கைலாசபட்டி கைலாசநாதர் கோயில்
உ. தாமரைச்செல்வி
சைவசமயக் கடவுளான சிவபெருமான் தனது மனைவியான பார்வதிதேவியுடன் இருக்கும் கைலாயமலைக்கு நேரடியாகச் சென்று வழிபட்டால் வாழ்வில் அனைத்து நற்பலன்களையும் பெறமுடியும் என்கிற தொன்ம நம்பிக்கை பன்னெடுங்காலமாக இருந்து வருகிறது. இருப்பினும் கைலாயமலைக்குச் செல்லும் அதிகத்தொலைவு, நெடும்பயணம், மலைவழிப் பயணம், அங்கு நிலவும் அதிகக் குளிர் போன்ற பல்வேறு காரணங்களால் கைலாயமலையைச் சுற்றி வந்து சிவபெருமானை வணங்குவது என்பது பலருக்கும் சாத்தியமில்லாததாகவே இருந்து வருகிறது. கைலாயமலையில் வசிக்கும் கைலாயநாதரை அருகிலிருக்குமிடத்திலேயே வழிபட்டு நற்பலன்களை முழுமையாகப் பெற்றிட வேண்டும் என்கிற நோக்கத்தில், தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கைலாயநாதர் கோயில்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
கைலாய மலை
இந்து சமயம், புத்த சமயம், சமண சமயம் மற்றும் திபெத்தியர்களின் ஆதிசமயமான பொம்பா சமயம் போன்றவை கைலாயமலையைப் புனிதத்தலமாகக் கருதுகின்றன. இமயமலைத் தொடர்களில் ஒன்றாக இருக்கும் இந்தக் கைலாயமலையை நொடித்தான் மலை என்றும் அழைப்பதுண்டு. சீனாவின் கட்டுப்பாட்டிலுள்ள திபெத் நாட்டின் எல்லையில் அமைந்திருக்கும் இம்மலை புனிதமலையாகக் கருதப்படுவதால் இங்கு மலையேற்றத்துக்கு அனுமதி இல்லை. ஆனால், இம்மலையைச் சுற்றி 52 கிலோ மீட்டர் நீளம் கொண்ட பாதையின் வழியாக இம்மலையைச் சுற்றி வருவது புனிதக் கடமையாகக் கருதப்படுவதால் இதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இம்மலைப்பாதையில் பொம்பா சமயத்தினர் வலமிருந்து இடமாகவும், இந்து சமயத்தினர் இடமிருந்து வலமாகவும் இம்மலையைச் சுற்றி வருகின்றனர்.
இந்து சமயப்பிரிவுகளில் ஒன்றான சைவசமயக் கடவுளான சிவபெருமான் தனது மனைவியான பார்வதிதேவியுடன் கைலாயமலையில் இருப்பதான தொன்ம நம்பிக்கை பன்னெடுங்காலமாக இருக்கிறது. சைவசமயத்துக்குத் தொண்டாற்றிய சமயக்குரவர் நால்வருள் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் எனும் மூவராலும் பாடல் பெற்ற தலங்களில் கைலாயமும் ஒன்று. சைவசமயத்தினர் தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது கைலாயமலையைச் சுற்றி வந்து சிவபெருமானையும், பார்வதிதேவியையும் வணங்கிட வேண்டுமென்பது புனிதக்கடமைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
