ஆடிவெள்ளி வழிபாடு
சித்ரா பலவேசம்

ஆடி மாதம் அம்மனுக்குரிய மாதம் என்று சொல்லப்படுகிறது. இம்மாதத்தில் அம்மனின் சக்தி இருமடங்காக இருக்கும் என்கின்றனர்.
ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகள் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றன.
ஆடி மாதத்தில் வரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒவ்வொரு அம்மனுக்கு உகந்தது. அந்த வெள்ளிக்கிழமைக்குரிய அம்மனை வேண்டினால் அவர்களுக்கு உரிய பலன் கிடைக்கும்.
முதல் வெள்ளிக்கிழமை
ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை, சுவர்ணாம்பிகை அம்மனுக்கு உரியது. சுவர்ணாம்பிகை அம்மன் பார்வதி தேவியின் ஒரு வடிவம். ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையின் போது, சுவர்ணாம்பிகை அம்மனை மனம் உருகி வேண்டினால், வீட்டில் செல்வ வளம் பெருகும்.
இரண்டாம் வெள்ளிக்கிழமை
ஆடி மாதத்தின் இரண்டாம் வெள்ளிக்கிழமை, அங்காள அம்மனுக்கு உரியது. காளிதேவியின் மற்றொரு வடிவமே அங்காள அம்மன். ஆடி மாத இரண்டாம் வெள்ளிக்கிழமையின் போது, அங்காள அம்மனுக்கு பூஜை செய்து வணங்கி வந்தால், புத்திக்கூர்மை அதிகரிப்பதோடு, வலிமையும், வீரமும் அதிகரிக்கும்.
மூன்றாம் வெள்ளிக்கிழமை
ஆடி மாதத்தின் மூன்றாம் வெள்ளிக்கிழமை, அன்னை காளிகாம்பாளுக்கு உரியது. இந்த அம்மன் பார்வதி தேவியின் மற்றொரு வடிவம். ஆடி மாத மூன்றாம் வெள்ளிக்கிழமையின் போது, காளிகாம்பாளை வேண்டினால், , உடல் பலமும், உடல் நலமும் மேன்மையடையும்.
நான்காம் வெள்ளிக்கிழமை
ஆடி மாதத்தின் நான்காம் வெள்ளிக்கிழமை, காமாட்சி அம்மனுக்கு உரியது. இவர் பராசக்தியின் ஓர் வடிவம். ஆடி மாதத்தின் நான்காம் வெள்ளிக்கிழமையின் போது, காமாட்சி அம்மனை வணங்கினால், நம்மை சுற்றியுள்ள தீயசக்தி நீங்கும், திருமணத்தடை அகலும், குழந்தைப்பேறு கிடைக்கும், தம்பதியருக்குள் இணக்கமான சூழல் இருக்கும்.
ஐந்தாம் வெள்ளிக்கிழமை
ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு உரியது. இந்தக் கடைசி வெள்ளிக்கிழமையின் போது நடைபெறும் வரலட்சுமி பூஜை, திருமணமான பெண்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்று. திருமணமான பெண்கள், ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையின் போது விரதமிருந்து, மகாலட்சுமிக்கு பூஜை செய்து, படையல் படைத்து வழிபடுவதுடன் சில சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம் கொடுத்தால், வழிபட்ட பெண்ணின் கணவனின் ஆயுள் அதிகரித்து, அவர் நீண்ட நாட்கள் சுமங்கலியாக இருப்பார்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.