திருமால் உறையும் தலங்களை ஆழ்வார்கள் மங்களாசாசனம் செய்துள்ளனர். அப்படி அவர்கள் போற்றித் துதித்துப் பாடிய தலங்கள் மொத்தம் 108. இவை அனைத்தும் திவ்யதேசங்கள் எனப்படுகின்றன. இவற்றுள் சோழநாட்டிலமைந்த திருத்தலங்கள் 40. இதில் பெரும்பான்மையான திருத்தலங்களைத் திருமங்கையாழ்வார் பாடியுள்ளார். இந்த சோழத்திருத்தலங்களுள் திருக்கண்ணமங்கைத் தலமும் ஒன்று. இந்தத் திருக்கண்ணமங்கைத் தலம் பஞ்ச கிருஷ்ணத் தலங்களில் ஒன்றாகும்.
இத்திருத்தலம் கும்பகோணம் அருகிலுள்ள திருநறையூரை அடுத்து இருக்கிறது. இத்தலத்தைப் பற்றிய பாசுரம், திருமங்கையாழ்வாரின் பெரிய திருமொழியில், ஏழாம்பத்தில், பத்தாம் திருமொழியாக வருகிறது. 1638ஆம் பாசுரத்திலிருந்து 1647ஆம் பாசுரம் வரை உள்ள 10 பாசுரங்கள் திருக்கண்ணமங்கை பற்றியது. மேலும் சில பாசுரங்களும் உள்ளன. இந்தப் பாசுரங்கள் அனைத்தும் மிகச் சிறப்பு வாய்ந்தவை. ஏனெனில், இறைவனின் அனைத்துப் பெருமைகளையும் உடைய பெருமான் உறையும் இடம் திருக்கண்ணமங்கையாகும்.
இந்தப் பாசுரங்கள் குறித்த சில தகவல்களைப் பற்றிப் பார்ப்போம்.
திருநின்றவூர் தலத்தைத் தரிசிக்க சென்ற திருமங்கையாழ்வார், அங்கு உறையும் பக்தவத்சலனின் அழகில் சொக்கிப் போய் பாசுரம் எதுவும் பாடாமல் மறந்து அங்கிருந்து சென்று விட்டார்.
இதனைக் கண்ட தாயார் வருத்தமுற்று, திருமங்கையாழ்வாரிடம் சென்று பாசுரம் பெற்று வர வேண்டும் என்று பக்தவத்சலனிடம் தெரிவிக்கிறார்.
திருமங்கையாழ்வார் அப்போது மாமல்லபுரம் சென்று விட்டார்.ஆழ்வாரிடம் சென்று அருட்காட்சி அளித்த இறைவன் அவரிடம், பாசுரம் ஒன்றைக் கேட்டு வாங்கி வந்தார்.
அந்த பாசுரத்தைக் கேட்ட தாயார், இந்த ஒரு பாசுரம் போதாது, மற்றுமொரு பாசுரம் வாங்கி வாருங்கள் என்று மீண்டும் அனுப்பி வைத்தார்.
அதற்குள் ஆழ்வார் கண்ணமங்கை வந்து விட்டார். அங்கும் இறைவன் அவருக்கு அருட்காட்சி அளித்து மற்றுமொரு பாசுரத்தைப் பெற்றார். அந்தப் பெருமை மிக்க தலம்தான் திருக்கண்ணமங்கை.
திருக்கண்ணமங்கையில் இருக்கும் இறைவன் பெரிய கடல் போன்றவன்; காளை போன்றவன்; அன்பில் பெண் போன்றவன்; முனிவர்கள் செய்கின்ற தவத்தின் பயனாய் இருப்பவன்; முத்துக்குவியலைப் போன்றவன்; பக்தர்களுக்கு உயிராய் இருப்பவன்; அரும்பு போன்று இளமை மிக்கவன்; மலர்ந்த முகம் போன்ற முகத்தில் என்றூம் தயையுடன் இருப்பவன்; இனிய கரும்பு போன்றன்; கனியைப் போன்றவன். அப்படிப்பட்ட இறைவன் இருக்குமிடம் திருக்கண்ணமங்கை ஆகும்.
