையில் பத்திரமாகப் போட முடியுமோ, அவ்வளவு அருகாமையில் போட்டு, நீயும் குழந்தையோடு படுத்து உறங்கு; குழந்தைக்கு வெப்பம் தேவை; அதேசமயத்தில் குளிர்காற்றிலிருந்தும் குழந்தையைக் காப்பாற்ற வேண்டும்” என்றேன் நான்.
வழக்கம்போல் மறுநாள் நண்பகலில், இயன்ற அளவு காப்பகத்துக் குழந்தைகளைத் திரட்டிக்கொண்டு நான் வழிபாட்டிற்குச் சென்றேன். இளைஞர்களுக்குப் பலவிதமான ஆலோசனைகளை வழங்கிவிட்டு, குட்டி சிசுவைப் பற்றியும், சுடுநீர்ப்புட்டி இல்லாமல் சிசுவைப் பராமரிப்பதில் உள்ள சிக்கலையும், கதகதப்பான இடத்தில் சிசு வைக்கப்படாவிட்டால் சிசு குளிரில் இறந்துவிடும் என்றும் அவர்களிடம் சொன்னேன். மேலும் இரண்டு வயது பெண் குழந்தையொன்று தாயைப் பறிகொடுத்துவிட்டு அழுதுகொண்டிருப்பது பற்றியும் குறிப்பிட்டேன்.
ஜெபவேளையில் பத்து வயது நிரம்பிய ரூத் என்ற பெண், ஆப்பிரிக்கக் குழந்தைகளின் வழக்கமான, கடுமையான பாணியில், “கடவுளே, தயவுகூர்ந்து இன்றே சுடுநீர்ப்புட்டியை அனுப்பி வையுங்கள். நாளையதினம் அனுப்பினால் அது பயன்படாது; குழந்தை இறந்துவிடும். எனவே இன்று நண்பகலே அனுப்பி வையுங்கள்” என்று வேண்டிக் கொண்டாள்.
அந்தப் பிரார்த்தனையை செவிமடுத்த நான் உள்ளுக்குள் பேரதிர்ச்சியடைந்தேன்! அந்தப் பெண் மேலும் தொடர்ந்து வேண்டினாள் : “கடவுளே, சுடுநீர்ப்புட்டியை அனுப்பும் அதேநேரத்தில், தயவுசெய்து பொம்மை ஒன்றையும் அழுது கொண்டிருக்கும் சிறுமிக்கு அனுப்புங்கள். அப்போதுதான் நீங்கள் அவளையும் உண்மையாக நேசிக்கிறீர்கள் என்பது தெரியவரும்” என்றாள்.
குழந்தைகளின் வழிபாட்டில் அவர்களோடு இருந்த நான், “ஆமென்” (அப்படியே ஆகட்டும்) என்று சொல்லலாமா? அந்தப் பெண் கேட்டதை கடவுள் தருவாரா? அவரால் எதையும் செய்ய முடியுமென்று எனக்குத் தெரியும். பரிசுத்தவேதம் அப்படித்தான் சொல்கிறது. ஆனால் எதற்கும் ஓர் எல்லை உண்டல்லவா? அந்தப் பெண்ணின் பிரார்த்தனைக்கு செவிசாய்க்க வேண்டுமென்றால் இறைவன் என் சொந்த ஊரிலிருந்து ஒரு சிப்பத்தை (Parcel) அனுப்பிவைக்க வேண்டும். நான் நான்காண்டு காலமாக ஆப்பிரிக்காவில் இருந்து வருகிறேன்; ஆனால் இதுவரை என் சொந்த ஊரிலிருந்து எந்த ஒரு சிப்பத்தையும் நான் பெற்றதில்லை. அப்படியே எனக்கொருவர் ஒரு சிப்பத்தை அனுப்பினாலும், யார் அதனுள் சுடுநீர்ப்புட்டியை வைக்கப் போகிறார்கள்? நான் இருப்பதோ நிலநடுக்கோட்டுப் பகுதியில்!
பிற்பகலில் பாதிநேரம் சென்றபின், பயிற்சிப் பள்ளியில் செவிலியர்களுக்கு நான் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது, என் வீட்டு நுழைவாயில் அருகே ஒரு வாகனம் நிற்பதாக எனக்குத் தகவல் வந்தது. நான் வீட்டிற்குத் திரும்பிச் செல்லுமுன் அந்த வாகனம் அங்கிருந்து சென்றுவிட்டது. ஆனால் வீட்டுத் தாழ்வாரத்தில் இருபத்தி இரண்டு பவுண்ட் எடையுள்ள ஒரு சிப்பம் இறக்கி வைக்கப்பட்டிருந்தது.
