கேதார கௌரி விரதம்
கார்த்திகை பவுர்ணமி நாளன்று அம்மை மற்றும் அப்பனை நினைத்து விரதமுறை மேற்கொள்ளும் இவ்விரத முறை உமாகமேஸ்வர விரதம் என்று அழைக்கப்படுகிறது. கார்த்திகை பவுர்ணமி அன்று கிரிவலம் வருவது மிகவும் சிறப்புக்குரியது. கார்த்திகையில் கிரிவலம் வரும்பொழுது மழை பெய்ய நேரிட்டால், அந்த மழையில் நனைந்தால் தேவர்களின் ஆசி கிட்டும் என்பது தொன்ம நம்பிக்கை.
கார்த்திகை ஞாயிறு விரதம்
கார்த்திகை முதல் ஞாயிறு அன்று தொடங்கப்பட்டுத் தொடர்ந்து பன்னிரெண்டு வாரங்கள் கடைப்பிடிக்கப்படுகிறது. நவகிரகங்கள் இவ்விரதத்தை மேற்கொண்டே வரம் பெற்றனர். எனவே இவ்விரதமுறையை கடைப்பிடிப்பதால் நவகிரகப் பாதிப்புகள் நீங்கி இறைவனின் பேரருள் கிடைக்கும். கார்த்திகை ஞாயிறு மிகவும் போற்றப்படுகிறது. எம பயம் நீங்கும்.
கார்த்திகை சோமவாரம்
கார்த்திகை மாதம் திருக்குற்றாலத்தில் நீராடி, குற்றாலநாதரையும், அன்னை குழல்வாய்மொழி அம்மையையும் வழிபாடு செய்தால் பாவங்கள் அழியும். தீபத் திருநாளன்று கிழக்கு நோக்கி தீபம் ஏற்றினால் கஷ்டங்கள் விலகும். மேற்கு திசை நோக்கி ஏற்றினால் கடன் தொல்லை நீங்கும்.
கார்த்திகை விரதம்
கார்த்திகை விரதம் என்பது முருகப்பெருமானைக் குறித்து கார்த்திகை மாத கார்த்திகை நட்சத்திரம் தொடங்கி, ஒவ்வொரு மாதமும் கார்த்திகை நட்சத்திரத்திலும் கடைப்பிடிக்கப்படுகிறது. இவ்விரதம் தொடர்ந்து 12 ஆண்டுகள் கடைப்பிடிக்கப்படுகிறது. இவ்விரத முறையில் பகலில் உணவு உண்ணாமல் இறைவழிபாடு செய்து விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. இவ்விரத முறையை மேற்கொள்வதால் வாழ்விற்குத் தேவையான பதினாறு செல்வங்கள் கிடைக்கும். தொடர்ந்து 12 ஆண்டுகள் இவ்விரத முறையை பின்பற்றுவதால் வாழ்வில் பெரும்பேறும், முக்தியும் கிடைக்கும்.
முருகனுக்கு அபிஷேகம்
கார்த்திகைகளில் முருகப் பெருமானுக்கு சந்தனம் அபிஷேகம் செய்து வழிபட்டால் குழந்தைப் பேறு கிடைக்கும். இவ்விரத முறையினை மேற்கொள்வதால் சிறந்த வாழ்க்கைத் துணை, புத்திசாலியான புத்திரர்கள் கிடைப்பர். வாழ்வின் எல்லாப் பேறுகளும் கிடைக்கும். எடுத்த நல்ல காரியங்கள் வெற்றியாகும்.
விநாயகர் சஷ்டி விரதம்
இவ்விரதமுறை விநாயகப் பெருமானை நினைத்து மேற்கொள்ளப்படுகிறது. இவ்விரதம் கார்த்திகை மாதம் தேய்பிறை பிரதமை முதல் மார்கழி மாதம் வளர்பிறை சஷ்டி வரை மொத்தம் 21 நாட்கள் கடைப்பிடிக்கப்படுகிறது. இவ்விரத முறையில் 21 இழைகளால் ஆன நோன்பு கயிற்றினை ஆண்கள் வலது கையிலும், பெண்கள் இடது கையிலும் கட்டிக் கொள்கின்றனர். முதல் 20 நாளும் ஒரு பொழுது மட்டும் சாப்பிட்டும், கடைசி நாள் முழுமையாக உபவாசம் மேற்கொள்கின்றனர்.
ரதி மன்மதன் வழிபாடு
கார்த்திகை மாதம் பஞ்சமி தினமானது நாக தோஷ நிவர்த்தி செய்ய உகந்த நாளாகும். கார்த்திகை மாதம் அனங்க திரயோதசி தினத்தன்று ரதி- மன்மதனை வழிபட்டால் திருமணம் விரைவில் நடக்கும். ப்ரமோதினி ஏகாதசி கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசி ப்ரமோதினி என வழங்கப்படுகிறது. இது கைசிக ஏகாதசி என்றும் அழைக்கப்படுகிறது. இவ்விரதமுறையைப் பின்பற்றுவதால் உயர்ந்த நன்மைகள் கிடைக்கும். பூலோகத்தில் சொர்க்க வாழ்வு கிடைக்கும்.
லட்சுமி பூஜை
கார்த்திகை மாதத்தில் சிவலிங்கத்தை நெய்யினால் அபிஷேகம் செய்து வில்வம் மற்றும் மரிக்கொழுந்தால் அர்ச்சனை செய்து வழிபட்டால் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். கார்த்திகை மாதம் லட்சுமி ப்ரபோதன தினத்தன்று மாலை லட்சுமி பூஜை செய்வதன் மூலம் இழந்த செல்வத்தை மீண்டும் பெறலாம்.