பெண் குழந்தைகள் மதரஸா.
உஸ்தாது பீவி ஆமீனா முஹம்மது தனது இருக்கையில் அமர்ந்திருந்தார். மார்க்க ஞானம் முந்திரிக் கொட்டையாய்த் துருத்திய முந்திரிப்பழம் அவர். அவருக்கு வயது 52. உயரம் 152 செமீ. துருக்கியப் பெண்களின் முகஜாடை யோகத்தில் நிலைத்திருக்கும் ஆன்மிகக் கண்கள்.
மதரஸா பெண் குழந்தைகள் ஷிபானா, ஜஸிலா பானு, அதீபா, பலீக்கா அமர்ந்து கித்தாப்பை படித்துக் கொண்டிருந்தனர்.
உஸ்தாது பீவியைப் பார்க்க ஒரு பெண்மணி உள்ளே நுழைந்தார்.
“அஸ்ஸலாமு அலைக்கும் ஒஸ்தாத்பீ!”
“வஅலைக்கும் ஸலாம். என்ன விஷயம்?”
“நம்ம நகருக்கு பக்கத்ல கபர்ஸ்தான் அமைக்க மாநகராட்சி தீர்மானம் பண்ணி அறிவிச்சிருக்காங்க. பல வருடங்களுக்கு முன் நம் புல்லுக்காட்டு பகுதி குப்பை கொட்டப்படும் இடமாக இருந்திருக்கிறது. கழிவுநீரில் ஊறி திளைத்திருக்கிறது. இப்போது கபர்ஸ்தான் வந்தால் மீண்டும் நம் நகர்களின் சுகாதாரநிலை படுமோசமடையும். கபர்ஸ்தானுக்கு பதிலாக நூலகமோ அல்லது வேறு எதாவது ஒரு கல்விக்கூடமோ கட்டலாம். கபர்ஸ்தானுக்கு எதிர்ப்பாக ஒரு கடிதத்தை நீங்கள் தயார் செய்யவேண்டும். மதரஸா குழந்தைகளின் பெற்றோரிடம் கையெழுத்து வாங்கி எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்!”
“மதரஸா சார்ந்தவர்களுடன் மஷ்வரா செய்துவிட்டு முடிவு எடுக்கிறேன். ஒரு நாள் பொறுத்துக் கொள்ளுங்கள்!”
“ஜஸாக்கல்லாஹ் ஹைரன்!” வந்த பெண் புறப்பட்டு போனார்.
அவர் போனவுடன் மதரஸா பெண்குழந்தைகள் உஸ்தாது பீவியை சூழ்ந்து கொண்டன.
“ஒஸ்தாத் பீ எங்களுக்கு ஒரு சந்தேகம்!”
“என்ன?”
“மசுரா செய்வதாக கூறுனீர்களே? மசுரா மைசூர்பாக் போன்றதொரு இனிப்பா?”
உஸ்தாது பீவி கலகலவென சிரித்தார்.
“அட என் பட்டுரோஸ்களா? மஷ்வரா என்கிற வார்த்தையை நம் மக்கள் பேச்சு தமிழில் ‘மஷுரா’ என்பர். ‘மஷ்வரா’ என்றால் கலந்தாலோசித்தல் என பொருள்!”
“ஓஹோ!”
“உங்களுக்கு ஒன்று சொல்கிறேன் பூக்குட்டிகளா... ஆலோசனை தேடுபவன் வருத்தமடைவதில்லை. இஸ்திகாரா செய்பவன் நஷ்டம் அடைவதில்லை. பொருளை நடுநிலையாய் செலவு செய்பவன் ஏழை ஆவதில்லை!”
“ஒஸ்தாத் பீவியின் பஞ்ச் டயலாக்!”
“ஒரு பிரச்சனையில் முடிவெடுக்க இஸ்லாமில் இரு வழிமுறைகள் உள்ளன. ஒன்னு- இஸ்திகாரா. இஸ்திகாரா என்றால் இறைவழிகாட்டலை தேடும் தொழுகை. இரண்டு- இஸ்திஷாரா அல்லது மஷுவரா...”’
“இஸ்திகாரா, இஸ்திஷாரா நல்ல எதுகை மோனையுடன் இரு விஷயங்கள்!”
“யாருமே தன்னடிச்ச மூப்பு தனிச்ச ராஜ்ஜியம் என இருக்கக் கூடாது உலகத்தின் 810கோடி மக்களில் நான் மட்டுமே புத்திசாலி மற்ற அனைவரும் முட்டாள்கள் என தலைகீழ் ஆட்டம் யாரும் ஆடக்கூடாது. என் தந்தையார் அடிக்கடி கூறுவார்- ஒரு இடத்துக்கு வழி கேட்கிறாய் என்றால் குறைந்தது மூவரிடம் தனித்தனியாக வழி கேள். சரியான போகுமிடம் சேர்ந்து விடுவாய்...”
