அதிகாலை.
தூக்கவிருப்பம் ஏதுமின்றி எழுந்தமர்ந்தாள் அம்ரின் வயது 37. சுருள் சுருள் தலைமுடி. வட்ட முகம். கவிதைக் கண்கள். மூக்கு நுனியில் பிறைநிலா. குல்கந்து உதடுகள். தமிழில் முனைவர் பட்டம் பெற்று ஒரு தனியார் கல்லூரியில் தமிழ்த்துறை விரிவுரையாளராகப் பணிபுரிகிறாள். கணவர் தனியார் வங்கிக் காசாளர். மகனுக்கு வயது 12. ஏழாம் வகுப்பு படிக்கிறான். மகளுக்கு வயது 10, ஐந்தாம் வகுப்பு படிக்கிறாள்.
எழுந்த அம்ரின் அம்மா படுத்திருக்கும் அறைக்கு போனாள். அம்மாவின் உடலில் வயோதிகம் ஆக்கிரமித்திருந்தது. முடியில் பாதி நரைத்துப் போயிருந்தது. சாயம் ஏதும் பூசாததால் வெள்ளை நிறமுடிகள் வெளிச்சம் காட்டிக் கொண்டிருந்தன. முகத்தில் தசைச் சுருக்கங்கள். அம்மாவுக்கு வயது 62. அத்தா இரண்டு வருடங்களுக்கு முன் மாரடைப்பால் காலமானார். அத்தா இருக்கும் வரை மிடுக்காக கம்பீரமாக வண்ணத்துப்பூச்சி போல ஊரை உலா வந்த அம்மா, அத்தா இறந்த பின் படுத்த படுக்கை ஆகி விட்டாள். எப்பொழுதும் கணவரின் நினைவுகள் மைஸிராவை வேட்டையாடின.
பல நாட்கள் தூக்கத்திலிருந்து எழுந்து அரற்றுவாள் மைஸிரா. “அத்தா கூப்பிடுரார்… நான் போறேன்!”
“முப்பத்தி எட்டு வருஷம் கணவனுக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்த அவரை ஒரு கைக்குழந்தை மாதிரி கவனிச்சிக்கிட்ட. போதும்மா. அவர்தான் போய் சேர்ந்துட்டாரில்ல… மீதி 38வருஷம் என் அன்பில நனைந்து சுகம் பெறு. இப்போது நான் உனக்கு சேவகி...” என்பாள் அம்ரின்.
அம்மா எழுந்தாள். அழகிய முகமன்கள் பரிமாற்றம். பசையைப் பிதுக்கி அம்மாவின் பற்களைத் துலக்கிவிட்டாள் அம்ரின். வாய் கொப்பளிக்கச் செய்தாள். அம்மாவின் முகத்தைக் கழுவி விட்டாள். டெட்டால் கலந்த தண்ணீர் வைத்து உடல் முழுக்கத் துடைத்தாள். புத்தாடையை உடுத்தித் தலைவாரி விட்டாள். தேநீர் கலந்து கொடுத்தாள்.
“சும்மா படுத்தேக் கிடக்காதம்மா... கொஞ்சம் எந்திரிச்சு அறைக்குள்ளேயே நடந்து போ… வா ரெண்டு பேரும் பஜ்ரு தொழுவோம்!”
மைஸிராவை ஒரு சேரில் அமர வைத்தாள். பக்கத்தில் தொழுகைக் கம்பளத்தை விரித்தாள்.
இருவரும் தொழுதனர்.
தொழுது முடித்ததும் அம்மாவின் தலையில் ஓதி ஊதிவிட்டாள் அம்ரின்.
“எட்டு மணி வரைக்கும் தூங்கும்மா… காலை எட்டு மணிக்கு மேல் எழுப்பி விடுகிறேன். காலை உனக்கு சாப்பிட என்னம்மா வேணும்?”
