நாம் குடியிருக்கும் வீட்டில் எப்போதும் ஒரு தேவதை நம்மைச் சுற்றி இருந்துகொண்டே இருக்கும். நாம் எதைச் சொன்னாலும் ‘ததாஸ்து’ என்று திருப்பிச் சொல்வதே அந்தத் தேவதையின் பணி. அதாவது, ததாஸ்து என்றால் ‘அப்படியே ஆகட்டும்’ என்று அந்த தேவதை சொல்லும். அதனால்தான், நாம் எதைப் பேசினாலும் மங்களகரமானதாக இருக்க வேண்டும், நாம் சொல்வது நல்வாக்காக இருக்க வேண்டும் என்கின்றனர்.
உதாரணத்திற்கு, பக்கத்து வீட்டுக்காரர் ஏதோ ஒரு பொருளை நம்மிடம் கடனாகக் கேட்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவ்வாறு கேட்கும்போது ‘என்னிடம் சுத்தமாக இல்லை’ என்று சொல்லக்கூடாது. அப்படிச் சொல்லும்போது, ‘அப்படியே ஆகட்டும்’ என்று அந்த தேவதை ஆசிர்வதிப்பதால் அப்படியே நடந்துவிடும். நமக்குத் தருவதற்கு விருப்பம் இல்லையென்றாலும், உண்மையிலேயே இல்லை என்றாலும் அதனை, “எங்களிடம் நிறைய இருந்தது, தற்போது திரும்பவும் வாங்கி வரவேண்டும்” என்று மாற்றிச் சொல்ல வேண்டும்.
பணமாகக் கடன் கேட்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள், “உங்களுக்கு தரும் அளவிற்கு என்னிடம் பணம் மிகுதியாக வந்து சேர வேண்டும்” என்று சொல்ல வேண்டும். நம் வீட்டினில் குறைவில்லாத செல்வம் வந்து சேரும். அதனை விடுத்து, இல்லை என்று சொல்வதால் இருப்பதும் இல்லாமல் போய்விடும். எப்போதும் மங்களகரமான வார்த்தைகளேயேப் பேசவேண்டும். அவ்வாறான வார்த்தைகளால் உண்டாகும் அதிர்வலைகள் நம் குடும்பத்தை மகிழ்ச்சியாய் வைத்திருக்கும்.