விரதங்கள்
முனைவர் ஸ்ரீவாலாம்பிகை
தேவி விரதம், உமா மகேசுர விரதம், கேதாரவிரதம் - கேதாரேசுவர விரதம் - கேதாரகௌரி விரதம், சாவித்திரி விரதம், வரலட்சுமி விரதம், நவராத்திரம், நவராத்திரி விரதம், நவராத்திரம், நவராத்திரி, விசயதசமி, விஜயதசமி விரதம், மனோரதத்திரிகை விரதம், சத்திய விரதம், சாந்திராயணம், சாந்திராயனம் - சாந்திராயன விரதம், பிரஜாபத்தியம் முதலிய கிருச்சிர சுவ ரூபங்கள் விரதம், நாக பஞ்சமி விரதம் - நாகப்பிரதிட்டை விரதம், பாத்ருத்விதியை விரதம், சோமவார விரதம், சுக்கிரவார விரதம், திதி விரதம், சிரவணத்துவாதசி, சிரீராம நவமி, சிரோவிரதம், சிவராத்திரி விரதம், சமரத்தம், விநாயக விரதம், விநாயசட்டி விரதம், விநாயக சதுர்த்தி விரதம், சங்கடசதுர்த்தி (சங்கடஹர சதுர்த்தி) விரதம், சவுதம், கோகர்ணசிதலம் விரதம், கந்தசட்டி, கந்தசஷ்டி விரதம் முதலான பல விரதங்கள் காணப்பெறுகின்றன.
சக்தி வழிபாடு மிக இன்றியமையாதது. ஆதலின் முதலில் தேவி விரதங்கள் குறிப்பிடப்பெறுகின்றன.
தேவி விரதம்
ஓர் நோன்பு நாள், அது சித்திரை மாதம் பூருவ பட்சம். வௌ்ளி வாரம் முதல் தொடங்கிச் செய்வதாகும்.
உமா மகேசுர விரதம்
சித்திரை அல்லது மார்கழி மாத பூர்வ பட்சத்தில் அட்டமி சதுர்த்தசி, பௌர்ணமிகளில் தொடங்கி மண்டபம் அமைத்து அதில் உமா மகேசுவரரைத் தாபித்து விதிப்படி பூசை செய்து பிராமணத் தம்பதிகளை உமா மகேசுரராகப் பாவித்து அவர்களுக்கு வேண்டிய கொடுத்துப் போஜனம் - உணவு அளித்து உபசரிப்பது.
கேதார விரதம் - கேதாரேசுவர விரதம் - கேதார கௌரி விரதம்
ஓர் விரதம். ஐப்பசி மாதத்திய அமர பட்சத்துப் பதினான்காம் திதியில் வரும் ஒரு நோன்பு நாள். ஆச்வயுச பகுள ஐப்பசி கிருஷ்ண பட்சம் சதுர்த்தசியில், நல்ல புருடனையும், சம்பத்தையும் விரும்புவோர் பார்வதி பிராட்டியை எண்ணிச் செய்யும் விரதம். இதை முதலில் பார்வதி பிராட்டியே செய்துக் காட்டினள். இது ஐப்பசி மாதத்துக்குக் கிருஷ்ண பட்சத்துச் சதுர்த்தசியில் சுமங்கலிகளால் செய்யத் தக்க விரதம்.
சாவித்திரி விரதம்
ஆனி மாதத்தில் பூரணையில் சுமங்கலிகளால் வைதவ்வியம் நீங்கும் படி அனுட்டிக்கும் விரதம். ஆனி மாசத்துப் பௌர்ணமியில் சுமங்கலிகள் தமக்கு வைதவ்வியம் வராமலிருக்கும் படி அனுட்டிக்கும் ஒரு விரதம். ஆனி மாதத்துப் பூரணையில் மங்கலியப் பெண்கள் கணவன் ஆயுளைக் கோரிச் செய்யும் விரதம்.
