பண்டையக் காலத்தில் இருந்த மன்னர்கள் அணிந்த ஆபரணங்கள், ஆலயத்தில் இருந்த தெய்வங்களுக்கு அணிவிக்கப்பட்ட ஆபரணங்கள் ஆகியவை, “திருவாபரணங்கள்” என்று சொல்லப்படுகின்றன. இத்திருவாபரணங்கள் குறித்தச் செய்திகள் பல கல்வெட்டுக்களில் இடம் பெற்றிருக்கின்றன. மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் பதிப்புத் துறை 1987 ஆம் ஆண்டில் வெளியிட்ட, சி. கோவிந்தராசன் அவர்கள் எழுதிய ‘கல்வெட்டுக் கலைச்சொல் அகரமுதலி (கி.பி.7 முதல் 12 ஆம் நுாற்றாண்டு வரை)’ எனும் நூலில் இடம் பெற்றிருக்கும் திருவாபரணங்கள் இங்கு அகர வரிசைப்படி, தொகுத்துத் தரப்பட்டிருக்கின்றன. அவை;
1. அரக்கு. பிஞ்சு, பொத்தி - (பொ) முதல் இராசராசன் தான் எழுப்பிய, தஞ்சை இராசராசேசுவரத்தில் செய்தமைத்த திருமேனிகட்கு அளித்த பொன், மணி, அணிகலன்களில் அமைக்கப்பட்ட பகுதிகள்.
அ. அரக்கு - பொன்னாலான அணிகலன்களில், உள்ளீடாக அமைக்கப் பெறும் வலிய மெழுகு. செவ்வரக்கு.
ஆ. பிஞ்சு - பொன் மணித்தொங்கல். பிசிர் என்றும் கூறுவர்.
இ. பொத்தி - அணிகலன்களில் ஒப்பனை வேலைப்பாட்டில் ஆங்காங்கே மேற்பொருத்தப்படும் பொற்றகடுகள். பொன்ரேக்குத் தகடுகள். உம்முசங்கள்.
- இவை மூன்றையும் அணிகலன்களை எடையிடும் போது தனித்து எடையிட்டு, அரக்கு நீக்கி, பிஞ்சும், பொத்தியும் எடையிட்டுக் கொள்வதால் இவை இரண்டும் பொன்னால் அமைந்தவை என்பது புலனாகின்றது.
“திருப்பட்டிகை ஒன்று - பொன் பதின் கழஞ்சே முக்காலே குன்றியும், அரக்கு நிறை ஒன்பதின் கழஞ்சே ஆறு மஞ்சாடியும், தடவிக் கட்டின பளிங்கு பதினைஞ்சினால் நிறை கழஞ்சே மூன்று மஞ்சாடியும், பொத்தி மூன்றினால் நிறை நாலு மஞ்சாடியும் குன்றியும்” “அரக்கும் பிஞ்சும் உட்பட - நிறை எடுத்துக் கல்லில் வெட்டின” (தெ.கல்.தொ.2:2, கல்.59.) (க.க.சொ.அகரமுதலி, ப.23.)
கள்ளிப்பூ - (கலை) கள்ளிப்பூவின் வடிவில் அமைக்கப் பெறும் பொற் பூவணி.
“படுகண் ஐஞ்சும் கள்ளிப் பூ நாலும் - பாசமாலை”
2. ஐந்தலை மணி - (சம) ஐந்து மணிகளமைந்த கொத்தாக உலோகத்தால் செய்யப்பட்டு கோயில்களில் தொங்குமாறு அமைக்கப் பெறும் மணிக்கொத்து. (க.க.சொ.அகரமுதலி, ப.86.)
3. கதலிகை நங்கணை - (கலை) இடைப்பட்டிகையிலும், தோள்களிலும் அணியப் பெறுவதற்குரியதாகக் குஞ்சம் போன்ற அமைப்பில் இரத்தினங்கள் வைத்திழைக்கப்பட்டு முத்துக்களால் அரும்பிடப் பெறும் அணிகலன். (க.க.சொ.அகரமுதலி, ப.105.)
4. களாவம் - (கலை) அடுக்குத் தொங்கலாகவும், பல கோர்வை உள்ளதாகவும், பொன்னில் இரத்தினங்கள் வைத்திழைக்கப்பட்டதாகவும் அமைந்த இடையணி. மேகலையில் வேலைப்பாடமைந்த வகையாகும். விரித்த மயிற்றோகையின் வரிசையைப் போன்று தொங்கல் வரிகளாகவும், பின்னல்களாகவும் அமைக்கப் பெறுதலின் களாவம் என்னும் சிறப்புப் பெயரினை இவ்விடையணி பெறுவதாயிற்று. (க.க.சொ.அகரமுதலி, ப.115.)
5. கறடிகை - (கலை) கால் காறை என்னும் அணியின் வெளிப்புறம், கரடியின் கை போன்ற தோற்றமுடன் ஒப்பனை செய்யப் பெறுதலின் அவ்வொப்பனை உறுப்பு இப்பெயர் பெற்றுள்ளது. (கறடிகை - கரடிகை)
“திருவடிக்காறை ஒன்றில்த் துண்டம் இரண்டிற் கறடிகை ஆறும்” (தெ.கல்.தொ.2 2 கல். 51.) (க.க.சொ.அகரமுதலி, ப.117.)
6. கிண்கிணி - (கலை) பொற்சதங்கை. சிறு பொற்சதங்கைகள் பொன் நாணில் வரிசையாகக் கோர்க்கப் பெற்றிருப்பது, சதங்கை மாலை எனப்படும்.
“திருப்பட்டிகை கிண்கிணி பெரும் நாணும் வாங்காய் நாணுடையவும்” (தெ.கல்.தொ.2, கல். 93.)
7. கிம்பிரி முகம் - (கலை) சோழர் கால அணிகலன்களின் முப்பாகவும், எடுப்பாகவும், தொடக்கமாகவும் பொன்னால் அமைக்கப்பெறும் யாளமுகமே கிம்பிரிமுகம் என்பதாகும். இதனை யானை முகம் என்றும் கூறுவர்.
“திருப்பட்டிகை - கிம்பிரி முகமும் உடையது.” (தஞ்சைப் பெரிய கோயில் கல்வெட்டு, தெ.கல்.தொ.2. கல்.98.) (க.க.சொ.அகரமுதலி, ப.134.)
8. கொட்பூ - (கலை) மேற்காதில் அணியப் பெறும் காதணி பூவடிவில் திருகாணியோடு செய்யப்படும் அணி. (க.க.சொ.அகரமுதலி, ப.156.)
9. கொள் பொந்நி - (கலை) கொள் பொந்நி கொள்ளுப்பொன்றி, உலோகத் திருமேனிகட்குக் காதணியாகச் சாத்தும் பொன் அணிகலன். கொள்ளுச் செடியில் பூக்கும் பூப் போன்ற வடிவில் செய்யப் பெறும் காதணிப் பொற்பூ.
“திருக்காதில் சாத்தும் கொள் பொந்நிநால்” (தெ.கல்.தொ.5, கல்.644.) (க.க.சொ.அகரமுதலி, ப.158.)
10. கைக்காறை : (கலை) கைகளில் அணியப் பெறும் பொன் வளை வகைகளுள் ஒன்று. இது பொன்னாலும், மணியாலும் வேலைப்பாடுடையதாகச் செய்யப் பெறும் அணிகலன், கைக்கு ஏற்ப அணியப் பெறுவது கைக்காறை என்றும், காலுக்கேற்ப அணியப் பெறுவது அடிக்காறை என்றும் பெயர் பெறும்.
“தக்கணமேரு விடங்கர்க்குக் குடுத்தன - ஒப்பன் திருக் கைக்காறை ஒன்று - ஒப்பன் - திருவடிக்காறை ஓரணை” (தெ.கல்.தொ.2, கல்.1.) (க.க.சொ.அகரமுதலி, ப.133.)
11. சண்பங்காறை - (கலை) சண்பகப் பூவின் வடிவிலமைக்கப்பட்ட பொற்பூக்கள் கோத்த காறை என்னும் பெயர் அமைந்த கழுத்தணிகலன். (க.க.சொ.அகரமுதலி, ப.173.)