“இந்தக் கிழவிக்கு ரெண்டு இட்லி போதும் மகளே...”
“யாரும்மா கிழவி? தலைக்கு மருதாணி சாயம் பூசி, புதுத்துணி போட்டுக்கிட்டு நடந்தேன்னா நாப்பது வயசுதான் மதிக்கத் தோணும். கணவனோடயே வாழ்க்கை முடிஞ்சிரலம்மா. கணவனுக்குப் பின்னும் ஒரு வாழ்க்கை இருக்கு. உனக்கு காலைச் சாப்பாடு ஆப்பமும் தேங்காய்ப் பாலும்…”
உச் கொட்டினாள் மைஸிரா.
மறுநாள் காலை.
காலைச் சாப்பாட்டை மைஸிரா சாப்பிடும் போது மருமகன் எட்டி பார்த்தார். “அஸ்ஸலாமு அலைக்கும் மாமி!”
“வஅலைக்கும் ஸலாம் மருமகனே!”
“இன்றைக்கு உங்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப் போகிறோம். தயாராகுங்க மாமி!”
“வருஷத்துக்கு ஒருதடவை பரிசோதனை பண்ணினா போதாதா?”
“மாதாந்திரப் பரிசோதனை எங்க மன அமைதிக்கு!”
பத்து வயது பேத்தி ஸகிய்யா ஓடிவந்தாள் “நானி! அஸ்ஸலாமு அலைக்கும்!”
“வஅலைக்கும் ஸலாம் செல்லமே…”
“நான் படிச்சு வேலைக்குப் போய் கல்யாணம் பண்ணி, குழந்தை பெத்து, அந்தக் குழந்தை உங்களுக்கு ஸலாம் சொல்லனும். நீங்க பதில் ஸலாம் சொல்லனும், அதுதான் என் வேண்டுதல்!”
தட்டிலிருந்து சிறுவிள்ளல் எடுத்துப் பேத்திக்கு ஊட்டிவிட்டாள் மைஸிரா.
அழகிய முகமன் பரிமாற்றத்துக்கு பின் பேரனும் ஓடிவந்து வாயை ஆ காட்டினான்.
“எனக்கு நன்னி!”
பேரனுக்கும் ஊட்டிவிட்டாள்.
மகள் அம்ரினும் வாய்திறந்து ஒரு விள்ளல் பெற்றுக் கொண்டாள்.
பேத்தி நானியின் கால்களைத் தூக்கி எதையோ தேடினாள்.
“என்னடி தேடுற?”
“நபிகள் நாயகத்தின் நண்பர் ஒருவர் நபிகள் நாயகத்திடம் வந்தார், ‘இறைதூதர் அவர்களே! அறப்போரில் கலந்து கொள்ள விரும்புகிறேன். அனுமதிப்பீர்களா?’ என்றார்.
அதற்கு நபிகள் நாயகம் ‘உமக்கு அன்னை இருக்கிறாரா?’ எனக் கேட்டார்.
‘ஆம்’ என்றார் நண்பர்.
‘தாயை முதலில் கவனி. சொர்க்கம் அவரது காலடியில் உண்டு’ என்றார் நபிகள் நாயகம். நன்னி! உன் காலடியில் சொர்க்கத்தைத் தேடுகிறேன்!”
“உங்க நன்னாவுக்கு ஓய்வூதியம் வரல. நாங்க படிப்பைத் தவிர, பிள்ளைகளுக்கு வேற சொத்தைச் சேத்து வைக்கல. ஆனாலும், உங்கம்மா என்னை ஒரு குழந்தையை மாதிரி பராமரிக்கிறாள். என் காலடியில் சொர்க்கம் இருக்கிறதோ, இல்லையோ உங்கம்மா மறுமையில் ஜன்னத்துல் பிர்தௌஸ் சொர்க்கத்தில் இருப்பாள்!”