வரலட்சுமி விரதம்
ஆவணி மாதத்துச் சுக்கில பட்சத்து வௌ்ளிக் கிழமையாகும் வரலட்சுமி விரதம் - ஆவணி மாசத்துச் சுக்கில பட்சத்துச் சுக்கிர வாரத்திலே இலட்சுமிதேவியைக் குறித்து கடைபிடிக்கும் ஓர் விரதம். இதனால் பெண்கள், புத்திர, பௌத்திர - ஆண், பெண் இரு வித மகச்செல்வமும், அனைத்து வித வளமும், செல்வமும் அடையப் பெறுவர் என்பது நூற்றுணிபு. ஒரு நோன்பு. இது ஆவணி சுக்கில பட்ச சுக்கிர வாரத்திலே சுமங்கலிகள் இலட்சுமிதேவியைக் குறித்து ஐஸ்வரியம், சந்தானம் முதலிய பெறும் படி நோற்கும் விரதம். ஆவணி மாதத்துச் சுக்கில பட்சத்து வௌ்ளிக்கிழமையாகும்.
நவராத்திரம், நவராத்திரி விரதம்
கன்னி மாதத்தில் இலக்குமி, சரச்சுவதி, துர்க்கையாகிய சத்திகளைப் பூசிக்கும் ஒன்பது தினம். கன்னி மாசம் சுக்ல பட்ச பிரதமை முதல் ஒன்பது ராத்திரி கிருதயுகத்திலே பக்தியிற் சிறந்த சுகேதன் என்னுமோர் அரசன் தனது அரசாங்கத்தை இழந்து மனைவியோடு வனத்துக்குப் போன போது அங்கிரசன் என்னு மிருடி நவாத்திரி பூசையின் பெருமையையும், அதன் முறையையும் உபதேசித்தார். அவ்வரசன் அவ்வாறே நவராத்திரி பூசையை பக்தியோடு செய்து தனது இராஜ்யத்தை மீளவும் பெற்று வாழ்ந்திருந்தான். அதனால் அது முதலாக உலகத்தில் வருடந் தோறும் அக்காலத்திலே துர்க்கை, இலட்சுமி, சரசுவதி இம்மூவரையும் முறையே ஒவ்வொருவர்க்கு மூன்று தினமாக ஒன்பது நாளும் பூசித்து ஒன்பதாம் நாள் ஆயுதங்களையும், நுால்களையும் வைத்துப் பூசித்து வருகிறார்கள். அடுத்த நாள் விஜயதசமி எனப்படும்.
நவராத்திரி விரதம்
1. இருதுக்களின் வசந்தருது, சரத்ருது என்னும் இரண்டு ருதுக்களும் மனிதருக்கு ரோகத்தை விளைத்து நோய் செய்வதால் யமனுடைய இரண்டு கோரப் பற்களுக்குச் சமானமாகக் கூறப்படுகின்றன. ஆகையால் அவற்றால் உண்டாம் துன்பத்தினின்றும் நீங்க வேண்டிய மனிதர் இந்த நவராத்திரி விரதத்தைச் செய்தல் வேண்டும். பூசைக்கு வேண்டியவைகளை அமாவாசை தினத்திலேயே சேகரித்துக் கொண்டு அன்று ஒரு வேளை போஜனத்துடன் உபவாசியாய் இருந்து மறுநாள் பிரதமை முதல் பூசைக்கு ஆரம்பித்து வேண்டும். நான்கு முழ நீளமும் ஒரு முழம் உயரமுள்ள வேதிகை அமைந்த அலங்கரித்த மண்டபத்தில் ஒரு சிங்காதனம் அமைத்துத் தான் வேதம் உணர்ந்த வேதியர் ஒன்பதின்மர் அல்லது ஐவர், மூவர், ஒருவருடன் மண்டபத்திற் சென்று ஆசனத்தில் சங்கு, சக்ர, கதா பத்மத்துடன் கூடிச் சதுர்ப்புஜத்துடன் ஆயினும், பதினெண் கரத்துடன் கூடியவளாகவே தேவியின் திருவுருவத்தைத் தாபித்து அலங்கரித்துக் கும்ப பூஜையில் நிமித்தம் கலசம் தாபித்து அதில் கங்கை முதலிய புண்ணிய தீர்த்தங்களை நிரப்பி மாவிலை முதலிய ஐந்து வகைத் தளிர்களை மேலே வைத்துப் பூஜித்தல் வேண்டும். பின் சங்கற்பஞ் செய்து கொண்டு வாசனைத் திரவியங்களாலும் பல வகை மணமலர்களாலும் தேவியைத் தூப தீபங்களால் மந்திர பூர்வமாய் விதிப்படி பூசித்து நவாவரண பூஜையுஞ் செய்து அர்க்கியங் கொடுத்துப் பல வகை நிவேதனங்கள் செய்தல் வேண்டும். பின் ஹோமார்த்தமாய் யோனி குண்டம் அமைத்துத் தண்டிலம் இட்டு ஓமத்தைப் பூர்த்தி செய்தல் வேண்டும். பூசிப்போன் சயன சுகாதிகளை விட்டுத் தரையில் படுத்து உறங்க வேண்டும். பிரதமை யில் அஸ்த நட்சத்திரங் கூடில் சிறப்பு என்றும் அத்தினத்தில் தேவியைப் பூசிக்கின் சகலாபீஷ்டங்களையுந் - அனைத்து வளங்களையும் தருவள் எனக் கூறுவர். கும்ப பூசை முதல் ஓமாந்தம் வரையிற் செய்யத் தருவனவற்றைச் செய்து பின் கன்னிகைகளைப் பூஜித்தல் வேண்டும்.
