அம்பிகையின் அருளைப் பெறுவதற்குப் பல விரதங்கள் கடைப்பிடிக்கப் பெற்றாலும் அவற்றுள் நவராத்திரி விரதமே மிகவும் சிறப்பானது என்று ஆன்மிக நூல்கள் கூறுகின்றன.
நவராத்திரி நோன்பு (விரதம்) புரட்டாதி மாதத்தில் நவக்கிரகங்களில் நாயகமாக உள்ள சூரியன், கன்னி இராசியில் சஞ்சரிக்கும் காலம் தட்சணாயண காலமாகும். இக்காலம் தேவர்களுக்கு இராக்காலமாகும். கன்னி ராசிக்கு அதிபதியானவன் புதன். வித்யாகாரகன் எனப்படுபவன். கல்வி, புத்தி, தொழில் ஸ்தானம் சரியாக அமைய புதனின் பார்வை முக்கியமானது என்பார். இந்தக் காலத்தில் நவராத்திரி கொண்டாடுவது சாலச்சிறந்தது என்று கருதி வந்துள்ளனர்.
உத்தராயணத்தில் வசந்த நவராத்திரியும், தட்சணாயன காலத்தில் சாரதா நவராத்திரியும் தேவியைப் பூசிக்கச் சிறந்த காலமாகும். இவ்விரண்டில் புரட்டாசி மாதத்தில் கடைப்பிடிக்கப்படும் சாரதா நவராத்திரியையே அனைவரும் கொண்டாடி வருகின்றனர்.
நவராத்திரி பூஜை புரட்டாசி மாதத்தில் அமாவாசை கழிந்த பூர்வபட்ச பிரதமை திதியில் தொடங்கி நவமி முடியச் செய்ய வேண்டும் என்று சொல்லப்படுகின்றது.
முக்குணங்களுக்கும் மூலமான சர்வ லோக நாயகியை ஒன்பது நாட்களும் பூஜிக்கும் போது, முதல் மூன்று நாள்கள் தமோ குண சஞ்சாரியான துர்கா பரமேஸ்வரியை வீரத்தையும், தைரியத்தையும் (ஒருநாளும் தளர்வு அறியா மனம்) தர வேண்டியும், அடுத்த மூன்று நாட்கள் ராஜோ குண சொரூபியான மகாலட்சுமியை சகல செல்வங்களையும் (தனம்) தர வேண்டியும், கடைசி மூன்று நாட்கள் சாத்வீகக் குண சொரூபியான சரஸ்வதியை கல்வி, அறிவு, சகல கலை ஞானங்கள் (ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்) தர வேண்டியும் வணங்குகிறோம்.
இப்புண்ணியகாலம் ஒன்பது தினங்களைக் கொண்டது. அதனாலேயே நவராத்திரி என்னும் பெயர் பெற்றிருக்கிறது. அந்த ஒன்பது நாட்களிலும் லோகமாதாவாகிய பராசக்தியை (அம்பிகையை) ஒன்பது வடிவங்களில் வழிபாடு செய்கிறோம்.
அலைமகள், மலைமகள், கலைமகள் என முப்பெரும் தேவியரையும் வணங்கி வழிபட்டு, இவ்வுலக வாழ்கை சிறப்பாக அமையத் தேவையான கல்வி, செல்வம், வெற்றி (வீரம்) ஆகியவற்றை இறைவியிடம் வேண்டிக் கொண்டாடுகிறோம். ஒரு மனிதனுக்கு உடல் வலிமை, பராக்கிரம், மனோதிடம், புத்திபலம், தீர்க்காயுள், ஞானம், தேவைக்கேற்ற பணம் போன்றவை நிறைந்திருந்தால்தான் அவன் சிறந்தவனாகத் திகழ முடியும். வாழ்க்கையின் அனைத்துத் தேவைகளையும் அடையப் பணம், பொருள் வேண்டும். அதற்காக மகாலட்சுமி தேவியை வழிபடுகிறோம். பெற்ற பணத்தைப் பாதுகாக்க மன வலிமை வேண்டும். அதற்காகத் துர்க்கா தேவியை வழிபடுகிறோம். பாதுகாக்கப்பட்ட பணத்தை நல்வழியில் பயனுடைய செயல்களுக்குப் பயன்படுத்தக் கல்வியறிவு வேண்டும். அதற்காக சரசுவதி தேவியை வணங்குகிறோம்.
