இறைவனை வழிபடும் பக்தனின் பல பாவங்களில் ஒன்றான காதல் எனும் பாவத்தில் கிருஷ்ணனை நேசித்து, அவனுடன் ஈருடல் ஓருயிராக இணைந்து, ராசலீலைகளில் மகிழ்ந்து, அணுவளவும் அவனை விட்டுப் பிரிய மனமின்றி வாழ்ந்த இராதையின் பக்தியை, இராதாகிருஷ்ண தத்துவம் என்று குறிப்பிடுகின்றனர்.
கிருஷ்ணர் என்ற பரமாத்மாவுடன் இரண்டறக் கலந்த ஜீவாத்மா ஆனவாள் இராதை. அதனாலேயே, கிருஷ்ணர் இராதையின் பெயரைத் தன் பெயரோடு இணைத்துக் கொண்டு இராதாகிருஷ்ணன் என்ற பெயரில் விளங்குகிறார். கோபியர் அனைவருக்குமே கண்ணன் இனியவன் என்றாலும், இராதையின் அன்பு மட்டுமே கண்ணனைக் கட்டிப்போட்டது.
கண்ணனும் பெரும்பாலான நேரம் இராதாவுடன் இருப்பதிலேயே மகிழ்ந்தார். உடல் கண்ணன் என்றால் அவர் உயிர் இராதை. பரமாத்மா கண்ணன் எனில் ஜீவாத்மா இராதை ஆவாள். பரமாத்மாவும், ஜீவாத்மாவும் இணைவதைக் குறிப்பதே இராதா கிருஷ்ண அன்பு ஆகும்.
பிருந்தாவனத்தில் பாலகிருஷ்ணருடன் இராதையும், கோபியர்களும் நடத்திய ராசலீலைகள், மனித குலம் கிருஷ்ணர் மீது கொண்ட உயர்ந்த பக்தியை விளக்குகிறது. இராதையும், கோபியர்களும் தங்களைப் பக்தர்களாகவும், பால கிருஷ்ணனை தங்களைக் காக்கும் இறைவனாகவும் கொண்டாடி ஆடிப் பாடி மகிழ்ந்தனர்.
பிருந்தாவனத்திலிருந்து சற்று தொலைவில் ஒரு கிராமத்தில் வசித்து வந்தவள் ஆயர் குலப் பெண்னான ராதை. கிருஷ்ணனை விட ஐந்து வயது மூத்தவள். அடிக்கடி தன்னுடன் இருக்கும் கோபியர்களுடன் கூறாமல் பிருந்தாவனத்தை விட்டு கிருஷ்ணன், இராதையைத் தேடி அவளது கிராமத்தை நோக்கிச் சென்று விடுவார்.
ஒரு முறை கம்சனின் ஆணைப்படி, அக்ரூரர் பாலகிருஷ்ணனையும், பலராமரையும் பிருந்தாவனத்திலிருந்து மதுராவிற்கு அழைத்துச் செல்வதற்கு முன்னர், பாலகிருஷ்ணன் இராதையைச் சந்தித்து, தன் கிருஷ்ண அவதாரத்தின் காரணத்தைக் கூறி விடைபெற்றார். இறுதியில் இராதையும், கோபியர்களும் அமைதியாக கிருஷ்ணணை மதுராவிற்கு வழி அனுப்பி வைத்தனர். கண்ணனை விட்டுப் பிரியாமல் கோகுலத்திலும், பிருந்தாவனத்திலும் ஆடிப் பாடி கூடி மகிழ்ந்த இராதா, கண்ணன் மதுராவுக்குச் சென்ற பின்பு அவனையே நினைத்து அழுதாளாம். தன் கரங்களில் முகத்தைப் புதைத்து கண்ணீர் சிந்திக் கொண்டே இருந்து, சற்றும் உறங்காமல் இருந்தாள் என உத்தவர் பிரஹ்லாத சமிதையில் கூறுகிறார்.
பாலகிருஷ்ணன் மதுரா சென்று, கம்சனை அழித்த பின்னர், துவாரகையில் அரண்மனை கட்டி வாழ்ந்து வந்தார். ஆனால், பிருந்தாவனத்தில் இராதை, கிருஷ்ணரின் நினைவுடனே வாழ்ந்து வந்தாள். பல ஆண்டுகள் கழித்து ஒரு முறை இராதை மட்டும் தன்னந்தனியாக, பிருந்தாவனத்தை விட்டு கிருஷ்ணரைக் காண துவாரகை நகருக்குச் சென்றாள்.
துவாரகை அரண்மனை நுழைவாயிலில் இருந்த கூட்டத்தில் ஒருத்தியாக கிருஷ்ணரைக் கண் குளிரக் கண்டாள் இராதை. இறுதியில் கிருஷ்ணரின் ஒப்புதலின் பேரில் இராதை, துவாரகையின் அரண்மனையில் பணிப்பெண்னாகச் சேர்ந்தாள். அவ்வப்போது கிருஷணரின் புல்லாங்குழல் இசையைக் கேட்டு மகிழ்ந்த இராதை, இறுதியில் கிருஷ்ணரிடம் ஐக்கியமாகி மறைந்தாள்.