கன்னிகைகள்
இரண்டு வயது முதல் பத்து வயது அளவுள்ளவர்களாம். இக்கன்னியர்களுக்கு முறையே குமாரி, திரிமூர்த்தி, உரோகணி, காளிகா, சண்டிகா, சாம்பரா, துர்க்கா, சுபத்திரா என்று ஒவ்வொருவருக்கும் பெயராகும். இவர்களை வேத மந்திரங்களால் பூசித்தல் வேண்டும். மேற் சொன்ன கன்னிகையரைத் தினம் ஒவ்வொருவராகவேனும், அல்லது முதனாள் தொடங்கி ஒவ்வொன்று அதிகமாகவேனும், பூஜை நடத்த வேண்டும் ஒருவன் நவராத்திரி முழுதும் பூசிக்க அசந்தனாவனேல் அட்டமியில் அவசியம் பூஜித்தல் வேண்டும். பூர்வம் தட்சயாகத்தை அழித்த பத்திரகாளி தோன்றிய தினமாகையால் என்க. அசக்தரானோர் சப்தமி, அட்டமி நவமி இம்மூன்று தினத்திலும், பூசிப்பரேல் ஒன்பது தினத்திலும் பூசித்த பலனை அடைவர். இவ்விரதத்தை மேற் கொண்டவர் எல்லாச் செல்வங்களையும் அடைந்து உயர் பதம் அடைவர். இதனை அநுட்டித்தோர் சுசீலன் சுகேது முதலியோர்.
2. விரதங்களில் ஒன்று. இது புரட்டாசி மாதம் பூர்வ பட்சப் பிரதமை, முதல் திரிதிகை வரையில் உருத்திரியையும், சதுர்த்தி முதல் சஷ்டி வரையில் இலக்குமியையும், சப்தமி முதல் நவமி வரையில் சரஸ்வதியையும், பூசித்துத் தசமியில் முடிப்பது. இதனைச் சுகேது என்னும் அரசன், அரசாட்சி இழந்து வருந்தியதால் அவன் மனைவியாகிய துவேதியை ஆங்கீரச முனிவர் இவ்விரதம் அநுட்டிக்கக் கற்பித்தனர். அவ்வகை அவள் அநுட்டிக்க அவ்வநுட்டானத்திற்குப் பின் அவள் வயிற்றிற் பிறந்த குமரனாகிய சூரியப்பிரதாபன் இழந்த நாட்டைப் பகைவரிடமிருந்து மீட்டனன் என்பர்.(அபிதான சிந்தாமணி, பக்கம்.1143 - 1144)
நவராத்திரம், நவராத்திரி
புரட்டாசி மாதம், பூர்வ பட்சத்துப் பிரதமை முதல் ஒன்பது இராத்திரி. இதன் ஒன்பதாம் நாளன்று தான், சரசுவதி பூசை அல்லது ஆயுத பூசை செய்வது.