இந்த நவராத்திரி விழாவின்போது கோயில்களிலும், கல்வி நிறுவனங்களிலும், பணிபுரியும் அலுவகங்களிலும், தொழிற்சாலைகளிலும், வீடுகளிலும் கும்பம் (கலசம்)வைத்து அதில் ஆதிபராசக்தியை எழுந்தருளச் செய்து வழிபடுவது வழக்கம். அந்தக் கும்பத்தை நடுவில் வைத்துக் கொலு வைத்து வழிபடுகிறோம்.
முதல் தினத்தில் தேவி மூன்று வயதுள்ள பாலையாகவும், இரண்டாவது தினத்தில் ஒன்பது வயதுள்ள குமாரிகை என்ற நவாக்ஷரீ ஸ்வரூபிணியாகவும், மூன்றாவது தினத்தில் பஞ்சதசாக்ஷரீ ஸ்வரூபிணியாகவும், நான்காவது தினத்தில் பதினாறு வயதுள்ள ஸ்திரீயாக ஷோடசாக்ஷரீ ஸ்வரூபிணியாகவும், ஐந்தாவது தினத்தில் சதாக்ஷீ என்ற பெயருடன் மாத்ருகா வர்ணஸ்வரூபிணியாகவும், ஆறாவது தினத்தில் சாகம்பரீ என்ற பெயருடன் ஸ்ரீவித்யாபீஜாக்ஷர ரூபிணியாகவும், ஏழாவது தினத்தில் துர்க்கமாஸுரனைக் கொன்ற மஹாதுர்க்கையாகவும், எட்டாவது தினத்தில் மஹிஷாஸுரனைக் கொன்ற மஹாலக்ஷ்மி ஸ்வரூபிணியாகவும், ஒன்பதாவது தினத்தில் சும்பன் நிசும்பன் என்ற இரு அஸுரர்களைக் கொன்று உலகத்தைக் காத்த மகாசரஸ்வதியாகவும் அம்பாள் விளங்கி வருகிறாள் என்பது நம்பிக்கை.
கொலு வைத்து ஒன்பது நாள் பூஜை செய்து வீட்டுக்கு வரும் அனைவருக்கும் தாம்பூலம், தட்சணை, நைவேத்தியப் பொருள் கொடுக்க வேண்டும். ஒன்பது நாளும் பூஜை செய்ய இயலாதவர்கள் கடைசி மூன்று நாட்களான சப்தமி, அஷ்டமி, நவமி தினங்களில் பூஜை செய்யலாம். இதுவும் செய்ய முடியாதவர்கள் அஷ்டமி, நவமியில் பூஜை செய்து விஜய தசமியில் முடிக்கலாம்.
ஒன்பதாவது நாள் ஆயுத பூசை என அழைக்கப்பெறும் சிறப்புப் பூசை நிகழ்த்தப் பெறும். கல்விக்கான சரஸ்வதி பூஜையன்று புத்தகங்கள், இசைக்கருவிகள், தொழில் செய்யும் கருவிகள் எல்லாம் பூஜையில் வைக்க வேண்டும். மறுநாள் விஜய தசமியன்று பூஜை செய்து படிக்க வேண்டும். அவரவர் சங்கீதம் தொழில் குருவைக் கண்டு தொழுது குருதட்சணை கொடுத்து வணங்க வேண்டும்.
10வது தினமான விஜயதசமி ஆலயங்களில் வெற்றித்தினமாக கொண்டாடப்பெறுகின்றது. விஜயதசமி தினம் என்பது அம்பிகை; தவ வலிமையினால் பிரமதேவனிடம் பெற்ற வரத்தினால் அகங்காரம் கொண்டு தேவர்களையும், முனிவர்களையும் சித்திரவதை செய்து கொடுமைப்படுத்தி வந்த மகிஷாசுரனை "சண்டிகா தேவியாக" (துர்க்கா தேவி, காளிதேவி எனக் கூறுவாரும் உளர்) அவதாரம் எடுத்து சங்காரம் செய்த வெற்றித் திருநாளாக கொண்டாடப்பெறுகின்றது. துன்பத்தை - அசுரர்களை துர்க்கையானவள் வீழ்த்தி வெற்றிபெறும் நாளே விஜயதசமி (விஜயம்-வெற்றி+தசம்- 10) என்று அழைக்கப்படுகிறது.
