கேசவன், நாராயணன், மாதவன், கோவிந்தன், விஷ்ணு, மதுசூதனன், திரிவிக்ரமன், வாமனன், ஸ்ரீதரன், ருஷீகேசன், பத்மநாபன், தாமோதரன் எனும் பன்னிரண்டு பெயர்களை, பன்னிரு நாமங்கள் என்கின்றனர்.
விஷ்ணுவை முதன்மைத் தெய்வமாகக் கொண்ட வைணவத்தில், மரபு வழுவாதவர்கள் தங்கள் உடலின் 12 பாகங்களில் 12 குறிகள் இட்டுக் கொள்கின்றனர். ஒவ்வொரு குறியும் இப்பன்னிருவரில் ஒருவரின் பெயரைக் குறிக்கும். இந்த வழக்கம் பல நூற்றாண்டுகளாக மரபில் ஒன்றி விட்டதால், இன்று அக்குறிகளுக்கே 'நாமங்கள்' என்ற பெயர் நிலைத்துவிட்டது.
இப்பன்னிரு நாமங்களையும் ஒருங்கேப் போற்றும் வகையில் நம்மாழ்வார், தன் திருவாய்மொழியில் பன்னிருநாமப் பாட்டு என்ற தொகுதியில் பன்னிரு பாடல்களாக ஓர் அந்தாதி முறையில் சிறப்பாகப் பாடியிருக்கிறார்.
இங்கு, சுவையான செய்தி என்னவென்றால், விஷ்ணுவின் முக்கிய அவதாரங்களான இராமர், கிருஷ்ணர் ஆகிய இரு பெயர்கள் இப்பன்னிரு பெயர்களில் இல்லை. இருப்பினும், திரிவிக்ரமன், வாமனன் என்ற இரு பெயர்களைத் தவிர இதர 10 பெயர்களும் கிருஷ்ணருடையதுதான்.
இப்பன்னிரு பெயர்களில் நேரடியாக விஷ்ணுவின் அவதாரங்களைச் சொல்வது 'திரிவிக்ரமன்', 'வாமனன்' என்ற இரு பெயர்கள்தாம். வாமன அவதாரத்தில் ஒரு சிறிய உருவத்துடன் மகாபலிப்பேரரசரின் முன் வந்து, மூன்றடி மண் கேட்டு அதற்கு அரசன் உடன்பட்டவுடன் வானளாவிய கால்களினால் மூவுலகத்தையும் அளந்தார் விஷ்ணு. இதனால் அவருக்கு திரிவிக்ரமன் என்ற பெயர் வந்தது. 'திரி' என்றால் 'மூன்று'. 'விக்ரம' என்றால் 'காலின் ஓரடி'. 'வாமன' என்றால் 'சிறிய உருவம்'. குள்ளமான உடலமைப்பு கொண்டபடியால் 'வாமனர்' என்ற பெயர். உலகளந்த பெருமானாதலால் 'திரிவிக்ரமர்' என்ற பெயர்.