கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
உ. தாமரைச்செல்வி
திருமணமான பெண்கள் தங்கள் கணவர் உடல் நலத்துடன் ஆயுள் காலமும் அதிகரித்து வாழ்ந்திட வேண்டி சாவித்திரி நோன்பைக் கடைப்பிடிக்கின்றனர். சுமங்கலி நோன்பு, காமாட்சி நோன்பு, கவுரி நோன்பு, காரடையான் நோன்பு என்று வேறு சில பெயர்களிலும் இந்த நோன்பு அழைக்கப்படுகிறது. இந்த நோன்பு எப்படித் தொடங்கியது என்பதைத் தெரிந்து கொள்ளலாமா?
கணவனை மீட்ட சாவித்திரி
சாளுவதேசத்து அரசன் ஒரு போரில் நாட்டை இழந்து தனது மனைவி மற்றும் மகன் சத்தியவான் ஆகியோருடன் காட்டில் வசித்து வந்தான். பார்வையற்ற நிலையிலிருந்த அரசன் மற்றும் அரசி ஆகியோரை இளவரசன் சத்தியவான், அவர்களுக்குத் தேவையான அனைத்துப் பராமரிப்புகளையும் செய்து, எந்தக் குறைகளுமில்லாமல் அன்புடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
மந்திரதேசத்து மன்னன் அசுவபதியின் மகள் சாவித்திரி ஒரு நாள் அந்தக் காட்டுக்குள் வேட்டைக்குச் சென்றாள். அங்கு பார்வையற்ற பெற்றோர்களுக்குத் தேவையான அனைத்துப் பணிகளையும் செய்து வந்த சத்தியவானைப் பார்த்தாள். சத்தியவான் பார்வையற்ற பெற்றோர்க்குச் செய்த சேவைகள் அவளை மிகவும் கவர்ந்தன. காட்டிலிருந்து நாட்டிற்குத் திரும்பிய சாவித்திரி சத்தியவானையே திருமணம் செய்து கொள்வதென முடிவு செய்தாள். அவள் தந்தையிடம், காட்டிற்குள் தான் பார்த்த சத்தியவானையே திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகத் தெரிவித்தாள்.
இந்நிலையில், சாவித்திரியின் தந்தையைச் சந்தித்த நாரதர், சாவித்திரியின் விருப்பத்திற்காகச் சத்தியவானுக்குத் திருமணம் செய்து கொடுக்க வேண்டாம் என்றும், அவன் இன்னும் ஓராண்டு காலத்தில் இறந்து விடுவான் என்றும் எச்சரித்தார். ஆனால், சாவித்திரி தன்னுடைய விருப்பத்திலிருந்து மாறாமல், சத்தியவானையே திருமணம் செய்து கொள்வது என்று உறுதியாக இருந்தாள். அவளுடைய மன உறுதிக்காக அவளது தந்தையும் வேறு வழியின்றி, அவளைச் சத்தியவானுக்குத் திருமணம் செய்து கொடுத்தார்.
திருமணத்திற்குப் பிறகு, சாவித்திரி தன் கணவனுடன் காட்டிற்குள் சென்று வசிக்கத் தொடங்கினாள். அரண்மனையில் பல வசதிகளுடன் வாழ்ந்த அவளுக்குக் காட்டில் பல்வேறு வசதிக் குறைபாடுகள் ஏற்பட்டன. இருப்பினும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல், அங்கு கணவன் மற்றும் அவனது பார்வையற்ற பெற்றோர்களையும் அன்புடன் கவனித்துக் கொண்டு மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தாள்.
நாரதர் சொன்னபடி ஒரு வருட காலத்தில் சத்தியவானின் ஆயுட் காலம் முடியும் நாள் வந்தது. அன்று அவள் கணவனைப் பிரியாமல் அவனுடனேயே இருந்தாள். அவர்கள் இருவரும் சேர்ந்து காட்டில் ஒரு இடத்தில் பழம் பறித்துக் கொண்டிருந்தனர். அப்போது சத்தியவான் திடீரென மயங்கி விழுந்து இறந்தான். அவனது உயிரை எமதர்மன் எடுத்துக் கொண்டு சென்றார். சாவித்திரியும் தன் கணவனின் உயிரைத் திரும்பப் பெற்றிடும் நோக்கத்துடன் எமனைப் பின் தொடர்ந்து சென்றாள். கற்புக்கரசி என்பதாலும், கணவன் இறப்பான் என்று தெரிந்தும், மன உறுதியுடன் அவனையேத் திருமணம் செய்து கொண்டதுடன், பார்வையற்ற முதியவர்களுக்குத் தொடர்ந்து அவள் சேவை செய்திருந்ததாலும், அவள் பார்வைக்குக் காட்சியளித்த எமதர்மன் அவளைத் தன் பின்னால் தொடர்ந்து வராமல், திரும்பிப் செல்லும்படி அறிவுறுத்தினார்.
ஆனால், சாவித்திரி அதை ஏற்கவில்லை. அவள் எமதர்மனிடம், தான் கணவருடன் சேர்ந்து வாழவே விரும்புவதாகவும், தான் கற்புக்கரசி என்பது உண்மையெனில், தன் கணவரது உயிரைத் திருப்பித் தர வேண்டும் என்றும் கேட்டாள். அவள் கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்த எமதர்மன், இறப்புக்குப் பிறகு இந்தப் பூமியில் யாருக்கும் வாழ்வு கிடையாது என்றும், அதற்குப் பதிலாக எந்த வரம் கேட்டாலும் தருவதாகவும் கூறினார்.
