திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்
மீனாட்சி சுந்தரமூர்த்தி
நாகப்பட்டினம் மாவட்டத்தின் தெற்கில் காவிரியாற்றுக்கு மூன்று கிலோ மீட்டர் தொலைவிலும், வடக்கில் மணிகர்ணிகை என்னும் மண்ணியாற்றுக்கு ஒரு கிலோ மீட்டர் தொலைவிலும் சீர்காழி வட்டத்திலுள்ள திருவெண்காடு எனுமிடத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ சுவேதாரண்யேசுவரர் திருக்கோயில் நவக்கிரகங்களில் புதனுக்குரிய கோவிலாக அமைந்திருக்கிறது
தலவரலாறு
பிரம்மனிடம் வரம் பெற்ற மருத்துவன் என்ற அசுரன் தேவர்களுக்கு துன்பம் செய்தான். சிவபெருமான் அருளியபடி தேவர்கள் வேற்றுருவில் திருவெண் காட்டில் வாழ்ந்து வந்தனர். அசுரன் திருவெண்காட்டிற்கு வந்து தேவர்களோடு போர் செய்தான். அசுரன் சிவனை நோக்கித் தவம் இருந்து சூலாயுதம் பெற்று ரிடப தேவரைச் சூலத்தால் தாக்கி காயப்படுத்தினான். ரிடப தேவர் சிவனிடம் முறையிடச் சிவன் கோபம் கொண்டார். அப்பொழுது அவருடைய ஐந்து முகங்களில் ஒன்றான ஈசான்ய முகத்தினின்று அகோர மூர்த்தி தோன்றினார். இந்த அகோர உருவை கண்ட மாத்திரத்திலேயே, அசுரன் சிவனிடம் சரணாகதி அடைந்து வணங்கினான். அதன் பின்பு, அவ்விடத்தில் அமைந்த கோயில் இது என்று ஒரு தல வரலாறு சொல்லப்படுகிறது.
கயிலை நாதனை வழிபட்டுத் திரும்பும் துர்வாசர் தான் பெற்ற இறைவன் மீது சாத்திய மாலையை எதிர்ப்பட்ட இந்திரனிடம் தர அவன் அதனை அலட்சியமாக வாங்கி தனது பட்டத்து யானை ஐராவதத்திடம் தர அது காலிலிட்டு மிதித்தது.சினம் கொண்ட முனிவர் இருவரையும் சபித்தார்.வருந்திய யானை சாபவிமோசனம் வேண்ட இத்தலம் காட்டினார்.காட்டு யானையாகத் திரிந்து இன்று,`யானைமடு` என்று வழங்கப்படும் குளம் அமைத்துச் சிவலிங்கம் சமைத்து வெண்காட்டு இறைவனை நினைத்துப் பூசித்தது. சாபம் நீங்கி வெள்ளை நிறம் பெற்று சந்திரன் உலகு சென்றது என்று மற்றொரு தல வரலாறும் சொல்லப்படுகிறது.
வித்யாகாரகனின் தன்மையும் உகந்தவையும்
நான்கு குதிரைகள் பூட்டிய தேரினை உடையவர். இவர் சூரியனைச் சுற்றி வரும் முதல் கிரகமாவார். இளம் பச்சை நிறமானவர். புத்திக்கு அதாவது அறிவுக்குக் காரணமானவர். அதனால் ‘வித்யாகாரகன்’ எனப்படுகிறார். தன்னை வழிபடும் அன்பர்களுக்கு கல்வி, பேச்சுத் திறமை, இசை, சோதிடம், கணிதம், சிற்பம், மருத்துவம், மொழிப்புலமை அருள்பவர். ஞானமருளும் பிரம்ம வித்யாம்பிகையின் அருகில் இருப்பது மேலும் சிறப்பாம்.
