கடவுள் கேட்கும் காணிக்கை!
பேராசிரியர்.எ.சிட்னி சுதந்திரன்.
அரையடி நிலத்துக்கு
அடுத்த வீட்டுக்காரனோடு
அடி பிடி தகராறு வழக்கு...
சிரித்துக் கொண்டே
இறைவவன் சொன்னான்
‘என் சொத்துக்கு
இருவர் போட்டி..!’
கடவுள் எதிர்பார்க்கும் காணிக்கை
“பூமியும் அதன் நிறைவும், உலகமும் அதிலுள்ள குடிகளும் கர்த்தருடையது” (சங்.24: 1).
ஆம்! இந்தப் பூமி கர்த்தரின் சொத்து. அதில் ஒரு சிறு பகுதியை நம் ஒவ்வொருவரிடமும், சங்கீதக்காரன் சொல்வதுபோல் 70 அல்லது 80 வருடங்கள் தற்காலிகமாக ஆண்டு அனுபவிக்கக் கடவுள் கொடுத்துள்ளார். அந்தச் சொத்திலிருந்து கிடைக்கும்,
“… பொருளாலும், உன் எல்லா விளைவின் முதற் பலனாலும் கர்த்தரைக் கனம் பண்ணு” (நீதி.3: 9) என்றும்,
“… கர்த்தருடைய சந்நிதியில் வெறுங்கையோடே வராமல், உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு அருளிய ஆசீர்வாதத்திற்குத் தக்கதாக, அவனவன் தன்தன் தகுதிக்கு ஏற்றபடி காணிக்கையைக் கொண்டு வரக் கடவன்” (உபா.16: 17) என்றும்,
“என் ஆலயத்தில் ஆகாரம் உண்டாயிருக்கும்படித் தசமபாகங்களையெல்லாம் பண்டசாலையிலே கொண்டு வாருங்கள்..” (மல்லி.3: 10) என்றும்,
“தேசத்திலே நிலத்தின் வித்திலும் விருட்சங்களின் கனியிலும் தசமபாகம் எல்லாம் கர்த்தருக்கு உhpயது…”, (லேவி.27: 30) என்றும்,
கடவுள் தன் பங்கை காணிக்கையாய் நம்மிடம் உரிமையோடு கேட்கிறார்.
கடவுள் அருளும் ஆசீர்வாதம்
உலகம் உனக்கு நிலையானது அல்ல, அது தற்காலிகமானது; நீ நித்திய இராஜ்யத்துக்குப் போகத்தக்கதாக நான் உனக்குக் கொடுத்துள்ள ஆசீர்வாதத்தில் ஒரு பகுதியைக் காணிக்கையாய் எனக்குக் கொடு என்று கேட்கும் கடவுள், நமக்கு என்ன கைமாறு செய்கிறார்? பள்ளிக்கூடத்திலிருந்து மாலை பசியோடு வீடு திரும்பும் குழந்தைக்கு தட்டு நிறைய இனிப்புப் பதார்த்தம் கொடுத்து, அது ருசித்து உண்ணும் அழகை ரசிக்கும் தாய், “செல்லம்! என் கண்ணுல்ல... உன் அம்மாவுக்கு கொஞ்சம் தாயேன்” என்று கை நீட்டிக் கேட்கும் போது, குழந்தையும் தன் பிஞ்சு விரல்களால் சிறிது எடுத்து அதைத் தாயிடம் கொடுக்க, தாய் அதை அப்படியே அதன் வாயிலேயே ஊட்டி விடுவதோடு, பிள்ளையை அப்படியே வாரி அணைத்து முத்தமழையினால் தன் அன்பை வெளிப்படுத்துவாள் அல்லவா? ஆம்... அதைவிட நம் தேவன் அதிக அன்புள்ளவர் அல்லவா? அவருக்கு உரித்தான காணிக்கையை நாம் செலுத்தும்போது,
“…. நீங்கள் எவ்விதத்திலும் சம்பூர்ணமுள்ளவர்களாவீர்கள்” (2கொரி.9: 11) என்றும்,
“…. உங்களுக்கு விதையை அளித்து, அதைப் பெருகப்பண்ணி, உங்கள் நீதியின் விளைச்சலை வர்த்திக்கச் செய்வார்” (2கொரி.9: 10) என்றும்,
“கொடுங்கள் அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்…” (லூக்.6: 38) என்றும்,
“…… அப்பொழுது நான் வானத்தின் பலகணிகளைத் திறந்து, இடம் கொள்ளாமற் போகுமட்டும் உங்கள்மேல் ஆசீர்வாதத்தை வருஷிக்க மாட்டேனோவென்று என்னைச் சோதித்துப் பாருங்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்” (மல்லி.3: 10).
அவரை சோதித்துப் பார்க்கும் தகுதி நமக்கு இல்லை என்பதை உணர்ந்தவர்களாய், எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லாமல் அவருடைய காணிக்கையைச் செலுத்துவோம்.
இயேசு பாராட்டிய காணிக்கை
காணிக்கைப் பெட்டியின் முன் அமர்ந்திருந்த இயேசுவானவர், ஏழை விதவை போட்ட இரண்டு காசுகளைக் குறித்து,
“… ஐசுவர்யவான்கள் அநேகர் அதிகமாய்ப் போட்டார்கள்”. ஆனால், “பணம் போட்ட மற்றெல்லாரைப் பார்க்கிலும் இந்த ஏழை விதவை அதிகமாய்ப் போட்டாள்”, ஏனெனில் “…. இவளோ தன் வறுமையிலிருந்து தன் ஜீவனத்துக்கு உண்டாயிருந்ததெல்லாம் போட்டுவிட்டாள்..” (மாற்.12: 41, 43, 44) என்று சீடர்களிடம் கூறினார்.