விசயதசமி, விஜயதசமி விரதம்
ஐப்பசி மாதம் பூருவ பட்சத்தில் வரும் பத்தாம் திதி. இது ஓர் விசேட நாள். இஃது ஆடி மாதம் சுக்ல பட்சம் ஏகாதசி முதல் ஐப்பசி சுக்கில பட்சம் துவாதசி வரைக்கும், நான்கு மாதமும் யோகிகளுக்கு விரதம். முதல் மாதம் சாதங்கள் ஆகாது. இரண்டாம் மாதம் தயிராகாது. மூன்றாம் மாதம் பால் ஆகாது. நான்காம் மாதம் பருப்பு, கறிகள், உப்பு, புளி முதலிய ஒன்றுமே ஆகாது. ஐப்பசி மாதம் சுக்ல பட்சத் துவாதசியில் பூசை செய்து எல்லாப் பலகாரங்களும் சாப்பிடலாம்.
மனோரதத்திரிகை விரதம்
சித்திரை மாதத்துச் சுக்கில பட்சத் திரிதிகையில் சோம கணேச மூர்த்தியை எண்ணி நோற்கும் விரதம். இவ்விரதங்களை இலட்சுமி, சரஸ்வதி, அநசூயை , இந்திராணி நோற்றுத் தம் புருடரை அடைந்தனர்.
சத்திய விரதம்
திருக்காஞ்சியிலுள்ள தலங்களில் ஒன்று. இதற்கு இந்திரபுரம் என்று ஒரு பெயர் உண்டு. புதன் பூசித்துக் கிரக நிலை பெற்றது.
சாந்திராயணம், சாந்திராயனம் - சாந்திராயன விரதம்
சாந்தனம் - ஓர் விரத நாள். சாந்தன் - சந்திரன். சாந்தபனம் - ஒரு விரதம். இது மூன்று நாள் பகல் போஜனம் மாத்திரஞ் செய்து பின் மூன்று நாள் இராப்போஜனம் மாத்திரம் செய்து மூன்று நாள் கேட்காமல் கிடைத்த பொருளை உண்டு, மூன்று நாள் அன்னமின்றி உபவாசம் இருத்தல்.
சந்திரனது கலை தேயத் தேய உணவில் ஒவ்வொரு கவளமாகக் குறைத்து உண்டு அது வளர வளர ஒவ்வொன்றாய் உயர்த்தி உண்பதோர் விரதம். ஓர் திங்கணாள், விரதம், இது பௌரணை தொடங்கி அமாவாசை வரைக்கும் ஒவ்வொரு பிடி அன்னம் குறைத்தும், அமாவாசை தொடங்கி ஒவ்வொரு பிடி அன்னம் அதிகமாகப் புசித்தும் அனுட்டிக்கும் ஓர் விசேட விரதம்.
சாந்திராயன விரதம் இவ்விரதத்தை கடைபிடிக்கத் தொடங்கினவன், கிருஷ்ண பட்சத்தில் ஷெளரத்தில் ஷெளரஞ் செய்து கொண்டு வௌ்ளை வஸ்திரமும் உடுத்து முஞ்சத்தாற் செய்த அரைஞாண் அணிந்து பலாச தண்டம் எடுத்துக் கொண்டு பிரமசரிய விரதம் அநுட்டிக்க வேண்டும். சுக்ல பட்ச பிரதமையில் முந்தி உபவாசித்துச் சுத்தமான இடத்தில் அக்னியை வைக்கச் செய்து ஆகாரம், ஆஜ்ய பாகம், பிரணவம், வ்யாஹ்ருதி, வாருணம் என்னும் பஞ்ச ஹோமங்களையும் செய்து பின் சத்யம், விஷ்ணு, பிரம்மருஷி, பிரம்மா, விச்வ தேவர், பிரஜாபதி என்று ஆறு ஹோமம் செய்ய வேண்டும். பின் சாந்தி செய்து அக்னி கார்யம் முடித்து அக்னி ஸோமனை நமஸ்கரித்து விபூதி அணிந்து சுத்த தீர்த்தத்தில் ஸ்நானஞ் செய்து அநுட்டான முடித்துக் கைகளைத் தூக்கிக் கொண்டு சூர்யனைப் பார்க்க வேண்டும். பின்னிரு கைகளையும் குவித்து நின்று பிரதட்சணம் செய்ய வேண்டும். பின் ருத்ர, விஷ்ணு, பிரம சூக்தங்களில் ஒன்றையாவது வேறெந்த சூக்தங்களில் ஒன்றையாவது வேறெந்த சூக்தத்தையாவது, 100, 1000, தரமாயினும் செபிக்க வெண்டும். மத்யானத்தில், பொன், வௌ்ளி, தாமிரம், மண், அத்திப்பலகை முதலியவற்றால் செய்த பாத்திரங் கொண்டு ஏழு பிராம்மணர் வீடுகளில் மௌனமாகப் பிச்சை கொண்டு கிடைத்த அன்னத்தை ஏழு உருண்டைகள் செய்து 1.சூரியன், 2.பிரமன் 3.அக்னி, 4.சோமன், 5.வருணன், 6.விச்வே தேவர்களுக்குக் கொடுத்து மிகுந்ததை மூன்று விரல்களால் சந்திரன் நாடோறும் வளர்தல் தேய்தல் போல் உருண்டைகளையும் வளர்தல் போல் சுருங்கல் செய்து உண்ணலாம். இதை அநுட்டித்தால் பாவம் நீங்கும். (பார - அச்.)