இராசி - மிதுனம்
நாள் - புதன்
நிறம் - வெளிர் பச்சை
தானியம் - பச்சைப் பயறு
திசை - வடகிழக்கு
இரத்தினம் - மரகதம்
வாகனம் - ஆடு
மலர் - வெண்காந்தள்
உலோகம் - பித்தளை
அதி தேவதை - திருமால்
|
கோவில் அமைப்பு
இக்கோயிலில் இருக்கும் இறைவன் சுவேதாரண்யேசுவரர் என்றழைக்கப்படுகிறார். மேலும், இங்குள்ள இறைவன் திருவெண்காடர், திருவெண்காட்டு தேவர், திருவெண்காடையார், திருவெண்காடுடைய நாயனார், திருவெண்காட்டு பெருமான் என வேறு பெயர்களிலும் அழைக்கப்படுகிறார். இங்கிருக்கும் இறைவி பிரமவித்யாம்பிகை என்றழைக்கப்படுகிறார். கிழக்கில் ஐந்து நிலை இராஜ கோபுரமும், மேற்கில் ஐந்து நிலை கோபுரமும், உட்பிரகாரம் செல்லும் கிழக்கு, மேற்கு வாயில்களில் மூன்று நிலை கோபுரங்களும் பெற்று மூன்று பிரகாரங்களுடன் அமைந்துள்ளது. இக்கோவிலைச் சுற்றித் தேரோடும் வீதிகள் நான்கு அமைந்துள்ளன. இக்கோவிலின் தென்புறம் அக்கினித் தீர்த்தமும், சூரிய தீர்த்தமும், வடக்கில் சந்திர தீர்த்தமும் அமைந்துள்ளன.
அக்கினித் தீர்த்தக் கரையில் ஊஞ்சல் மண்டபமும், அக்கினீசர் கோவிலும், மெய்கண்டார் சந்நிதியும் உள்ளன. சூரியத் தீர்த்தத்தின் கீழ்க்கரையில் சூரியனின் கோவில் உள்ளது. சந்திரத் தீர்த்தத்தின் கீழ்க்கரையில் சோமேசர் (சந்திரன்) கோவில் உள்ளது. மேற்கில் ஐந்து நிலை கோபுரத்தின் உட்புறம் அறுமுகன் சந்நிதியும், நூற்றுக்கால் மண்டபமும் உள்ளது. வெளிப்பிரகாரத்தின் வடமேற்கில் பிரம்ம வித்யாம்பிகை சந்நிதி தனிப் பிரகாரமும் சிறிய கோபுரமும் பெற்றுள்ளது. இதன் இடப்புறம் புதனின் தனிக்கோவில் அமைந்துள்ளது. இதன் இடப்புறம் பிரம்ம சமாதியும், வில்வமும் அமைந்திருக்க அம்மன் சந்நிதியின் எதிரில் உள்ள சந்திர தீர்த்தத்தின் தெற்கில் கொன்றையும், கிழக்கில் படர்ந்து விரிந்த ஆலும் உள்ளது.அதனடியில், ‘ருத்ரபாதம்’ எனும் பெயருடன் இரண்டு திருவடிகள் காணப்பெறுகிறது.
கிழக்கு வாயில் மூன்று நிலை கோபுரத்தை ஒட்டி திருக்கல்யாண மண்டபம் உள்ளது, இங்கு நடராஜரின் ஆடல்கள் சித்திரமாக எழுதப்பட்டுள்ளன. உட்பிரகாரத்தில் பல தெய்வங்களின் சந்நிதிகள் அமைந்துள்ளன. மேற்கு உட்பிரகாரத்தில் தெற்கு நோக்கி நடராஜ சபை உள்ளது. வடக்கு உட்பிரகாரத்தில் அகோரமூர்த்தி மூலவருக்கும், உற்சவருக்கும் தனித்தனி சந்நிதிகள் உள்ளன. கிழக்கு உட்பிரகாரத்தில் பைரவர், விநாயகர் துர்க்கை, நவக்கிரகங்கள் அமைந்திருக்க நடுவில் நிருத்த மண்டபம், மகாமண்டபம், அர்த்த மண்டபங்களுடன் கூடிய சுவேதாரண்யேசுவரரின் பெரிய கோவில் அமைந்துள்ளது. கருவறையில் லிங்க வடிவில் இறைவன் அருள் பாலிக்கிறார். தெற்கில் ஐராவதமும், சிவப்பிரியரும் புடைப்புச் சிற்பமாக எழுந்துள்ளனர். தென்னிந்தியாவின் மிகப் புகழ் பெற்ற சிறப்பு வாய்ந்த பிரார்த்தனை தலம் இது. நவக்கிரகதலத்தில் இது புதன் தலமாகும். காசியில் விஷ்ணு பாதம் உள்ளது போல இங்கு ருத்ர பாதம் வடவால் விருட்சத்தின் கீழ் உள்ளது.

