ஆலயங்களில் பல்வேறு நைவேத்திய வகை உணவுகள் இறைவனுக்குப் படைக்கப் பெற்று அடியார்கள் மற்றும் மக்களுக்குப் பிரசாதமாக வழங்கப் பெற்றன. இதனை அக்காலக் கல்வெட்டுக்கள் வழியாகத் தெரிய வருகின்றன.
அக்காரவடிசில் - (பொ) (அக்கார் அடலை)
சர்க்கரைப்பொங்கல்
“திருவநந்தேஸ்வரத்து பட்டாரகரை சந்திராதித்தவற் நியதம் அக்கார வடியல்லமுது செய்வதற்கு”
“அக்காரடலைக்கு நீக்கி நின்ற நிலன்.” (தெ.கல்.தொ.19. கல்.60.)
அக்காளி - (பொ)
கற்கண்டுச் சாதம் (நிவேதப் பிரசாதம்.) அக்காளிதம் என்றும் பெயர் பெறும்.
அக்கிரசாலை - (சம)
பிராமணர்க்கு நாளும் தர்மமாக உணவளிக்கும் சத்திரம். (சாலை - உணவு அறச்சாலை) (க.க.சொ.அகரமுதலி, ப.2.)
அப்பம் - (பொ)
ஓர் வகை உணவுப் பண்டம். பல்லவர் காலத்தில் நிவேதன வழக்கிலுள்ளது. தட்டில் அப்பிச் செய்யப் பெறுவதால் அப்பமெனப் பெயர் பெற்றது.
“தட்சிணாமூர்த்திதேவர் அமுது செய்தருளவும் வெண்போனகத்துக்கும், பருப்புப் போனகத்துக்கும் அப்பத்துக்கும்” (தெ.கல்.தொ.12. கல்.201.) (க.க.சொ.அகரமுதலி, ப.19.)
அடைக்காய் அமுது - (சம)
வெற்றிலையுடன் சேர்த்து தின்னுதற்குரிய அமுதாகிய பாக்கு. இதனை அடையமுது என்றும் கூறுவர். இறைவன் நிவேதனத்தின் போது பயன்படுத்தப் பெறும்.
“உண்ணும் சோறும் தின்னும் வெற்றிலையும்” (நாலாயிரத் திவ்யப் பிரபந்தம்.)
சந்தி ஒன்றுக்கு அடைக்காயமுது வெறும்பாக்கு நாலும், வெற்றிலை எட்டும்” (தெ.கல்.தொ.8. கல்.66.)
“அடைக்காய் அமுதுக்கு பாக்கு ஐஞ்சும் வெற்றிலை ஓரடுக்குக்கு நெல்லு நாழியும்” (முதல் இராசேந்திரன், தெ.கல்.தொ.4.கல்.538.) (க.க.சொ.அகரமுதலி, ப.14.)
அலசந்திப்பயிறு - (வ)
சோழ நாட்டில் விளைந்த பயறு வகைகளுள் ஒன்று. சீர்காழியிலுள்ள திருஞானசம்பந்தர் திருக்கோயிலில் நாளும் பிரசாதமாக வழங்கப்பட்டது.
“ஆளுடை பிள்ளையார்க்கு கறியமுதாக அமுது செய்தருள நாள் ஒன்றுக்கு அலசந்திப்பயிறு நாழியாக ஆட்டைக்குப் பயறு நாற்கலமாக” (இராசாதிராசன், கி.பி.1177, தெ.கல்.தொ.5.கல்.988.) (க.க.சொ.அகரமுதலி, ப.26.)
எற்சோறு - (சம) (எல்சோறு)
திருக்கோயில்களில் உச்சியம் போதில் அடியார்கட்களிக்கும் உணவு. (தெ.கல்.தொ.8.கல்.85.) (க.க.சொ.அகரமுதலி, ப.85.)
ஒழுக்கவி - (வ)
நாளும் முறையாகக் காட்டும் நிவேதனமாகிய உணவு. கோயில்களில் நாள் வழிபாட்டு முறைமைகட்குரியதாக நாள்தோறும் படைக்கும் சமைத்த உணவு. (பிரசாதம்.)
“இவ்வய்யோம் வயலைக்காலில் அடுத்த காடி மூன்று கூற்றாலும் படாரர்க்கு ஒழுக்கவிக்கும் நந்தாவிளக்கு ஒன்றுக்கும், கொடுத்துாட்டுவோமாக” (நந்திவர்மபல்லவன், கி.பி.712.)
