வைகுண்ட ஏகாதசி நாளில் இரவு முழுக்க விழித்திருந்தால், இறைவன் சொர்க்கம் செல்லும் வாய்ப்பை வழங்குவான் என்று எண்ணிக் கொண்டு இருக்கின்றனர். இந்நாளில், இரவு முழுக்க வெறுமனே விழித்திருப்பதிலோ, வேறு கேளிக்கைப் படங்களைப் பார்ப்பதிலோ அல்லது ஏதாவதொரு விளையாட்டுகளை விளையாடிப் பொழுதைப் போக்குவதிலோ எந்தப் பயனுமில்லை. இந்நாளில் பரமபதம் எனும் விளையாட்டை விளையாடி, இறை சிந்தனையை அதிகரிக்கலாம்.
இந்த விளையாட்டில் ஏணி வழியே ஏறிச் சென்றால் சொர்க்கம். பாம்பின் வாயில் விழுந்தால் கீழே இறங்க நேரிடும். இவ்விளையாட்டில் பெரிய பாம்பின் வாயில் சிக்கினால், மீண்டும் தொடங்கிய இடத்துக்கே வந்து சேர வேண்டியிருக்கும். இந்த விளையாட்டு நம் வாழ்க்கையை நல்லதாக வாழ்ந்து, மறுபிறவியற்ற சொர்க்கநிலையை அடைய வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக அமைந்திருக்கிறது. இவ்விளையாட்டில் ஏணி என்பது புண்ணியம், பாம்பு என்பது பாவம். பாவம் செய்தவர்கள் வாழ்வில் கீழே இறங்குவர் என்பதையும், புண்ணியம் செய்பவர்கள் சொர்க்கமாகிய திருமாலின் வைகுண்டத்தை எளிதாகச் சென்றடையலாம் என்பதையும் வலியுறுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது.
ஏகாதசி என்பது திதிகளில் பதினொன்றாவதாக வருவது. அந்த நாளில் நாமும் நம்முடைய கர்மேந்திரியங்கள் ஐந்து, ஞானேந்திரியங்கள் ஐந்து, மனம் ஒன்று ஆக இந்தப் பதினொன்றையும் பகவானோடு ஒன்றிணையச் செய்ய வேண்டும். இந்த இணைப்பு, அவனோடு என்றுமே இணைவதாக இருக்கும் என்பதுதான் இந்த ஏகாதசி விரதத்தின் உட்பொருள். அந்த உட்பொருளின் வெளிவடிவாக நடைபெறுவதுதான் பரமபதவாசல் திறப்பு, வைகுண்ட ஏகாதசித் திருநாள் போன்றவை. இறைவனான பரந்தாமன், நம் எண்ணங்கள் அனைத்தையும் நலமுடன் நிறைவேற்றுவான் எனும் நோக்கத்தில், சரணாகதி மனோபாவத்தோடு ஏகாதசி விரதத்தை மேற்கொண்டு, பூஜைகளைச் செய்து, எப்பொழுதும் இறை சிந்தனையுடன் நல்வாழ்க்கை வாழ்ந்திட வேண்டும்.
இதனை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டதே பரமபதம் விளையாட்டு. இது பொழுதுபோக்கு விளையாட்டல்ல, நம் வாழ்க்கைக்கு நல்வழி காட்டும் விளையாட்டு...!