யாருக்கு தர்மம் செய்ய வேண்டும்?
“…. இரண்டு அங்கிகளையுடையவன் இல்லாதவனுக்குக் கொடுக்கக் கடவன்; ஆகாரத்தை உடையவனும் அப்படியே செய்யக்கடவன்…” (லூக்.3: 11) என்றும்,
“உன்னிடத்தில் கேட்கிற எவனுக்கும் கொடு; உன்னுடையதை எடுத்துக் கொள்ளுகிறவனிடத்தில் அதைத் திரும்பக் கேட்காதே” (லூக்.6: 30) என்றும் இயேசு கூறுகிறார்.
“தரித்திரனுக்குக் கொடுக்கிறவன் தாழ்ச்சியடையான்” (நீதி.28: 27) என்றும்,
“கருணைக்கண்ணன் ஆசீர்வதிக்கப்படுவான். அவன் தன் ஆகாரத்தில் தரித்திரனுக்குக் கொடுக்கிறான்” (நீதி.22: 9)என்றும்,
“ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன் கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திருப்பிக் கொடுப்பார்” (நீதி.19: 17) என்றும்,
“…. தரித்திரனுக்கு இரங்குகிறவனோ பாக்கியமடைவான்” (நீதி.14: 21) என்றும் சாலொமோன் ஞானி குறிப்பிடுகிறார்.
“வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான் அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்” (சங்.112: 9) என்று சங்கீதக்காரன் சொல்வதையும்,
“… மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ அதை எனக்கேச் செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்” (மத்.25: 40) என்று இயேசுவானவர் சொல்வதைப் பார்க்கிறோம்.
ஏழைகள், திக்கற்றவர்கள், சிறுமைப்பட்டவர்கள், தரித்திரர்கள், ஊனமுற்றோர்கள்… இப்படிப்பட்டவர்களுக்கு நாம் தர்மம் செய்யக் கடமைப்பட்டவர்கள் என்பதை வேதம் போதிக்கிறது.
அந்தப் பையன் உணவின்றி உடையின்றி வாடிக் கொண்டு இருந்தாலும், ஆண்டவரை வாழ்த்திக் கொண்டிருந்தான். அவனது நிலைமையைக் கண்ட பெண்ணொருத்தி, “கடவுள் உன்னை அன்பு செய்கிறார் என்றால் உனக்கு உணவும் உடையும் தந்திருப்பாரே” என்றாள்.
பையன் சொன்னான், “கடவுள் யாரோ ஒருவரிடம் அதைக் கொடுத்து அனுப்பியிருக்கிறார். அவர் தான் கொடுக்க மறந்து விட்டார்”.
ஆம்..! ஒருவேளை அந்த ‘அவர்’ நாமாகக்கூட இருக்கலாமே..?
அங்கீகரிக்கப்படும் தர்மம்
“நீயோ தர்மம் செய்யும் போது உன் தர்மம் அந்தரங்கமாயிருப்பதற்கு, உன் வலதுகை செய்கிறதை உன் இடதுகை அறியாதிருக்கக் கடவது” (மத்.6: 3) என்கிறார் இயேசு.
அதுபோல “அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்” (2கொரி.9: 7) என்ற வேதவசனத்தில் மனதாரக் கொடுப்பதையே தேவன் விரும்புவதைப் பார்க்கிறோம்.
நிராகரிக்கப்படும் தர்மம்
மனுஷர் காண வேண்டுமென்றோ, மனுஷரால் புகழப்படுவதற்காகவோ, சுய விளம்பரத்திற்காகவோ தர்மம் செய்யாதிருங்கள். அப்படிச் செய்யப்படும் தர்மத்தால் பரலோகத்திலிருக்கும் பிதாவினிடத்தில் உங்களுக்கு எவ்வித பலனும் இல்லை (மத்.6: 1-2) என்கிறார் இயேசு.
அதுபோல, “…. நீங்கள் ஒற்தலாமிலும், வெந்தயத்திலும், சீரகத்திலும் தசமபாகம் செலுத்தி, நியாயப் பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும், இரக்கத்தையும், விசுவாசத்தையும்…” (மத்.23: 23) விட்டுவிட்டால் பலன் இல்லை என்கிறார் இயேசு.
அநேக நாட்களாய் ஆலயத்திற்குச் செல்லாமல் இருந்த மனிதனின் கனவில் கடவுள் தோன்றி, “ஏன் நீ ஆலயத்துக்கு வரவில்லை?” என்று கேட்டதற்கு,
“என்னிடம் காணிக்கை போட பணம் இல்லை” என்றான் அவன். அதற்குக் கடவுள், “உன் கண்கள் இரண்டிலும் நீர் கூடவா இல்லை? பணம் இல்லை என்ற வேதனையை கண்கலங்க என்னிடம் சொன்னால், அந்தக் கண்ணீர் சொட்டுக்களை காணிக்கையாக ஏற்று உனக்கு வேண்டியதைத் தரமாட்டேனா?” என்றார் கடவுள்!
பணத்தை அல்ல… உன்னையும் உன் கண்ணீரையும் எனக்குக் காணிக்கையாகத் தா என்கிறார் கடவுள்.
*****
 இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.
|