தெ.கல்.தொ.12.கல்.39.)
“இத்தளி வழிபாடு செய்வார்க்கு வகுத்து இதனுள் மிக்க நிலம் ஒழுக்கவிக்கு விளைநிலமாகவும்.” (கூரம் - செப்பேடுகள்.) கி.பி.675. (க.க.சொ.அகரமுதலி, ப.91.)
கறியமுது வகை - (சம)
திருக்கோயில்களில், நிவந்தப்படி மடைப்பள்ளியில் சமைக்கப் பெற்று நிவேதனம் செய்யப் பெறும் கறி வகைகள், காய்கறி, புளிங்கறி. புழுக்குக்கறி, கூட்டுக்கறி என்பனவாகக் கல்வெட்டுக்களில் கூறப் பட்டுள்ளன. இவை நெய்யிட்டு ஆக்கப்படும் முறை,
“கறிது மிக்கவும் பொரிக்கவும் பசுவின் நெய் ஆழாக்கு ” என்றும் விளக்கப்பட்டுள்ளன. (தெ.கல்.தொ.14, கல்.13,16 - அ) (க.க.சொ.அகரமுதலி, ப.117.)
கும்மாயம் - (பொ)
சிறு பயிற்றுப் பருப்பிட்டுச் செய்யும் இனிப்புக் கலந்த பண்டம். நிவேத உணவுப் பண்டங்களுள் ஒன்றாகவும் வழக்கிலிருந்துள்ளது.
“கும்மாயத்துக்கு பயிற்றப் பருப்பு உரி”
“கும்மாயத்துக்குச் சிறு பயிற்றுப்பருப்பு இரு நாழி.” (தெ.கல்.தொ.14. கல்.13.16.)
“கும்மாயம் உள்ளிட்டுக் கறி ஞாலும் நெய் ஆழாக்கும்.” (தெ.கல். தொ.19.கல்.22.) (க.க.சொ.அகரமுதலி, ப.146.)
சட்டிச்சோறு - (சம)
கோயில் பணியாளர்க்கும் சிவனடியார்க்கும் சட்டி அளவிட்டுக் கொடுக்கும் ஒரு சட்டிச்சோறு இரு நாழி அரிசி சமைத்த சோற்றின் அளவுடையதாகும்.
“இந்நாயனார் கோயிலில், எந்நொபாதி காணி காணியில் நித்த மிருநாழி யரிசி சோறு இரண்டு சட்டியிட்டு வருவேனாகவும்.” (விக்கிரமசோழன், கி.பி.1147, தெ.கல்.தொ.5. கல்.226.)
“இக்கோயிலில் உச்சியம் போதொரு சந்திக்கு வந்த அடியாரில் ஒரு மஹேஸ்வரர்க்கு அமுது செய்ய ஒரு சட்டிச்சோறு இரு நாழி அரிசியால் அமுது செய்விக்கக் கடவோமாக.” (தெ.கல்.தொ.8.கல்.622.)
“ஸ்ரீ மஹேஸ்வரர்க்கு சட்டிச்சோறு ஆயிரம் கொடுக்கவும்” (இராசேந்திரன்2, தெ.கல்.தொ.4.கல்.223.) (க.க.சொ.அகரமுதலி, ப.171.)
சுகியன் பிரஸாதம் - (சம)
உள்ளீடாக இனிப்பிட்ட பருப்புத் துகைப்பிட்டுச் செய்யும் பண்டம்.
“திருவேங்கடமுடையானுக்குரிய நிவேதன பிரசாதங்களுள் ஒன்றாகும்” (க.க.சொ.அகரமுதலி, ப.480.)
தத்தியோதனம் - (சம)
வெண்ணெய்யிட்ட தயிர்ப் பிரசாதம். (தொ.7.கல்.53.) (க.க.சொ.அகரமுதலி, ப.481.)
நிசதி நாலு சோறு - (வ)
நாள் ஒன்றுக்கு நான்கு அளவு சோறு என்றும், குறிப்பிட்ட அளவில், நான்கு அளவு சட்டிச்சோறு என்றும் கொள்ளலாம். இக்காலத்தில், திருக்கோயில், அன்ன அறச்சாலை ஆகியவற்றில் “ஒருபட்டைச்சோறு” என்ற அளவில் கொடுக்கப்படும் அளவினை ஒப்பிட்டறியலாகும். இவ்வளவை அக்காலத்தில் இரு நாழி அரிசி கொண்டு ஆக்கிய சோறு ஒரு சட்டிச்சோறு என்பதேயாம்.
