ஜம்புலிபுத்தூர் கதலி நரசிங்கப்பெருமாள் கோயில்
உ. தாமரைச்செல்வி
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகிலுள்ள ஜம்புலிபுத்தூர் எனும் ஊரில் கோயில் கொண்டிருக்கும் கதலி நரசிங்கப்பெருமாளை வழிபடுபவர்களுக்கு, அவர்களது கடன் தொல்லைகளிலிருந்து விடுபடுவதுடன் அவர்களது வணிகம் பெருகிச் சிறப்புடன் வாழ்வர் என்பது இக்கோயிலுக்கு வந்து செல்லும் பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.
நரசிங்கர் தோற்றம்
இரண்யாட்சன் எனும் அசுரன் பூமியைக் கவர்ந்து கொண்டு போய்க் கடலுக்குள் மறைத்து வைத்து விட்டான். விஷ்ணு பன்றி உருவில் தோன்றி, அவனுடன் ஆயிரம் ஆண்டுகள் வரை சண்டையிட்டு அவனைக் கொன்று பூமியை மீட்டு வந்தார்.
இதை அறிந்த இரண்யாட்சனின் சகோதரன் இரண்யன் விஷ்ணுவை அழிக்க வேண்டும் என்று முடிவு செய்தான். விஷ்ணுவை அழிப்பதற்குத் தேவையான தன் வலிமையை அதிகரித்துக் கொள்வதற்காக பிரம்மனை நோக்கித் தவமிருந்தான். அவனுடைய தவத்தில் மகிழ்ந்த பிரம்மன் அவன் முன்பு தோன்றினார். அவன் பிரம்மனிடம், “தங்களுடைய எந்தப் படைப்பினாலும் எனக்கு மரணம் நிகழக்கூடாது. எனக்கு உள்ளும் புறமும், பகலிலும் இரவிலும், விண்ணிலும் பூமியிலும் மரணம் ஏற்படக்கூடாது. விலங்குகள், மனிதர்கள், தேவர்கள், அசுரர்கள் மற்றும் ஆயுதங்களால் எனக்கு இறப்பு நேரக்கூடாது என்கிற வரத்தையும், மூவுலகத்தையும் ஆள்வதற்கான வலிமையையும் எனக்குத் தந்தருள வேண்டும்” என்று வேண்டி வரத்தையும் வலிமையையும் ஒன்றாகச் சேர்த்துப் பெற்றான்.
அவன் கேட்டுப் பெற்ற வரத்தாலும், வலிமையாலும் அவன் மூவுலகையும் அவன் ஆட்சியின் கீழாகக் கொண்டு வந்தான். அதன் பின்னர் பல்வேறு அழிவுச் செயல்களையும் தொடர்ந்து செய்து வந்தான். மூவுலகிலும் இருப்பவர்கள் அவனையே நினைத்து வணங்க வேண்டும் என்று வற்புறுத்தியும் வந்தான். அவனுடைய அச்சுறுத்தலுக்குப் பயந்து அவனையே அனைவரும் வணங்கி வந்தனர்.
இந்நிலையில் அவனுடைய மகன் பிரகலாதன் விஷ்ணு பக்தனாக இருந்தான். அவன் விஷ்ணுவை வணங்கி வந்ததுடன், தனது தந்தையையும் விஷ்ணுவை வணங்கும்படி வற்புறுத்தி வந்தான். தனது எதிரியான விஷ்ணுவை அழிக்க வேண்டுமென்கிற தன் எண்ணத்திற்குத் தன் மகனே தடையாக இருந்ததால் அவனைக் கொன்றுவிடும்படி தன் பணியாட்களுக்குக் கட்டளையிட்டான். அவர்கள் அவனைக் கொல்வதற்காகச் செய்த அனைத்து முயற்சிகளிலும் விஷ்ணு அவனைக் காப்பாற்றி அருளினார்.
ஒருநாள் இரண்யன் பிரகலாதனைத் துன்புறுத்திய போது, பிரகலாதன் வேண்டியதன்படி விஷ்ணு தூணிலிருந்து மனிதவடிவில், சிங்கத்தின் தலையுடன் நரசிங்கராகத் தோன்றி அவனை அழித்தார்.
நரசிங்கர் கோயில்கள்
விஷ்ணு இப்பூமியில் தோன்றிய பிறப்புகளில் கிருஷ்ணர் மற்றும் இராமர் ஆகிய பிறப்புகளின் தோற்றங்களைக் கொண்ட தனிக்கோயில்களுக்கு அடுத்தபடியாக நரசிங்கர் தோற்றங்களுடன் பல்வேறு இடங்களில் தனிக்கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இப்படி அமைந்த கோயில்களுள் தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகிலுள்ள ஜம்புலிபுத்தூர் எனும் ஊரில் அமைந்த கதலி நரசிங்கப்பெருமாள் கோயிலும் ஒன்றாக இருக்கிறது.

தல வரலாறு
நாவல் மரங்களும், சம்பைப் புற்களும் கொண்டு அடர்ந்த புதர்ப்பகுதியாக இருந்த காட்டுப்பகுதியில் ராஜகம்பள சமூகத்தினர் அதிக அளவில் வசித்து வந்திருக்கின்றனர். இவர்கள் வளர்த்து வந்த மாடுகள் ஓய்விற்கும் பராமரிப்புக்குமாக மாட்டுத் தொழுவம் ஒன்று அமைத்திருக்கிறார்கள். இங்கு நாள்தோறும் மாடுகளிலிருந்து பாலைக் கறந்து பல பாத்திரங்களில் பாதுகாப்பாக வைப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் எவ்வளவு பாதுகாப்பாக வைத்திருந்தாலும், ஒரு பாத்திரத்திலிருக்கும் பால் மட்டும் காணாமல் போய்க் கொண்டிருந்தது.
