'ஆன்மா சென்று சேருவதற்குரிய இடம்' என்ற பொருளில் 'ஆலயம்' என்ற சொல் வழங்கப்படுகிறது. நமது உடம்பை அடிப்படையாக வைத்தே ஆலயங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நமது பாதங்கள் கோபுரமாகவும், முழங்கால் ஆஸ்தான மண்டபமாகவும், துடை நிறுத்த மண்டபமாகவும், தொப்புள் பலிபீடமாவும், கழுத்து அர்த்த மண்டபமாகவும், தலை கர்ப்பக்கிரகமாகவும் அமைந்துள்ளன.
கோபுரத்தின் தத்துவம்
கோயில் கோபுரம் இறைவனின் திருவடியைக் குறிக்கும். கோயிலின் வெளிக்கோபுர வாயிலின் மேல் உள்ள மாடங்களை ஒற்றைப் படையில் அமைப்பார்கள். இவை பின்வரும் தத்துவங்களை விளக்குகின்றன:
5 மாடங்கள் ஐம்பொறிகளைக் குறிக்கும்.
7 மாடங்கள் ஐம்பொறிகளுடன் மனம், புத்தி ஆகியவற்றையும் குறிக்கும்.
9 மாடங்கள் மேற்கண்ட ஏழுடன் - சித்தம், அகங்காரம் ஆகியவற்றைக் குறிக்கும்.
கோபுரத்தில் எல்லா உருவங்களையும் அமைத்திருப்பதில் தத்துவ விளக்கம் அடங்கியிருக்கிறது. இந்த உலகத்தில் எல்லா ஜீவராசிகளுக்கும் இடமுண்டு என்பதே அந்தத் தத்துவம் ஆகும்.
இன்னொரு விளக்கமும் சொல்லப்படுகிறது: எல்லா உயிரினங்களிலும் இறைவன் இருக்கிறான்; பறவைகள், விலங்குகளிடமும் இருக்கிறான் என்பதை விளக்கவே கோபுரத்தில் அவைகளுக்கும் இடம் அளித்திருக்கிறார்கள்,
மதில் சுவர்கள் :கோயிலைச் சுற்றியுள்ள மதில் சுவர்கள் உலக பந்தத்திலிருந்து ஆலயத்தைத் தனியாகப் பிரிக்கிறது.
மதில் சுவர்களில் பூசப்படும் செம்மண், வெள்ளைப் பட்டைகள் மங்கலச் சின்னங்கள் மட்டுமல்ல; அவை சிவசக்தி ஐக்கியத்தை உணர்த்தவும் செய்கின்றன.
கொடிமரம் : நமது உடம்பில் முப்பத்திரண்டு கட்டுக்களைக் கொண்ட முதுகுத் தண்டு இருப்பதன் அடையாளமாகத் திருக்கோயில் கொடி மரம் அமைக்கப்படுகிறது.
கொடிமரத்தில் கொடி ஏறியவுடன் இறைவன் வந்து காட்சியளிக்கிறான். அதுபோல் முதுகெலும்பாகிய வீணாதண்டத்தில் செல்லும் குண்டலினி சக்தி ஐந்து ஆதாரங்களையும் கடந்து ஆறாவது ஆதாரமான சகஸ்ராரத்தை அடைந்தவுடன் சிவஜோதி காணப்படும்.
வழிபாடு செய்யும் முறைகள்
* கோயிலில் முதலில் கொடிமரம், பலிபீடம், நந்தி ஆகியவற்றிற்கு முன் போய் நின்று வணங்க வேண்டும்.
* பலிபீடத்துக்கும் சுவாமி சன்னதிக்கும் இடையில் குறுக்கே போவதும் வணங்குவதும் கூடாது.
* சன்னதிக்குள் சுவாமியின் வலக்கை எந்தப் பக்கம் இருக்கிறதோ, அந்தப் பக்கமாக நின்று எதிர்ப்புறம் உங்கள் தலை இருக்கும்படியாகத் தரையில் படிந்து நமஸ்காரம் செய்ய வேண்டும்.