பிரஜாபத்தியம் முதலிய கிருச்சிர சுவ ரூபங்கள் விரதம் உபவாசம் - விரதம்
1. இவ்விரதம் அநுட்டிக்கிற துவசன், மூன்று நாள் பகலில் ஒவ்வொரு வேளை உப்பில்லாத அன்னத்தின் இருபத்தாறு கவளமும், மறு மூன்று நாள் அப்படியே இரவில் முப்பத்திரண்டு கவளமும், மறு மூன்று நாள் தான் யாசிக்காமல் இருக்கும் போது யாராவது வலிவில் கொடுத்த அன்னத்தின் இருபத்து நான்கு கவளமும், புசித்து, மறு மூன்று நாள் சுத்த உபவாசம் இருக்க வேண்டியது.
2 .சாந்தபனக் கிருச்சிரமாவது, பஞ்ச கவ்வியத்தை மாத்திரம் ஒரு நாள் உண்டு மறுநாள் சுத்த உபவாசமிருப்பது.
3. மகா சாந்தபனமாவது, பஞ்சகவ்வியமாகிய ஐந்தின் ஒவ்வொன்றைத் தனித்தனி ஒவ்வொரு நாள் உண்டு ஏழாம் நாள் சுத்த உபவாசம் இருப்பது.
4. அதிகிருச்சிரமாவது, மூன்று நாள் பகலில் ஒவ்வொரு கவளமும், மறு மூன்று நாள் இரவில் ஒவ்வொரு கவளமும் மறு மூன்று நாள் யாசிக்காமல் வந்த அன்னத்தில் ஒரு கவளமும் உண்டு. பின் மூன்று நாள் சுத்த உபவாசம் இருப்பது.
5. தப்தகிருச்சிரமாவது, மூன்று நாள் ஒவ்வொரு வேளை ஆறு பலமுள்ள உஷ்ணோதேகத்தையும், மறு மூன்று நாள் ஒவ்வொரு வேளை மூன்று பலமுள்ள சுடுகையான பாலையும், பின் மூன்று நாள் ஒரு பலம் உள்ள உஷ்ணமான நெய்யையும், பின் மூன்று நாள் உஷ்ணமாக வீசுகிற காற்றையும், உண்டு ஓரிடத்தில் வசித்திருப்பது. இந்தக் பன்னிரண்டு நாளும் ஒரே காலம் ஸ்நாநம் - குளியல் செய்ய வேண்டும்.
6. பராக கிருச்சிரமாவது, இந்திரியங்களை அடக்கிக் கொண்டு சாக்கிரத்தையுடன் பன்னிரண்டு நாள் சுத்த உபவாசம் இருப்பது.
7. பிபீலிகாசாந்திராயனம், பகலில் மூன்று காலத்திலும் ஸ்நானம் செய்து, பௌர்ணமாவாசியில் உப்பில்லாத பதினைந்து கவளம் அன்னம் புசித்து மறு நாளாகிய கிருஷ்ண பட்ச பிரதமை முதல் அந்தப் பதினைந்து கவளத்தின் ஒவ்வொரு கவளமாகக் குறைத்து வந்து அமாவாசியில் சுத்த உபவாசம் இருந்து மறுநாள் துவக்கி ஒவ்வொரு கவளம் வளர்த்துக் கொண்டு வந்து மறுபடி பௌர்ணமியில் பதினைந்து கவளம் புசிப்பது. எறும்பு போல் முன்னும் பின்னும் வளர்ந்து நடுக்குறைதலால் இப்பெயர் தந்தனர்.
