இயேசு கிறிஸ்துவின் பன்னிரு சீடர்களில் ஒருவரான தோமா, கலிலேயா நாட்டைச் சேர்ந்த யூதராவார். இவர்தான் இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்ததை உறுதி செய்வதற்காக இயேசுவின் விலாவில் கைவிட்டுப் பார்த்தவர். அதனால் இவரை ‘சந்தேகிக்கும் தோமா’ (Doubting Thomas) என்று அழைப்பர். யோவான் இவர் பெயரை ‘திதிமு’ என்று மூன்று முறை குறிப்பிட்டுள்ளார் (யோவான் 11: 16, 20: 24, 21: 22). இவர் கி.பி. 52ஆம் ஆண்டு கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதற்காகக் கேரள மாநிலத்தில் கொடுங்கல்லூர் என்னும் ஊருக்கு அருகில் இருந்த மிகவும் பழமைவாய்ந்த முசுரிஸ் என்ற துறைமுகத்தை வந்தடைந்தார். (இந்தத் துறைமுகம் கி.பி. 1341இல் அழிந்து போனது). அங்கிருந்து வேதம் ஓதும் பிராமணர்கள் நிறைந்த பழவூர் (Palavoor) சென்று சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார். பின்பு கேரளாவின் தெற்குப் பகுதிகளுக்குச் சென்று ‘ஏழரைக்கோயில்கள்’ (Ezharapallikal or Seven and Half Churches) நிறுவினார். அவைகள், கொடுங்கல்லூர் (Kodungallur), கொல்லம் (Kollam), நிர்ரனம்(Niranam), நிலக்கல் (Nilackal), கொக்கமங்கலம் (Kokkamangalam), கோட்டக்காயல் (Kottakkayal), பழவூர் (Palavoor), திருவிதாங்கோடு அரப்பள்ளி (Thiruvithancode Arappally - the half Church) ஆகும்.
இந்த அரப்பள்ளி (அரைப்பள்ளி, Half-Church) கி.பி. 63இல் நிறுவப்பட்டதாகவும், அதனை “புனித மேரிமாதா தேவாலயம்” என்றும், “தோமையர் கோயில்” என்றும் அங்குள்ள மக்கள் அழைக்கின்றனர். அரப்பள்ளி (Half-Church) என்று சொல்லப்படுகின்ற இந்த திருவிதாங்கோடு கோவில் முழுமையான ஒரு ஆலயமாகவே காட்சி தருகின்றது. இது சேரமன்னன் ‘இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்’ காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. ஆலயம் 55அடி நீளமும், 18அடி அகலமும், 1அடி அகலம் உள்ள கருங்கல் சுவர்களால் கட்டப்பட்டுள்ளது. 2அடி அகலமும், 10அடி உயரமும் கொண்ட கருங்கல் தூண்கள் கூரையைத் தாங்கி நிற்கின்றன. கோவிலின் மேல் பகுதியில் மரத்தினால் உருவாக்கப்பட்ட ஒரு மாடி உள்ளது. அங்குதான் பரி. தோமா அமர்ந்து ஜெபம் செய்ததாகக் கூறப்படுகிறது.
ஜெபபீடத்தின் பின் பகுதியில் கருங்கல்லில் ஒரு சிலுவை வைக்கப்பட்டுள்ளது. ஜெபபீடத்தின் இடது பக்கத்தில் பரி. தோமாவின் ஓவியத்தைக் காணலாம். திருமுழுக்குத் தொட்டி ஒன்று ஜெபபீடத்தின் முற்பகுதியில் உள்ளது. கால் கழுவுவதற்கான ஒரு கல்தொட்டியையும், ஒரு கிணற்றையும் ஆலயத்தின் வெளிப்பகுதியில் காணலாம். தனித்தன்மையோடு கூடிய, பழமை வாய்ந்த சித்திர வேலைப்பாடமைந்த கருங்கல் தூண்களாலும், கற்சுவர்களாலும், கற்சிற்பங்களாலும் கட்டப்பட்ட இந்த ஆலயம் உலகளவில் ஒரு அபூர்வமான தேவாலயமாக திகழ்கின்றது. அதோடு இந்த ஆலயம் விலைமதிப்பற்ற ஒரு புனிதத் தலமாகவும் விளங்குகிறது.
