வத்தலக்குண்டு சென்றாயப் பெருமாள் கோயில்
உ. தாமரைச்செல்வி
“பூசாரி சொல்லும் வாக்கே பலிக்கும்” என்று பெருமாளே ஆசிர்வதித்ததால் ஒரு கோயிலுக்கு அருள்வாக்கு கேட்டு அதிக அளவில் பக்தர்கள் வந்து செல்கிறார்கள். 400 ஆண்டுகளைக் கடந்தும் அங்கே இந்த வழக்கம் பின்பற்றப்பட்டு வருகிறது. வத்தலக்குண்டு சென்றாயப் பெருமாள் கோயில் தான் அது. வாழ்க்கையில் தாங்கள் படு கஷ்டங்களுக்கு விடுவு தேடி இந்தக் கோயிலுக்கு வந்த பக்தர்களுக்குக் கிடைத்த பலனை இங்குள்ள மலையேறும் படிக்கட்டுகளே சொல்கின்றன. ஆம்! வத்தலக்குண்டு சென்றாயப் பெருமாள் கோயிலுக்குச் சென்று வந்தவர்கள் மலையேறுவதற்காக காணிக்கையாக அமைத்துக் கொடுத்த படிக்கட்டுகளுமே அதற்கு சாட்சியாக இருக்கின்றன.
தல வரலாறு
400 ஆண்டுகளுக்கு முன்பு சென்னமநாயக்கர் என்பவர் மாடுகள் மேய்ப்பதைத் தொழிலாகக் கொண்டிருந்தார். அவர் மேய்த்துக் கொண்டிருந்த மாடுகளில் ஒன்று தினமும் காணாமல் போய்விடும். ஆனால் வீட்டுக்குத் திரும்பும் மாலை வேளையில் திரும்பி வந்து விடும். இப்படி சில மாதங்களாக நடந்து கொண்டிருந்தது.
சென்னமநாயக்கருக்கு இந்தப்பசு மட்டும் அப்படி எங்கு செல்கிறது என்று அறியும் ஆவல் ஏற்பட்டது. அடுத்த நாள் அந்தப்பசு குன்று போலிருந்த அருகிலுள்ள மலையின் மேல் ஏறத் தொடங்கியது. இவரும் அந்தப் பசுவைப் பின் தொடர்ந்தார். அந்தப்பசு செல்லும் வேகத்திற்கு சென்னமநாயக்கரால் அதைத் தொடர்ந்து செல்ல முடியாவிட்டாலும் பசு குன்றின் மேல்பகுதிக்குத்தானே செல்கிறது. அங்கிருந்து எங்கு சென்றாலும் உச்சியிலிருந்து அந்தப் பசுவைக் கண்டுவிட முடியும் என்கிற எண்ணத்தில் மேலே சென்றார்.
அங்கு அவருக்கு ஒரு அதிசயம் காத்திருந்தது. அங்கே அவர் தேடிச் சென்ற பசு இருந்தது. அந்தப் பசுவின் மடியில் குழந்தை ஒன்று தங்க முக்காலியில் அமர்ந்து பாலருந்திக் கொண்டிருந்தது.
சென்னம நாயக்கருக்கு ஆச்சர்யம். அந்தப் பசுவோ குட்டி எதுவும் ஈனாத பசு. அது பால் கொடுக்க தெய்வ வடிவில் குழந்தை ஒன்று பாலருந்துவதைப் பார்த்த அவர் அவரையுமறியாமல் தன் கைகளைக் குவித்து வணங்கினார்.
குழந்தை வடிவிலிருந்த பெருமாள் சென்னமநாயக்கரைப் பார்த்து, “நான் இங்கு சென்றாயப் பெருமாளாக வாசம் செய்கிறேன். இங்கு என்னை நீயும் உன் குடும்பத்தினரும் வணங்கி வழிபட்டு வாருங்கள்.அருள் பாலிக்கிறேன்” என்றார்.
உடனே சென்னமநாயக்கர், “எனக்குத்தான் வாரிசே இல்லையே...” என்றார்.
பெருமாளும் “உனக்கு வாரிசும் அளிக்கிறேன். உங்கள் வாக்குப் பலிக்கவும் அருள் புரிகிறேன்” என்று கூறி மறைந்து விட்டார்.
சென்னம நாயக்கருக்கு ஒரு வருடத்தில் வாரிசு பிறந்தது.