8. யவசாந்திராயனமாவது, மேற்கூறிய நியமத்துடன் சுக்கில பட்ச பிரதமை முதல் ஒவ்வொரு கவளமாக வளர்த்து வந்து பௌர்ணமாவாசியில் பதினைந்து கவளம் உண்டு. பின் கிருஷ்ண பட்ச பிரதமை முதல் ஒவ்வொன்றாகக் குறைத்து வந்து அமாவாசியில் உபவாசம் இருப்பது.
9. யதிசாந்திராயனமாவது, கிருஷ்ண பட்சம் அல்லது சுக்கில பட்சத்தின் பிரதமைகளில் துவக்கி முப்பது நாள் வரையில் நாடோறும் எவ்வெட்டுக் கவள அன்னத்தை உப்பில்லாமல் உண்டு இருப்பது.
10. சிசு சாந்திராயனமாவது, மேற்கூறிய நியமத்துடன் முப்பது நாள் வரையில் நான்கு கவளமும், சூரியன் அஸ்தமித்தவுடன் நான்கு கவளமும் சாப்பிட்டிருப்பது.
நாக பஞ்சமி விரதம் - நாகப்பிரதிட்டை விரதம்
ஆவணி மாதம் பூர்வ பட்சத்து ஐந்தாம் திதி. நாகப்பிரதிட்டை விரதம்
நாக விக்கிரப் பிரதிட்டை. ஒரு கருங்கல்லில் ஒரு படம், இரு படம் உள்ளனவாகப் பாம்புகள் எழுதி அச்சிலையை முதனாள் நீரில் இருக்கச் செய்து அச்சிலையை அன்றிரவு தம்பதிகள் உப்பில்லா விரதம் இருந்து மறு நாள் பாம்பு சிலைக்குப் பூசை முதலியன செய்து அரச மரத்தின் அடியில் அதற்குரிய விதிப்படி அதனை நிறுவி, வலம் வந்து வணங்கி உறவினர்களுடன் அந்தணர்களுக்கு உணவு அளிப்பதால் குழந்தைப் பேற்றினைப் பெறுவர் என்றும், பெண் குழந்தைகளே பிறக்கும் நிலையும் மாறி ஆணாகப் பிறக்கும்.
பாத்ருத்விதியை விரதம்
கார்த்திகை சுக்ல பட்சத் துவிதியையில் வருவது. இந்நாளில் உடன் பிறந்த நாள் தன் உடன் பிறந்தானைத் தன் வீட்டிற்கு அழைத்து வந்து மரியாதை முதலிய செய்வதாம். இது யமுனை, தன் உடன் பிறந்த யமனைத் தன் வீட்டிற்கு அழைத்து வந்து விருந்து முதலிய செய்வித்ததால் இதை உலகத்தவர் கொண்டாடுகிறார்கள். இதனால் யமபயம் நீங்கி இட்ட சித்தி அடைவர்.
சோமவாரம் - திங்கட்கிழமை. இது கார்த்திகை மாதம் திங்கட்கிழமை விடியல் ஸ்நானம் முதலிய செய்து சிவபூசை முடித்து வேதிய தம்பதிகளைச் சிவமூர்த்தியாகவும், பிராட்டியாகவும் பாவித்துப் பூசை முடித்து அவர்களுக்கு அன்ன முதலிய உதவிச் சிவமூர்த்திகட்குப் பஞ்சாமிர்தத்தால் அபிடேகம் முதலிய நடத்தி உபவசித்தலாம். இது சந்திரன் சிவ மூர்த்தியை எண்ணி விரதமிருந்து சோமன் என்னும் பெயரும் சடையினின்று நீங்காதிருக்கும் வாழ்வும் அடைந்த நாள். இதை அநுட்டித்ததோர் சீமந்தினி முதலியவர்.
