மயானக் கொள்ளைத் திருவிழா சிவராத்திரியை அடுத்த மாசி மாத அமாவாசையன்று தமிழகத்திலுள்ள அங்காள பரமேசுவரி ஆலயங்களில் கொண்டாடப்படுகின்றது. இவற்றில் மேல்மலையனூர் கோவிலில் கொண்டாடப்படும் மயானக் கொள்ளை முதன்மையானதாக இருக்கிறது. மீனவர்கள் வணங்கும் தெய்வமாக அங்காள பரமேசுவரி அம்மன் விளங்குவதால் இக்கொண்டாட்டங்கள் முதன்மையாக மீனவ சமுதாயங்களில் பரவலாகக் கொண்டாடப்படுகின்றது.
துவக்கத்தில் படைப்புக் கடவுள் நான்முகனுக்கு ஐந்து தலைகள் இருந்தன. பார்வதிதேவி, பிரம்மனின் ஐந்து தலையைப் பார்த்து, சிவன் என்று நினைத்து வணங்கினார். இதனைக் கண்டு நகைத்ததால் சினம் கொண்ட பார்வதி சிவனிடம் முறையிட, பிரம்மாவின் ஒரு தலையை சிவன் கொய்துவிட்டார். கொய்யப்பட்ட பிரம்மனின் தலை சிவனின் கையில் ஒட்டிக்கொண்டது. அதையே பிச்சைப் பாத்திரமாக ஏந்தி, ஈசன் பிச்சையெடுக்கும் நிலை ஏற்பட்டது. போடப்படும் உணவையெல்லாம் கபாலமே விழுங்கிவிட்டதால், உலகுக்கேப் படியளக்கும் ஈசனுக்கே உணவு கிட்டவில்லை.
பிரம்மாவின் தலை கொய்யப்பட்டதற்கு பார்வதியேக் காரணமாகக் கருதிய சரஸ்வதிதேவி, பார்வதியை கொடிய உருவத்துடன் நீ இடம் இல்லாமல் அலைந்து புற்றையே வீடாக கொண்டு வாழ்வாய்! எனச் சாபமிட்டாள். அதன்படி பார்வதி பூவுலகில் பல இடங்களுக்குச் சென்று முடிவில் மலையரசனுக்கு உரிமையான ஓர் நந்தவனத்தில் தவம் இருக்கத் தொடங்கினாள். அங்கு காவலுக்கு இருந்த மீனவக் காவலாளி தடுத்தும் புற்றால் தன்னை மூடிக் கொண்டு அங்காள பரமேஸ்வரியாகக் கோவில் கொண்டாள். மலையரசன் புற்றை கலைக்க முற்பட, அவன் தன் ஆற்றலை இழந்தான். இதனால் வந்திருப்பது அம்மையே என அனைவரும் அறிந்தனர். மலையனூர் என அறியப்பட்ட இவ்விடத்தில் இன்றும் மீனவ சமூகத்தினரே சேவை செய்கின்றனர்.
இந்தக் கோவிலிற்கு சிவன் வர, அங்காள பரமேஸ்வரி சிவன் கையிலிருந்த கபாலத்தில் சுவையான உணவை இட்டாள். எல்லாவற்றையும் கபாலம் விழுங்கிவிட, மகாலட்சுமியின் பரிந்துரைப்படி அம்மன் மூன்றாவது கவளத்தைக் கைதவறியதுபோலக் கீழேப் போட்டாள். உணவின் சுவையால் கவரப்பட்ட கபாலம், அதை உண்ண சிவனின் கரத்தைவிட்டு நீங்கி கீழேப் போனது. அவ்வேளையில் பிரம்ம கபாலம் மீண்டும் ஈசனின் கைகளை அடைய முடியாதபடி அதைத் தன் காலால் மிதித்து பூமியில் ஆழ்த்திவிட்டாள். இந்த நாளே மயானக் கொள்ளைத் திருவிழாவாகக் கொண்டாடப்படுகின்றது.