முருகனின் அறுபடை வீடுகளில் ‘இரண்டாம் படை வீடு’ என்று போற்றப்படும் திருச்செந்தூர், சுப்பிரமணிய சுவாமி கோயில் தைப்பூசத் திருவிழா நாளில், அலைவாயுகந்த பெருமானாக வடக்கு ரத வீதியிலுள்ள சங்கு முக நாட்டு இல்லத்தார் மண்டபத்தில் எழுந்தருளி அருள் புரிகிறார்.
தூத்துக்குடி வருவாய் மாவட்டத்தில் ஸ்ரீ வைகுண்டம் வட்டம் மற்றும் திருச்செந்தூர் வட்டம் எனும் இரு வட்டங்களில் இருக்கும் ஈழவர் சமூகத்தினர் (தற்போது ஈழவர், இல்லத்தார், இல்லத்துப் பிள்ளைமார் என்கிற பெயர்களில் அழைக்கப்படுகின்றனர்) வாழ்ந்த சில ஊர்களை கருங்குளம் - புத்தனேரி கடிஸ்தலம், வல்லநாடு - செட்டிமல்லன்பட்டி கடிஸ்தலம், ஸ்ரீவைகுண்டம் - ஆழ்வார் திருநகரி கடிஸ்தலம், ஏரல் - சேது கடிஸ்தலம், ஆத்தூர் - காருகுறிச்சி கடிஸ்தலம் என்று மொத்தம் ஐந்து கடிஸ்தலங்களாகப் பிரித்திருக்கின்றனர்.
கடிஸ்தலம் என்பதற்கு ஈழவர் வாழும் நிலப்பகுதி என்று தமிழ் அகரமுதலி பொருள் தருகிறது. ஈழவர்கள் வாழ்ந்த நிலப்பகுதிகளில், கருங்குளம் - புத்தனேரி கடிஸ்தலத்தில் புத்தனேரி, கருங்குளம், செய்துங்கநல்லூர், புளியங்குளம், கற்குளம், பக்கவெட்டி, அரியகுளம், வசவப்பபுரம், பொந்தன்புளி எனும் ஒன்பது கிராமங்களும், வல்லநாடு - செட்டிமல்லன்பட்டி கடிஸ்தலத்தில் வல்லநாடு, செட்டிமல்லன்பட்டி, எல்லைநாயக்கன்பட்டி, சிங்கத்தாகுறிச்சி, மீனாட்சிப்பட்டி, மணக்கரை, சிவகளை, திருத்திய பொட்டல், பொட்டலூரணி எனும் ஒன்பது கிராமங்களும், ஸ்ரீவைகுண்டம் - ஆழ்வார் திருநகரி கடிஸ்தலத்தில் ஸ்ரீவைகுண்டம், புதுக்குடி, வேளூர் (வெள்ளூர்), சிவராமமங்கலம், தென்திருப்பேரை, கடையனோடை, திருக்களூர், மணல்குண்டு, மணவளராயநத்தம் எனும் ஒன்பது கிராமங்களும், ஏரல் - சேது கடிஸ்தலத்தில் சிறுத்தொண்ட நல்லூர், ஏரல், சேதுவாய்க்கால், சின்னநட்டாத்தி, ஆனையப்பப்பிள்ளை சத்திரம், நல்லூர், திருச்செந்தூர், குலசேகரப்பட்டிணம், உடன்குடி, மறந்தலை, வீரபாண்டியன்பட்டணம், வடலிவிளை எனும் 12 கிராமங்களும், ஆத்தூர் - காருகுறிச்சி கடிஸ்தலத்தில் ஆத்தூர், குருவித்துறை (முக்காணி), கொற்கை, மாறமங்கலம், பழையகாயல், பெருங்குளம், முடிவைத்தானேந்தல், புதூர், வாகைக்குளம், பேய்க்குளம், சேர்ந்தபூமங்கலம் எனும் 11 கிராமங்களும் என்று மொத்தம் 50 ஊர்கள் இடம் பெற்றிருக்கின்றன. இந்த 50 ஊர்களை உள்ளடக்கிய ஈழவ சமூகத்தினர் வாழ்ந்த நிலப்பகுதிகளை ‘சங்கு முக நாடு’ என்று வகைப்படுத்தியிருக்கின்றனர்.