சுக்கிரவாரம் - வௌ்ளிக்கிழமை. இது உமாதேவி, விநாயகர், சுப்பிரமணியர் இவர்களைக் குறித்து வௌ்ளிக் கிழமையில் செய்யும் நோன்பு. தேவியைக் குறித்து சித்திரை மாசத்துச் சுக்கில பட்சத்து முதற் சுக்கிர வாரந் தொடங்கியும், விநாயகரைக் குறித்தது வைகாசி மாதத்துச் சுக்கில பட்சத்து முதற் சுக்கிர வாரந் தொடங்கியும், மற்றது ஐப்பசி மாசத்து முதற் சுக்கிர வாரந் தொடங்கியும் அனுட்டிக்கத்தக்கதாம். இந்த வாரத்தில் சுக்கிரன் சத்தியைப் பூசித்து இந்த வாரத்தில் உலகத்தவர் உன்னைப் பூசிக்கின் இட்ட சித்தி தருக என வரம் பெற்றனன்.
திதி குறித்த நோன்பு.
இது சித்திரை மாதம் சுக்கில பட்ச நவமி கூடிய சுபதினம். இதில் விஷ்ணுமூர்த்தி திரு அயோத்தியில் ஸ்ரீராமராகத் திரு அவதரித்தனர். ஆதலின் விரத நாளாம்.
“அக்னிரிதி” என்பதாதியான மந்திரங்களால் விபூதியை எடுத்துத் தேகத்திற் பூசுவது. (சிவ ரஹஸ்யம்.)
மாசி மாதத்து அமர பட்சத்து சதுர்த்தசியோடு கூடிய அர்த்த ராத்திரி காலம். ஓர் தினம். மாசி மாசத்திலே அபர பட்ச சதுர்த்தசியோடு கூடிய அர்த்தராத்திரி காலமாகிய புண்ணிய முகூர்த்தம். கால நிர்ணயம், மாசி மாதம் கிருஷ்ணபட்சம், சதுர்த்தசி இரவு பதினான்கு நாழிகை, இலிங்கோற்பவ காலம், இதுவே மகா சிவராத்திரி. புண்ய காலம் கிருஷ்ணபட்சம் திரயோதசி 30 நாழிகைக்குச் சதுர;த்தசி வியாபிப்பது உத்தமம், திரயோதசி இல்லாமல் சதுர்த்தசி வியாபிப்பது அதமம். ஒரு காலம் அன்றை இரவிற்கு அமாவாசை பிரவேசிப்பது பரியாய சிவராத்ரி, இந்த மகாசிவராத்திரி தினத்தில் நேரிடும் திரயோதசி பரமசிவத்திற்குத் தேகமாகவும் சதுர்த்தசி தேகியாகவும் அன்றிச் சத்தியாகவும், சிவமாகவும் கூறப்பட்டிருக்கிறது. சிவராத்ரி முதல் சாம முதல் நான்கு சாமங்களிலும் ஆத்மார்த்த, பரார்த்த பூசைகள் நடத்த வேண்டியது. தானம் செய்ய வேண்டியது. இதை அனுட்டித்தோர் நான்கு யுகங்களிலும் முறையே விநாயகர், கந்தமூர்த்தி, பிரம விஷ்ணுக்களாம். பலன் இம்மையில் சற்சன தானாதி சௌபாக்ய சம்பத்தும், மறுமையில் சுவர்க்காதி போகமுமாம். இது காமியம். நிஷ்காமிகள் இகத்தில் புத்தியும் பரத்தில் முத்தியும் அடைவர். மகாசிவராத்திரி பிரம விஷ்ணுக்கள் பொருட்டுச் சிவமூர;த்தி இலிங்கோற்பவமாய் எழுந்தருளிய போது தேவர் பூசித்த காலம் எனவும், ஒரு பிரம கற்பத்தில் சக்தி நாற் சாமத்திலும் சிவ பூசை செய்து தாம் பூசித்த காலம் சிவராத்திரியாக எனச் சிவமூர்த்தியை வரம் வேண்டிப் பெற்ற நாள் எனவும், சக்தி விளையாட்டாகச் சிவமூர்த்தியின் திரிநேத்திரங்களை மூட உலகங்கள் இருண்டன. அக்காலத்துச் சிவமூர்த்தியைத் தேவர் வணங்கின காலம் எனவும், பாற்கடலில் தோன்றிய விடம் உண்ட சிவமூர்த்தியை விடம் பீடிக்காமல் தேவர் இரவு முழுதும் பூசித்த காலம் எனவும், ஒரு கற்பத்தில் அண்டங்கள் எல்லாம் இருள் உருத்திரர் அந்த இருள் நீங்கச் சிவத்தைப் பூசித்த காலம் எனவும் பல புராணங்கள் கூறும்.