12. ஸ்ரீசந்தம் - (கலை) மார்பணிகளுள் வடிவில் பெரியதாகவும் நகாசு வேலைப்பாட்டுடன் இரத்தினங்கள் வைத்திழைக்கப்பட்டதுமான அழகிய அணி. பெரும்பதக்கம் என்றும் பெயர் பெறும்.
“உடையார் பண்டாரத்துப் பொன் கொ செய்த ஸ்ரீசந்தம் ஒன்று. (தெ.கல்.தொ.2,கல்.3.) (க.க.சொ.அகரமுதலி, ப.173.)
13. சப்தஸரி - (கலை) ஏழு வரிசைக் கோவையாகவும் கோவைக்கொரு பதக்கமாகவும் ஒன்றன் கீழ் ஒன்றாகத் தொங்கும் பாங்கிலும் அமைந்த பதக்க மாலை.
14. சப்படி - (கலை) நவரத்தினங்களில் வைர வகையுள் ஒன்று. தட்டையான வடிவிலமைந்த வைரம்.
“பொன்னின் நாணிற் கோத்த மாணிக்கத்தின் திரு ஒன்றிற் கட்டின வயிரம் சப்படியும் உருளையும்.” (தெ.கல்.தொ.2:2, கல்.42.)
15. சப்பத்தி - (பொ) முத்து வகையுள் ஒன்று. ஒரு புறம் அகன்று, மறுபுறம் குளிந்த வடிவில் சிறிது தட்டையாக அமைந்த முத்து.
“வடம் ஒன்றிற் கோத்த முத்து கறடும் இரட்டையும் சப்பத்தியும்.” (தெ.கல்.தொ.2 2, கல்.43.) (க.க.சொ.அகரமுதலி, ப.177.)
16. சரடு - (கலை) செப்புக் கம்பியால் பின்னப்படும் கொடி. பொன்னணிகளின் திண்மைக்காக உள்ளீட்டில் பொருத்தப்படுவதற்கு செப்புக் கம்பியால் பின்னலிட்டுச் செய்யப் பெறும் கொடி. இது அணிகலன்களின் அமைப்புக்கேற்ப தட்டைக் கொடியாகவும், திரட்சிக் கொடியாகவும் அமைக்கப்பெறுவது கம்மத் தொழில் நிலையாகும்.
“திருவடிக்காறை - அரக்கு உட்பட செப்பாணிகளுங் சரடும் நீக்கி நிறை - ” “கோத்த சரடு நீக்கி” (தெ.கல்.தொ.2:2, கல்.51.) (க.க.சொ.அகரமுதலி, ப.182.)
17. சவி - மூன்று வடம் - (கலை) இடுப்பிலணியும் பட்டிகை போன்ற அணிகலன்களின் முகப்புப் பகுதியில் வளைவாகவும், வரிசையாகவும் தொங்கும் பாங்கில் அழகுடன் பொற்பூக்களால் அமைக்கப்படும் ஒப்பனையாகும். சவி - புடைப்புத் தோற்றமாகச் செய்யும் அணிகலவுறுப்பு.
“இடைப்பட்டிகை ஒன்றில் சவி - மூன்று வடம் உடையன எட்டும்”. (தெ.கல்.தொ.2:2,கல்.51.) (க.க.சொ.அகரமுதலி, ப.183.)
18. சன்னவடம் - (கலை) மெல்லிய சரடுகளால் திரிக்கப்பட்ட நீண்ட பொன்மாலை. சன்னம் - பொற்கொல்லரின் தொழில் வழி குறிக்கும் சொல். மெல்லிய என்றும், பொடி என்றும் கூறுவர்.
“சன்னம் வைத்து ஊதினான்” - வழக்கு. (க.க.சொ.அகரமுதலி, ப.183.)
19. சாத்தும் குதம்மை - (கலை) கோயில்களில் திருமேனிகளின் காதிற்குப் பொலிவாக அணிவிக்கும் வேலைப்பாடமைந்த பொற்றகடு. குதம்பை - காதணி)
“சாத்தும் குதம்பையொன்று பொன் இரு கழஞ்சு.” (தெ.கல்.தொ.3 1, கல்.521.) (க.க.சொ.அகரமுதலி, ப.185.)
20. சுட்டி - (கலை) புருவ மத்திக்கு மேல் தொங்கலாக நெற்றியில் அணிவிக்கும் பொன்னாலும், இரத்தினங்களாலும் செய்யப்பட்ட அசையும் மணிகளோடு கூடிய சிறு பதக்கம். (க.க.சொ.அகரமுதலி, ப.198.)
21. சுரி - (கலை) பொன்னணிகளில் அமைக்கப் பெறும் பகுதி. திருகாணி, பொன்னாலான வளையல், சரடு ஆகியவற்றின் மூட்டு வாய்த் திருகாணி. உருத்திராக்க மணிகளுக்குப் பக்கமாக இணைக்கும் வில்லைத்தகடு.
“உருத்திராட்ஷத் தாழ்வடம் ஒன்றிற் பொன்னின் சுரி ஐம்பத்தாறும்” (தெ.கல்.தொ.2:1. கல்.3.)
“தாழ்வடம் ஒன்றில் பொன்னின் சுரி ஐம்பத்தாறும் உருத்திராட்ஷம் ஐம்பத்தாறும்”
“உருத்திராஷச்சுரி பொன்னின் நுாலிற் கோத்த உருத்திராட்ஷம் ஒன்றும்” (தெ.கல்.தொ.2:2. கல்.38.) (க.க.சொ.அகரமுதலி, ப.200.)
22. சோனகக் சிடுக்கின் கூடு - (கலை) சோனகர் எனப்படும் அராபிய நாட்டு குதிரை வணிகர் வழியே தமிழக மக்களின் வழக்கில் இடம் பெற்ற காதணி வகைகளுள் ஒன்று. சோனகர் சிடுக்கு என்றும் பெயர் பெறும். அச்சோனகச் சிடுக்கே இங்கு சோனகச் சிடுக்கின் கூடு என்று குறிக்கப்பட்டுள்ளது.
(சிடுக்கு - கடுக்கன். கூட - கூடு போன்ற அமைப்புடைய கடுக்கண்.)
“சோனகச் சிடுக்கின் கூடு ஒன்றிற் கட்டின மாணிக்கம் ஒன்பதும், மரகதம் ஒன்பதும் உட்பட நிறை” (முதல் இராசராசன், தெ.கல்.தொ.2.கல்.93.) (க.க.சொ.அகரமுதலி, ப.211.)
23. தகட்டுப்பொன் - (கலை) தகடாக வடிக்கப்பட்ட பொன். இதனைப் பொன் ரேக்கு என்பர். பொன்னணிகளில் ஒப்பனை மிகுமாறும் தோற்றப் பொலிவூட்டவும் வேண்டிய வடிவில் பொருத்தப் பெறும் பொற்றகடு.
“முடி ஒன்றில் - கட்டின தகட்டுப் பொன் முக்கழஞ்சும்” (தெ.கல்.தொ.5 கல். 521.) (க.க.சொ.அகரமுதலி, ப.246.)
24. தாமரைச் செயல் பொற்பூ - (கலை) தாமரை மலரின் வடிவமாகப் பொன்னால் செய்யப்பட்ட பூ. முதல் இராசராசன் தொமெழுப்பிய தஞ்சை இராசஇராசேசுவர பரமசுவாமிக்குச் செய்தளித்த பொன்னணிகளுள் ஒன்று.
“ஸ்ரீ ராஜராஜதேவர் ஸ்ரீராஜராஜீஸ்வரம் உடையார்க்குக் குடுத்த தாமரைச்செயல் பொற்பூ ஒன்று” (தெ.கல்.தொ.2. கல்.1.) (க.க.சொ.அகரமுதலி, ப.237.)
25. தாலி - (கலை) சரட்டில் கோக்கப் பெறும் மங்கலத் தொங்கல் பொன் மாலையில் தொங்கும் கோக்கப் பெறும் பதக்கம்.
“திருமாலையில் தாலி நாற்பத்தொன்றும்” (தெ.கல்.தொ.23, கல். 46.)
