தேவாரத் திருத்தலங்களில் 222 ஆம் தலமான திருவதிகை தலம் கெடில நதியின் வடகரையில் அமைந்துள்ளது. இதன் மூலவர் ஸ்ரீவீரட்டேசுவரர், சுயம்பு மூர்த்தியாவார். அம்பிகை ஸ்ரீதிரிபுரசுந்தரி. சிவபெருமான் வீரத் திருவிளையாடல் புரிந்த எட்டுத் தலங்களுள் இத்தலமும் ஒன்று. இத்தலமானது, மூவர் பெருமக்களின் பாடல் பெற்ற நடுநாட்டுத் தலம். திலகவதியார் திருத்தொண்டு செய்து மகிழ்ந்த தலம், திருநாவுக்கரசரை ஆட்கொண்டு சூலை நோய் தீர்த்த தலம். ஞான நூலான 'உண்மை விளக்கத்தை' அருளிய மணிவாசகங்கடந்தாரின் அவதரித்த தலம். சம்பந்தருக்கு இறைவன் திருநடனக் காட்சி வழங்கிய தலம். திரிபுரத்தைத் தகனம் செய்த தலம்.
மூலஸ்தானலிங்கம் பட்டைப் பட்டையாக எழிலுடன் காட்சி தருகிறது. இக்கோயிலில் வீற்றுள்ள அம்பிகை, சுவாமிக்கு இடப்புறமில்லாது வலப்பக்கமாகக் காட்சி தருகிறார். ஏழு நிலை கோபுர வாயிலுக்கு உள்ளே தென் திசையில் சங்கர தீர்த்தம் உள்ளது. வடதிசையில் உள்ள புத்தர் சிலை சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு வைக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. மூலவரின் கருவறை விமானம் எண்கோண வடிவில் சுதையால் கட்டப்பட்டது. விமானத்தின் அடித்தளத்திலிருந்து ஸ்தூபி வரை அழகிய சிற்பங்கள் உள்ளன. திரிபுராந்தகர் சிற்பம் பன்னிரண்டு திருக்கரங்களுடன், ஒரு காலை உயர்த்தியும் வில்லை வளைத்த கோலத்தில் காட்சி தருகிறது.
வடக்குப் பிரகாரத்தில் சூலை தீர்த்தம் உள்ளது. இத்தீர்த்தம்தான் தருமசேனரின் சூலைநோயைப் போக்கி அவரை திருநாவுக்கரசராக மாற்றியது. மூல லிங்கத்திற்குப் பின்னால் கருவறையின் சுவரில் இறைவனும் இறைவியும் திருமணக் கோலத்தில் உள்ளனர். ஒளவைக்கு அமரத்துவம் அளிக்கக்கூடிய நெல்லிக்கனியைத் தந்து ஒளவையின் அருளைப் பெற்ற அதியமான் அரசாண்ட தலமும் இது. பண்ருட்டியிலிருந்து கடலூர் செல்லும் சாலையில் பண்ருட்டியிலிருந்து 2 கி.மீ. தூரத்தில் இத்தலம் உள்ளது.