அம்ரின் அம்மாவின் தலையைக் கோதிக் கொடுத்தாள். ‘அம்மா! நான் மார்க்கம் படித்தவள். பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும். அவர்களில் ஒருவரோ அல்லது இருவரோ முதுமையடைந்த நிலையில் உம்மிடம் இருந்தால், அவர்களை நோக்கி ச்சீ என்று கூடச் சொல்லிவிடாதீர்கள். அவர்களை விரட்டாதீர்கள். அவர்களிடம் கண்ணியமான சொல்லையேச் சொல்வீராக. பணிவு என்னும் சிறகைக் கனிவுடன் அவர்களுக்காகத் தாழ்த்துவீராக’ என்கிறது 17:23, 24 வசனம், அந்த வசனத்தின் படி நடக்கிறேன் நான்… அவ்வளவே…”
மகன் மகளிடம் திரும்பினார் அத்தா. “இந்தியாவில் அறுபது வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 13.8 கோடி பேர் இருக்கிறார்கள். அதில் 6.7கோடி ஆண், 7.1 கோடி பேர் பெண். தமிழகத்தில் அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள் அறுபது லட்சம். அதில் 60 சதவீதம் பேர் ஆதரற்றவர்கள். சென்னையில் மட்டும் 50 கட்டண முதியவர் இல்லங்கள் உள்ளன. திருக்குர்ஆன் கூறுவதையும், நபிகள் நாயகம் கூறுவதையும் உலக மக்கள் கேட்டால் கேட்டபடி நடந்தால் உலகில் ஒரு முதியவர் அனாதரவாய் வாட மாட்டார்!”
“நபிகள் நாயகத்திற்கு முதியோர் மீது அத்துணை பரிவு ஏன்?”
“நபிகள் நாயகத்தின் தந்தை அப்துல்லா இப்னு அப்துல் முத்தலிப். நபிகள் நாயகம் தாயின் வயிற்றில் இருக்கும் போதே, அப்துல்லா இறந்து போனார். நபிகள் நாயகத்திற்கு ஆறு வயதான போது தாயார் ஆமினா பின்த் வஹாப் இறந்தார். ஹலீமா அல்சாதியா எனும் செவிலித்தாய் அரவணைப்பில்தான் நபிகள் நாயகம் வளர்ந்தார். நிராதரவாய் நிற்கும் எவரையும் பரிவாய் பார்க்கும் அருங்குணம் நபிகள் நாயகத்துக்கு குழந்தை வயதிலேயே வந்து விட்டது. மனிதக்குலம் உய்ய நபியாய் வந்த நபிகள் நாயகம் பெற்றோரின் பராமரிப்பு பற்றிப் பேசியது பெரிய ஆச்சரியமில்லை!”
“பெற்றோரிடம் ஒரு குழந்தை எப்படிப் பேச வேண்டும் தெரியுமா? ஒரு அடிமை தனது எஜமானனிடம் பேசுவது போலிருக்க வேண்டும் என்றார் நபிகள் நாயகம்!”
‘மனைவியின் பேச்சைக் கேட்டு பெற்றோர் மனதைப் புண்படுத்தாதீர்கள். அவ்வாறு செய்பவர்களை, அல்லாஹ்வும் விண்ணவர்களும் சபிக்கின்றனர். அவர்களின் பர்லான நபிலான வணக்கங்களை அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான் என மார்க்கம் கூறுகிறது!”
அம்ரினின் மகனும் மகளும் பள்ளிக்குப் புறப்பட்டனர். அம்ரினின் கணவர் வேலைக்குக் கிளம்பினார்.
“அம்ரின்! நீ கல்லூரிக்குப் போகல?”
“அம்மாவுடன் ஒருநாள் இருக்க விரும்பி விடுமுறை போட்டுள்ளேன்!”
காலை 11மணி அம்மாவின் கைகால் நகங்களை வெட்டிவிட்டுக் கொண்டிருந்தாள் அம்ரின். வெளிவாசலில் வாகன இரைச்சல் கேட்டது.
