ராமனிடம் ஐந்து விதமான வீர குணங்கள் உள்ளன. இவைகளைப் பின்பற்ற ஒருவனுக்கு பெரும் வீரம் தேவை. ஏனெனில் கஷ்ட திசையில் மாட்டிக் கொண்ட நல்லவர்களும் கூட, எளிதில் வழுக்கி விழ வாய்ப்பு உண்டு. ஆனால் ராமபிரானோ எவ்வளவு இடர்ப்பாடுகள் வந்த போதிலும், தர்மத்தின் வழியையேக் கடைப்பிடித்தான். அதனால் அவனிடம் ஐந்து நற்குணங்கள் இருப்பதாகப் புலவர் பெருமக்கள் போற்றுவர். அந்த ஐந்து வீரங்கள்;
1. தியாக வீரம்
கைகேயியின் வசப்பட்ட தசரதன் சொல்லிய சொல்லுக்காக, அந்த சத்ய பராக்ரமன் ராமன், தனக்குக் கிடைக்கவேண்டிய பெரும் அரச பதவியைத் தியாகம் செய்தான். இதைவிடப் பெரிய தியாகம் உள்ளதோ? அப்பா, அம்மாவை எதிர்த்துப் போர்கொடி தூக்குவோம் என்று சூளுரைத்த லெட்சுமணனை அமைதிப்படுத்தி அவனையும் தன் வழிப்படுத்தினான்.
2. தயா வீரம்
வேடர் குலத் தலைவனான குகனையும், குரங்கினத் தலைவனான சுக்ரீவனையும், அரக்கர் குல விபீஷணனையும் தனது சகோதரர்களாக ஏற்றான். சாதி, குல வேற்றுமைகளை மிதித்து நசுக்கிய முதல் மாவீரன் அவன். எல்லோரிடமும் தயை என்னும் இரக்கம் காட்டினான். சபரிக்கு மோட்சம் கொடுத்தான். மாபெரும் தவறு இழைத்த அகல்யைக்குச் சாப விமோசனம் அளித்தான்.
3. வித்யா வீரம்
ராமனுடைய விவேகம், வித்யா வீரம் எனப்படும். போர்க்களத்தில் ஆயுதங்களை இழந்த இராவணனைக் கொல்லாது “இன்று போய் நாளை வா” என்று சொன்னான். சீதையை ஒப்படைத்தால் உயிர்ப்பிச்சை போடுவதாகக் கூறினான். ஒரு சலவைத் தொழிலாளி சொன்ன சொல்லை மதித்து, தனது மனைவியின் தூய்மையை, கற்பினை நிலைநாட்ட அவளைப் பூக்குழி இறங்க உத்தரவிட்டான். ஜனநாயகக் கொள்கைகளை நடைமுறைப்படுத்திய முதல் தலைவன் அவன். இராமன் இருக்கும் இடத்தில் காமன் இருக்க மாட்டான்.
4. பராக்ரம வீரம்
இருபத்தொரு தலைமுறை சத்ரிய மன்னர்களை அழித்த பரசுராமனையும் வெற்றி கொண்டு தனது பராக்ரமத்தை நிலைநாட்டினான் ராமன். ஏழு மராமரங்களை ஒரே அம்பினால் துளைத்ததோடு, ஏழு கோடி அவுணர்களையும் அழித்தொழித்தான். ராவண சம்ஹாரம், அவனது வீர பராக்ரமத்துக்கு முத்தாய்ப்பாக அமைந்தது.
5. தர்ம வீரம்
“இப்பிறவியில் சிந்தையாலும் இரு மாதரைத் தொடேன்” என்று புதுநெறி உருவாக்கிய நாயகன் அவன். எல்லா அரசர்களும் பல மனைவியரை மணக்க, இராமன், சீதையைத் தவிர வேறு ஒரு பெண்ணை சிந்தையாலும் தொடாதவன், சத்திய நெறி தவறாதவன்.