சாவித்திரி சூழ்நிலையை உணர்ந்து, “என் கணவரின் பெற்றோர்க்கு மீண்டும் பார்வை கிடைக்க வேண்டும். ஆண் வாரிசு இல்லாத என் தந்தைக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும். எனக்கும் நூறு குழந்தைகள் பிறக்க வேண்டும். அதற்கான வரத்தை அருள வேண்டும்” என்று கேட்டாள். அவள் கேட்ட வரத்தின் உள்நோக்கம் குறித்துச் சிறிதும் சிந்திக்காத எமதர்மன் அந்த வரங்களை அவளுக்குக் கொடுப்பதாகச் சொன்னார்.
உடனே சாவித்திரி, “நீங்கள் எனக்குக் கொடுத்தபடி நூறு குழந்தைகள் பிறக்க வேண்டுமென்றால், என் கணவன் உயிருடன் என்னுடன் இருந்தாக வேண்டும்...! எனவே எனக்கு அவரது உயிரை மீண்டும் திரும்பக் கொடுங்கள்” என வேண்டினாள். எமதர்மனும் அவளது அறிவுத் திறனை வியந்து பாராட்டியதுடன் சத்தியவானின் உயிரை அங்கேயே அவளிடம் விட்டுச் சென்றார்.
சாவித்திரி நோன்பு
சாவித்திரி தன் கணவனை உயிருடன் மீட்டதுடன், தன் கணவனுக்கு நீண்ட ஆயுளையும் பெற்றுக் கொண்டதைப் போல், திருமணமான பெண்கள் தங்கள் கணவனின் ஆயுள் காலமும் அதிகரித்திட வேண்டி சாவித்திரி நோன்பு கடைப்பிடிக்கின்றனர். மாசி மாதம் முடிந்து பங்குனி மாதம் தொடங்கும் வேளையில் இந்த நோன்பு கடைப்பிடிக்கப்படுகிறது.
காரடையான் நோன்பு
தமிழர்கள் ஆண்டை சித்திரை மாதத்திலிருந்து இரு மாதங்களாகக் கொண்டு இளவேனில் காலம், முதுவேனில் காலம், கார் காலம், குளிர் காலம், முன்பனிக் காலம், பின்பனிக் காலம் என்று ஆறு பொழுதுகளாகப் பிரித்திருக்கின்றனர். கார் காலமான ஆவணி, புரட்டாசியில் விளையும் நெல்லிலிருந்து எடுக்கப்பட்ட பச்சரிசி மாவுடன், காராமணிப் பயறும், அதனுடன் இனிப்பும் சேர்த்துத் தயாரிக்கும் காரடை எனும் உணவுப் பொருளை சாவித்திரி நோன்பு வழிபாட்டிற்குப் பயன்படுத்துகின்றனர். இதனால் இந்த நோன்பு காரடையான் நோன்பு என்கிற பெயரிலேயே அதிகமாக அழைக்கப்படுகிறது.
நோன்பு கடைப்பிடிக்கும் முறை
கணவனின் உடல் நலத்துடன் ஆயுள் காலமும் அதிகரித்து வாழ்ந்திட வேண்டி சாவித்திரி நோன்பு கடைப்பிடிக்கும் திருமணமான பெண்கள் அதிகாலையில் எழுந்து நீராடி, பூஜையறையை சுத்தம் செய்து, ஒரு கலசத்தின் மேல் தேங்காய், மாவிலை வைத்து, அக்கலசத்திற்குச் சந்தனம், குங்குமம், மஞ்சள் பூசி, அதன் மேல் மஞ்சள் கயிறைக் கட்டுகின்றனர். அதனருகில் அம்மன் படம் ஒன்றை வைத்து, அந்த அம்மன் படத்தைக் காமாட்சியாகவோ அல்லது சாவித்திரியாகவோ மனதில் நினைத்து வழிபடுகின்றனர். இந்த வழிபாட்டில் அம்மனுக்குக் கார் அரிசியும் காராமணியும் கலந்து செய்த அடையும், உருகாத வெண்ணெயும் வழிபாட்டுப் பொருளாகப் படைத்து வழிபாடு செய்கின்றனர். அதன் பிறகு, சாவித்திரி நோன்பு வழிபாடு செய்த பெண்கள், தங்களுடைய மங்கலக் கயிற்றைக் கழற்றி விட்டு, அதற்குப் பதிலாக்க் கலசத்தில் கட்டி வழிபட்ட புதிய மஞ்சள் கயிற்றை மங்கலக் கயிறாகக் கட்டிக் கொள்கின்றனர். இந்த வழிபாட்டில் ஐந்துக்கும் மேற்பட்ட ஒற்றைப்படை வரிசையில் மஞ்சள் கயிற்றையும் வைத்து வழிபடுகின்றனர். வழிபாட்டில் வைக்கப்பட்ட மஞ்சள் கயிறுகளைத் திருமணமான பெண்களுக்கு மங்கலக் கயிறுகளாக வழங்கி அவர்களது நல்லாசிகளையும் பெறுகின்றனர்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.