அகத்திய முனிவரின் சீடர்களில் ஒருவரான உரோமச முனிவர், தன் குருவான அகத்தியரின் அறிவுரைப்படி தாமிரபரணி நதியில் ஒன்பது மலர்களை மிதக்க விட்டு, அதனைத் தொடர்ந்து சென்று, அம்மலர்கள் கரை ஒதுங்கிய இடங்களான பாபநாசம், சேரன்மகாதேவி, கோடகநல்லூர், குன்னத்தூர், முறப்பநாடு, திருவைகுண்டம், தென்திருப்பேரை, ராஜபதி, சேர்ந்த பூமங்கலம் ஆகிய ஊர்களில் சிவபெருமானுக்குக் கோயிலமைத்து வழிபட்டு, கடைசியாக சேர்ந்த பூ மங்கலம் அருகிலுள்ள சங்கு முகத் தீர்த்தத்தில் நீராடி முக்தி பெற்றார் என்று புராணக்கதைகள் தெரிவிக்கின்றன. சேர்ந்த பூமங்கலம் பகுதி முன்பு சங்கு முகப் பகுதி என்று அழைக்கப்பட்டிருக்க வேண்டும். அதனை அடிப்படையாகக் கொண்டு, புத்தனேரியில் தொடங்கி, சங்கு முகப்பகுதியான சேர்ந்த பூமங்கலம் பகுதியில் முடிவடைந்த இந்த 50 ஊர்களைக் கொண்ட பகுதியினை சங்கு முக நாடு என்று குறிப்பிட்டிருக்க வேண்டும் என்று சிலர் சொல்கின்றனர். புத்தனேரியில் தொடங்கி, சேர்ந்த பூமங்கலம் வரையிலான 50 ஊர்களையும் ஒரு கோடிட்டு ஒருங்கிணைத்தால், அது சங்கு முகத் தோற்றத்திலிருக்கும் என்று சிலர் சொல்கின்றனர். சங்கு முக நாடு என்று எப்படி பெயர் வந்தது? என்பதற்கு ஒத்த கருத்துகள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.
சங்குமுக நாட்டு ஈழவ சமூகத்தினருக்கு வழங்கப் பெற்ற உரிமையின் அடிப்படையில், ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத் திருவிழா நாளன்று, தமிழ் வருடம் 1099 ஆம் ஆண்டு, தை மாதம் 13 ஆம் நாளில் (1924 ஆம் ஆண்டு, ஜனவரி 26) அன்று செய்து கொண்ட உடன்படிக்கையின்படி, சங்கு முக நாட்டு ஈழவர் சமூகத்தினர் கட்டுமானம் செய்திருக்கும் திருச்செந்தூர், வடக்கு ரத வீதியிலிருக்கும் சங்கு முக நாட்டு இல்லத்தார் தைப்பூச மண்டபத்தில், சுவாமி அலைவாயுகந்த பெருமான் எழுந்தருளிப் பக்தர்களுக்கு அருள்கிறார்.
ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத் திருவிழா நாளன்று, திருச்செந்தூரிலிருக்கும் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அதிகாலை 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 7.30 மணிக்கு தீர்த்தவாரியும், காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், உச்சிகால தீபாரதனையும் நடைபெறுகிறது. தீபாராதனைக்குப் பிறகு, சுவாமி அலைவாயுகந்த பெருமான் வடக்கு ரத வீதியில் உள்ள சங்கு முக நாட்டு இல்லத்தார் தைப்பூச மண்டபத்தில் எழுந்தருள்கிறார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெறுகிறது. சங்கு முக நாட்டு ஈழவ சமூகத்தினர் வழிபாட்டிற்குப் பிறகு, சுவாமி தனித்தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தபடியேக் கோவிலுக்குச் செல்வது வழக்கமாக இருக்கிறது.