“மாணிக்கத்தின் தாலி ஒன்றிற் கட்டின வயிரம் எட்டும்” (தெ.கல்.தொ.2, கல். 93.) (க.க.சொ.அகரமுதலி, ப.238.)
26. தாலிமணி வடம் - (கலை) இரத்தினங்கள் வைத்து இழைக்கப்பட்ட மங்கல மாலை. தொங்கல் இரத்தின மாலை.
“உமா பரமேஸ்வரியார்க்குக் குடுத்தன - தாலி மணிவடம் ஒன்று. பொன் கழஞ்சேய் முக்காலே நாலு மஞ்சாடியும் குன்றி” (தெ.கல்.தொ.2:2. கல். 46.) (க.க.சொ.அகரமுதலி, ப.236.)
27. தாழ்வடம் - (கலை) தொங்கலாக கழுத்தில் அணியப் பெறும் பதக்கத்தோடு கூடிய முத்துமாலை. பொன் மணிகளால் ஆன மணிவடமும் அமையும்.
“தாழ்வடம் ஒன்றிற் கோத்த புஞ்சை முத்து எண்ணுாற்றெண்பத்தேழினால்” (தெ.கல்.தொ.2: 2 கல். 44.) (க.க.சொ.அகரமுதலி, ப.239.)
28. தாழக்கூட்டுக்கம்பி - (கலை) திருமேனிகட்குச் சாத்தும் காதணி. இவ்வணகலன் வளைய வடிவில் வேலைப்பாடமைந்ததாக இரண்டு பகதிகளாகச் செய்யப் பெற்று ஆணியிட்டுப் பொருத்துவதாகும்.
“சாத்தும் தாழக் கூட்டுக்கம்பி ஓரணையினால் துண்டமிரண்டும் ஆணி இரண்டும் உட்பட” (தெ.கல்.தொ.5.கல். 521.) (க.க.சொ.அகரமுதலி, ப.239.)
29. தாளிம்பம் - (கலை) திருமேனிகட்கு அணியும் அணிகலன்களுள் வயிரங்கள் வைத்திழைக்கப்பட்ட இடைக் கட்டுப்பாட்டை, திரிசரம் ஆகியவற்றின் கீழ் தொங்கல் பகுதி.
“இடைக்கட்டு, இரண்டிலுந் தடவிக் கட்டின பளிங்கு எட்டும் பொத்தி எட்டும் ஏழொன்றாக அடுத்து விளக்கின தாளிம்பம் இரண்டும்.” (தெ.கல்.தொ.2:2.கல். 34.)
“தாளிம்பம் இரண்டும் படுகண் ஒன்றும் கோக்குவாய் ஒன்றும் தாளிம்பத்து ஈக்காவாணியும் அரக்கும் உட்பட” (தெ.கல்.தொ.2:2.கல். 51.)
30. தானைத் திருப்பட்டிகை - (கலை) இடை ஆடை மேல் அணியப் பெறும் பொன்னாலும். இரத்தினங்களாலும், முத்துச் சரங்களாலும் ஒப்பனை செய்யப்பட்ட மேகலை.
“உடையார் ஸ்ரீ ராஜராஜீஸ்வரம் உடையார்க்குச் செய்த தானைத் திருப்பட்டிகை ஒன்று” (தெ.கல்.தொ.2.கல். 59.) (க.க.சொ.அகரமுதலி, ப.240.)
31. திரங்கல் - (கலை) நவரத்தினங்களுள் முத்துக்குரிய குற்றங்களுள் ஒன்றாகும். மேற்புறம் சுருண்டிருப்பதைப் போன்ற தோற்றமாக அமைந்த முத்து. (க.க.சொ.அகரமுதலி, ப.241.)
32. திரள்மணி வடம் - (கலை) திரட்சியான வடிவில் இரத்தினங்கள் வைத்திழைக்கப்பட்ட நெடிய மாலை. உருத்திராக்க மாலை.
“இரண்டு ஸ்ரீ அஸ்தம் உடையாராய் ஆடுகின்றாராகக் கனமாக எழுந்தருளுவித்த ஸ்ரீ பைரவ மூர்த்திகள் ஒருவர். இவர்க்கே இவன் குடுத்த திரள்மணிவடம் ஒன்று பொன் நாலு மஞ்சாடி.”
“நம்பி ஆரூரானார்க்கு குடுத்தன - திரள்மணி வடம் ஒன்று” (முதல் இராசராசன், தெ.கல்.தொ.2:2. கல். 43, 32.) (க.க.சொ.அகரமுதலி, ப.242.)
33. திரிசரம் - (கலை) மூன்ற வரிசைக் கோவையாகவும், இரத்தினங்கள் வைத்திழைக்கப்பட்ட ஒப்பனை உடையதாகவும் அமைந்த பொன் மாலை. இம்மாலை முத்துக்களாலும் அமைக்கப் பெறும்.
“திரிசரம் ஒன்றில் கோத்த முத்து தொண்ணுாற்று ஒன்பதும்” (தெ.கல்.தொ.2:2. கல். 34.) (க.க.சொ.அகரமுதலி, ப.242.)
34. திருப்பள்ளித் தொங்கல் மகுடம் - (கலை) முகப்பில் பொன் நகாசுத் தொங்கல்களால் அலங்கரிக்கப்பட்ட திருமுடி போன்ற வடிவிலமைந்த மகுடம். முதல் இராசராசன் தஞ்சை ஸ்ரீராசராசேச்சுரமுடையார்க்கு அளித்த சின்னங்களுள் சிறந்த வேலைப்பாடமைந்த விருதுச் சின்னம் இம்மகுடங்களேயாகும்.
35. திருப்பொற்பூ - (கலை) பொன்னாலும், இரத்தினங்களாலும் தாமரைப்பூ போன்றும், செவ்வந்திப்பூ போன்றும் அழகாக செய்யப் பெறும் பொற்பூ. (தெ.கல்.தொ.2:2. கல். 39.)
36. திருமகரம் ஓரணை - (கலை) மகர மீன் வடிவம். நகாசு செய்யப்பட்ட காதணி இரண்டு. மகர குண்டலம் எனலாம். ஓரணை - ஓர் இணை. இரண்டு.
“ஸ்ரீ பதஞ்சலி தேவர் திருமேனி - இவர்க்குக் குடுத்தன திருமகரம் ஓரணயிநாற் பொன் கழஞ்சே முக்காலே நாலு மஞ்சாடி” (தெ.கல்.தொ.2:2. கல். 53.)
37. திருமகுடம் - (கலை) திருமேனிகளின் சிகரத்தில் அணியப்படும் திருமுடி. (கிரீடம்) (க.க.சொ.அகரமுதலி, ப.253.)
38. திருப்பட்டம் - (கலை) நெற்றியில் அணிவிக்கும் பொற்பட்டை. இதனை வீர பட்டம் என்றும் கூறுவர்.
“ஸ்ரீராசராசதேவர் குடுத்த பொன்னின் திருப்பட்டம் ஒன்று” (தெ.கல்.தொ.2.கல்.1.)
“சீராளதேவர் - இவர்க்கே இவர் குடுத்த வீரப்பட்டம் ஒன்று.” (தெ.கல்.தொ.2:2. கல். 43.) (க.க.சொ.அகரமுதலி, ப.249.)
39. திருப்பட்டிகை - (கலை) மேகலை வகையிலான அரைக்கச்சையணி. முதல் இராசராசன் தாம் எழுந்தருளுவித்த உமா பரமேஸ்வரியார்க்குச் செய்தளித்த அணிகலன்களுள் யானை முகப்பும் (யாளமுகம்) மட்டப் பூ பத்தும், மொட்டு ஒன்றும், விடங்கு நாலும் உள்ளதாக செய்தளித்த சிறந்த அணிகலன் மேகலை என்னும் இடை ஒப்பனை அணிகளுள் சிறந்த அமைப்புடையதாகும். ஆண் தெய்வங்களாயின் அரைக்கச்சை வடிவில் செய்யப்பெறும்.
“திருப்பட்டிகை நாணும், அரசி மாணிக்கமும், படுகண்ணுங் கள்ளிப்பூவுங் கிண்கிணி பேரும் நாணும், மாங்காய் நாணுடையனவும் கிம்பிரி முகமும் உடையது. (தெ.கல்.தொ.2. கல். 93.) (க.க.சொ.அகரமுதலி, ப.249.)