நவராத்திரியின் சிறப்பு அம்சம் கொலு வைப்பதேயாகும். கொலு என்பது பல படிகளை கொண்ட மேடையில் பலவிதப் பொம்மைகளை நேர்த்தியாக அலங்கரித்து வைப்பதாகும்.
ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணினால் செய்யப்பட்ட பொம்மைகளைச் சக்தியின் வடிவங்களாக எண்ணி, நவராத்திரியில் வழிபடுபவர்களுக்கு அனைத்து நலங்களும் கிடைக்கும் என்பது சைவ சமயம் சார்ந்தவர்களின் நம்பிக்கை.
நவராத்திரி வந்த கதை
மகிஷாசுரன் என்ற அசுரனுக்குத் தேவர்களை அடிமைப்படுத்தும் விபரீத ஆசை ஏற்பட்டது. படைக்கும் கடவுளான பிரம்மாவை நோக்கிக் கடுந்தவம் செய்தான் மகிஷன். பிரம்மன், மனம் நெகிழ்ந்து அசுரன் முன் தோன்றினார். சாகாவரம் வேண்டும் என்று அசுரன் கேட்டதும் “படைக்கும் தொழிலில் அது சாத்தியமல்ல; பிறப்பவன் இறப்பதும், இறப்பவன் பிறப்பதும்தான் காலச் சக்கரத்தின் சுழற்சி. கேட்கும் வரத்தை மாற்றிக்கொள்” என்று பிரம்மா கூற. அறிவிலி அசுரன் கர்வத்தால் தீர யோசிக்க மறந்தான்.
“தேவர்களை வென்றுவிட்டால் எல்லோரும் தனக்கு அடிமையாகி விடுவார்கள்” என்ற மமதையில் தனது சாவு ஒரு பெண்ணால்தான் ஏற்பட வேண்டும் என்று வேண்டினான். பெண் என்றால் பலவீனத்தின் சின்னம் என நினைத்த மகிஷன் சக்தியின் மகிமையை அறியவில்லை. வரம் கிடைத்தவுடன் மகிஷனின் அட்டகாசம் மூவுலகிலும் இடியென முழங்கியது. அராஜகம் தலை தூக்கியது. தர்மம் அழிந்தது. மக்கள் அவலநிலைக்கு ஆளாகித் துன்புற்றனர். ஈசனை வேண்டினர். தனது நெற்றிக்கண்ணைத் திறந்து அதிலிருந்து வெளிப்பட்ட நெருப்புப் பொறியிலிருந்து சர்வ சக்தியாம் துர்க்கையைத் தோற்றுவித்தார் பரமேஸ்வரன்.
சிம்ம வாகனத்தில் ஆயிரம் ஆயுதங்களை ஏந்தி சாமுண்டியாகப் புறப்பட்டாள் ஆதிசக்தி. ஒன்பது நாட்கள் அசுரனுடன் போரிட்டுப் பத்தாம் நாளில் எருமை வடிவிலிருந்த மகிஷனை துவம்சம் செய்தாள் பராசக்தி. அதர்மம் அழிந்ததைக் கண்டதேவர்கள் தேவிக்கு மலர் மாரி பொழிந்தனர். எல்லோருடைய பயங்களையும் போக்கி அபயம் தந்து அசுரர்களை அழித்து ஜெயத்தை அடைந்த அம்பிகை அவதரித்தது இந்த நவராத்திரி ஆரம்ப நாளில்தான். சக்தியாக தோன்றிய அம்பாள் அசுரர்களை அழித்துவிட்டு சிவனுடன் ஐக்கியமாகி சிவசக்தி சொரூபிணியாகக் காட்சி அளித்தது விஜயதசமி நாள் என்கிறது ஒரு புராணக்கதை.
தேவி மகாத்மியத்தில் இந்த நவராத்திரி விரதம் உருவான புராணக் கதை வேறு விதமாக இருக்கிறது.