வழிபாடுகள்
இங்கு காலை 5.30 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் தினசரி வழிபாடு நடைபெறுகிறது. இக்கோயிலில் தினந்தோறும் ஸ்படிக லிங்கத்துக்கு நான்கு அபிசேகங்களும் நடராஜ பெருமானுக்கு ஆண்டுக்கு ஆறு அபிசேகங்களும் நடைபெறுகிறது.
இக்கோயில் ஆண்டின் பன்னிரு மாதமும் விழா காணும் சிறப்புடையது
சித்திரை - திருவோணத்தில் நடராஜர் அபிஷேகம்
வைகாசி - ஐராவதத்தின் சாப விமோசனம்.
ஆனி - உத்திரத்தில் நடராஜர் அபிஷேகம்.
ஆடி - பட்டினத்தாருக்கு ஈசன் மணிகர்ணிகையில் தீட்சை, பூரத்தில் வித்யாம்பிகைக்கு பத்து நாள் விழா.
ஆவணி - கோகுலாஷ்டமி,விநாயக சதுர்த்தி
புரட்டாசி - தேவேந்திர விழா,நவராத்திரி விழா
ஐப்பசி - கந்த சஷ்டி
கார்த்திகை - தீபத் திருவிழா, அகோர மூர்த்திக்கு மகாருத்ராபிஷேகம்
மார்கழி - நடராஜர் திருவாதிரை தரிசனம்
தை - மகா சங்கராந்தி
மாசி - 13 நாட்கள் இந்திரப் பெருவிழா - பிரம்மோர்ச்சவம், சிலம்பு சொல்லும் காவிரிப்பூம்பட்டினத்தின் விழா
பங்குனி -அகோரமூர்த்திக்கு இலட்சார்ச்சனை.
தலச்சிறப்பு
1. காவிரியின் வடகரையில் இது பதினோராவது தலமாகும்.
2. திருவெண்காட்டின் தீர்த்தம் மூன்று (சூரியதீர்த்தம், அக்கினி தீர்த்தம், சந்திர தீர்த்தம்), மூர்த்தி மூன்று (பிரளய காலத்தில் ஒன்பது வகை நடனமும் ஆடிய நடராஜர், சுயம்புவாய் எழுந்தருளிய சுவேதாரண்யேசுவரர், அசுரனை அழித்த அகோரமூர்த்தி), விருட்சம் மூன்று ( ஆலமரம், கொன்றை, வில்வம்) என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
3. சமயக் குரவர் நால்வரும் பாடிய தலம்.
4. பட்டினத்தார் சிவதீட்சை பெற்ற தலம், சிவஞானபோதம் தந்த மெய்கண்டார் அவதரித்த தலம், சிறுத்தொண்டர் இளமையில் வாழ்ந்தது, அவரின் மனைவி திருவெண்காட்டு நங்கை பிறந்த ஊர் எனும் பெருமையுடையது.
5. கடவுளர் பலரும் தேவர்கள் பலரும் வந்து வழிபட்டதால் கணபதிபுரம், உமையூர், திருவூர், ஞானபுரம், ஆதி சிதம்பரம், சுவேதவனம் (சுவேதன் எனும் மன்னன் வழிபட்டதால்) பாபநாசபுரம் எனப் பல பெயர் பெற்றுள்ளது.