அதைப் பார்த்தவுடன் என் கண்கள் பனித்தன. தனியாக அந்த சிப்பத்தைத் திறந்து பார்க்க என்னால் முடியவில்லை. எனவே காப்பகத்துக் குழந்தைகளை உதவிக்கு அழைத்தேன். கட்டப்பட்டிருந்த கயிறுகளை மிகவும் கவனத்துடன் இழுத்து, முடிச்சுகளை அவிழ்த்தோம். எங்களுக்கிருந்த பேரார்வத்தால் சிப்பம் சுற்றப்பட்டிருந்த காகிதம் கிழிந்துவிடாமல், அதை சிரமப்பட்டு மடித்தோம். முப்பது அல்லது நாற்பது ஜோடிக் கண்கள் சிப்பத்தினுள்ளிருந்த அட்டைப் பெட்டியை உற்று நோக்கின. பெட்டியின் மேற்பகுதியிலிருந்து கம்பளிப் பின்னலாடைகளை எடுத்தேன். கண்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தன. அவைகளையடுத்து தொழுநோயாளிகளுக்கான கட்டுப்போடும் துணி வகைகள் இருந்தன. பார்த்துக் கொண்டிருந்த குழந்தைகளுக்கு சற்று மனச்சோர்வு ஏற்பட்டது. பிறகு அந்த சிப்பத்தினுள்ளிருந்து ஒரு சிறிய பெட்டியை வெளியே எடுத்தோம். அதனுள் உலர் திராட்சையும், உலர் முந்திரிப் பழமும் இருந்தன. வார இறுதியில் ரொட்டி தயாரிக்க அவை உதவும். அதன்பின் அட்டைப் பெட்டியினுள் நான் கையை விட்டு வெளியே இழுத்ததும் ஓர் இரப்பர் சுடுநீர்ப்புட்டி என் கையோடு வந்தது.
நான் ஆச்சரியத்தால் அலறிவிட்டேன்!
அதை அனுப்பச் சொல்லி கடவுளிடம் நான் கேட்கவில்லை. அவர் அனுப்புவார் என்று நான் நம்பவுமில்லை!
குழந்தைகளிடையே முதல் வரிசையில் ரூத் நின்றுகொண்டிருந்தாள். “கடவுள் சுடுநீர்ப்புட்டியை அனுப்பியிருந்தால் பொம்மை ஒன்றையும் சேர்த்தே அவர் அனுப்பியிருப்பார்” என்று சொன்ன அவள், பெட்டியினுள் ஆழமாகக் கையை உள்ளே விட்டுத் தூழாவினாள். ஆடை அணிவிக்கப்பட்ட அழகான பொம்மை ஒன்றை வெளியே எடுத்தாள். அவள் கண்கள் ஒளி வீசின. அவள் கடவுளை சந்தேகப் படவேயில்லை!
“நான் சென்று இந்த பொம்மையை அந்த சின்னக் குழந்தையிடம் கொடுக்கவா? அப்போதுதான் இயேசு தன்னை உண்மையில் நேசிப்பதாக அவள் நம்புவாள்” என்று ரூத் என்னைப் பார்த்துக் கேட்டாள்.
நான் “அப்படியே செய்” என்று அவளுக்கு மறுமொழி கூறினேன்.
அந்த சிப்பத்தை எனது விடுமுறைக்கால வகுப்பு மாணவர்களின் தலைவன் ஐந்து மாதங்களுக்கு முன்பு அனுப்பியிருக்கிறான். நான் நிலநடுக்கோட்டு வெப்பமண்டலப் பகுதியிலிருந்தாலும், ஒரு சுடுநீர்ப்புட்டியை எனக்கு அனுப்பிவைக்கும்படி கடவுள்தான் அவனை அறிவுறுத்தியிருக்க வேண்டும். யாரோ ஒரு பெண் ஆப்பிரிக்கக் குழந்தைக்காக ஐந்து மாதங்களுக்குமுன், சிப்பத்தினுள் ஒரு பொம்மையை வைத்திருக்க வேண்டும். பத்து வயது ரூத்தின் அன்றைய நண்பகல் வேண்டுகோளை, கடவுள் ஐந்து மாதங்களுக்கு முன்பே நிறைவேற்றியுள்ளார்!
“அவர்கள் கூப்பிடுகிறதற்கு முன்னே நான் மறுஉத்தரவு கொடுப்பேன்”
- ஏசாயா 65: 24. (Before they call, I will answer - Isaiah 65: 24).
நாம் இலவசமாகப் பெற்றிருக்கும் உன்னதமான பரிசு ஜெபம்! அதற்கு விலையில்லை; ஆனால் வெகுமதிகள் உண்டு!
ஒவ்வொருவருக்காகவும் நாம் பிரார்த்தனை செய்வோம்! அதற்கு ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரமே செலவாகும்!