26. கிரகண ஸ்நாந விரதம்
எவனுடைய ஜன்மராசியில் கிரகணம் பிடித்திருக்கிறதோ அப்படிப்பட்டவன் அந்தக் கிரகண காலத்தில் விதிப் பிரகாரம் விரதமிருந்து தானாதிகளைச் செய்யின் கிரகண பீடை அடையாது. இது மச்சனால் மநுவுக்குச் சொல்லப்பட்டது.
27. சப்தமி ஸ்தபன விரதம்
இது பாலுண்ணும் சிசுவுக்கு வரும் விராணாபாய ரோக பரிகாரத்தின் பொருட்டுச் சூரியனையும், ருத்திரனையும் விதிப்படி பூசித்து விரதமிருப்பது. இது சப்தமியில் அனுசரிப்பது.
28. கல்யாண வீமத்துவாதசி விரதம்
இது மகாசுத்த தசமியில் ஆரம்பித்து ஏகாதசியை உபவாச காலமாகச் செய்து விதிப்படி விஷ்ணுவைப் பூசித்தும் துவாதசியில் விஷ்ணு பூசையும் பிராமணர்கட்குப் போஜன தானாதி செய்விப்பவர்கள் விஷ்ணு பதவி அடைவார்கள். இது பீமனுக்குக் கிருஷ்ணன் சொன்னது.
29. அனங்கசயன விரதம்
இதை அஸ்தம், புனர்பூசம், நட்சத்திரங்களில் ஏதேனும் ஒன்று வந்த ஆதி வாரத்தில் ஆரம்பித்து விதிப்பிரகாரம் 13 மாதம் செய்ய வேண்டியது. பிரமனுக்குச் சிவன் சொன்னது.
30. அசூன்ய சயன விரதம்
சிராவண சுத்த த்விதியையில் விஷ்ணுமூர்த்தியை எண்ணச் செய்யும் விரதம்.
31. அங்காரக விரதம்
அங்காரகனை அங்காரக வாரத்தில் பூசிப்பது.
32. குருசுக்ர பூஜா விரதம்
இதில் சுக்கிரனைப் பிரயாணாதி காலத்தில் எதிரில் உண்டாகும் சுக்கிர பீடை நேராதிருக்க விதிப் பிரகாரம் பூஜை செய்யின் கிரகப் பீடைகள் எல்லாம் நீங்கும். இது பிரமனுக்குச் சிவன் சொன்னது.
33. கல்யாணசப்தமி விரதம்
சுக்ல பட்ச சப்தமியில் ஆதி வாரம் வரின் அது கல்யாண சப்தமி எனப்படும். இதில் 13 மாதம் சூரியனைப் பூசிக்க வேண்டும். பிரமனுக்குச் சிவன் சொன்னது.
34. அசோகசப்தமி விரதம்
மாசி மாதம் சுத்த பஞ்சமி முதல் சுத்த சப்தமி வரையில் 13 மாதம் சூரியனைப் பூசிக்க வேண்டும்.
35. பல சப்தமி விரதம்
மார்க்க சீரிஷ சுத்த பஞ்சமி முதல் சுத்த சப்தமி வரையில் சூரியனை 13 மாதம் பூசிப்பது.
36. சர்க்கராசத்தமி விரதம்
இது மாக சுத்த சப்தமியில் செய்யப்பட்டது. இதில் 13 மாதம் சூரியனை உபாசிக்கப்படுவன்.
37. கமலசப்தமி விரதம்
சைத்திர சுத்த சப்தமி முதல் 13 மாதம் சூரியன் பூசிக்கப்படுவன்.
38. மந்தார சப்தமி விரதம்
மாக சுத்த பஞ்சமி முதல் சுத்த சப்தமி வரை 13 மாதம் சூரியனைப் பூசிப்பது.
39. சுப சப்தமி விரதம்
ஆஸ்வயுஜ சுத்த சப்தமி முதல் 13 மாதம் சூரியனைக் குறித்துச் செய்வது.
40. விசோக துவாதசி விரதம்
ஆஸ்வயுஜ சுத்த தசமி முதல் சுத்த துவாதசி வரையில் 13 மாதம் லட்சுமி நாராயணர்கள் பூஜிக்கப்படுவர்.
41. சிவ சதுர்த்தசி விரதம்
மார்க்கசீரிஷ சுக்ல திரியோதசியில் ஒரு வேளை புசித்துச் சதுர்த்தசியில் ஆகாரமின்றிச் சிவனைப் பூசித்துச் சுவர்ண ரிஷபத்தைத் தானஞ் செய்து பௌர்ணமியில் பூசிக்க வேண்டும். இப்படி 12 மார்க்கசீரிஷ மாதங்களில் பிரதி சதுர்த்தசியைக் கோமூத்திரம், கோமயம், கோட்சாரம், சோததி, கோகிரதம், குசோதகம், பஞ்சகவ்யம், வில்வம், கற்பூரம், அறுகு, யவை, எள்ளு முதலியவைகளை மாசக் கிரமமாகப் பூசித்த விதிப்படி விரதத்தை முடித்தால் தம் பித்ருக்கள் சகோதரர் செய்த பாவங்கள் அழிதலேயன்றி 100 அசுவமேத பலனும் சிவலோக பிராப்தியும் உண்டாம். இது நாரதருக்கு நந்தி சொன்னது. இது தம்பதிகள் அனுசரிக்க வேண்டியது.