6. அம்மனுக்கான 108 சக்தி பீடங்களில் ஒன்று. இத்தலத்தின் அருகிருந்த மதங்காசிரமத்தில் மதங்க முனிவரின் மகளாக மாதங்கி எனும் பெயரில் அவதரித்த அம்பிகை தவமிருந்து வெண்காடரின் கரம் பற்றினாள் என்கிறது பத்ம புராணம். பிரம்மனுக்குக் கல்வியைக் கற்பித்ததால் பிரம வித்யாம்பிகை ஆனாள்.
7. திருஞான சம்பந்தர் வழிபாடு செய்ய இத்தலம் வர அவருக்கு ஊரெல்லாம் சிவலோகமாகவும், மணலெல்லாம் சிவலிங்கமாகவும், தெரிய இத்தலத்தில் தாள் பதிக்க அஞ்சி, ‘அம்மா’ என அழைக்க அம்பிகை நேரில் சென்று ஆளுடைப் பிள்ளையை இடுப்பில் சுமந்து வந்தாள் என்பர். இதனால், ‘பிள்ளையிடுக்கி அம்மன்’ என்ற பெயரில் சிலையாகவும் அமைந்தாள்.
8. காசியில் விஷ்ணுபாதம் எனபது போல் இங்கு ருத்ரபாதம் அமைந்துள்ளது.
9. வித்யாகாகரனின் அருள் கிட்டாதவர்களுக்கு அறிவுக் குறைபாடும், கல்வியில் மந்தமும், நரம்புத் தளர்ச்சியும் ஏற்படும். அவர்கள் இத்தலம் வந்து முக்குளத்தில் நீராடி முதலில் இறைவனையும், இறைவியையும் வணங்கி, அதன் பின் புதனை வழிபட்டு அருள் பெறல் வேண்டும்.
10. வான்மீகி இராமாயணத்தில், ‘சுவேதாரண்யத்தில் காலனை அழித்த ஈசனைப் போல் இராமன் கரதூடணரை அழித்தான்’ என்கிறார்.
11. சிலப்பதிகாரத்தில் கண்ணகியைப் பிரிந்து மாதவியுடன் வாழ்ந்திருந்த கோவலன் மீண்டு வந்து கண்ணகியுடன் வாழ ஓர் வழிபாடு உண்டு என்பாள் அவளின் தோழி தேவந்தி, ‘காவிரி கடலோடு கலக்கும் முகத்துவாரத்தின் அருகில் உள்ள நெய்தற் கானலிடத்தில் உள்ள சோம குண்டம் (சந்திர தீர்த்தம்) சூரிய குண்டம் (சூரிய தீர்த்தம்) எனும் குளங்களில் நீராடி காமவேளை வழிபடுதலே அது’ என்பாள். ஆனால், கண்ணகி, ‘பீடன்று’ என மறுத்து விட்டாள். இவை திருவெண்காட்டில் உள்ளவையே என்று சான்றோர் சிலர் கூறுவதாக டாக்டர் உ. வே. சா தாம் பதிப்பித்த சிலப்பதிகாரத்தில் குறிப்பிடுகின்றார்.
12. திருவையாறு (1), மயிலாடு துறை (2), திருவிடை மருதூர் (3), சாய்க்காடு (4), ஸ்ரீவாஞ்சியம் (5) இவற்றோடு திருவெண்காடு தலத்தையும் சேர்த்து ஆறு தலங்கள் வடகாசிக்குச் சமமாக எண்ணப்படுபவையாகும்.
13. சிவபெருமானது ஆனந்தத் தாண்டவத்தின் போது அவரது முக்கண்களிலிருந்தும் சிந்திய நீர்த்துளிகளே அக்னி, சூரிய, சந்திர தீர்த்தங்களாக அமைந்துள்ளன என்கின்றனர்.
அமைவிடம்
சீர்காழியிலிருந்து 17 கிலோ மீட்டர் தொலைவிலும், கும்பக்கோணத்திலிருந்து 18 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்திருக்கும் இத்தலத்திற்குச் செல்ல கும்பக்கோணம், சீர்காழி நகரிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.