சும்பன், நிசும்பன் என்ற இரு அரக்கர்களது அக்கிரம ஆட்சி தாங்காமல், மக்கள் தவித்தனர். இந்த அரக்கர்களை எப்படியாவது அழித்து, மக்களைக் காப்பாற்ற வேண்டும் என, சிவா, விஷ்ணு, பிரம்மா (மும்மூர்த்திகள்)விடம், தேவர்கள் முறையிட்டனர்.
மும்மூர்த்திகளும், மகாசக்தியைத் தோற்றுவித்து, அவளுக்குத் தங்களது சக்தியையும், ஆயுதங்களையும், வாகனங்களையும் அளித்தனர்.
தேவி, அழகிய பெண் உருவம் எடுத்து, பூலோகத்திற்கு வந்தாள். அரக்கர்களின் வேலையாட்களான சண்டன், முண்டன் என்ற இருவரும், இந்த அழகுப் பதுமையான மகாசக்தியைப் பார்த்ததும், தங்களது ராஜாக்களுக்கு ஏற்றவள் இவள் என முடிவு செய்து, தேவியிடம், தங்களது ராஜாக்களில் ஒருவரைத் திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தினர்.
அப்போது தேவி, தான் ஒரு சபதம் செய்திருப்பதாகக் கூறி, “யார் என்னை போரில் வெல்கின்றனரோ, அவர்களைத்தான் மணப்பேன்’ என்றாள்.
அதற்கு சண்டனும், முண்டனும், “தேவர்கள், அசுரர்கள் எல்லாருமே, எங்கள் ராஜாக்களுக்கு அடிமை. பெண்ணான நீ எம்மாத்திரம்? பேசாமல் எங்களுடன் வா…” என்றனர்.
அதற்கு தேவி, “தெரிந்தோ, தெரியாமலோ, சபதம் செய்து விட்டேன். நீ போய் ராஜாவிடம் சொல். அவர்கள் எப்படிச் சொல்கின்றனரோ, அப்படியே நடக்கட்டும்…” என்றாள்.
இதை சும்பன், நிசும்பன்களிடம் சொன்னதும், இருவரும் ஒவ்வொரு அசுரர்களாக அனுப்பினர். அவர்கள் எல்லாரையும் அழித்தாள் தேவி. அதில், ரக்த பீஜன் என்று ஒரு அரக்கன். இவன் கடுந்தவம் செய்து, ஒரு வரம் பெற்றிருக்கிறான். அவன் உடம்பிலிருந்து விழும் ஒவ்வொரு சொட்டு ரத்தத்திலிருந்தும், மீண்டும் ஒரு ரக்த பீஜன் தோன்றுவான்.
அவனும் ரக்த பீஜன் போலவே ஆற்றலுடன் இருப்பான். ரக்த பீஜனை தேவி அழிக்கத் துவங்கி, கீழே விழும் ஒவ்வொரு துளி ரத்தத்திலும், ஒரு ரக்த பீஜன் தோன்றினான். அதனால் உலகமே ரக்த பீஜர்களால் நிறைந்தது. உடனே தேவி, தன்னிடம் உள்ள சாமுண்டி என்ற காளியை, வாயை அகலமாகத் திறந்து, ரக்த பீஜனின் உடம்பிலிருந்து விழும் ஒவ்வொரு துளி ரத்தத்ததையும் குடிக்க வேண்டும் என்று ஆணையிட்டாள்.
சாமுண்டியும், தேவியின் கட்டளையை நிறைவேற்றினாள். கடைசியில் ரக்த பீஜன் தன் ரத்தமெல்லாம் வெளியேற சோர்ந்து, இறந்து விழுந்தான்.
இறுதியில் சும்பன், நிசும்பன்களையும் அழிக்கிறாள் தேவி.
முதல் மூன்று நாட்கள் துர்க்கா பூஜையின் போது, தேவி மலை மகளாக இருந்து இச்சா சக்தியை, அதாவது, நமக்குள் இருக்கும் கெட்ட எண்ணங்களை அழிக்கும் தீர்மானத்தைத் தருகிறாள். இரண்டாவது மூன்று நாட்கள் லட்சுமியாக இருந்து, நமக்கு க்ரியா சக்தியை, அதாவது, வேண்டிய எல்லா செல்வங்களையும் கொடுத்து, நம்மை முழு மனிதனாக ஆக்குகிறாள். மூன்றாவது மூன்று நாட்கள் சரஸ்வதியாக உருவாகி, நமக்கு ஞான சக்தியை அருளி, நாம் மோட்சம் அடையும் வழியைக் காட்டுகிறாள். பத்தாவது நாள் தசமியன்று, மோட்சத்தை அடைய வழி ஏற்பட்டதைக் கொண்டாடும் தினமான நவராத்திரி பூஜையை எல்லோரும் சேர்ந்து வழிபடுகின்றார்கள்.