“இப்பொன் கடைகூட்ட வந்தார்க்கு நிசதி நாலு சோறு குடுப்போமானோம்.” (தெ.கல்.தொ.12.பகு.1.கல்.100.) (க.க.சொ.அகரமுதலி,ப.301.)
திரிகாலந்திருவமுது - (சம)
காலை, மதியம், இரவு ஆகிய மூன்று சந்தியாக் காலங்கள், பெரும்பான்மையும் இம்மூன்று காலங்களிலேயே கோயில்களில் வழிபாடு நிகழ்தல் வழக்காம்.
“திருவண்ணாமலையில் எழுந்தருளுவித்த பிச்ச தேவர்க்கு திரிஸந்தி முக்காலுந் திருவமுது செய்தருளச் சிறுகாலைக்கு உச்சியம் போதைக்கு - இரவைக்கு திருவமுதரிசி இரு நாழியும்.” (தெ.கல்.தொ.8. கல்.66.) (க.க.சொ.அகரமுதலி, பக் 242.)
திருப்பாவாடை - (சம)
இறைவனின் சிறப்புப் பிரசாதமாக துாய வெண்மையான ஆடை விரிப்பன் மீது படைக்கப் பெறும் சிறந்த முறையில் சமைக்கப்பட்ட உயர்ந்த பொங்கல்.
“திருப்பாவாடைக்கு நாங்கள் அளக்கும் குத்தல் அரிசி இருகலம்” (திருநெல்வேலி கல்வெட்டு, தெ.கல்.12.கல்.244.)
திருப்பாவாடைப்புறம் - (சம)
தில்லை அம்பல நடராச பெருமானுக்குத் தைப்பூசத் திருநாளில் இட்டுப் படைக்குஞ் சிறப்பான அமுது படையல் “திருப்பாவாடை” என்று பெயர் என்று வரையப் பெற்றுள்ளது. இச்சிறப்புப் படையலுக்கு உரியதாக நிவந்தம் செய்யப்பட்ட இறையிலி நிலம் திருப்பாவாடைப் புறம் என்று பெயர் பெறும்.
“திருத்தைப்பூசைத் திருநாளிலே திருப்பாவாடைச் சிறப்பாக அமுதுபடிக்கு - பதின்கலனுக்குப் போனகப் பழவரிசியும்” (கல்வெட்டு அறிக்கை எண் - 106/ 1934/ 35 )
“அச்சிறுபாக்கத்து உடையார் ஆட்சி கொண்டருளிய மஹாதேவர் நந்தவனத்து மண்டபத்து ஏறியருளின நாள் திருப்பாவாடை அமுது செய்தருள விட்ட நீர் நிலமாவது.” (தெ.கல். தொ.7, கல். 452.) (க.க.சொ.அகரமுதலி, ப.252.) இந்த செய்தியின் வழி இதனை நாம் மேலும் தெள்ளிதாய் அறியலாம்.
திருமந்திர போனகப்புறம் - (சம)
கோயில் சுவாமிக்கு சந்தி வழிபாட்டின் போது மந்திரம் ஓதி நிவேதன உணவுப் படைப்பதற்குரிய வருவாயாக வைக்கப் பெறும் நிலம் அல்லது ஊர்.
“நாயனாற்கு திருமந்திரப் போனகப்புறமாக விட்ட என்பவற்றில் மடப்பள்ளியில் குமிழியூரும், தீர்த்தமும் ஆக இவ்விரண்டருளும்” (குலோத்துங்கசோழன், தெ.கல்.தொ.கல்.130.) (க.க.சொ.அகரமுதலி, ப.255.)
திருவக்கிரம் - (சம)
திருஅக்கிரம். மேலான முதல் மரியாதை உணவு. சிறந்த அக்கிரதானம்.
முதற் குலோத்துங்கன் ஆட்சியில் திருவகீந்திரபுரம் திருமால் கோயிலில் நாளும் பத்துக்கலம் திருவக்கிர உணவு தயாரிக்கப்பட்டு வைணவ பிராமணர்களுக்கு அளிக்கப்பட்டது.
“திருவயிந்திரபுரத்தாழ்வானுக்கு திருநாட்களில் எழுந்தருளவும் இக்கோயிலில் நித்தம் பத்துக்கலம் திருவக்கிரம் உண்ணக் கடவதாகவும்” (முதற் குலோத்துங்கன் - கி.பி.1092, தெ.கல்.தொ.7, கல்.760.) (க.க.சொ.அகரமுதலி, ப.259.)
