‘முருகா’ எனும் மந்திரத்தை உச்சரிப்பதால் கிடைக்கும் பலனைப் பற்றி விளக்கும் கதை இது.
ஒரு மன்னன் வேட்டையாடினான். விலங்கின் மீது விடுத்த கணை குறி தவறி ஒரு அந்தண முனிவரைக் கொன்றுவிட்டது. அதனால் பிரம்ம அத்தி தொடரப் பெற்ற மன்னன் பெருந்துயரடைந்தான். இடர்களையும் சாதனத்தை நாடிக் கங்கைக் கரைக்கு வந்தான்.
கங்காநதி ஓரத்தில் ஒரு மாதவ முனிவர் சிறந்த தவத்தில் இருந்தார். அரசன் அவரிடம் போனான்.
அரசன் வந்த சமயத்தில் ஆசிரமத்தில் அருந்தவர் இல்லை. மாதவருடைய மைந்தன் இருந்தான். அச்சிறுவன் அரசனை வரவேற்று, "வேந்தே! எங்கு வந்தாய்? உனக்கு என்ன வேண்டும்?" என்று வினாவினான்.
“குழந்தாய், உன் பிதா எங்கே?”
“அரசே! அவர் வெளியே சென்றிருக்கின்றார். நின் மனதில் என்ன குறை? உன் வாட்டத்திற்குரிய காரணத்தைக்கூறு”
“குழந்தாய்! நான் அபுத்தி பூர்வமாகக் ஒரு முனிவரைக் கொன்றுவிட்டேன். பிரமகத்தி என்னைத் தொடர்ந்து வருத்துகின்றது. அது தீரும் வழிமுறையைக் கேட்க வந்தேன்"
“இவ்வளவுதானே? இதற்கென்ன பெரிய ஆலோசனை? நான் சொன்னபடி கேள். பிரமகத்தி தீரும். கங்கையில் நீராடு; வடதிசை நோக்கி நில்; முருகவேளை மனக்கண்ணால் கண்டு, காதலாகிக் கசிந்து, கண்ணீர் மல்கி, மூன்று முறை 'முருகா' 'முருகா' முருகா' என்று ஓது. பிரமகத்தி நீங்கும்" என்று அம்மைந்தன் கூறினான்.
மன்னவன் அதுபடி ஓதி பிரமகத்தி நீங்கப் பெற்றான். முனி மகனை வணங்கி மகிழ்ச்சியுடன் சென்றான்.
பின்னர் முனிவர் பெருமான் வந்தார். தேரின் சக்கரங்கள் சுவட்டினைக் கண்டார்.
"மகனே! இங்கே யார் வந்தது?"
"அப்பா! இந்நாட்டினை ஆளும் வேந்தர் வந்தார்".
"கண்ணே, எதன் பொருட்டு வந்தார்?"
"தந்தையே! பிரமகத்தி தீர வழி கேட்டார். அதற்கு நான் நீராடி உள்ளம் உருகி மும்முறை முருக மந்திரத்தைக் கூறுமாறு உபதேசித்தேன். அவ்வண்ணமே செய்து அனுகூலம் அடைந்து அவர் அகன்றார்"
அதனைக் கேட்ட முனிவருக்கு விழி சிவந்தது. "மூடனே! நீ என் மகனா? என்ன காரியஞ் செய்தாய்? ஏன் உனக்கு இந்த மந்த புத்தி? உனக்கு ஒரு சிறிதும் முருக பக்தியில்லையே. பெருந்தவறு செய்துவிட்டாயே" என்று கூறிக் கடிந்தார்.
அம்மைந்தன் நடுநடுங்கினான். தந்தையின் தாள் மலர் மீது பலகாலும் வீழ்ந்து பணிந்தான்.
"அப்பா! நான் என்ன பிழை செய்தேன்? நம் குலதெய்வம் குமாரக் கடவுளின் திருமந்திரத்தைத்தானே ஓதச் சொன்னேன்?"
"மகனே, ஒரு முறை 'முருகா' என்றால் கோடி பிரமகத்திகள் தீருமே? நீ மூன்று முறை சொல்லச் சொன்னாயே. நீ முருக நாமத்தின் பெருமையையும் நன்மையையும் நன்கு உணரவில்லை. மூன்று முறை சொன்னால்தான் பிரமகத்தி நீங்குமா? அம்மந்திரத்தின் ஆற்றலையறிந்தாயில்லை. இதனால் நீ வேடர் குலத்தில் பிறப்பாயாக" என மகனை அவர் சபித்தார்.
மகன் பதைபதைத்துப் பணிந்து பிழை பொறுக்குமாறு வேண்டினான்.
முனிவர் கருணைபுரிந்து, "மகனே! அஞ்சற்க. நீ இதே கங்கா தீரத்தில் வேடர்கட்கு அரசனாக பிறப்பாய். முருகன் நாமங்களில் ஒன்றாகிய 'குகன்' என்ற பெயரைத் தாங்கி, அன்புருவாக நிற்பாய். ஸ்ரீராமருக்கு நண்பனாய் வாழ்ந்து முடிவில் முருகபதம் பெருவாய்" என்று அருள் புரிந்தார்.
அம்முனிவர் மகன் குகனாகப் பிறந்தான். உத்தமனாக நின்று ஸ்ரீ ராமபிரானுடைய நட்பைப் பெற்று, இறுதியில் கந்தலோகம் சென்றடைந்தான்.
'முருகா' என்ற திருமந்திரம் சகல வினைகளையும் போக்கும்.