அதிகார நந்தி வாகனம் என்பது கோயில் திருவிழாக்களின் பொழுது, உற்சவராக வலம் வரும் சிவபெருமான் எழுந்தருளும் வாகனங்களில் ஒன்றாகும். அதிகார நந்தி என்பவர் கயிலாயத்தின் வாயில் காவலன் ஆவார். இவர் சாரூப்ய நிலை எனப்படும் நிலையில் உள்ளார். இவர், சிவபெருமானைப் போன்றே மூன்று கண்களும், நான்கு கைகளும், கையில் மானும் மழுவும் ஏந்திய நிலையில் இருக்கிறார். சிவபெருமானை தரிசனம் செய்ய ஏற்றவர் யார் என்று அறிந்து அனுமதி தரும் பணியை இவரேச் செய்து வருகிறார்.
அதிகார நந்தி வாகனமானது நான்கு கைகளுடன் முன்னிரு கைகளை முன்புறமாக ஏந்தியபடியும் பின்னிரு கைகளில் உடுக்கை, திரிசூலம் ஆகியவற்றை ஏந்தியபடி ஒரு காலை முட்டியிட்டு மறுகாலை முன்புறமாகப் பதித்த நிலையில் உள்ளது. மரத்தால் அமைக்கப்படும் இவ்வாகனம் சேதமடைந்து விடாமலிருக்க, அதன் மீது பித்தளை, வெள்ளி, தங்கம் போன்ற உலோகத்தகடுகளால் காப்புகள் செய்யப்பட்டு போடப்படுகின்றன. தமிழ்நாட்டின். கிருட்டிணகிரி மாவட்டம், ஒசூர் சந்திர சூடேசுவரர் கோயில் மாசி மாதம் நடக்கும் தேர் திருவாழாவின் போது தேர்த் திருவிழாவுக்கு முந்தைய நாட்களில் நடக்கும் உற்சவங்களில் அதிகார நந்தி வாகன உற்சவமும் ஒன்று. இதே போன்று, மயிலாப்பூர் சிவாலயத்திலும் அதிகாரநந்தி வாகனம் பயன்பாட்டிலிருக்கிறது.