ஒரு பாத்திரத்தின் பால் மட்டும் காணாமல் போவதைக் கண்டறிவதற்காகச் சிலர் அங்கு பாலைக் கறந்து பாத்திரங்களில் வைத்துவிட்டு மறைந்திருந்தனர். சிறிது நேரம் கழித்து, நாவல் மரத்தின் அருகிலிருந்த புற்று ஒன்றிலிருந்து வெளிவந்த பாம்பு ஒன்று அங்கு கறந்து வைத்திருந்த பால் பாத்திரங்களில் ஒரு பாத்திரத்தின் பாலை மட்டும் குடித்துக் காலி செய்துவிட்டுப் புற்றில் சென்று மறைந்தது.
இதைப் பார்த்த அவர்கள் அங்கிருந்த மண்வெட்டி, கடப்பாறை போன்றவைகளை எடுத்துக் கொண்டு போய் அந்தப் பாம்புப்புற்றை இடித்திருக்கிறார்கள். அப்போது ஒருவர் மண்வெட்டியால் வெட்டிய போது, அங்கிருந்து அதிக அளவிலான இரத்தம் மேல் நோக்கி வெளியேறியிருக்கிறது. அவர்கள் அதைச் சுத்தம் செய்து பார்த்த பொழுது அங்கு கதலி (வாழை) வடிவிலான சிலையிலிருந்து இரத்தம் வெளியேறிக் கொண்டிருந்திருக்கிறது. அவர்கள் பாம்புப் புற்றை முழுமையாக அகற்றிப் பார்த்திருக்கிறார்கள். அங்கு எந்தப் பாம்பையும் காணவில்லை. இதைக்கண்டு பயந்து போன அவர்கள் அதை அப்படியே விட்டுவிட்டு அங்கிருந்து சென்று விட்டனர்.
அன்றிரவு மண்வெட்டியால் வெட்டியவரின் கனவில் தோன்றிய இறைவன், “நாள்தோறும் பாம்பு வடிவில் வந்து பாலை அருந்திச் சென்ற நான் புற்றிருந்த இடத்தில் கதலி வடிவில் நரசிங்கராக இருக்கிறேன். எனக்கு இங்கு கோயில் அமைத்து வணங்குபவர்களுக்கு பல்வேறு நற்பயன்களை அளிப்பேன்” என்று தெரிவித்திருக்கிறார்.
அதன்பிறகு அந்த இடத்தில் சிறிய கோயில் ஒன்று கட்டப்பட்டிருக்கிறது. இதைத் தொடந்து மன்னர் திருமலை நாயக்கர் காலத்தில் கோயில் விரிவாக்கம் செய்யப்பட்டு பெரிய கோயிலாக மாற்றமடைந்திருக்கிறது.
கதலி நரசிங்கப்பெருமாள் கோயில்
இக்கோயிலில் சுயம்புவாக வெளிப்பட்ட கதலி நரசிங்கப்பெருமாள், செங்கமலத்தாயார் ஆகியோருக்குத் தனித்தனியாக சன்னதிகள் உள்ளன. மேலும் இக்கோயிலினுள் ஆஞ்சநேயர், கருடாழ்வார், பைரவர், விஸ்வக்சேனர், துவாரபாலகர்கள் மற்றும் பன்னிரு ஆழ்வார்கள் போன்றவர்களுக்கான சிலைகளும் அமைக்கப்பட்டு வழிபாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
சித்திரைத் திருவிழா
இக்கோயிலில் சித்திரை மாதத்தில் 12 நாட்கள் சித்திரைத் திருவிழா தேரோட்டத்துடன் மிகச்சிறப்பாக நடத்தப்பெறுகிறது. சித்திரைத் திருவிழாக் காலத்தில் கதலி நரசிங்கப்பெருமாள் ஸ்ரீதேவி மற்றும் பூதேவி எனும் இரு தேவியர்களுடன் அன்ன, சிம்ம, ஆஞ்சநேய, கருட, சேஷ, யானை மற்றும் குதிரை வாகனங்களில் ஊரின் முக்கியப்பகுதிகளில் வலம் வந்து பக்தர்களுக்குக் காட்சியளித்து அருள்கிறார்.
சிறப்பு வழிபாடுகள்
நரசிம்மர் பிறப்பு, புரட்டாசி, வைகுண்ட ஏகாதசி, நவராத்திரி போன்ற அனைத்து விஷ்ணு வழிபாட்டுச் சிறப்பு நாட்களிலும் இங்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இருப்பினும், நரசிம்மர் தோன்றியதாகக் கூறப்படும் சுவாதி நட்சத்திர நாளில், சூரியன் மறைவுக்கு முன்னும் பின்னுமாக 1.30 மணி நேர கால அளவினைக் கொண்ட மாலை 4.30 மணி முதல் 7.00 மணி வரையிலான மூன்று மணி நேர காலத்தில் நடத்தப்பெறும் சிறப்பு வழிபாடு மிகச்சிறப்புடையதாக இருக்கிறது. கடன்களால் அவதிப்பட்டு வருபவர்கள் இந்தச் சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டு நரசிம்மரை வழிபட்டால், கடன் தொல்லைகளிலிருந்து விடுபட்டு, வணிகம் பெருகிச் செல்வச் செழிப்பைப் பெறமுடியும் என்கின்றனர்.
அமைவிடம்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியிலிருந்து வைகை அணை வழியாகப் பெரியகுளம் செல்லும் வழியில் மூன்று கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் ஜம்புலிபுத்தூர் எனும் ஊரில் இக்கோயில் அமைந்திருக்கிறது.
(தினத்தந்தி - ஆன்மிகம் இதழில் வெளியான கட்டுரை)
*****
 இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.
|