ராமனின் தாயார் கோசலை பரதனைப் பார்த்து "உன் தாய் கைகேயியின் சூழ்ச்சி முன்னரே உனக்குத் தெரியாதா?" என்று சந்தேகத்துடன் கேட்கிறாள்.
பரதன் விம்மி அழுதபடி "இது எனக்கு முன்னமே தெரியும் என்றால் பாவங்களைச் செய்வோர் அடையும் நரகத்தை நான் இப்போதேப் போய்ச் சேர்வேனாக" என்று கூறிய அவன் தொடர்ந்து பட்டியலிட்ட பாவங்கள் இவைதான்:
* பிறர் செய்த அறச் செயல்கள் அழிந்து போகும்படி முயற்சி செய்பவன்.
* இரக்கம் இல்லாத இதயம் உடையவன்.
* பிறர் மனைவியரை அடைய அவர் வீட்டு வாயிலிலேக் காத்து நின்றவன்.
* கடுஞ்சினம் கொண்டவன்.
* பிற உயிர்களைக் கொலை செய்து வாழ்ந்தவன்.
* துறவியர்க்குத் துன்பம் தந்தவன்.
* அரசன் - ஆசிரியன் - தாய் - தந்தை - தமையனையும் மற்றும் பெண்களையும் கொன்றவன்.
* மன்னரோடு போர்க்களம் புகுந்து உயிருக்கு அஞ்சி புறமுதுகு காட்டி ஓடி வந்தவன்.
* பிச்சையெடுப்பவர் பெற்ற பொருளை அவர்களைத் துன்புறுத்திக் கவர்ந்து கொண்டவன்.
* திருமாலைப் பரம்பொருள் அல்லன் என்று சொன்னவன்.
* அறநெறியில் தவறாத அந்தணர்களுக்குத் தீங்கு செய்தவன்.
* வேதங்களைப் போற்றாமல் அவை கற்பனை செய்யப்பட்ட பொய்கள் என்று கூறும் மனத்தினன்.
* பெற்ற தாய் பசித்திருக்க, தான் மட்டும் தனியே உண்டவன்.
* தன்னைச் சரண் புகுந்தவரை எதிரிக்குக் காட்டிக் கொடுத்தவன்.
* அறத்தை மறந்தவன்.
* பொய்சாட்சி சொன்னவன்.
* பாதுகாப்பாக வைத்திருக்குமாறு கொடுத்த பொருளைக் கவர்ந்து கொண்டவன்.
* ஒருவர் நலிந்த போது மேலும் துன்பம் செய்தவன்.
* அந்தணர் வீடுகளைத் தீயிட்டு எரித்தவன்.
* சிறுவரைக் கொன்றவன்.
* தெய்வங்களைப் பழித்தவன்.
* பால் குடிக்காமல் கன்று இறக்கும் படி தாய்ப்பசுவின் பாலை முற்றிலும் கறந்து குடித்தவன்.
* பிறரது பொருளை அவர் அறியாமல் கவர்ந்தவன்.
* பிறர் செய்த நன்றியைப் போற்ற மறந்து அவரைத் தூற்றும் நாவை உடையவன்.
* தன்னுடன் பயணம் செய்யும் மகளிரை வழிப்பறி செய்வோர் துன்புறுத்த, அவரைக் காக்க முயலாமல் தன்னுயிரைக் காக்கத் தப்பியோடியவன்.
* தன் அருகே இருப்பவரைப் பசியால் வருந்தவிட்டு தான் மட்டும் தனியே உண்பவன்.
* ஆடு மாடுகள் போன்ற உயிர்களை வளர்த்து அவற்றைக் கொன்று தின்னும் ஆசை உடையவன்.
* அதர்ம வழியில் மக்களிடம் பொருளை ஈட்டும் மன்னன்.
* கன்னிப் பெண்ணைக் கற்பழிக்க எண்ணியவன்.
* குரு பத்தினியைத் தவறான கருத்தோடு பார்த்தவன்.
* கள் குடித்தவன்.
* சான்றோர் இகழும் திருட்டு வழியில் பொன் பொருளைச் சேர்த்தவன்.
* உண்ணக் கூடாதவற்றை நாயைப் போல உண்பவன்.
* இவன் ஆண்மகன் அல்ல பெண்மகளும் அல்ல; இவன் யாரோ? என்று பிறர் இகழ அதைக்கேட்டு நாணாதவன்.
* பாவம் செய்பவர்களுக்காக நரகம் உள்ளது என்று சான்றோர் சொல்லும் நல்ல உரையை மதிக்காதவன்.
* பிறருடைய குற்றங்களைத் தூற்றித் திரிபவன்.
* சிறிதளவே விளையும் பஞ்ச காலத்தில் உணவைச் சிந்துமாறு தட்டிவிட்டவன்.
* தன்னிடம் உள்ளதைப் பிறர் யாசிக்க அவர்களை அலைக்கழித்து ஏமாற்றும் மூடன்.
போன்றோர் அடைகின்ற எமனின் ஆளுகைக்கு உட்பட்ட அந்த நரகத்தை நானும் அடைவேனாக..." என்று பரதன் துடிதுடித்துக் கூறுகின்றான்.
இக்காட்சி கம்ப ராமாயணம் அயோத்தியா காண்டத்தில் அமைந்துள்ளது.