அதன் பிறகு சென்னம நாயக்கர் மலையுச்சியில் சென்றாயப் பெருமாளுக்குக் கோயில் கட்டி வணங்கி வந்ததுடன் அங்கு வரும் பக்தர்களுக்கு குறைகளைக் கேட்டு சென்றாயப் பெருமாள் அருளுடன் அருள் வாக்கு சொல்லவும் தொடங்கினார்.
அன்று முதல் இன்று வரை சென்னம நாயக்கரின் வாரிசுகளில் தலைப்பிள்ளையாக இருப்பவர்கள் இந்தக் கோயிலில் பூசாரியாக இருப்பதுடன் அருள் வாக்கு சொல்வதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

அருள் வாக்கு
கோட்டைப்பட்டியைச் சேர்ந்த சென்னம நாயக்கர் என்பவரது வாரிசுகளில் கோயிலில் பூசாரியாக இருப்பவர் சென்றாயப் பெருமாளுக்குப் பூசை செய்துவிட்டு பக்தர்கள் கோரிக்கைகளுக்கு அருள் வாக்கு சொல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். கோயிலின் கர்ப்பகிருகம் முன்பு பூசாரி அமர்ந்திருக்கின்றார். அவர் முன்பு அமரும் பக்தர் தங்கள் கோரிக்கையை பூசாரியிடம் சொல்கின்றார். பூசாரி தன் கையிலுள்ள சோளிகளை உருட்டிக் கீழே போட்டு அந்தச் சோளியின் எண்ணிக்கையைக் கொண்டு பக்தர்களுக்கு அருள் வாக்கு சொல்கிறார். இப்படி பக்தர்கள் ஒவ்வொருவராக பூசாரியிடம் அருள் வாக்கு கேட்கின்றனர். பெருமாளுக்கு உகந்த நாளான சனிக்கிழமைகளில் பக்தர்கள் அதிக அளவில் அருள் வாக்கு கேட்பதற்காக வருகின்றனர். இதற்காகப் பக்தர்கள் அளிக்கும் காணிக்கை எதுவாயினும் பூசாரி பெற்றுக் கொள்கிறார். இந்தக் கோயிலில் தற்போது கண்ணன் என்கிற சென்னம நாயக்கர் பூசாரியாகவும் அருள் வாக்கு சொல்பவராகவும் இருந்து வருகின்றார்.
கோயில் அமைப்பு
பழைய வத்தலக்குண்டு எனப்படும் இடத்திலுள்ள இந்தக் கோயில் தரையிலிருந்து சுமார் 800 அடி உயரத்திலுள்ள குன்றின் மேல் உள்ளது. மலைக்கு எளிமையாகச் செல்ல படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மலைப்படிக்கட்டுகளின் வழியே நடந்து செல்பவர்கள் இடையிடையே ஓய்வெடுத்துக் கொள்ள சிறு சிறு மண்டபங்களும் அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்தப் படிக்கட்டுகளும், மண்டபங்களும் இந்தக் கோயிலுக்கு வந்து பலன் பெற்ற பக்தர்களால் காணிக்கையாக அளிக்கப்பட்டவை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
திருவிழா
தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டிலிருக்கும் இக்கோயிலில் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை இந்தக் கோயிலில் பங்குனித் திருவிழா நடைபெறுகிறது.பங்குனி மாதத்தில் வரும் முதல் வெள்ளிக்கிழமையில் கொடியேற்றம் செய்யப்படுகிறது. கொடியேற்றத்திலிருந்து 21 நாட்கள் கழித்து 3 நாட்கள் இந்த விழா சிறப்பாக நடைபெறுகிறது. இத்திருவிழாவின் போது மலையிலிருக்கும் சென்றாயப் பெருமாள் கீழிறங்கி கோட்டைப்பட்டிக்கு வந்து அருள்பாலிக்கிறார். இத்திருவிழாவிற்கு அரசுப் பேருந்து வசதி செய்யப்படுகிறது.
பயண வசதி
திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு பேருந்து நிலையத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பழைய வத்தலக்குண்டு எனும் பகுதியில் இருக்கிறது. திண்டுக்கல்ல்லில் இருந்து தேனி, கம்பம்,குமுளி, போடிநாயக்கனூர், கொடைக்கானல், பெரியகுளம் போன்ற ஊர்களுக்குச் செல்லும் வழித்தடத்தில் வத்தலக்குண்டு இருப்பதால் பேருந்து வசதிக்குக் குறைவில்லை. வத்தலக்குண்டு பேருந்து நிலையத்திலிருந்து கோயிலின் அடிவாரப்பகுதி வழியாகச் செல்லும் நகரப் பேருந்து வசதியும் உள்ளது.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.