தவவடிவானவன்; பரமபதம் அளிக்க வல்லவன்; நம்பாதவர்களுக்குப் பொய்யானவன்; பாஞ்சசன்னியத்தைக் கையில் ஏந்தியவன்; கருநிறங் கொண்ட கடல் போன்றவன்; ஆலினிலை மேல்பள்ளி கொண்டவன்; மூன்று காலங்களையும் நடத்துபவன்; காலங்களுக்கெல்லாம் தலைவன்; வெல்லம் போன்றவன்; கரும்பைப் போல் இனிப்பானவன்; இப்படிப்பட்ட பெருமை கொண்ட எம்பெருமானைக் கண்ணமங்கையுள் கண்டு கொண்டாராம் திருமங்கையாழ்வார்.
நமக்கெல்லாம் அருளும் ஈசன்; வாசம் மிகுந்த கூந்தலைக் கொண்ட பார்வதிக்கு இடப்பாகம் அளித்த பரமனைத் தன் மேனியில் கொண்டவன்; சந்திரன் தவழும் ஆகாயமானவன்; சுடரானவன்; வேங்கடமலையின் உச்சியானவன்; நம்மால் வணங்கப்படுபவன்; இரவும் பகலும் இவனின் கட்டுப்பாட்டில் இருக்கும் தலைவனை நான் கண்டு கொண்டது திருக்கண்ணமங்கையில்தான் என்று திருமங்கையாழ்வார் பாடுகிறார்.
பூதனையில் மார்பில் சுவைத்து அவளை அழித்தவன்; தெளிவான அற்வுடையவர்களால் வணங்கப்படும் தேவன்; மாயன்; திருக்கோவலூரில் முதலாழ்வார்களுக்கு இடையே நின்ற தேவன்; அந்தணர் சிந்தனையுள் சோதியாய் இருப்பவன்; என் தந்தை; தளர்வுற்ற நேரத்தில் நிதியாகவும், இரத்தினமாகவும் இருக்கும் தலைவனை கண்ணமங்கையில்தான் கண்டாராம் திருமங்கையாழ்வார்.
காளை போன்றவன்; இமயமலையில் உள்ள திருப்பிரிதியில் உறையும் ஈசன், இம்மைக்கும் மறுமைக்கும் மருந்தானவன்; ஆற்றலுடையவன்; இவ்வுலகத்திற்கு அப்பாலுள்ள பரமபதத்தில் உறைபவன்; கையில் சக்கரம் தரித்திருப்பவன்; சிறந்த மணிக்குன்று போன்றவன்; திருநின்றவூரில் அருளுபவன்; முத்துக்குவியல் போன்றவன்; காற்றினைப் போன்றவன்; நீர் போன்ற குளிர்ச்சி பொருந்தியவன்; அப்படிப்பட்ட இறைவனை நான் நாடித் திருக்கண்ணமங்கையுள் கண்டு கொண்டேன் என்கிறார் திருமங்கையாழ்வார்.
வலிமையானவன்; குதிரை வடிவில் வந்த அசுரனை அழித்த பெருமை வாய்ந்தவன்; திருமகளின் மணாளன்; தேவர்களுக்கெல்லாம் தேவனானவன்; பவளத்தின் சுடர் போன்றவன்; ஏழுலகமாக இருப்பவன்; பிரளயகாலமாக இருப்பவன்; கையில் சுதர்சன சக்கரம் ஏந்தியவன்; அந்தணர்கள் நெறியாய் நிற்பவன். இப்படிப்பட்ட இறைவனை செங்கழுநீர் மலர் மலரும் திருக்கண்ணமங்கையுள் கண்டு கொண்டாராம் திருமங்கையாழ்வார்.