திருவமிர்து - திருவமுது.
கோயில்களில் இறைவழிபாட்டிற்கெனத் துாய முறையில் ஆக்கப் பெறும் நிவேதன உணவு.
“குலேங்கிழார்கள் கருமாரச்சேரி புலம் ஒற்றியிட்டு நாற்பத்தைங்காடி நெல் பொலியூட்ட, திருவடிகட்கு திருவமிர்து முட்ட” (தந்திவர்மன், கி.பி.789, கல்வெட்டு அறிக்கை, தொ.8, எண்.29.)
“நடுவிற்றளி தேவர் - திருவமுதுக்கு நில நிவந்தம் செய்தபடி” தெ.கல்.தொ.5, கல்.612.)
“திருவமுது காட்டுவா னொருவனும்” தெ.கல்.தொ.19, கல்.62.)
“பரமேஸ்வரர்க்கு திருவமிர்தும் திருவமிர்துக்கு வேண்டுவனவும்” (புதுக்.கல்.63.) (க.க.சொ.அகரமுதலி, ப.250.)
துாக்குத்தல் அரிசி - (சம)
இறைவன் நிவேதனத்திற்குரியதாக துாய்மையுடன் நெல்லைக் குற்றித் தீட்டிய அரிசி.
“பிள்ளையார் கயவதியார்க்கு நான் போனகத்துக்கு வைத்த துாக்குதல் அரிசி இரு நாழி.” (முதல் இராசராசன்,கி.பி.996, தெ.கல்.தொ.7.கல்.841.) (க.க.சொ.அகரமுதலி, ப.272.)
நைவேத்தியம் - (சம)
இறை வழிபாட்டிற்குரியதாகப் படைக்கும் துாய உணவு. (க.க.சொ.அகரமுதலி, ப.484.)
பண்ணியாரம் - (சம)
இனிப்புப்பண்டம். விக்கிரம சோழன் ஆட்சியில் சின்ன காஞ்சிபுரம் அருளாளப் பெருமாளுக்குரிய நிவேதன அமுதுகளின் ஒன்றாக நிவந்தம் செய்யப் பெற்றுள்ளது. “பண்ணிகாரம்” என்றும் பெயர் பெறும்.
“பண்ணியார தட்சணைக்கு அரிசி இருநாழி” (பத.கல்.தொ.3.3, பக்.187.)
“திருமுன்பு சேவிக்கும் திருக்காட்சிகளுக்கும் திருப்பண்ணி காரத்துக்கும் விட்ட நிலம்” (தெ.கல்.தொ.8, கல்.43.) (க.க.சொ.அகரமுதலி, ப.330.)
பருப்புப்போனகம் - (சமு)
பருப்பிட்டுச் செய்த பொங்கல், கறியமுது.
“இரு நாழி துாக்குத்தலரிசியால் இராப்போனகம் காட்டுவார் ஆனார்கள்.” (இந்திய கல்வெட்டுத்துறை வெளியீடு - தொ.8.கல்.29.)
“வெஞ்சனத்துக்கு பருப்பு அமுதுக்கு நாள் ஒன்றுக்கு பயிறு நாழி.” (தெ.கல்.தொ.5.கல்.252.) (க.க.சொ.அகரமுதலி, ப.342.)
பாவாடைப்புறம் - (சம)
வெண் விரிப்பில் இட்டுப் படைக்கும் சிறந்த பொங்கல் பிரசாத நிவந்தம் நிகழ மூலதனமாக வைக்கப் பெற்ற நிலம். இச்சிறப்புப் பெற்ற படையல் தில்லை நடராசப் பெருமானுக்கு ஆண்டு தோறும் தைப்பூசத் திருநாளில் நிகழ்வதாகும்.
“திருத்தைப் பூசத் திருநாளிலே திருப்பாவாடைச் சிறப்பாக அமுதுபடிக்கு ஊர் இளங்காலாலே பதின்கலனுக்குப் போனகப் பழுவரிசியும் இரு கல மணிப்பருப்பும், நாலு நிறை சர்க்கரையும், நுாறு தேங்காயும், பத்து பலாக்காயும் குலோத்துங்க சோழ திருமடைப்பள்ளி பண்டாரத்திலே முதலிடவும் கயிலாய தேவன் “திருப்பாவாடைபுறம்” என்று திருமாளிகையிலே கல்வெட்டுவித்து” (சிதம்பரம் கல்வெட்டு, (தெ.கல்.தொ.12.கல்.171.) (க.க.சொ.அகரமுதலி, ப.359.)
