விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் வட்டத்தில் அமைந்துள்ள ஆதி திருவரங்கத்தில், உலகில் மிகப் பெரிய அரங்கநாதர் சயனக் கோலத்தில் இருக்கிறார். அருள்மிகு அரங்கநாயகி சமேதரராக அரங்கநாத சுவாமி சயனக் திருக்கோலத்தில் கிழக்கு முகமாக அருள்பாலிக்கும் இத்தலத்தின் பெருமை குறித்து, ஸ்கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.
ஒரு சமயம் சோமுகன் என்னும் அசுரன் வேதங்களை அபகரித்துக் கொண்டு கடலில் ஒளிந்து கொண்டான். முனிவர்கள் மற்றும் தேவர்களின் பிரார்த்தனைக்கு இரங்கி, ஸ்ரீமந் நாராயணன் அவனை சம்ஹரித்து வேதங்களை மீட்டு பிரம்மாவிற்கு இங்குதான் உபதேசித்திருக்கிறார். இங்கு சுருதகீர்த்தி எனும் அரசன் நாரத முனிவரின் வழிகாட்டுதலால் இறைவனைப் பக்தியுடன் போற்றி வணங்கிப் புத்திர பாக்கியம் பெற்றான். யக்ஞவராஹ கல்பத்தின் நாலாவது மன்வந்திரத்தில் தன் பத்தினிகளின் சாபத்தால் கலைகளின் ஒளியை இழந்த சந்திரன், இங்கிருக்கும் இறைவனைப் பூஜித்துத் தவமியற்றி மீண்டும் ஒளியைப் பெற்றான். சந்திரன் நீராடிய இடம் இன்றும் சந்திர புஷ்கரிணி என்னும் பெயருடன் இங்கு காணப்படுகிறது.
இக்கோயிலில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட ஸ்ரீராமர் சிலை, ஓர் இசைச் சிலையாக விளங்குகிறது. இதன் கை, பாதம் போன்றவற்றைத் தட்டும் போது பலவிதமான இசை ஒலிகள் எழுகின்றன. இக்கோயில் வளாகத்தில் காணப்படும் நெற்களஞ்சியம் மழையாலும், வெயிலாலும் உள்ளிருக்கும் தானியங்கள் பாதிக்கப்படாத வகையில் கட்டப்பட்டுள்ளது என்கின்றனர்.