நவராத்திரி கொலு
அசுரர்களை அழிக்க அம்பிகை தோன்றியதும், தேவர்கள் அனைவரும் தங்களுடைய ஆயுதங்களைத் தேவியிடம் ஒப்படைத்தனர். அம்பாளான பராசக்தி அசுரர்களுடன் சண்டையிட்ட பொழுது, தேவர்கள் பொம்மை மாதிரி நின்று கொண்டிருந்ததைக் காட்டத்தான் பொம்மை கொலு வைப்பதாக தொன்ம நம்பிக்கை ஒன்று இருக்கிறது.
முதல் படி
ஓரறிவு உயிர்களான புல், செடி, கொடி போன்ற தாவர வர்க்கங்களின் பொம்மைகள்
இரண்டாம் படி
ஈரறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகள்.
மூன்றாம் படி
மூன்றறிவு உயிர்களான கறையான், எறும்பு போன்றவற்றின் பொம்மைகள்.
நான்காம் படி
நான்கறிவு உயிர்களை விளக்கும் நண்டு,வண்டு போன்றவற்றின் பொம்மைகள்.
ஐந்தாம் படி
ஐந்தறிவு உள்ள மிருகங்கள், பறவைகள் ஆகியவற்றின் பொம்மைகள்
ஆறாம் படி
ஆறறிவு மனிதர் பொம்மைகள்.
ஏழாம் படி
மனித நிலையிலிருந்து உயர்நிலையை அடைந்த சித்தர்கள், ரிஷிகள், மகரிஷிகள் பொம்மைகள்.
எட்டாம் படி
தேவர்கள், நவக்கிரக அதிபதிகள் போன்ற தெய்வங்கள், தேவதைகள் போன்றோரின் பொம்மைகள்.
ஒன்பதாம் படி
பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் அவர்களின் தேவியருடன் நடுநாயகமாக ஆதிசக்தி வைக்கவேண்டும்.
மனிதன் படிப்படியாக உயர்ந்து தெய்வ நிலையை அடைய வேண்டும் என்பதற்காகவே இப்படி கொலு அமைப்பது வழக்கம்.
நவராத்திரி வழிபாட்டு முறை
முதலாம் நாள்
சக்தித்தாயை முதல்நாளில் சாமுண்டியாகக் கருதி வழிபடவேண்டும். தெத்துப்பல் திருவாயும், முண்டமாலையும் அணிந்தவள். முண்டன் என்ற அசுரனை சம்ஹாரம் செய்த சக்தி அவள். இதனால் சாமுண்டா எனவும் அழைப்பர். இவள் மிகவும் கோபக்காரி. நீதியைக் காக்கவே இவள் கோபமாக உள்ளாள்.
நெய்வேத்தியம் - சர்க்கரைப் பொங்கல்.
இரண்டாம் நாள்
இரண்டாம் நாளில் அன்னையை வராஹி தேவியாகக் கருதி வழிபட வேண்டும். வராஹ (பன்றி) முகமும் தெத்துபற்களும் உடையவள். சூலமும் உலக்கையும் ஆயுதங்கள் ஆகும். பெரிய சக்கரத்தை தாங்கியிருப்பவள். தனது தெத்து பற்களால் பூமியைத் தூக்கியிருப்பவள். இவளுக்கு மங்கள மய நாராயணி, தண்டினி, பகளாமுகி போன்ற திருநாமங்களும் உண்டு. இவள் அன்னையின் சேனாதிபதி ஆவாள்.
நெய்வேத்தியம் - தயிர்ச்சாதம்.