பிரம்மனின் தந்தை; தேவாதி தேவன்; மும்மூர்த்திகளின் தலைவன்; சோதியாய் இருப்பவன்; விண்ணானவன்; மண்ணானவன்; நரசிம்மன்; கேசிகாசுரனை அழித்த கேசவன்; வடமுகாக்கினி போன்றவன்; கடுஞ்சினம் கொண்ட யானை போன்றவன்; கன்றக வந்த வ்த்சாசுரனை விளாமரத்தில் அடித்துச் சாய்த்தவன்; பூதனையை வதைத்தவன்; இராவணனை வதைக்க ரகு வம்சத்தில் வந்து உதித்தவன்; அடியார்கட்கு அமுதன்; சங்கீதமானவன்; அந்த சங்கீதத்திற்குச் சாரமாய் இருப்பவன்; பாலினுள் நெய் மறைந்திருப்பதைப் போல எங்குமிருக்கும் இறைவன் ஆனால் நம் கண்களுக்கு மறைந்து இருப்பவன்; வேள்வித்தீயாய் இருப்பவன்; தீபச்சுடர் போல் ஒளிர்பவன்; பூமியைப் போல் பொறுமை வாய்ந்தவன்; மலை போல் வலைமை வாய்ந்தவன்; நீர் போன்றவன்; சந்திரன் போன்று பிரகாசமானவன்; கண்கள் திருப்தி கொள்ள கண்ணமங்கையுள் நின்றவன்.இப்படிப்பட்ட பெருமைகளையெல்லாம் கொண்ட கண்ணமங்கை பெருமானைத் தரிசித்து, திருமங்கையாழ்வார் பாடிய பாடல்களைப் பாடிவர, சந்திரன் தவழும் தேவருலகில் மகிழ்வுடன் இருப்பர் என்கிறார் ஆழ்வார்.
இந்தக் கலியுகத்தில் இறைவன் அர்ச்சாவதாரமாய் அருளுபவன். அப்படிப்பட்ட இறைவனை ஆழ்வார்கள் பாடல்களில் பாடி இறைத் தொண்டையும், தமிழ்த் தொண்டையும் ஒருங்கே செய்துள்ளனர். இவ்வளவு பெருமைகளையும் ஒருங்கே பெற்ற திருக்கண்ணமங்கை பக்தவத்சலனை வாழ்வில் ஒருமுறையாவது கண்டுவிட வேண்டும். அதுவே நம் கண்களுக்குப் பயனுடையதாகும்.
மேலும், திருமங்கையாழ்வார் பத்தாம் பத்தில், பதினெண் திருப்பதிகள் பற்றிப் பாடியுள்ளார். அதில்
“நெருநல் கண்டது நீர்மலை, இன்று போய்
கருநெல் சூழ் கண்ணமங்கையுள் காண்டுமே”
என்று கூறுகிறார். கண்ணமங்கைக்கு என்று போவது? இன்று போய் காண் என்கிறார்.
“பூணார மார்வனைப் புள்ளூரும் பொன்மலையை
காணாதார் கண் என்றும் கண்ணல்ல கண்டாமே”
என்று திருமாலைக் காணாத கண்கள் கண்களே இல்லை என்று அவயங்களின் பயன் பற்றிப் பேசும் போது திருமங்கையாழ்வார் பாடுகின்றார்.
பெருமை கொண்ட கண்ணமங்கை நாதனை, திருநின்றவூர் பெருமான் விசயம் செய்த கண்ணமங்கைக் கண்ணனை, பக்தவத்சலனை, பெரும்புறக் கடலை இந்தக் கண்களால் நாமும் தரிசிக்கலாமே...!
திருத்தலம் குறித்த குறிப்புகள்
இறைவன் - பக்தவத்சலப் பெருமாள்
தாயார் - அபிசேகவல்லி
தீர்த்தம் - தர்சன புஷ்கரணி
மங்களாசனம் - திருமங்கையாழ்வார் பாடியது (1638 - 1647, 1848, 2008, 2673, 2674 - மொத்தம் 14 பாசுரங்கள்)