* குறைந்தபட்சம் 3 முறையோ அல்லது 5, 7, 9, 12 முறைகளோ நமஸ்காரம் செய்ய வேண்டும்.
கோயில் பிராகாரத்தின் தத்துவம்
நாம் சாதாரணமாகக் கோயிலுக்குச் செல்லும் போது வெளிப்பிரகாரம், உள்பிரகாரம், அதனுள் உள்பிராகாரம் என்ற முறையில் வலம் வருகிறோம். உலகப்பற்றைப் படிப்படியாக விட்டுவிட வேண்டும் என்பதையே இந்தப் பிரகாரங்கள் உணர்த்துகின்றன. கர்ப்பக்கிரகத்தின் முன் நிற்கும்போது உலகப்பற்று முற்றிலுமாக நீங்கிவிடும்.
கோயில் ஐந்து பிராகாரங்களுடன் கூடியது. நம் உடம்பிலும் அன்னமய கோசம், பிராணமய கோசம், மனோமய கோசம், விக்ஞான மயகோசம், ஆனந்தமய கோசம் என்ற ஐந்து கோசங்கள் உள்ளன.
ஒவ்வொரு பிராகாரத்தை வலம் வரும் போது, ஒவ்வொரு புலனையும் அடக்கிக் கடவுளிடம் மனதைச் செலுத்தி இறையருளைப் பெற முயற்சி செய்ய வேண்டும்.
பிராகாரத்தை வலம் வரும் போது இடமிருந்து வலம் வர வேண்டும்.
சிவன் கோயிலில் மூன்று தடவைகளாவது பிராகாரம் சுற்றுவது நல்லது. நம்முடைய வசதிக்கேற்ப 3, 5, 7, 9, 15, 21 இவற்றில் ஏதாவது ஒரு விதமாகப் பிரதட்சிணம் சுற்றி வரலாம். விரைவாகவோ, ஓடியோ பிராகாரம் சுற்றுவது கூடாது.
பிராகாரம் சுற்றி முடித்ததும் மீண்டும் சன்னதிக்கு வெளியே நின்று வணங்க வேண்டும். இரு புறங்களிலுமுள்ள துவார பாலர்களை வணங்கி, அடுத்ததாக நந்தியையும் வணங்கி சிவதரிசனம் செய்ய அனுமதி பெற்று, விநாயகரை மூன்று முறை தோப்புக்கரணம் போட்டு வணங்கிவிட்டுப் பின் உள்ளே சென்று, பின் சிவலிங்க தரிசனமும் வணக்கமும் செய்ய வேண்டும்.
அர்ச்சனை, நிவேதனம், கர்ப்பூர ஆரத்தி ஆகியவை ஆனதும் இறைவனை மனமுருக வழிபட்டு, விபூதி வாங்கிக் கீழே சிந்தாமல் நெற்றியில் பூசிக்கொள்ள வேண்டும். அதன் பிறகு அம்பாளையும் வணங்கிவிட்டு குங்குமப் பிரசாதம் வாங்கி இட்டுக் கொள்ள வேண்டும்.
அம்மன் பிராகாரத்தை 4, 6, 8, 10 இப்படி இரட்டைப் படை எண்கள் கொண்டவாறு பிரதட்சிணம் (பிராகாரம்) சுற்றி வந்து சன்னதிக்கு வெளியே நின்று வணங்கி, துவார பாலகிகளை வணங்கி அதன்பின் உள்ளே சென்று அம்பிகையைத் தரிசித்து வணங்க வேண்டும்.
நாம் ஐம்புலன்களை அடக்கியேப் பக்தி செலுத்த வேண்டும். அப்போதுதான் பக்தியின் முழுமையான பயனைப் பெற முடியும். இந்தத் தத்துவத்தை கர்ப்பகிரகத்தின் சுற்றுப் பிரகாரங்கள் விளக்குகின்றன.