மூன்றாம் நாள்
மூன்றாம் நாளில் சக்தித்தாயை இந்திராணியாக வழிபடவேண்டும். இவளை மாஹேந்தரி, சாம்ராஜ தாயினி என்றும் அழைப்பர். இவள் இந்திரனின் சக்தி ஆவாள். கிரீடம் தரித்து வஜ்ராயுதம் ஏந்தியவள். ஆயிரம் கண்ணுடையவள். யானை வாகனம் கொண்டவள். விருத்திராசுரனை அழித்தவள். தேவலோகத்தைப் பரிபாலனம் செயபவளும் இவளேயாகும். பெரிய பெரிய பதவிகளை அடைய விரும்புபவர்களுக்கு இவளின் அருட்பார்வை வேண்டும்.
நெய்வேத்தியம் - வெண்பொங்கல்.
நான்காம் நாள்
நான்காம் நாளில் வைஷ்ணவி தேவியாக வழிபடவேண்டும். சங்கு, சக்கரம், கதை, வில் ஆகியவற்றைக் கொண்டிருப்பவள். தீயவற்றை சம்ஹரிப்பவள். இவளின் வாகனம் கருடன்.
நெய்வேத்தியம் - எலுமிச்சை சாதம்.
ஐந்தாம் நாள்
ஐந்தாம் நாளில் அன்னையை மகேஸ்வரி தேவியாக வழிபட வேண்டும். அன்னை மகேஸ்வரனின் சக்தியாவாள். திரிசூலம், பிறைச்சந்திரன், பாம்பு தரித்து இடப வாகனத்தில் எழுந்தருளியிருப்பவள். அளக்கமுடியாத பெரும் சரீரம் உடையவள். சர்வ மங்களம் தருபவள். தர்மத்தின் திருவுருவம். கடின உழைப்பாளிகள் உழைப்பின் முழுப்பலனை பெற அன்னையின் அருள் அவசியம் வேண்டும்.
நெய்வேத்தியம் - புளியோதரை.
ஆறாம் நாள்
ஆறாம் நாளில் அன்னையை கவுமாரி தேவியாக வழிபடவேண்டும். மயில் வாகனமும் சேவல் கொடியும் உடையவள். தேவசேனாதிபதியான முருகனின் வீரத்திற்கு ஆதாரமானவள். ஓங்கார சொரூபமானவள். சகல பாவங்களையும் விலக்கிடுபவள். வீரத்தைத் தருபவள்.
நெய்வேத்தியம் - தேங்காய்ச்சாதம்.
ஏழாம் நாள்
ஏழாம் நாளில் அன்னையை மகாலட்சுமியாக வழிபடவேண்டும். கையில் ஜெபமாலை, கோடரி, கதை, அம்பு வில், கத்தி, கேடயம், சூலம், பாசம், தண்டாயுதம், சக்தி ஆயுதம், வஜ்ராயுதம், சங்கு, சக்கரம், மணி, மதுக்கலயம், தாமரை, கமண்டலம் ஆகியவற்றைக் கொண்டிருப்பவள். விஷ்ணு பத்தினியாவாள். பவளம் போன்ற சிவந்த நிறத்தையுடையவள். தாமரை ஆசனத்தில் அமர்ந்து அனைத்துச் செல்வங்களையும் தருபவள்.
நெய்வேத்தியம் - கற்கண்டுச் சாதம்.
எட்டாம் நாள்
எட்டாம் நாளில் அன்னையை நரசிம்ஹி ஆக வழிபடவேண்டும். மனித உடலும், சிம்ம தலையும் உடையவள். கூரிய நகங்களுடன் சங்கு, சக்கர தாரிணியாக சிம்ம வாகனத்தில் காட்சி தருபவள். சத்ருக்கள் தொல்லையில் இருந்து விடுபட அன்னையின் அருள்வேண்டும்.
நெய்வேத்தியம் - சர்க்கரைப் பொங்கல்.
ஒன்பதாம் நாள்
ஒன்பதாம் நாளில் அன்னையை ப்ராஹ்மி ஆக வழிபடவேண்டும். அன்ன வாகனத்தில் இருப்பவள். வாக்கிற்கு அதிபதியாவாள். ஞானசொரூபமானவள். கல்விச்செல்வம் பெற அன்னையின் அருள் அவசியமாகும்.
நெய்வேத்தியம் - அக்கர வடசல், சுண்டல்
நவராத்திரி நாட்களில் அம்மனை வழிபட்டு அனைத்து வளங்களும் கிடைக்கப்பெற்றுச் சிறப்பாக வாழ்வோம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.