40. திருக்கம்பி - (கலை) கழுத்தணிகளுள் பொன்னால் செய்யப்பட்ட கம்பிக்காறை என்பதாகும். தெய்வத் திருமேனிகட்கு அணிவிக்கும் அணிகலனாதலின் திருக்கம்பி என்னும் சிறப்புப் பெயர் பெறுவதாயிற்று.
“நங்கை பரவையார்க்குக் குடுத்தன திருக்கம்பி ஒன்று பொன் முக்காலே இரண்டு மஞ்சாடி குன்றி” (தெ.கல்.தொ.2:2. கல். 38.) (க.க.சொ.அகரமுதலி, ப.243.)
41. திருக்காற்காறை - (கலை) தெய்வத் திருமேனிகட்கு நவமணிகள் வைத்திழைக்கப் பெற்றதாக அணியப் பெறும் கால் காப்பு. (கொலுசு)
“நங்கை வரவையார்க்குக் குடுத்தன திருக்கைக்காறை - திருக்காற்காறை.” (தெ.கல்.தொ.2:2. கல். 38.) (க.க.சொ.அகரமுதலி, ப.243.)
42. திருக்குதம்பை - (கலை) காதணிகளுள் ஒரு வகை. குழை வடிவாக அமைக்கப் பெறும் காதணி. (தெ.கல்.தொ.2:2. கல். 34.)
.திருக்குதம்பைத் தகடு - (கலை) திருமேனிகளின் காதிற்கு ஒப்பனையாகக் காதின் வடிவமாகவே பொன்னாலும், பொன்னில் மணிகள் வைத்திழைக்கப் பட்டதாகவும் செய்து சார்த்தப்படும் பொன் நகாசுத்தகடு.
“திருக்குதம்பைத் தகடு இரண்டு பொன் மஞ்சாடியுங் குன்றி” (தெ.கல்.தொ.2:2. கல். 43.)
43. திருக்கைக்காறை - (கலை) திருமேனிகளின் கையில் அணியப் பெறும் வேலைப்பாடமைந்த பொற்காப்பு. (தெ.கல்.தொ.2:2. கல். 34, 48.)
44. திருக்கைப்பொட்டு - (கலை) திருமேனிகளின் உள்ளங்கைகளில் பொருத்தப்படும் பொன் தகடு. நகாசு வேலைப்பாட்டுடன் வட்டமாக அமைக்கப் பெறுவது.
45. திருச்சனவடம் - (கலை) திருச்சன்னவடம். மெல்லிதாக நீண்ட முத்து மாலை. சன்னம் - மெல்லிதானது. வடம் - நீண்ட மாலை. (அணிகலன்)
“திருச்சனவடம் மூன்றிநால் முத்து ஆயிரந் திருநுாற்றெழுபத்தெட்டும்.” (தெ.கல்.தொ.5. கல். 521.)
திருமாலை - (கலை) இரத்தினங்கள் வைத்திழைக்கப்பட்ட நெடிய மாலை. இரத்தின மாலை. (க.க.சொ.அகரமுதலி, ப.255.)
46. திருவடிக்காறை - (கலை) திருக்கோயில்களில் செய்து அமைக்கப்பெறும் தெய்வத் திருமேனிகட்கு அளிக்கப் பெறும் அணிகலன்களுள், கணுக்காலுக்கு மேல் பிடிப்பாக அணிவிக்கப் பெறும் அரை வட்டப் புடைப்பாக அமைந்த நகாசுக் கொலுசு. இக்காறையணி கை, கால், கழுத்து ஆகிய உறுப்புக்களிலும் ஏற்புடைய முறையில் இரரத்தினக்கற்களாலும், முத்துக்களாலும் ஒப்பனை செய்யப்பட்டு முறையே கைக்காறை, அடிக்காறை, பட்டைக்காறை என்ற பெயர்களுடன் சோழ நாட்டில் விளங்கியதைத் தஞ்சை பெரிய கோயில் கல்வெட்டுக்கள் உணர்த்துகின்றன.
“திருக்கைக்காறை ஒன்று பொன் அறுகழஞ்சே கால்”
“திருவடிக்காறை பொன்னின் பட்டை மேற் - கோத்த முத்து”
“நம்பிராட்டியார்க்குக் குடுத்தன பொன்னின் பட்டைக்காறை மேல் கோத்த திருவில் கட்டின வயிரம்” (தெ.கல்.தொ.2:2. கல். 86, 51, 48.) (க.க.சொ.அகரமுதலி, பக் 258 - 259.)
47. தைத்த முத்து - (கலை) அணிகலன்களில் இரத்தினங்களின் ஒப்பனையாகக் கற்களைப் பதிப்பதுடன் முத்துக்கள் துளையமைப்புப் பெறுவனவாகலின் பொற்கம்பியால் அமைப்பிடங்களில் வைத்துப் பொருத்தித் தைப்பது கம்மத் தொழில் நிலையாகும். அம்முறையே வைத்து தைக்கப்பட்ட முத்து.
”கோத்த முத்து வட்டமும் அனுவட்டமும் - தைத்த முத்து (தைய்ப்பு முத்து) சக்கத்தும் சப்பத்தியும் ஒப்பு முத்தும் குறுமுத்தும்” (தெ.கல்.தொ.2:2. கல்.51.)
“முத்தின் வளையல் ஒன்று - மேற்படியில் தச்சமுத்து ணுாற்றெண் பத்தெட்டு” (தெ.கல்.தொ.5. கல். 521.)
48. தோடு - (கலை) இரத்தினங்கள் வைத்திழைக்கப்பட்ட காதணி.
“தோடு ஒன்று பொன் இரு கழஞ்சேய் முக்காலே நாலு மஞ்சாடி” (முதல் இராசராசன், தெ.கல்.தொ.2:2. கல். 34.) (க.க.சொ.அகரமுதலி, பக் 283.)
49. நவரத்ந மோதிரம் - (பெ) வயிரம், நிலம், முத்து, புஷ்பராகம், கோமேதகம், பவழம், மரகதம், வைடூரியம், மாணிக்கம் என்னும் ஒன்பது மணிகளும் ஏற்ற அமைப்பில் முகப்பாக வைத்திழைக்கப்படும் மோதிரம்.
“நவரத்ந மோதிரம் ஒன்றில் நவரத்நம் ஒன்பதும் உள்பட” (தெ.கல்.தொ.2. கல். 93.)
முதல் இராசராசன் தாமெழுப்பிய தஞ்சை இராசராசேச்சுரத்து பரம சுவாமிக்குச் செய்தளித்த அணிகலன்களுள் நவரத்தினங்கள் வைத்திழைக்கப்பட்ட மோதிரமும் ஒன்றாகும். நவரத்தினங்கள் எம்முறையில் மோதிரத்தில் பதிக்கப் பெற்றிருக்கக் கூடுமென்பதைக் கல்வெட்டினைக் கொண்டு அறியலாகும்.
“நவரத்தின மோதிரம் ஒன்றிற் கட்டின 1. வயிரம் ஒன்றும், 2.நீலம் ஒன்றும், 3. முத்து ஒன்றும், 4. புஷ்பராகம் ஒன்றும், 5. கோமேதகம் ஒன்றும், 6. பவழம் ஒன்றும், 7. மரகதம் ஒன்றும், 8.வைடூரியம் ஒன்றும், 9. மாணிக்கம் ஒன்றும் உட்பட” (தெ.கல்.தொ.2. கல்.86.) (க.க.சொ.அகரமுதலி, பக் 290.)
50. நாயகத் தூக்கம் - (கலை) நவரத்தினங்களால் சிறப்பாக அமைக்கப் பெறும் பதக்கம். ஸ்ரீசந்தம் என்னும் அணிகலனின் நடுவே தோற்றமுடையதாகப் பொருத்தப் பெறும் பதக்கம். (தொங்கல்)
“ஸ்ரீசந்தம் ஒன்றில் - நாயசத் துாக்கம் மூன்றே நாலித் தலையில் விடங்குடையன இரண்டும்” (தெ.கல்.தொ.2:2. கல். 57.) (க.க.சொ.அகரமுதலி, பக்.296.)