மாசி மாசத்துக் கிருஷ்ண பட்ச சதுர்த்தசியிலே சிவபெருமானைக் குறித்து அநுட்டிக்கும் விரதம். அத்தினத்திலே உபவாசஞ் செய்து நான்கு யாமமும் நித்திரையின்றிச் சிவபூசை செய்தல் வேண்டும். சிவபூசை இல்லாதவர் நித்திரையின்றி ஸ்ரீ பஞ்சாட்சர செபமும் சிவபுராண சிரவணமும் சிவாலய தரிசனமுஞ் செய்தல் வேண்டும். இது சைவசமயத்தார் யாவராலும் அவசியம் செய்யத்தக்கது.
விரதங்களில் ஒன்று.
வைகாசி மாதம் சுக்கில பட்சத்தின் முதல் வௌ்ளிக்கிழமை தொடங்கி சுக்கிர வாரம் தோறும், விநாயகரை நோக்கி அனுட்டிக்கும் விரதம்.
கார்த்திகையிற் கார்த்திகை கழித்த இருபத்தோராம் நாள் வருஞ் சட்டி. விநாயக சஷ்டி, விநாயக சட்டி - கார்த்திகை மாதத்தில், கார்த்திகை கழிந்த இருபத்தோராம் நாள் வரும் திதி.
ஆவணி மாதம், பூருவ பட்சத்தில் வரும் நான்காம் திதி. விநாயக சதுர்த்தி விரதம் - விரதம் காண்க. விநாயக மூர்த்தியை எண்ணி ஆவணி மாதம் கிருஷ்ண பட்ச சதுர்த்தியில் அநுட்டிப்பது. இதை அநுட்டித்தோர் உமை, புருசுண்டி, ஔவை முதலியோர். இது சிந்துரனைக் கொல்லக் கசாநநர் அவதரித்த காலம்.
ஆவணி மாதம் அமர பட்சத்திய நாலாம் திதி. இது ஓர் விரத நாள். இது சங்கடங்களைப் போக்குவதால் இப்பெயர் பெற்றது. இதனை மாசி மாதம், அபரா பட்ச செவ்வாய்க் கிழமையில் அநுட்டிப்பர். இது விநாயகர்க்கு உரிய விரதம். இதை அநுட்டித்தவன் அங்காரகன்.
விரதங்களில் ஒன்று.
ஒரு விரதம். இதை அநுட்டித்தவர்களுக்குப் பட்ச பாதங் கூறிய பற்றிய பாவம் நீங்கும்.
ஐப்பசி மாதத்தின் அமாவாசி தொடங்கிக்கந் தன் விரதத்துக்குரிய ஆறு நாள். கந்தசஷ்டி, கந்தசட்டி - ஐப்பசி மாதத்தின் சுக்கில பட்சத்து ஆறாம் திதி.
கந்தசஷ்டி விரதம் - கந்தசட்டி, கந்தசஷ்டி - ஐப்பசி மாதத்தின் தொடங்கிக் கந்தன் விரதத்துக்குரிய ஆறு நாள். இது ஐப்பசி மாசம் சுக்ல பட்ச பிரதமை முதல் சஷ்டி வரையில் கலசத்தில் கந்தமூர்த்தியை யாவாகனஞ் செய்து பூசித்துச் சல பாகஞ் செய்து ஆறாம் நாள் கந்தமூர்த்திக்குப் பூசை முதலிய முடித்து அதிதிகளுடன் பாரணை செய்வது. இதைத் தேவர் சூரபன்மன் முதலியவர் இறக்க அநுட்டித்தனர். இது கந்தமூர்த்தி உற்பத்தின் பொருட்டுச் சிவமூர்த்தியிடம் பிரதமையிற் பிறந்த பொறிகள் துவிதியையில் கெளரி கற்பத்திருந்து திருதியையில் அக்நியிடங் கொடுக்க அவன் வகித்துச் சதுர்த்தியில் கங்கையிடமிருந்து பஞ்சமியில் கிருத்திகை முதலியவர் பாலூட்ட ஆறு முகமும் பன்னிரண்டு கையும் பெற்று வளர்ந்த நாள்.
இவ்விரதம் விரதங்கள் கடைபிடிக்கப்பெறுகின்றன.
நாமும் அதன் வழி நிற்போம்.