திருமலை திருப்பதி வெங்கடாசலபதிக்கு நெய்வேத்தியமாக படைக்கப்பட்ட லட்டு, ஸ்ரீவாரி லட்டு என்று சொல்லப்படுகிறது. இருப்பினும், இந்த லட்டை, திருப்பதி லட்டு என்றேப் பலரும் சொல்கின்றனர். திருமலை திருப்பதி வேங்கடவனுக்கு 1715 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2 முதல் லட்டை நைவேத்தியமாக படைப்பது தொடங்கியது. இருப்பினும், 1803 ஆம் ஆண்டிலிருந்துதான் பிரசாதங்களைப் பக்தர்களுக்கு விற்கும் முறை கோயிலில் தொடங்கியது. அப்போது இனிப்புப் பிரசாதமாக பூந்தி விநியோகம் செய்யப்பட்டது. தொடர்ந்து 1940 ஆம் ஆண்டு முதல் பூந்திக்குப் பதில் லட்டைப் பிரசாதமாக வழங்கத் தொடங்கினர்.
திருமலைக் கோயிலின் சம்பங்கி பிரதாக்ஷணம் என்னும் இடத்தில் லட்டுகள் தயாரிக்கும் பொட்டு என்னும் மடப்பள்ளி உள்ளது. இங்கு பொருட்கள் சுமந்து செல்லப் பயன்படுத்தப்படும் மூன்று கடத்துப் பட்டைகள் பொருத்தப்பட்டுள்ளன, இவை மடப்பள்ளியிலிருந்து விற்பனையகத்துக்கு லட்டுக்களைக் கொண்டு செல்லப் பயன்படுகின்றன. மூன்று கடத்துப்பட்டைகளில் முதல் பட்டை லட்டுகளை எடுத்துச் செல்ல வசதியாக 2007 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இரண்டாவது பட்டையானது லட்டு, பூந்தி ஆகியவற்றைக் கொண்டு செல்ல வசதியாக 2010 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. மூன்றாவது கடத்துப்பட்டை முதலிரண்டு பட்டைகளுக்கு உதவியாக 2014 ஆம் ஆண்டு பொருத்தப்பட்டது. கடந்த காலத்தில் லட்டுகள் தயாரிக்க விறகு அடுப்பு பயன்படுத்தப்பட்டது. 1984 ஆம் ஆண்டு முதல் சமைக்க எரிவளி பயன்படுத்தப்பட்டு வருகிறது. 200 சமையல் பணியாளர்கள் லட்டு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். இந்தச் சமையல் பணியாளர்கள், ‘பொட்டு கார்மீகலு’ என தெலுங்கு மொழியில் அழைக்கப்படுகின்றனர்.
திருப்பதி லட்டுவை, ஆஸ்தான லட்டு, கல்யாண உற்சவ லட்டு, புரோக்தம் லட்டு என்று மூன்று பிரிவுகளில் வகைப்படுத்துகின்றனர்.
ஆஸ்தான லட்டு என்பது, முதன்மையான விழா நாட்களில் மட்டும் தயாரிக்கப்பட்டு முக்கியப் பிரமுகர்களுக்கு வழங்கப்படுகிறது. இது 750 கிராம் எடையுடன், பிற லட்டுக்களை விட மிகுதியான அளவில் முந்திரி, பாதாம், குங்குமப்பூ போன்றவை சேர்த்துத் தயாரிக்கப்படுகிறது.
கல்யாண உற்சவ லட்டு என்பது, கல்யாண உற்சவ சேவையில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இது 750 கிராம் எடையுடன் இருக்கும். இந்த லட்டுக்கான தேவை மிகுதியாக உள்ளது. புரோகிதம் லட்டை விட குறைந்த அளவே இது தயாரிக்கப்படுகிறது.
புரோக்தம் லட்டு என்பது பொதுவான பக்தர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. மூன்று வகை லட்டுகளில் இந்த லட்டுதான் அளவில் சிறியது. இது 175 கிராம் எடையுடையதாக இருக்கும். இந்த லட்டுகள் மிகுதியான எண்ணிக்கையில் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது.
திருப்பதி லட்டுக்கு அதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்ய, அதன் வரலாற்றில் ஆறு முறை திட்டம் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தற்போது திருப்பதி லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களாக, கடலை மாவு, முந்திரி, ஏலக்காய், நெய், சர்க்கரை, கற்கண்டு மற்றும் உலர்ந்த திராட்சை போன்றவை இருக்கின்றன. நாளொன்றுக்குக் கடலை மாவு சுமார் 10 டன், சர்க்கரை 10 டன், முந்திரி 700 கிலோ, ஏலக்காய் 150 கிலோ, நெய் 300 முதல் 500 லிட்டர், கற்கண்டு 500 கிலோ, காய்ந்த திராட்சை 540 கிலோ மூலப்பொருட்களாகப் பயன்படுத்தப்பட்டு திருப்பதி லட்டு தயாரித்து வழங்கப்பட்டு வருகிறது. இங்கு நாள் ஒன்றுக்கு 8,00,000 லட்டுக்களை தயார் செய்யும் திறன் இருப்பினும், ஏறக்குறைய 1.5 லட்சம் லட்டுகள் நாளொன்றுக்கு தயாரிக்கப்படுகிறது.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தால் தயாரிக்கப்படும் இந்த லட்டுக்கு 2008 ஆம் ஆண்டு புவிசார் குறியீட்டுக்கு பதிவு செய்யப்பெற்று, 2009 ஆம் ஆண்டு திருப்பதி லட்டு புவியியல் அறிகுறிகள் போன்ற உணவு வகையின் கீழ் ஜி.ஐ. சட்டம் 1999- ன் படி பதிவு செய்யப்பட்டது. இதன் மூலம் திருப்பதி லட்டு எனும் பெயரில் மற்றவர்கள் இனிப்பு தயார் செய்யவும், இதன் பெயரைப் பயன்படுத்தவும் தடை செய்யப்பட்டிருக்கிறது.