கைலாயமலைக்குச் செல்லும் அதிகத்தொலைவு, நெடும்பயணம், மலைவழிப்பயணம், அங்கு நிலவும் அதிகக் குளிர் போன்ற பல்வேறு காரணங்களால் கைலாயமலைக்குச் சென்று வழிபடுவது அனைவருக்கும் இயலாததாகவே இருந்து வருகிறது. இதனால் கைலாயநாதரை அருகிலிருக்குமிடத்திலேயே வழிபட்டு நற்பலன்களைப் பெற்றிட வேண்டும் என்கிற நோக்கத்தில், தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கைலாயநாதர் கோயில்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி ஆற்றின் கரையில் அகத்திய முனிவரின் சீடர்களுள் ஒருவரான உரோமசரிஷியால் உருவாக்கப்பட்டு வழிபடப்பட்ட நவகைலாயக் கோயில்கள் முதன்மை பெறுகின்றன. இதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் பல்வேறு காலங்களில், காஞ்சிபுரம், திங்களூர், நெடுங்குடி, தாரமங்கலம், வானகரம், கோவளம், நல்லூர், முடியனூர், கைலாசபட்டி என்று பல்வேறு ஊர்களில் கைலாசநாதர் கோயில்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

கைலாசபட்டி கைலாசநாதர் கோயில்
இப்படி அமைக்கப்பட்ட கைலாசநாதர் கோயில்களில் பெரியகுளம் அருகிலுள்ள கைலாசபட்டி கைலாசநாதர் கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக மாறவர்மன் எனும் பாண்டிய மன்னனால் கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது. தற்போது புதுப்பித்துக் கட்டப்பட்டுள்ள இக்கோயிலில் கைலாசநாதர், பெரியநாயகியம்மன் ஆகியோருக்கு அருகருகே தனிக்கோயில்கள் இருக்கின்றன. இக்கோயில்களின் கருவறை வெளிப்புறச் சுற்றுச்சுவர்களில் பிரம்மா, லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி, கணபதி, இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி, விஷ்ணுதுர்க்கை போன்ற சிலைகளும் இடம் பெற்றிருக்கின்றன. இக்கோயில் வளாகத்தினுள் விநாயகர், வள்ளி தெய்வானையுடனான முருகன், பைரவர், சூரியன், சந்திரன், சண்டிகேசுவரர், நவக்கிரகங்கள், சப்தகன்னியர் போன்றவர்களுக்கும் சிறிய அளவிலான தனிக்கோயில்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
சப்தகன்னியர்
மகிசாசுரன் கருவில் உருவாகாத பெண்ணால் மட்டுமே தனக்கு அழிவு உண்டாக வேண்டுமென்று வரம் பெற்றிருந்தான். தான் பெற்ற வரத்தால் தன்னை யாராலும் அழிக்க முடியாது என்று கருதிய மகிசாசுரன் தேவர்களையும், முனிவர்களையும், மக்களையும் பல்வேறு வழிகளில் துன்புறுத்தி வந்தான். மகிசாசுரனால் துன்பமடைந்த தேவர்களும், முனிவர்களும் சிவபெருமானிடம் சென்று தங்களைக் காத்தருள வேண்டினர். மகிசாசுரனைக் கருவில் உருவாகாத பெண்ணால் மட்டுமே அழிக்க முடியும் என்பதால் சிவபெருமான் பார்வதிதேவியிடம் மகிசாசுரனை அழித்து அனைவரையும் காத்தருளும்படி வேண்டினார். பார்வதிதேவி தன்னிடமிருந்து பிராம்மி, மாகேசுவரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி எனும் சப்தகன்னியர்களைத் தோற்றுவித்து மகிசாசுரனை அழித்தார். மகிசாசுரன் கொல்லப்பட்டதால் சப்தகன்னியர்களைக் கொலைப்பாவம் சூழந்தது. சப்தகன்னியர்கள் சிவபெருமானிடம் தங்கள் பாவத்தைப் போக்கிட வேண்டினர்.