51. நாரைக்கண்பட்டி - (கலை) காதணி. நாரை என்னும் பறவையின் கண் போன்ற வடிவில் பொன்னால் செய்யப் பெறும் காதணி. (திருவையாறு - கல்வெட்டு)
நாறைக்கண்பட்டி - (கலை) நாரைக்கண்பட்டி திருமேனிகட்கு அணிவிக்கும் காதணிகளுள் ஒன்று.
“திருக் காதுக்குச் சாத்த இட்ட நாறைக்கண்பட்டி இரண்டினால் பொன் அரைக் கழஞ்சேய் நாலு மஞ்சாடி” (திருவையாறு - கல்வெட்டு)
52. நாலிகங்கபாடிக்கல் - (அ) தொங்கும் படியாக அமைக்கப்பட்ட கங்க பாடி வயிரக்கல். முதல் இராசராசன் கங்க பாடியை வென்று கொணர்ந்த பொருள்களுள் ஒன்றான வயிரம். இது தஞ்சைப் பெரிய கோயிலில் தாம் எழுந்தருளுவித்த உமாபரமேஸ்வரியார் திருமேனிக்குரிய பட்டைக்காறையின் நடுவிலமைந்த திருவில் தொங்கும் படியாக அமைக்கப்பட்டதால், “நாலி கங்கபாடிக்கல்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. (தஞ்சைப் பெரிய கோயில் கல்வெட்டு)
53. நாலித்தலை - (கலை) கழுத்திற்கமைந்த அணிகலன்களில் அசைந்தாடும் தொங்கல்களாக அழகுடன் அமைக்கப்படும் முகப்புக் கோவை.
“சவி மூன்று வடம் உடையன எட்டும், சவியினுள்ளால் சிறு துாக்கமும் மூன்றே நாலித்தலையில் விடங்குடையன எட்டில் கட்டின பொத்தி எட்டும்.” (தெ.கல்.தொ.2:2. கல்.51.) (க.க.சொ.அகரமுதலி, பக் 297.)
54. நாறுபள்ளித்தாமம் - (சம) மணமுள்ள மலர்களால் கட்டப்பட்ட மாலை. இறைவன் வழிபாட்டிற்கு மணமுள்ள மலர்களே பயன்படுத்தப் பெறுவது இதனால் குறிக்கப் பெறுகின்றது.
“நாறு பள்ளித்தாமம் வடம் ஐந்தினால் ஆளு சாத்திர மாணி மூன்றனுக்கு நெல் மூன்று கலனும்” (தெ.கல்.தொ.5. கல்.1378.) (க.க.சொ.அகரமுதலி, பக் 299.)
55. நிம்போளம் - (பொ) முத்து வகையில் ஒன்று. வேம்பின் பழ வடிவில் நிற வேறுபாட்டுடன் அமைந்த முத்து.
“இரண்டாந் தரத்திற் கோத்த முத்து வட்டமும், அனுவட்டமும் ஒப்பு முத்தும், குறுமுத்தும், நிம்போளமும், பயிட்டமும், அம்பமுதும், கறடும், இரட்டையும், சப்பத்தியும், சக்கத்தும், குளிர்ந்த நீரும், சிவந்த நீரும் உடைய முத்து. (தெ.கல்.தொ.2:2. கல்.59.) (க.க.சொ.அகரமுதலி, பக்.302.)
56. நீலங்கோமளம் - (கலை) ஒன்பது இரத்தினங்களுள் நீலம் என்பது ஒன்றாகும். நீல நிறக்கதிர் வீசும். இதன் வகைகளுள் வடிவம், ஒளியும், அழகும் பொருந்திய நீலம், “கோமளம்” என்று பெயர் பெறும்.
“கண்ட நாண் ஒன்றிற் கோத்த நீலங்கோமளம் ஒன்று” (தெ.கல்.தொ.2:3.கல்.93.) (க.க.சொ.அகரமுதலி, பக்.312.)
57. பச்சைக்கல் - (கலை) ஒன்பது இரத்தினங்களுள் பச்சை நிறமாக அமைந்து ஒளியுடன் விளங்கும் மணி. இதனை “மரகதம்” என்பர்.
“பொன்னின் நாணிற் கோத்த மாணிக்கத்தின் திரு ஒன்றிற் கட்டின பச்சை ஒன்றும்” (தெ.கல்.தொ.2:2. கல்.42.) (க.க.சொ.அகரமுதலி, பக்.317.)
58. பஞ்சசரி - (கலை) மார்பணிகளுள் நவரத்தினங்கள் வைத்திழைக்கப்பட்ட பதக்கங்களாக ஒன்றன் கீழ் ஒன்றாக ஐந்து நிலையில் அமைக்கப்பட்ட அழகு ஒப்பனை அணி. (தஞ்சைப் பெரிய கோயில் கல்வெட்டுக்கள், தெ.கல்.தொ.2:2. கல்.1.) (க.க.சொ.அகரமுதலி, பக்.318.)
59. பட்டம் - (கலை) திருப்பட்டம். (கலை) பொன்னின் திருப்பட்டம். பொன்னால் செய்யப் பெற்ற நெற்றிப்பட்டம். பருவ கால விளைவு.
“பொன் கொண்டு செய்து குடுத்த திருப்பட்டம் ஒன்று.” (தெ.கல்.தொ.2:1,கல்.1.) (க.க.சொ.அகரமுதலி, ப.322.)
60. பட்டைக்காறை - (கலை) பட்டையாகப் பொன்னால் செய்யப்பட்டு இரத்தினங்கள் பொருத்தப்பட்ட கழுத்தணி.
“நம்பிராட்டியார்க்குக் குடுத்தன பொன்னின் பட்டைக்காறை மேற் கோத்த திருவில் கட்டின வயிரம்” (தெ.கல்.தொ.2:2. கல்.48.) (க.க.சொ.அகரமுதலி, பக்.326.)
61. பட்டைக்காறையில் கோத்த தாலி - (கலை) பொற் பட்டையாலான காறையில் கோக்கப்பட்ட தாலி. இதனை தாலிக்காறை என்பர். (கழுத்தணி)
“திருவெண்காட்டு நங்கை ஒருவர் - இவர்க்கே இவன் குடுத்தன பட்டைக் காறையிற்கோத்த தாலி உள்பட பொன் ஒன்பது மஞ்சாடியுங் குன்றி.” (தாலி - திரு) (தெ.கல்.தொ.2:2. கல்.43.)
உமா பரமேஸ்வரியாற்கு - “குடுத்தன பட்டைக் காறை மேற்கோத்த திருவில் கட்டின வயிரம்” (தெ.கல்.தொ.2:2. கல்.48.) (க.க.சொ.அகரமுதலி, பக்.327.)
62. படுகண் - (கலை) மாலையாகச் செய்யப்பட்ட பொன்னணியின் இரு முனையினொன்றில் அமைக்கப்படும் வளையம் போன்ற பகுதி. இப்படுகண்ணில் எதிர் முனையாகும் கோக்குவாய் மாட்டிப் பொருத்தப் பெறும். (தெ.கல்.தொ.2:2. கல்.34.) (க.க.சொ.அகரமுதலி, பக்.328.)
“கோக்குவாய் ஒன்றும் படுகண் ஒன்றும் அரக்கும் உட்பட நிறை”
63. பதக்கமாலை - பதக்கத்தோடு கூடிய பொன் மாலை. இம்மாலையின் பகுதிகள், நாயகக்கண்டம், அருகு கண்டம், கடைத்தொழில், படுகண், கொக்குவாய் என்ற பெயர்களால் குறிப்பிடப்படுகின்றன.
“திருவண்ணாமலை நாயனார் சாத்தியருள இட்ட பதக்க மாலைகளால் நாயகக்கண்டம் - ஒன்று அருகு கண்டம் ஆறு, கடைத்தொழில் இரண்டு, படுகண் ஒன்று, கொக்குவாய் ஒன்று.” (தெ.கல்.தொ.8, கல்.103.) (க.க.சொ.அகரமுதலி, பக்.332.)