பாற்போகம் - (சம)
பசுக்களின் வழியே பாலாகப் பெறும் வருவாய்.
“சாவா மூவாப் பசுவாக காத்து மேச்சு ரட்ஷித்து இவையிற்றில் பாற் போகம் கொண்டு நிசதம் உழக்கு நெய்யில் ஒரு நொந்தா விளக்குப் பகலும் இரவும் எரிப்போமானோம்.” (முதல் இராசேந்திரன், தெ.கல்.தொ.4.கல்.393.) (க.க.சொ.அகரமுதலி, ப.358.)
பிரசாதம் - (சம)
சுவாமிக்கு நிவேதனம் செய்த திருவமுதாகிய உணவு பிறருக்கு அளிக்கும் போது பிரசாதம் எனப்படும்.
“இவ்வமுது செய்த பிரஸாதத்தினால் செம்பாதி அபூர்வி ஸ்ரீ வைஷ்ணவராய் வந்தார்க்கு இடுவதாகவும்” (மணிமங்கலம் கல்வெட்டு)
பிரசாதம் செய்தல் - (வ)
அரசன் ஆணை இடுதல். (பிரசாதம் - மரியாதைச்சொல்.)
“உடையார் ஸ்ரீராஜராஜ ஈஸ்வரம் உடைய நாயனார் பிரசாதம் செய்தருளின திருமுகப்படி இறையிலி ஆன குடிகாடு.” (உலகுடை நாயனார் - அரசன்) (புதுக்.கல்.155.) (க.க.சொ.அகரமுதலி, ப.364.)
புள்ளிச்சோறு - (வ)
இன்ன அளவென்று முன்னமே திட்டப்படுத்தப்பட்ட சோறு (அறச்சோறு.)
பெருந்திருவமிர்து - (சம)
கடவுளுக்குப் பெரிய அளவில் படைக்கும் நிவேதனம். பாவாடைச்சோறு.
“ஒரு போழ்து சிறு காலை நானாழி அரிசியால் பெருந்திருவமுது காட்டுவதாகும். (தெ.கல்.தொ.8.கல்.10.) (க.க.சொ.அகரமுதலி, ப.380.)
போனகம் - (சம)
போசனம், உணவு. நிவேதன உணவினைக் குறிக்கும்.
“இரு நாழி துாக்குத்தலரிசியால் இராப்போனகம் காட்டுவாரானார்கள்.” (திருவல்லிக்கேணி கல்வெட்டு) (இந்திய தொல் பொருள் தொகுப்பு, 8, கல்.29.)
“திருவண்ணாமலை நாயனார்க்கு திருமந்திரப் போனகப் புறமாக விட்ட பற்றில்” (தெ.கல். தொ.8, கல்.130.)
போனகம் என்பது உணவு என்பதனைக் கம்பநாடாரும்,
“வானகம்தனின் மண்ணினின் மன்னுயிர் போனகந்தனக்கென்று எனும் புந்திய” என்று - தடாகை - படலத்துக் கூறுவர். (க.க.சொ.அகரமுதலி, ப.393.)
விரவிக் காட்டுந் திருவமிர்து - (சம)
நெய் கலந்து ஆக்கி நிவேதிக்கும் பிரசாத உணவு. (க.க.சொ.அகரமுதலி, ப.451.)
வெண் போனகம் - (சம)
வெண் பொங்கல் - பிரசாதம். (க.க.சொ.அகரமுதலி, ப.460.)
இவ்விதம் பல்வகை உணவுகள் பூசை வழிபாட்டில் இருந்தன என்பதை அறியலாம்.
மேற்காணும் தகவல்களுக்குத் துணை நின்ற நுால்கள்:
1. கோயிற்களஞ்சியம் கோயில் அறிமுகம், சிறப்பாசிரியர் கோ.மு.முத்துசாமிப்பிள்ளை. இ.ஆ.ப., தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர். (தமிழ்ப்பல்கலக்கழக வெளியீடு, திருவள்ளுவர் ஆண்டு 2022, புரட்டாசி - அக்டோபர் 1991. முதற்பதிப்பு - 1991)
2. கல்வெட்டுக் கலைச்சொல் அகரமுதலி, (கி.பி.7 முதல் 12 ஆம் நுாற்றாண்டு வரை), சி.கோவிந்தராசன், பதிப்புத்துறை, முதற்பதிப்பு - 1987, மதுரை காமராசர் பல்கலைக்கழகம். மதுரை.