சைவ சமயத்தில் இறைவனின் திருமேனியை, ‘சாங்கோபாங்கம்’ என்று குறிப்பிடுகின்றனர். சென்னைப் பல்கலைக்கழக தமிழ்ப் பேரகராதி, ‘சாங்கோபாங்கம்’ என்றால் ‘முழுமை’ என்று பொருளாகும் என்று குறிப்பிடுகிறது.
சிவபெருமான் திருமேனி, அங்கம், பிரத்தியங்கம், சாங்கம், உபாங்கம் என்று நான்கு பிரிவுகளாகப் பிரித்துக் கூறப்படுகின்றன. இந்த நான்கு வகைகளின் முழுமையை குறிக்கவே, ‘சாங்கோபாங்கம்’ என்ற சொல்லாடல் கையாளப்படுகிறது.
அங்கம்
இறையின் திருமேனியினுடைய சிரசு, இருதயம், நேத்திரம், கவசம், அஸ்திரம் ஆகியவை அங்கங்களாம். சிவதீட்சை மந்திரங்கள் பதினொன்றில் முதல் ஐந்தும் பஞ்சப்பிரம்ம மந்திரங்கள் என்றும், அடுத்த ஆறும் ஷடாங்க மந்திரங்கள் என்றும் கூறப்படுகின்றன. சடாங்க மந்திரங்களாவன;
“ஓம் ஹிருதயாயை நமஹா
ஓம் சிரசே நமஹா
ஓம் சிகாயை நமஹா
ஓம் கவசாய நமஹா
ஓம் நேத்ரேப்யோ நமஹா
ஓம் அஸ்த்ராய நமஹா” என்பனவாம்.
பிரத்தியங்கம்
வக்ஷசு (முகம்), கண்டம், ஸ்தனங்கள், தோள்கள், நாபி, சுரோத்திரங்கள் (காதுகள்), ஹஸ்தங்கள் (கரங்கள்), பாதங்கள், அங்குலிகள் (விரல்கள்), ஊருக்கள் (தொடைகள்), முழந்தாள்கள், கணைக்கால்கள் ஆகியவை பிரத்தியங்கங்களாம். நைவேத்தியம், பலி, ஹோமம். நித்தியோற்சவம், சுளுக்கோத்கதானம், சுவஸ்திவாசகம் என்னும் ஆறுமே பிரத்தியங்கம் என்ற மரபு சில ஆகமங்களில் காணப்படுகின்றது.
சாங்கம்
திருமேனியுடன் கூடியவை சாங்கம் எனப்படுகின்றன. திரிசூலம், மழு, கேடயம், வச்சிரம், அபயம், நாகம், பாசம், அங்குசம், சிலம்பு, அக்கினி போன்றவை சாங்கம் ஆகும். அபிஷேகம், பாத்தியம், ஆசமனீயம், அர்க்கியம், வஸ்திரம், ஆபரணம், சந்தனம், புஷ்பம் என்னும் எட்டுமே சாங்கம் என்று சில ஆகமங்கள் கூறுகின்றன. சங்கத்தில்,வரும் அபிஷேகம் இறை வழிபாட்டில் மிகச்சிறப்பும், முதன்மையும் உடையது. இது பற்றி திருமுறைப் பாடல்களும் பல இடங்களில் குறிப்பிடுகின்றன.
”தடம் கொண்ட்தோர் தாமரைப் பொன்முடி தன்மேல்
குடம் கொண்ட்டியார் குளிர்நீர் சுமந்தாட்ட.....”
”ஆடினாய் நறு நெய்யொடு பால் தயிர்...”
”பாலினால் நறு நெய்யாய் பழத்தினால் பயின்றாட்டி...”
”தூய காவிரியின் நன்னீர்கொண்டு இருக்கு ஓதி ஆட்டி”
”ஆன் ஐந்தும் ஆடியை ..... சந்தனமும் குங்குமமும் சந்தும் தோய்ந்த தோளானை...”
”தேன் நெய் பால் சூட்டுகந்தானே தேவனே”
என்று குறிப்பிடப்படுவதைக் கவனத்தில் கொள்ளலாம்.
உபாங்கம்
திருமேனியை விட்டு நீங்காதவை உபாங்கம் எனப்படுகின்றன. பரிவட்டம், பூணூல், மாலை, நறுமணக்கலவை, அணிகலன்கள், அவன் அமர்ந்துள்ள ஆசனம் அல்லது இருக்கை, அவன் திருமுன் தொங்கும் திரை ஆகியன உபாங்கங்கள் ஆகும். தூபம், தீபம், திருநீறு, குடை, கண்ணாடி, சாமரம், விசிறி, வியாஜனம், நர்த்தனம், கீதவாத்தியம் என்னும் பத்துமே உபாங்கம் என்ற மரபு சில ஆகமங்களில் காணப்படுகின்றது.