64. பந்தஸாரம் - (பொ) இது வயிர வகையுள் ஒன்றாகும். ஒன்றன் மேலொன்றாக படிந்த தோற்றமுடைய இயற்கையோடிருக்கும் வயிரம்.
65. பயிட்டம் - (பொ) முத்து வகையில் ஒன்று. நீரோட்டப் பொலிவுடன் அமைந்த முத்து. (தெ.கல்.தொ.2:2. கல்.46.) (க.க.சொ.அகரமுதலி, பக்.335.)
66. பருமுத்து - (பொ) பெரிய வடிவில் திரட்சியாக விளைந்த முத்து.
“பட்டிகை முகத்தில் தச்ச பருமுத்து அஞ்சு” (தெ.கல்.தொ.5. கல்.521.) (க.க.சொ.அகரமுதலி, பக்.342.)
67. பவழத்துக் கோத்த பவழம் - (கலை) பவழ மாலைக்கமைந்த பெரும் பவழத்தின் நடுவமைந்த கட்டுத்துளையின் வழிச் செல்லும் பொற் கம்பியின் முனை நிலை பெற, அப்பெரும் பவழத்தினடியில் கட்டும் பவழமாக சிறு பவழமொன்றை இணைத்துக் கட்டி அம்முறையே பவழ மாலைக்கமைந்த வகையொன்றினை உருவாக்குவர். இதனையே இராசராசன் அளித்த அணிகலன்களுள் ஒன்றாகிய பவழ மாலையில், “பவழக்கோத்த பவழம் ஐம்பது” என்று குறிக்கப்பட்டுள்ளது. (தெ.கல்.தொ.2:2. கல்.59.) (க.க.சொ.அகரமுதலி, பக்.344.)
68. பளிக்கு வயிரம் - (பொ) பளபளப்பும், கதிரொளியும் கூடிய வயிரம்.
“பின்னும் கோவைத்தலையில் தடவிக் கட்டின பளிங்கு ஒன்றும் பொத்தி ஒன்றும் பளிக்கு வயிரம் ஒன்பதும்” (தெ.கல்.தொ.2:2. கல்.51.) (க.க.சொ.அகரமுதலி, பக்.348.)
69. பாசமாலை - (கலை) பொற்சரட்டில் கட்டின இரத்தின வரிசைகளோடு கூடின மாலை.
“பாசமாலை ஒன்றிற் கட்டின வயிரம் - 75, மாணிக்கம் - 70, பொத்தி - 41, கோத்த முத்து - 83 உள்பட நிறை.” (தெ.கல்.தொ.2. கல்.73.) (க.க.சொ.அகரமுதலி, பக்.351.)
70. பாணிச்சாய் - (பொ) முத்துக்களில் ஒரு வகை.
“சப்தசரி ஒன்றிற் கோத்த முத்து வட்டமும் அனுவட்டமும் பாணிச்சாயும் தோல் தேய்ந்தனவும்” (தெ.கல்.தொ.2:2. கல்.34.) (க.க.சொ.அகரமுதலி, பக்.353.)
71. பிஞ்சு - (கலை) அணியின் பொன்னரும்புக் கோப்பு. இரரத்தினங்கள் வைத்திழைக்கப்படும் அணிகலன்களில், இரத்தினக்கற்களைப் பொருத்திச் செம்மைப் படுத்துவதற்குரியதாக ஆங்காங்கே பொற் பொடியிட்டு ஊதிப் பொருத்தப்படும் பகுதிகள் பிஞ்சு என்று பெயர் பெறும். இதனை உம்முசம் என்றும் கூறுவர்.
“கட்டப்பட்ட ரத்நங்கள் அரக்கும் பிஞ்சும் உள்பட தட்ஷிண மேருவிடங்கன் என்னும் கல்லால் நிறை எடுத்து” (தெ.கல்.தொ.2: 3, கல். 93.) (க.க.சொ.அகரமுதலி, ப.359.)
72. புல்லிகைக் கண்ட நாண் - (கலை) மாணிக்கம், மரகதம், இரத்தினம், நீலம் ஆகிய மணிகள் வைத்துப் பொருத்தியதாகவும், பட்டையாகவும், சரடுகளாகவும், கழுத்திற்குப் பொருந்தி அணைந்து நிற்கும் அமைப்பினதாகவும் செய்யப் பெறும் கழுத்தட்டிகை.
“புல்லிகைக் கண்ட நாண் ஒன்றில் நாண் மூன்றில் கட்டின வயிரம் எழுபத்தாறும், மாணிக்கம் இருபத்து நாலும் மரகதம் பதினாறும் உள்பட நிறை 120 கழஞ்சு.” (தெ.கல்.தொ.2:2. கல்.93.) (க.க.சொ.அகரமுதலி, பக்.372.)
73.பொத்தி - (கலை) பொன்னில் நவரத்தினங்களை வைத்திழைக்கும் போதும் பொருத்தும் போதும் மணிகளின் வடிவிற்கமைந்த, தாங்கலும் பற்றும் அமைந்த உருவில் செய்யப் பெறும் உம்மச்சு. (உம்முசம்)
“இடைக்கட்டு இரண்டிலும் தடவிக் கட்டின பளிங்கு எட்டும் பொத்தி எட்டும்” (தெ.கல்.தொ.2:2. கல்.34.)
“நாலித்தலையில் விடங்குடையன எட்டில் கட்டின பொத்தி எட்டும் தடவிக் கட்டின பொத்தி எட்டும் தடவிக் கட்டின பளிங்கு பதினாறும்” (தெ.கல்.தொ.2:2. கல்.51.) (க.க.சொ.அகரமுதலி, பக்.386.)
74. பொன் கொடு செய்த முத்து வளையல் - (கலை) பொன்னைக் கொண்டு முத்துக்களைப் பதித்துச் செய்த வளையல்.
“பண்டாரத்துப் பொன் கொடு செய்த முத்து வளையல்” (தெ.கல்.தொ.2. கல்.3.)
75. பொன்னின் சுரி - (கலை) பொன்னால் செய்யப்பட்ட திருகாணி. வட்டத் தகட்டுக் கவசம்.
76. பொன்னின் நாணிற் கோத்த மாணிக்கத்தின் திரு - (கலை) பொன் சரட்டில் கோத்த மாணிக்கத்தாலி. (திரு - திருத்தாலி)
“உமா பரமேஸ்வரியார்க்கு - பொன்னின் நாணிற் கோத்த மாணிக்கத்தின் திரு ஒன்றிற் கட்டின வயிரம்” (தெ.கல்.தொ.2. கல்.46.)
77. பொன்னின் பட்டை மேற் குண்டு வைத்து விளக்கின வளையல் - (கலை) பொன்னால் வளையலாகச் செய்யப்பட்டு அதன் மேற்புறம் பொற் குண்டுகள் பொருத்தப்பட்டு, பட்டைகள் செதுக்கப்பட்ட வளையல்.
“உமா பரமேஸ்வரியார்க்கு குடுத்தன பொன்னின் பட்டை மேற்குண்டு வைத்து விளக்கின வளையல்” (தெ.கல்.தொ.2:2. கல்.46.) (க.க.சொ.அகரமுதலி, பக்.391.)
78. மகரதோரணம் - (அ) மகரமீன் வடிவமைந்த தொங்கல்களாகச் செய்து கோவை செய்யப் பெற்ற அணிகலன். கோட்டை வாயில், மாளிகை வாயில் ஆகியவற்றிற்கு ஒப்பனையாக மகர மீன்கள் எதிரிட்டு இணைந்து நிற்கும் பாங்கில் அழகு செய்யப் பெறும் வளைவு.
“இப்பொன் - உடையார் ஊருடைப்பெருமாளுக்கு சாத்தி அருள செய்த மகர தோரணத்துக்கு இட்டது.” (மூன்றாம் குலோத்துங்கள், தெ.கல்.தொ.8. கல்.287.)
“வெண் சாமரையும் மேகடம்பமும் சூகரக் கொடியும் மகர தோரணமும் - பறித்து” (வீரராசேந்திரன் - மெய்கீர்த்தி) (க.க.சொ.அகரமுதலி, பக்.395.)