சிவபெருமான் சப்தகன்னியர்கள் பூலோகம் சென்று தன்னைத் தொடர்ந்து வழிபட்டு வந்தால் அந்தப் பாவம் விரைவில் விலகும் என்று சொல்லி அனுப்பி வைத்தார். சப்தகன்னியர்களுக்குப் பாதுகாப்பாகத் தன்னுடைய வடிவான வீரபத்திரனை உடன் அனுப்பி வைத்தார். வீரபத்திரன் தட்சிணாமூர்த்தியாக அமர்ந்து, சப்தகன்னியர்களுக்கு உபதேசம் செய்து சிவபெருமானை வணங்கி வரச் செய்தார். குறிப்பிட்ட கால முடிவில் சப்தகன்னியர்களின் கொலைப்பாவமும் நீங்கியது. இவர்களுக்குத் துணையாக விநாயகரும் இருந்தார். இதனால், சப்தகன்னியர்கள் சிலைகளுடன், தட்சிணாமூர்த்தி, விநாயகர் சிலைகளும் சேர்ந்து இங்கு இடம் பெற்றிருக்கின்றன. சில கோயில்களில் தட்சிணாமூர்த்தி பெண் வடிவில் வீரபத்திரை எனும் பெயரிலும், விநாயகர் பெண் வடிவில் விநாயகி எனும் பெயரில் சிலைகளாக அமைக்கப்பட்டிருப்பதுண்டு. இங்குள்ள பாறைகளுக்கிடையிலான கைலாய தீர்த்தத்தில் தட்சிணாமூர்த்தியின் உபதேசத்தின்படி சப்தகன்னியர்கள் நீராடி கைலாசநாதரை வணங்கி மகிசாசுரனைக் கொன்ற பாவம் நீங்கப் பெற்றதாக தொன்ம நம்பிக்கை உள்ளது.

முழுநிலவு நாட்களில் பதினெட்டு சித்தர்களில் ஒருவரான சட்டைமுனி என்பவர் இந்தக் கோயிலின் தலமரமாக இருக்கும் அத்திமரத்தினடியில் அமர்ந்து தியானம் செய்து கைலாசநாதரை வணங்கி வருவதான தொன்ம நம்பிக்கையும் இருக்கிறது. இதனால் இம்மலைக்குத் தியானமலை என்று மற்றொரு பெயரும் இருப்பதாகக் கூறுகின்றனர்.
இக்கோவிலின் அடிவாரத்தில் குடைவரையாக உருவாக்கப்பட்ட வெள்ளை விநாயகர் சிலையுடனான சிறிய கோயில் ஒன்றும் உள்ளது. பிள்ளையார்பட்டிக்கு அடுத்தபடியாக இங்குதான் குடைவரையாக அமைக்கப்பட்ட வெள்ளை விநாயகர் இருக்கிறார். இந்த விநாயகருடன் சந்திரலிங்கம் ஒன்றும் இங்கு இருக்கிறது.
சிறப்புகள்
* சித்திரை முதல் நாளன்று கைலாசநாதர் கோயில் கருவறையிலுள்ள லிங்க வடிவத்தின் மீது சூரியஒளி விழுவது இக்கோயிலின் தனிச்சிறப்பாக இருக்கிறது.
* இந்தக் கோயிலில் முழுநிலவு நாட்களில் கிரிவலம் செய்து கைலாசநாதரையும், பெரியநாயகியம்மனையும் வழிபட்டு, கைலாயம் சென்று வழிபட்டால் கிடைக்கும் அனைத்துப் பலன்களையும் பெற முடியும்.
* இங்குள்ள கைலாசநாதர், பெரியநாயகியம்மனைத் தொடர்ந்து வணங்கி வழிபட்டு வருபவர்களுக்கு அவர்கள் எதிர்பாராத உயர்பதவிகள் கிடைக்கும்.
* இக்கோயிலின் அடிவாரத்திலுள்ள சந்திரலிங்கத்தையும், வெள்ளைவிநாயகரையும் வழிபட்டால் தீராத நோய்கள் நீங்கும்.
அமைவிடம்
தேனியிலிருந்து பெரியகுளம் செல்லும் வழியில் எட்டு கிலோமீட்டர் தொலைவில் கைலாசபட்டி எனும் ஊர் உள்ளது. இங்கிருந்து மேற்கு நோக்கி இரண்டு கிலோமீட்டர் தொலைவில் கைலாசநாதர் கோயில் அமைந்திருக்கிறது.
(தினத்தந்தி - ஆன்மிகம் இதழில் வெளியான கட்டுரை)
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.