42. பலத் தியாக விரதம்
மார்க்கசீரிஷ சுக்ல அஷ்டமி துவாதசி சதர்த்தசி இந்தத் திதிகளில் எதிலாயினும் சுப மாதங்களில் ஆரம்பிக்க வேண்டியது. இது நாரதனுக்கு நந்தி சொன்னது.
43. ஆதிவாரநக்க விரதம்
சனி வாரத்தில் ஒரு வேளை புசித்து, அஸ்த நட்சத்திரங் கூடிய ஆதி வாரத்தில் விதிப்படி சூரியனை ஆராதித்து இரவில் போஜனஞ் செய்ய வேண்டியது. இவ்விதம் ஒரு வருடம் செய்தால் சூரிய உலகம் அடைவார்கள். இது நாரதருக்கு நந்தி சொன்னது.
44. சங்கராந்தித்யாபன விரதம்
இதை விஸ்வத் புண்ணிய காலத்திலாயினும், உத்தராயண புண்ணிய காலத்திலேயாயினும் ஆரம்பித்து, ஒரு வருடம் சூரியனை ஆராதிக்க வேண்டியது. இது சப்த சீவுகளோடு கூடிய பூதான பலனைத் தரும். இது நாரதனுக்கு நந்தி சொன்னது.
45. விபூதி துவாதசி விரதம்
சயித்திர வைசாகா கார்த்திகை மார்க்கசீரிஷ பால்குண ஆஷாட மாதங்களில் சுக்ல தசமியில் ஒரு வேளை பூசித்து, மறு நாள் நிராகாரனாய்த் துவாதசியில் பிராமணர்களுக்குப் போஜனஞ் செய்விக்கிறதாகப் பிரதிக்கினை செய்து ஒரு வருடம் அவ்வகை செய்து விதிப்படி விஷ்ணுவைப் பூசித்துக் கடைசியில் லவண பர்வத யுக்தமான சையாதானங்கள் செய்யின் 1000 யுகம் வரையில் சுவர்க்கத்தில் வசிப்பர். இது நாரதனுக்கு நந்தி சொன்னது.
46. மதனத்துவாதசி
சித்திரை மாசம் சுக்கிலபட்சம் துவாதசியில் ஒரு மட்பாத்திரத்தில் பழம், கரும்பு, கற்கண்டாதிகளை நிரப்பி, பலவித நிவேதனங்கள் செய்து, பின்பு வேறொரு கற்பாத்திரத்தில் வெல்லம் நிறைத்து, மட்பாத்திரத்தின் மேலிட்டு, அதிலுள்ள வெல்லத்தின் நடுவில் வாழையிலை பரப்பி, மதன விக்ரகத்தை ரதிசகிதமாய் வைத்துப் பூசித்தல் வேண்டும். அதுவன்றி, மதனகேசவர்களைப் பலவிதமாகச் செய்வித்து, அக்கேசவ விக்ரகத்தை மன்மதனாமத்தால் பூசிக்க வேண்டும். இவ்விரதம் அனுட்டிப்பவர் துவாதசியில் ஆகாரமின்றி இருந்து திரயோதசியில் அரிபூசை செய்ய வேண்டும். இவ்வகை 13 சுக்ல துவாதசி விரதஞ் செய்து கடைசி துவாதசியில் கிருததேனு தானஞ் செய்து தன் பத்தினியோடு கூடிய பிராமணனுக்கு மன்மத பதுமையையும், வெள்ளைப் பசுவையும் தானஞ் செய்து, வெள்ளை எள், பசு நெய், பாலன்னம் இவற்றால் மதனப் பிரீதியாய் ஓமஞ் செய்து, பிராமண போஜனஞ் செய்விக்க வேண்டியது. இப்படிச் செய்வித்தவன் விஷ்ணுபதமடைவன்.
விரதங்கள் - பிரதமை முதலியவாகக் கூறப்படும்.
47. பிரதமை - நவராத்திரி பிரதமை
இது புரட்டாசி மாதம் சுக்ல பட்சப் பிரதமையில் தேவியை நோக்கி உபாசிக்கும் விரதம். இது அஸ்தநட்சத்திரம் கூடின் விசேஷமென்று தேவி புராணம் கூறும். இஃது ஒன்பது நாட்கள் அநுஷ்டிப்பது. இதை அநுஷ்டிக்கின் துர்ப்பிட்சம் ஒழியும்.
48. பலிபூஜனப் பிரதமை
இது பலியின் உருவமெழுதிப் பலியைப் பூசித்துப் பிராமணர்களுக்குத் தட்சணை அன்னாதிகள் அளிப்பது.
49. கோக்கிரீடனப் பிரதமை
சோமராஜன் பசுக்களை இம்சித்தலால் சந்திரனைக் காணுகிற பிரதமையில் பசுக்களை அலங்கரித்துத் தூப தீபங்கள் கொடுத்து வாத்ய கோஷங்களுடன் அவற்றின் சாலைகளில் சேர்ப்பிப்பின் துன்பம் நீங்கி வேண்டிய சித்தியடைவர்.
50. த்விதியை - கார்த்திகை சுக்ல த்விதியை - யமத்விதியை
இது யமனைத் தன் வீட்டிற்கு விருந்திற்கு வர யமுனை பிரார்த்தித்த நன்னாளாதலின் இதில் தன் அண்ணன் தேவிக்கு வஸ்திராபரணங்கள் பூட்டிக் களிப்பித்து அவள் கையாலிட்ட உணவு உண்டவர் யம பய நீங்கி ஆயுள் பெறுவர்.