79. மச்சம் - (மொ) அணிகலன்கள் செய்வதற்கு அளிக்கப் பெறும் பொன்னின் தரமறிய, கொடுக்கும் பொன்னில் எடுத்து வைத்துக் கொள்ளும் பகுதி. இதனைக் “காணவாசி” என்றும் கூறுவர்.
“மச்சம் ஒரு காணம் ஆகப் பொந் பதின்காற்கழஞ்சே ஒரு காணம்”
“நகரப் பொன் ஆணியோடொத்த பொந்நுக்கு காணவாசி நல்ல பொன்.” (காணவாசி - உரை மாற்றுக் குன்றாத பொன்) (தெ.கல்.தொ.5,கல். 266.) (க.க.சொ.அகரமுதலி, ப.397.)
80. மாணிக்கம் - (பொ) இரத்தின வகையுள் சிவப்புக்கல், அரதனம். மாணிக்கம் - தோற்றம். வடிவு, பொலிவு, ஒளி நிலை, நிறம் ஆகியவற்றால் பல வகைப்படும். அவற்றுள் ஹளஹளம், குணவியன், குருவிந்தம். கோமளம், நீலகந்தி, சுகந்தி, தளம், குப்பி என்பன கல்வெட்டுக்களால் அறியப்படும் வகைகளாகும்.
இவற்றுள் நிறம் மிகுந்த ஒளிக்கதிர் நிறைந்திருப்பது “அரசி மாணிக்கம்” என்றும், வெண் சிவப்பாக ஒளி மிகுந்திருப்பது “பத்மராஜன்” என்றும் பெயர் பெறும். (தெ.கல்.தொ.2.கல்.1.3.7.) (க.க.சொ.அகரமுதலி, ப.410.)
81. முகம் - (கலை) முகப்பு. அணிகலன்களின் முன்புறத் தோற்றம். அணிகலன்களின் தோற்றப் பொலிவாகவும், புடைப்பாகவும் இரத்தினங்கள் வைத்து இழைக்கப்படும் முகப்பு.
“முத்தின் பட்டிகை ஒன்றினால் பொன்னின் பூ ஆறும் முகம் ஒன்றும்” (தெ.கல்.தொ.5, கல். 521.) (க.க.சொ.அகரமுதலி, ப.417.)
82. முடி - (கலை) தெய்வத் திருமேனிகட்கும், அரசர்க்கும் தலையில் அணிவிக்கும் இரத்தினங்களால் ஒப்பனை செய்யப்பட்ட பொன்முடி - திருமுடி.
“அர்த்த நாரீஸ்வரர் திருமேனி ஒன்று.இவர்க்கு குடுத்தன ஸ்ரீமுடி ஒன்றிற் கோத்த முத்து நுாற்றிருபத்தொன்று” (தெ.கல்.தொ.2:2 கல்.39.) (க.க.சொ.அகரமுதலி, ப.419.)
83. முத்திற்கோத்த முத்து - (கலை) அனுவட்டமான பருமுத்து ஒவ்வொன்றின் அடியிலும் குறுமுத்து ஒவ்வொன்றினைக் கோத்த அமைப்பில் உருவாக்கப்பட்ட முத்துமாலை.
“முத்திற் கோத்த முத்து - தொளாயிரத்தெண்பத்தொன்றினால்” (தெ.கல்.தொ.2,கல்.1.) (க.க.சொ.அகரமுதலி, ப.420.)
84. முத்தின் சிடுக்கு - (கலை) முத்தாலான காதணி. (தோடு)
“முத்தின் சிடுக்கு ஓரணையிற் கோத்த முத்து பதினெட்டும் பொன்னும் உட்பட” (தெ.கல்.தொ.2:2 கல்.51.) (க.க.சொ.அகரமுதலி, ப.420.)
85. முத்தின் சூடகம் - (கலை) இரத்தினங்கள் வைத்திழைக்கப்பட்ட பொன் நகாசு வளையல்.
“முத்தின் சூடகம் ஒன்றில் துண்டம் இரண்டிற் கறடிகை ஆறும் கேவணம் வைத்து விளக்கிக் கட்டின பளிங்கு எழுபத்தொன்பதும்” (தெ.கல்.தொ.2 2 கல்.51.) (க.க.சொ.அகரமுதலி, ப.421.)
86. முத்தின் வகை - (பொ) இரத்தினங்களுள் ஒன்றான முத்தின் வகைப் பலவாயினும் தஞ்சை இராசராசேச்சுரக் கல்வெட்டுக்களில் முதல் இராசராசன் அளித்த இரத்தின அணிகளில் இடம் பெற்ற முத்துக்கள் முறையே - வட்டம், அனுவட்டம், ஒப்பு முத்து, குறுமுத்து, சப்பத்தி, சக்கத்து, நிம்போளம், பயிட்டம், பழமுத்து, சிவந்த நீர், குளிர்ந்த நீர், அம்புமுது, அம்புமுதுபாடன், கறடு, இரட்டை, இப்பிப்பற்று, அராவன், பாணிச்சாய், தோல் தேய்ந்தன, திரங்கல், தோலிடந்தன பருமுத்து, ஒரு புறவன் எனப் பல வகைகளாகக் குறிக்கப்பட்டுள்ளன. (தெ.கல்.தொ.2, கல். 1, 3, 7, 34, 39, 46, 51, 86, 93.)
87. முத்தின் வளையல் - (கலை) பொன் வளையலின் மேல் முத்துக்கள் பதித்தும், கட்டியும் செய்யப் பெறும் வளையல்.
“பொன் கொடு செய்த முத்து வளையல் ஒன்று - கோத்தமுத்து முன்னுாற்று ஐம்பத்து மூன்றினால்” (தெ.கல்.தொ.2:2 கல்.3.) (க.க.சொ.அகரமுதலி, ப.421.)
88. முத்து - (பொ) கடலில் அலையற்ற பகுதிகளில் ஒரு வகைக் கிளிஞ்சில் இனமாகும் சிப்பியின் அகட்டில் உருவாகும் மணி. இரத்தினம் ஒன்பதனுள் வெண்மையான நிறமும், ஒளியும், திரட்சியும் பொருந்தி விளங்குவது. தரத்தில் உயர்ந்த முத்தினை அணிவதால் நலம் பல விளையும் என்பர். இதன் வகைகளையும், இயல்புகளையும் அணிகலன்களில் இவை இடம் பெறும் சிறப்பினையும் முதல் இராசராசன் தான் எழுப்பிய தஞ்சை இராசராசேச்சுரத்திற்கு அளித்துள்ள திருவாபரணங்களை விளக்கும் கல்வெட்டுக்கள் புலப்படுத்துகின்றன. முத்தின் வகை பார்க்க. (தெ.கல்.தொ.2:1 - 3.)
89. முத்து வடம் - (கலை) முத்துக்களால் ஆன மாலை. முத்துச்சர மாலை. (கழுத்தணி) (க.க.சொ.அகரமுதலி, ப.421.)
90. மோதிரம் - (கலை) கை விரல்களில் அணிவிக்கும் அணிகலன். இது பொன்னில் இரத்தினங்கள் வைத்திழைக்கப்பட்ட வேலைப்பாட்டுடன் திகழும்.
“ரத்ந மோதிரம், ஒன்றிற் கட்டின வயிரம் நாலும் மாணிக்கம் ஒன்றும்.” (தெ.கல்.தொ.2, 93.) (க.க.சொ.அகரமுதலி, ப.432.)
91. வடுக வாளி - (கலை) வடுகர் நாட்டு மகளிர் காதில் அணியும் தொங்கல். முதல் இராசராசன் மனைவியருள் பஞ்சவன் மாதேவியார் என்பவள் தஞ்சையழகருடன் செய்தமைத்த உமா பரமேஸ்வரிக்குரிய காதணியாகச் செய்தளித்த முத்திலான வடுகவாளி.
“வடுகவாளி ஒன்றில் கோத்த முத்து ஒன்பது” (லெ. கல்.தொ.2:2, கல்.51.) (வடுகர் நாடு - தெலுங்கர் நாடு) (க.க.சொ.அகரமுதலி, ப.434.)
