மார்கழி மாதத்தில் நாடெங்கும் விடியற்காலையில் திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளி எழுச்சி பாடக் கேட்கிறோம்.
திருவாசகத்தில் திருவெம்பாவை ஒரு பதிகம், 20 பாடல்கள். திருப்பள்ளி எழுச்சி ஒரு பதிகம், 10 பாடல்கள். இவை சைவ பரமாகப் பாடப் பெற்றவை.
சைவத்தில் திருவெம்பாவையைப் போன்று, வைணவத்தில் ஆண்டாள் பாடிய திருப்பாவை, 30 பாடல்கள் உள்ளன. வைணவத்தில் திருப்பள்ளி எழுச்சி 10 பாடல்கள் தொண்டரடிப்பொடி ஆழ்வார் பாடியது.
திருவெம்பாவை, திருப்பாவை இவ்விரண்டும் நோன்பை அடிப்படையாகக் கொண்டது. பாவை நோன்பு இன்றும் கன்னிப் பெண்களால் நோற்கப் பெறுவது.
நாட்டில் நன்கு மழை பொழிய வேண்டும், பெண்களுக்கு நல்ல கணவர் வாய்க்க வேண்டும் என்ற இரண்டு காரணங்களை முன்னிட்டு நோற்பது பாவை நோன்பு.
கன்னியர் அதிகாலையில் எழுந்து பல வீடுகளுக்குச் சென்று ஒருவரை ஒருவர் எழுப்பிப் பலராகச் சேர்ந்து ஆறு, குளம் முதலிய நீர் நிலைகளில் குள்ளக் குளிர நீராடிப் பாவை நோன்பு நோற்பர்.
அந்த நோன்பின் பயனாக நாட்டில் நல்ல மழை பெய்யும். ‘’தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து" என்னும் ஆண்டாளின் திருப்பாவைக்குப் பெரிய வாச்சான் பிள்ளை அருமையான வியாக்கியானம் எழுதுகிறார்.
மாதம் மும்மாரி என்பது ‘’ஒன்பது நாள் வெயிலும் ஒரு நாள் மழையுமாய்" என்கிறார். ஒன்பது நாள் வெயில் காய வேண்டும். பத்தாம் நாள் மழை பெய்ய வேண்டும். ஒன்பது நாள் வெயிலின் சூட்டைப் பத்தாம் நாள் மழை தணிக்கும். இப்படி மூன்று பத்து முப்பது நாட்களில் மும்முறை மழை பெய்ய வேண்டும்.
நாடு செழிக்கும், சீதைக்கு இராமன் போல, நப்பின்னைக்குக் கண்ணன் போலப் பெண்களுக்கு நல்ல கணவன்மார்கள் வாய்க்க வேண்டும். பக்தியும் ஒழுக்கமும் முயற்சியும் உடைய வாழ்க்கைத் துணைவர் கிடைக்க வேண்டும்.
இவ்விரண்டும் வேண்டிப் பழங்காலத்தில் பாவை நோன்பு பற்றிய செய்திகள் உள்ளன. எனினும் சமய இலக்கிய காலத்தில் மாணிக்கவாசகரும், ஆண்டாள் நாச்சியாரும் திருவெம்பாவை திருப்பாவை பாடியதன் மூலம் ஒரு நல்ல மரபை நாடெங்கும் பரப்பினர்.
திருப்பள்ளி எழுச்சியும் காலைப்பாட்டே ஆகும். பள்ளி என்றால் இக்காலத்தில் பொதுவாக பள்ளிக்கூடம், கல்விக்கூடம் என்பதாகவே அனைவரும் அறிவர். படுக்கும் படுக்கைக்கும் பள்ளி என்று பெயருண்டு. பள்ளியறை என்றால் படுக்கையறை.
பள்ளிகொள்ளல் என்றால் உறங்கச் செல்லல். பள்ளி எழுதல் என்றால் உறங்கி எழுதல்.
உறங்கும் ஒருவரை, உறக்கத்திலிருந்து எழுப்புவதாகப் பாடப்படுவது பள்ளி எழுச்சி. முற்காலத்தில், சங்க காலத்தில் அரசர்கள் போர் முனையில் பாடி வீட்டில் இரவில் பாதுகாவலுடன் படுத்து உறங்குவர். புலர் காலைப் பொழுதில் புலவர்கள் இனிமையாய்ப் பாட்டுப் பாடி அரசனைத் துயில் எழுப்புவர். இதற்குத் ‘’துயிலெடை நிலை" என்று பெயர்.
மன்னனை எழுப்பும் மரபு பின்பு சமய இலக்கிய காலத்தில் தெய்வத்தை எழுப்பும் மரபாயிற்று.
தெய்வம் தூங்குமா? என்று கேட்கலாம். இது ஒரு மரியாதைக்குத்தான்.
இதிலும் ஒரு தத்துவம் (உண்மை) உண்டு. விழிப்பு நிலையிலிருந்து உறங்கிக் கிடக்கும் பக்தர்களை ஆண்டவன் எழுப்பி விழிப்பு நிலையை அருளுகிறான். அதற்கு ஒரு வியாஜமாக அடியார்கள் ஆண்டவனை எழுப்புவதாகப் பாடப்படுகிறது. மாணிக்கவாசகர் சிவபெருமானைப் பள்ளி எழுப்பத் திருப்பள்ளி எழுச்சி பாடுகிறார்.
தொண்டரடிப்பொடி ஆழ்வார் திருஅரங்கனைப் பள்ளி எழுப்பத் திருப்பள்ளி எழுச்சி பாடுகிறார். வேதாந்த உலகில் தத்துவராயர் என்பவரும் திருப்பள்ளி எழுச்சி பாடியுள்ளார். பின்னாளில் வள்ளலார் இராமலிங்க அடிகளாரும் அருட் பெருஞ்ஜோதி ஆண்டவரை எழுப்புவதாகத் திருப்பள்ளி எழுச்சி பாடியுள்ளார்.
நம் காலத்தில் தேசிய கவி பாரதியார், நாடும் மக்களும் விழித்தெழ வேண்டும் என்பதற்காக திருப்பள்ளி எழுச்சி பாடியுள்ளார்.
பள்ளியெழுச்சி மன்னர்களை எழுப்பும் மரபாக ஆரம்பித்து, தெய்வங்களை எழுப்பும் மரபாக வளர்ந்து, மக்களை எழுப்பும் மரபாகவும் வந்துவிட்டது.
பசித்திரு, தனித்திரு, விழித்திரு என்பது வள்ளலார் உபதேசங்களுள் ஒன்று. எதிலும் விழிப்பாக இருக்க வேண்டும்.
நாடெங்கும் மழை பெய்ய வேண்டும்.
கணவன் மனைவி ஒருவருக்கொருவர் நல்லவர்களாக அமைய வேண்டும்.
குடும்பங்கள் நன்றாக அமைய வேண்டும்.
மக்கள் உறக்க நிலையை விட்டு விழிப்பு நிலை எய்த வேண்டும்.
இம்மூன்றையும் வேண்டுவதே, அடைவதே திருவெம்பாவை, திருப்பாவை, திருப்பள்ளி எழுச்சிகளின் நோக்கம். இந்த நன்மரபை மணிவாசகர் திருவாசகம் உலகுக்கு வழங்குகிறது.