வடலூர் வள்ளலாரின் ஓர் அருள்வாக்கு 'பதவி' என்பதாகும். அந்தப் பதவி என்ற கருத்தைத் தமது ஆன்மநேய ஒருமைப்பாட்டுச் சகோதரர்களுக்கு அவர் பின்வருமாறு விளக்கியிருக்கிறார்:
1. பசித்திரு, 2. தனித்திரு, 3.விழித்திரு.
'பசித்திரு' என்பதன் பொருள், அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளைப் பெறுவதற்கு உலகத்தில் உள்ள அனைத்து ஆன்மநேய அன்பர்களும் ஆண்டவர் மீது ஒருமையுடன் மனம் வைத்து அறிவாகிய பசியோடு தனித்து விழித்திருக்க வேண்டும் என்பதாகும்.
'தனித்திரு' என்பதன் பொருள், அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தயவாகிய அருளைப் பெறுவதற்கு உலகத்தில் உள்ள அனைத்து ஆன்மநேய அன்பர்களும் ஒருமையும்டன் ஆண்டவரின் திருவடியையே மனதில் பதிய வைத்து தனித்து விழிப்போடு இருக்க வேண்டும் என்பதாகும்.
'விழித்திரு' என்பதன் பொருள், அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருள் - தயவு ஆகிய இந்த இரண்டும் அனைத்து ஆன்மநேய அன்பர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக, இச்சமுதாயத்தில் மக்களைப் பற்றி இருக்கும் உலகாச்சார, சங்கல்ப விகல்பங்களும் மற்றும் வர்ணம், ஆசிரமம் போன்ற விகல்பங்களும் நம் மனதைப் பற்றாத வகையில் பாதுகாத்து அருள் ஒன்றைப் பற்றியே விழித்திருக்க வேண்டும் என்பதாகும்.
வள்ளலாரின் ஒரு பாடல், “ஐயா நான் வேண்டுதல் கேட்டருள் புரிதல் வேண்டும்" என்று துவங்குகிறது. இந்தப் பாடலில் ஒரு வரி ‘இறந்தவுயிர் தமை மீட்டு மெழுப்பியிடல் வேண்டும்' என்று அமைந்துள்ளது.
இங்கு அவர் குறிப்பிட்டது உண்மையில் இறந்தவர்களை அல்ல; துன்மார்க்கிகளையும், ஜீவகாருண்யம் செய்யாமல் இருப்பவர்களையுமே 'இறந்தார்' என்று இந்தப் பாடல் வரியில் அடிகளார் குறிப்பிட்டிருக்கிறார்.