92. வயிரம் - (பொ) வைரம். இரத்தினங்களுள் முதன்மையானது. கனிப் பொருளாகப் பூமியிலிருந்து எடுக்கப் பெறுவது. அனுச்செறிவு மிக்க ஒளியுள்ள கரிப்பொருள். இது குணத்தாலும், குற்றத்தாலும் 12 வகைப்படும். (குணம் - 6. குற்றம் - 6)
“ஸ்ரீ சந்தம் ஒன்றிற் கட்டின வயிரம் நாலும் மாணிக்கம் நாலும்” (தெ.கல்.தொ.2:3, கல்.93.)
வயிரம் உயர்ந்தவை - (பொ) வயிர மணிகளில் உயர்ந்த தரமுடையவை இரண்டாகும். ஒன்று “ராஜாவர்த்தம்” மற்றொன்று “ஸப்ரயோகம்” என்பதாகும். இதனை மாணிக்கத்திற்கும் கூறுவர்.
வயிரம் - (மொ) (குணம் - 6) வைரம். உயர்ந்த வயிரங்களில் அமைந்த குணங்கள் ஆறு என்பது இரத்தின நுால் வழக்கு. அவை அறுகோணமாயிருத்தல், இலேசாக இருத்தல், சமமான எட்டுத் தளங்களுடன் அமைதல், கூரிய முனைகளுடைமை, ஒளித் தெளிவுடைமை, நான்கு பட்டைச் சவக்கமாக இருத்தல் என்பனவாகும்.
கல்வெட்டுக்களில் சிறந்த வயிரம் ராஜாவர்த்தனம் என்ற பேருடன் குறிக்கப்படுவதுடன், பளிங்கு, பொத்தி, தாளிம்பம், பளிக்கு வயிரம், சப்படி, உருளை, கோமளம் என்ற பெயர்கள் உள்ளனவாகவும் வயிர வகைகள் குறிக்கப்பட்டுள்ளன.
பளிங்கு - உள்ளொளித் தெளிவுடனமைந்தது.
பொத்தி - கீழ் குழிவும் மேல்புடைப்பும் உள்ளது.
தாளிம்பம் - பனையோலை கீற்றுப் போன்ற வடிவுடையது.
பளிக்கு வயிரம் - துாய ஒளியுடன் கூடியது.
சப்படி - சப்பையாக பிறப்பிலேயே இருப்பது.
கோமளம் - மென்மையும் வெளிறிய ஒளியும் பொருந்தியது.
உருளை - திரட்சியாக இருப்பது.
பந்தஸாரம் - ஒன்றன் மேலொன்றாகப் படிந்த விளைவுடனிருத்தல்.
வயிரம் (குற்றம் - 6) - (பொ) வயிரங்களில் அமைந்த குற்றங்கள் ஆறு வகைப்படும். அவை, 1.புள்ளி அல்லது பொறிவு பெற்றிருத்தல், 2. கோடு அல்லது முறிவு பெற்றிருத்தல், 3.நீரோட்டம் அல்லது இரத்தம் போன்ற செந்நிறமாக ஒளி வீசுவது. 4. அழுக்கு அல்லது வெந்தன போன்று மழுங்கலாக இருப்பது. 5. காகபாதம் அல்லது உள் ரேகையாகக் கீற்றோடி இருப்பது. 6. சப்படி என்னும் தட்டை வடிவில் அமைந்து இருப்பது என்பனவாகும்.
1.பொறிவு, 2. முறிவு, 3.இரத்தபிந்து, 4.காகபிந்து, 5. வெந்தன, 6.மட்டதாரை, 7. மட்டசப்படி, 8. மட்டதாரை என்பன தஞ்சைப் பெரிய கோயிலில் கல்வெட்டுக்களில் குறிக்கப் பெறுவனவாம். (தெ.கல்.தொ. 2:1. 2:2.)
93. வயிரம் கோத்த பட்டைக்காறை - (கலை) வயிரங்கள் வைத்திழைக்கப்பட்ட பொற்பட்டைக்காறை. (கழுத்தணி) (க.க.சொ.அகரமுதலி, ப.437.)
வைரம் - (பொ) (துாயன) மட்டதாரை, மட்ட தாரைச்சப்படி, பந்த சாரம், மட்டதாரைச் சாவகம் என்பனவாம்.
சப்படி - தட்டையாக அமைந்திருப்பது.
சவக்கம் - சதுர வடிவுள்ளதாக இருப்பது. (க.க.சொ.அகரமுதலி, ப.463.)
சிவப்பு - (பொ) வைரங்களுள் சிவப்பு நிறமுள்ள அரதனம். (தொ.7.கல்.53.) (க.க.சொ.அகரமுதலி, ப.479.)
94. வாளி - காதணி வகையுள் வளையமாகச் செய்யப் பெறும் அணி. (க.க.சொ.அகரமுதலி, ப.446.)
95. ஸ்ரீ வாகு வளையம் - (கலை) தோள்கட்கு அழகு செய்யும், பொன்னாலும் மணிகளாலும் ஒப்பனை செய்யப்பட்ட வளையம். இவ்வணி தோள்களில் பொருத்தும் அமைப்புடன் அமைக்கப் பெறும். பாஹீவளையம் (பாஹீ - வாகு. தோள்) (க.க.சொ.அகரமுதலி, ப.443.)
96. ரத்ந நியாஸம் - (கலை - சம) கோயில்களில் அமைக்கப் பெறும் தெய்வத் திருமேனிகளின் அடிக்குக் கீழிடத்தில் தெய்வீகம் உயிர்ப்புடன் விளங்குவதற்குரியதென ஆகமங்கள் கூறியுள்ள நியதிப்படி மந்திரச் சக்கரத்துடன், துாய ஒன்பது வகை இரத்தினங்களையும், ஒன்றாகக் குழிப்பிடத்தில் பதித்து சிலையினை நிறுவுதல். இவ்வாறே உலோகத் திருமேனிகளின் அடிக்கீழ் தாமரை வடிவில் அமைக்கப் பெறும் இருப்பின் உள் பகுதியில் மேற்கூறிய பொருள்களைப் பொதிப்பாகச் செய்தலுமாகும்.
“ஸ்ரீ ராஜராஜீஸ்வரமுடையார் கோயிலில் எழுந்தருளுவித்த செப்புத் திருமேனிகள் கனமாக எழுந்தருளுவித்த ரிஷப வாஹந தேவர் திருமேனி ஒன்று ரத்ந நியாஸஞ் செய்து இவர் எழுந்தருளி நின்ற மூவிரலறை உசரம் உள்ள பத்மம் ஒன்று. (முதல் இராசராசன், கி.மு.1014.) (தெ.கல்.தொ. 2:2, கல்.40.)
ரத்ந நியாஸம் - (கலை) திருமேனிகளின் அடிக்குக் கீழ் தெய்வீகம் விளங்க, ஜீவரத்ந சக்ர மந்திரச்சக்கரங்களுடன் ஒன்பது இரத்தினங்களையும் சேர்த்துப் பொதிப்பாகச் செய்யப் பெறுதல், உலோகத் திருமேனிகளில் நின்ற தாமரை வடிவினமைந்த பத்ம பீடத்தின் ரத்நநியாஸம் செய்தமைத்தல் ஆகம விதி என்பர். (க.க.சொ.அகரமுதலி, ப.494.)
97. ரத்ந மோதிரம் - (கலை) நவரத்தினங்களுள் ஒன்றினை வைத்துப் பதித்துக் கட்டப் பெறும் விரல் அணி. (க.க.சொ.அகரமுதலி, ப.494.)
98. ராசிப்பொன் - (சம) (வா) மாற்றில் குறையாத பொன். (க.க.சொ.அகரமுதலி, ப.490.)
99. ரிஷப தேவர் - இடபதேவர் சிவபெருமானின் ஊர்தி. சிவன் கோயில்களில் திருமுற்றப் பகுதியில் மூலவரை நோக்கிய வண்ணம் அமைக்கப் பெறும் காளை மாட்டு வடிவிலமைந்த திருமேனி.
இவ்விதம் அக்காலத்தில் வழக்கில் இருந்து வந்த ஆபரணங்களையும், அவற்றின் பயன்பாட்டினையும் நாம் அறியலாம்.