தபதபவென ஹபீதாவும் ரீமாவும் உள்ளே நடந்து வந்தனர். அம்ரினின் தங்கைகள் இருவரும் முதுகலைப் பட்டபடிப்பு படித்துவிட்டு பணியில் உள்ளனர்.
அழகிய முகமன்கள் பரிமாற்றம்.
“என்ன அம்மாவைச் சரிக்கட்ட நகம் வெட்டி விடுறியா?”
“அம்மாவை சரிக்கட்டவில்லை. இறைவனைச் சரிக்கட்ட முயற்சிக்கிறேன்!”
“அத்தா காலமாகி இரண்டரை வருடமாகுது. ரெண்டரை வருடமா அம்மாவை உன் கைக்குள்ளேயே வச்சிருக்க. அம்மாவைப் பார்த்துக்கிற நன்மை உனக்கு மட்டும் கிடைச்சா போதுமா? மறுமைல நீ சொர்க்கத்துக்கு போவ. அம்மாவைப் பாக்காத நாங்க நரகத்துக்குப் போகனுமா? வருடத்தை மூன்றாகப் பிரி. முதல் நான்கு மாதம் அம்மா உன் வீட்ல இருக்கட்டும். அடுத்த நான்கு மாதம் அம்மா ஹபீதா வீட்ல இருக்கட்டும். மூன்றாவது நாலு மாதம் என் வீட்ல இருக்கட்டும்!”
“முடியாது. அம்மாவை முழுக்க முழுக்க நான்தான் பாத்துப்பேன். நான் இல்லாமப் போனால் வேண்டுமானால், அம்மாவை உங்கள் வீடுகளுக்கு அழைத்துச் செல்லுங்கள்!”
“உன் இரக்கமான பேச்செல்லாம் எங்ககிட்ட வச்சுக்காத, எங்க வேண்டுகோளை ஒத்துக்கலன்னா நீதிமன்றத்துக்குப் போவோம்!”
“நீதிமன்றம் எதுக்கு? ஜமாஅத்ல எழுதிக் கொடுப்போம்”
ஜமாஅத் கூடியது.
முத்தவல்லி அஞ்சும் பானு வந்தமர்ந்தார். அழகிய முகமன்கள் பரிமாற்றம்.
“மூன்று சகோதரிகளா? எதற்காக உங்கள் அம்மாவை உங்கள் பராமரிப்பில் வைத்திருக்கப் பிடிவாதம் பிடிக்கிறீர்கள்?”
“அல்லாஹ்வின் வலியுறுத்தலுக்காக, நபிகள் நாயகத்தின் அறிவுரைக்காக, மறுமையில் சொர்க்கம் கிடைப்பதற்காக!’‘ மூவரும் ஒன்றாய்ச் சொன்னார்கள்.
முத்தவல்லி சிரித்தார். “பெற்ற தாயின் மீதான பாசத்துக்காக, நீங்கள் யாரும் உங்கம்மாவைப் பராமரிக்க விரும்பவில்லை அப்படித்தானே?”
“பெற்ற தாயின் மீதான பாசம் உள்ளீடாய் எங்களுக்குள் ஒளிந்திருக்கிறது!”
“அம்மா... உங்க கருத்து என்ன?”
“வருடத்தை மூன்றாகப் பிரித்து மூன்று மகள்கள் வீட்டிலும் இருந்து கொள்கிறேன். பெற்ற மகள்களுக்கு இடையே நான் சமமாக நடந்து கொள்ள வேண்டுமல்லவா? சமமாக நடந்து கொண்டால்தானே எனக்கு மறுமையில் சொர்க்கம் கிடைக்கும்?” ஆணித்தரமாக அறிவித்தாள் மைஸிரா.
அந்த இடம் சுயநலமில்லா பெண்மையில் மூழ்கித் திளைத்தது.