தைப்பூசம் சிவசக்தி ஐக்கியத்தையும் மேம்பாட்டையும் விளக்கும் புனிதமான ஒரு பெருநாளாகும். தை மாதம் உத்தராயண காலத்தின் தொடக்கமாகும். உத்தராயணம் என்பது தேவர்களின் பகல் பொழுது என்பதால் தை மாதம் அவர்களின் காலைப் பொழுதாகும். சிவாம்சமான சூரியன் மகர ராசியில் இருக்க, சக்தி அம்சமான சந்திரன் கடகராசியில் (பூசநட்சத்திரம்) ஆட்சி பெற்றிருக்க சூரிய சந்திரர்கள் பூமிக்கு இருபுறமும் நேர்கோட்டில் நிற்றல் தைப்பூசத்துடனிணைந்த பௌர்ணமியில் நிகழும்.
உலகத் தோற்றம் தொடங்கியது இத்தினத்தில்தான். ஆண்டவன் முதலில் ஜலத்தையே படைத்தார். அதிலிருந்து பிரமாண்டம் உருவானது. இதனை நினைவூட்ட ஆலயங்களில் இத்தினத்தில் தெப்போற்சவம் நடைபெறுவதுண்டு. சிவசக்தி ஐக்கியமான முருகப்பெருமான் மாட்சிமை பெறும் தினமாகவும் இது அமைகிறது. முருகன் கோவில்களில் அபிஷேகம், திருவிழா முதலியன நிகழ்த்தப்படுகின்றன. முருகனை வேண்டிப் பலர் இந்நாளில் விரதமிருப்பர்.
வாயுபகவானும், வருணதேவனும், அக்கினிதேவனும் ஒரு சமயம் தமது வலிமையைப்பற்றிப் பெருமை பேசித் தம்முள் போட்டி போட்டனர். அப்போது, அவர்களருகில் ஒரு சிறு துரும்பு காணப்படவே, வாயுபகவான் அசைக்க முயன்று தோற்றார். அக்னி தேவன் எரிக்க முயன்று தோற்றார். வருணபகவான் அதனை நனைக்க முயன்று தோற்றார். மூவரும் இதுகண்டு திகைத்து அசைவற்று நின்றனர். அப்போது நாரதமுனிவர் அங்கு தோன்றி எல்லோருக்கும் மேலான பரம்பொருள் சக்தியைப் பற்றி எடுத்துரைத்து அவர்களது கர்வத்தை அடக்கினார். தைப்பூச நன்னாளில் அவர்களது அருட்சக்தி அதிகரிக்க அருள்செய்வதாக ஆண்டவன் அருள் புரிந்தார்.
பதஞ்சலி, வியாக்கிரபாதர் முதலானோர் தரிசிக்கச் சிவபெருமான் ஆனந்தத் தாண்டவமாடியதும் தைப்பூசநாளிலேதான். இப்புனித நாளில் யாவரும் அசௌகரியம் நீங்கி ஆரோக்கியமும் ஆற்றலும் பெறுவர். தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற வாக்கியத்திற்கிணங்கத் தை பிறந்த சில நாட்களில் இத்தினம் தோன்றிப் புத்துணர்ச்சியூட்டி மணவாழவில் மகிழ்ச்சியையும் சகல மங்கலங்களையும் ஊட்டுகிறது. பெண்கள் மூக்குக்குத்துதல் மற்றும் நற்காரியங்களை ஆரம்பித்தல், திருமணத்திற்கு பெண் பார்த்தல் முதலியவற்றுக்கு இத்தினத்தை தேர்ந்தெடுப்பர்.
தைப்பூசநாள் விரதக்கட்டுபாடுகள் குறைந்த ஆனால் வழிபாடு, திருவிழா, காவடி இவற்றோடு கூடிய இனிய ஒரு கொண்டாட்ட நாளாகவே இருக்கிறது.