ஆலயத்தின் தெற்குப் பக்கமாக இன்றும் தோமையர் கிறிஸ்தவர்கள் வசித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தத் தெருவிற்கு ‘தரீசா தெரு’ என்று பெயர். அங்கு வசிக்கும் மக்கள் ஆலயத்தை ‘தரிஸாபள்ளி’ என்று அழைக்கின்றனர். ‘தரீசா’ என்ற சொல் ‘த்றீசோ’ என்ற கிரேக்க சொல்லின் மருவலாகும். அதன் பொருள் ‘ஆர்த்தடாக்ஸ்’ என்பதாகும். அதாவது நாம் அதை ‘ஆதித்திருச்சபை’ என்று சொல்லலாம். இந்த ஆலயம் ‘சிரியன் ஆர்த்தடாக்ஸ்’ பங்குதந்தை பராமரிப்பில் இருக்கிறது.

தோமா ‘மலையடூர்’ என்ற மலைக்கு அடிக்கடி சென்று ஜெபம் செய்வதைப் பழக்கமாகக் கொண்டிருந்தார். தோமா தன் கடைசிக் காலத்தில் கிழக்குக் கடற்கரை நோக்கிப் பயணமாகி சென்னையை வந்தடைந்தார். அங்கு இருந்த குறுநில மன்னனும், மக்களும் கிறிஸ்து மார்க்கத்தை ஏற்றுக் கொண்டனர். இதனால் ஜாதியின் அடிப்படையில் அமைந்திருந்த சமுதாயத்திற்கு ஆபத்து வந்துவிடும் என்று எண்ணிய உயர்குடி சமூகத்தினர் வெகுண்டு எழுந்தனர். அதனால் மயிலாப்பூரை (Mylapore) ஆண்டு வந்த குறுநில மன்னன் ‘மாஸ்டாய்’ (Masdai), கி.பி. 72இல் தோமாவுக்கு மரணதண்டனை விதித்தான். அதோடு பொதுமக்கள் உணர்ச்சி வசப்படாமல் அமைதியாக இருக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு, தோமாவை அருகில் இருந்த குன்றுக்கு அனுப்பி வைத்தான். அங்கே அவர் ஜெபம் செய்து கொண்டிருக்கும் போது கற்களால் எறியப்பட்டும், வெறிகொண்ட ஒரு பிராமணனால் ஈட்டியால் குத்தப்பட்டும் இறந்தார். அதேவேளையில் அநேகக் கிறிஸ்தவர்களும் கொல்லப்பட்டனர். அவர்களின் சொத்துக்களும் சூறையாடப்பட்டன. கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட 64 குடும்பத்தார் கேரளாவுக்குத் தப்பிச் சென்றனர்.
முதல் முறையாக மயிலாப்பூர் பகுதியை ஆண்ட மகாதேவன் என்ற அரசன் தன் மகன் உடல்நலம் பெறுவதற்காக பரிசுத்த தோமாவின் கல்லறையைத் திறந்து மண் எடுத்தான். இரண்டாம் முறையாக கி.பி. 222-க்கும் 235-க்கும் இடைப்பட்ட காலத்தில் அவரது கல்லறையைத் திறந்து, அவரது உடல் எச்சங்களை எடுத்து இத்தாலியல் உள்ள ‘ஒர்த்தோனா’ என்ற இடத்திற்கு அனுப்பி வைத்தனர். இன்றும் இத்தாலியில் அவைகள் பாதுகாக்கப்படுகின்றன. மூன்றாவது முறையாக 1523இல் போர்த்துக்கீசியர்கள் கோவிலை புனரமைத்தபோது கல்லறையைத் திறந்தனர். கடைசியாக 1729ஆம் ஆண்டு கல்லறையைத் திறந்து மண் எடுத்து பக்தர்களுக்கு விநியோகித்தனர். சென்னையில் உள்ள ‘சாந்தோம் பேசிலிக்கா’ (San Thome Basilica) ஆலயத்தில் அவரது கல்லறையையும், அங்குள்ள அருங்காட்சியத்தில் பரிசுத்த தோமாவின் ஓர் எலும்பின் பகுதியும், அவரைக் கொலை செய்வதற்கு உபயோகித்த ஈட்டியின் முன்பகுதியும் பாதுகாப்பாய் உள்ளன. தோமா, கி.பி 72, டிசம்பர் 21இல் இறந்தார் என்று கூறப்படுகிறது. அவர் இயேசுவுக்காய் இரத்த சாட்சியாய் மரித்த அந்தச் ‘சின்ன மலை’ (Little Mount), இன்று ‘செயிண்ட் தாமஸ் மவுண்ட்’ (St. Thomas Mount) என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது.