அம்பாள் கோயில்களில் அம்பாளுக்கு முதலில் தூய நீர், மஞ்சள் நீர் ஆகியவற்றால் நீராட்டி பின் பால், தயிர், சந்தனம், பஞ்சாமிர்தம், பன்னீர், விபூதி ஆகியவற்றால் அபிஷேகம் நடைபெறுகிறது. இந்த அபிசேகம் மூலம் நம் வேண்டுதல்களையும் வெளிப்படுத்துகிறோம். இதன் பொருளென்ன? என்று தெரிந்து கொள்ளலாம்.
நீர் - தூய வாழ்வை வாழ வேண்டும் என்ற நமது எண்ணத்தை நீர் அபிஷேகத்தால் அம்பாளிடம் வெளிப்படுத்துகிறோம்.
மஞ்சள் - மங்களமும் ஆரோக்கியமும் கொண்ட வாழ்வைக் கோருகிறோம்.
பால் - பால் போன்ற களங்கமற்ற மனதிற்காக இறைஞ்சுகிறோம்.
தயிர் - வயதான நிலையிலும்கூட களங்கமற்ற நம் மனம் தயிர் போல் மாறிப் பிறருக்குப் பயன்படும் நிலையை உணர்த்துகிறது.
சந்தனம்- தேயத் தேய சந்தனம் மணம் வீசும். அதைப் போல் பிறருக்காக உழைத்து வாழ்க்கையில் தியாகம் புரிய வேண்டியதைச் சுட்டுகிறது.
பஞ்சாமிர்தம் - ஐந்து பொருள்களால் ஆன இந்த அபிஷேகம் நமது ஐம்புலன்களை அடக்கிக் கட்டுப்பாட்டுடன் வாழ்ந்து இன்பம் அனுபவிப்பதைக் குறிக்கிறது.
பன்னீர் - மேற்கண்ட முறையில் வாழ்ந்தால் பன்னீர் போன்ற தெளிவு பிறப்பதை நினைவூட்டுகிறது.
விபூதி - இந்த உலகில் என்னதான் அனுபவித்தாலும் இறுதியில் எல்லாம் ஒருபிடி சாம்பல்தான் என்பதை உணர்த்துகிறது.