“நான் எல்லாம் தேன்மிட்டாய் வாங்க குறைஞ்சது மூணு இடம் அலைவேன்!”
முறைத்தார்.
“ஷிவானா! நீ ஒரு தின்னிப்பாப்பா!”
“நீங்க தொடர்ந்து சொல்லுங்க ஓதரம்மா!”
“மஷுவராவில் மூன்று முக்கியமான விஷயங்கள் செயல்படும். ஒன்று- நப்ஸ். இரண்டு-புத்தி. மூன்று –ஷரியா. ஒரு கருத்தை வெளிபடுத்தும் போது தனிப்பட்ட உணர்வுகளைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். நப்ஸ் தனக்குள்ளேயே சுயநல உணர்வுகளை உருவாக்கும். புத்தி நப்ஸை கட்டுபடுத்தும். புத்தி வழி தவறினால் ஷரியா தலையில் குட்டி அடக்கும். ஒருவர் தன் உள்உணர்வுகளை கட்டுப்படுத்துவது உண்மையான சீர்திருத்தம்!”
“இன்று மதரஸாவுக்கும் எதாவது சாக்குபோக்கு கூறிப் போகாமல் இருப்போம் என கூறி இளிக்கும் எங்கள் நப்ஸ். சோம்பலாய் அமர்ந்திருப்பதற்குப் பதிலாக மதரஸாவுக்கு போனால்தான் என்ன எனக் கூறும் எங்கள் புத்தி. ஒரே
இடத்தில் அமர்ந்து கித்தாப்பு ஓத வேண்டுமா என புத்தி தடுமாற்றத்தை மார்க்க கல்வியின் முக்கியத்துவம் கூறி மதரஸாவுக்கு அனுப்பி வைக்கிறது ஷரியா!”
“மஷுரா என்கிற ஆலோசனை நல்லது என அல்லாஹ் கூறுகிறானா?”
“ஆம். அவன் நபிகள் நாயகத்துக்கே கூறியிருக்கிறான். ‘சகலகாரியங்களிலும் ஸகாபிகளுடன் கலந்தாலோசனை செய்வீர்களாக!’ என அல்லாஹ் நபிகள் நாயகத்துக்கு கட்டளை இடுகிறான்!”
“மஷுராவுக்கு என பிரத்தியேகமாக துஆ உண்டா?”
“உண்டு. ‘அல்லாஹ்! எங்கள் செயல்களில் உன் வழிகாட்டுதலால் எங்களை ஊக்குவிக்கவும் எங்கள் ஆன்மாவின் தீமைகளிலிருந்தும் எங்கள் தீயசெயல்களுக்கான தண்டனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறோம்.’ இதுவே அந்த துஆ!”
“மஷுரா பற்றி மேலும் கூறுங்க உஸ்தாத்பீ!”
“மஷ்வரா என்கிற ஆலோசனையை நம்பிக்கைக்குரியவர்களிடம் துறை சார்ந்தவர்களிடம் கேட்கவேண்டும். காய்ச்சலுக்கு மருந்து இன்ஜினியரிடம் கேட்பாயா? கட்டட வரைபடம் வரைய மருத்துவரைப் பணிப்பாயா?”
“ஒஸ்தாத்பீ! பலீக்கா 16ம் வாய்ப்பாடு ஒப்பிக்கிறதை பற்றி ஸ்கூல் ஆயாகிட்ட அய்டியாக் கேட்டா”
பலீக்கா அதீபாவை முறைத்தாள்.
“இஸ்லாமிய ஷரீஅத்துக்கு உட்பட்ட பர்ல், வாஜிப், ஹராம் முதலியவற்றில் ஆலோசித்து செயல்பட கூடாது. மார்க்கம் சொன்னதை வேதவாக்காக நிறைவேற்ற வேண்டும்!”
“நீங்க சொல்வது லட்சம் சதவீதம் சரி!”
“ஆலோசனை கேட்பவருக்கு தவறான ஆலோசனை கூறுவது பெரும் மோசடி. மஷுவராவில் வயது முக்கியமில்லை. நீங்க நான்கு வாண்டுகள் கூட எனக்கு ஆக்கப்பூர்வமான ஆலோசனை சில விஷயங்களில் தரலாம்!”
“சொல்லிட்டா போச்சு... இனி செங்கல் நிறபுடவை கட்டிக்கிட்டு மதரஸா வராதிங்க உஸ்தாத்பீ. மயில் நீல நிறப் புடவைதான் உங்களுக்கு செமலுக்கு!”
“மஷுவராவில் இறுதி உரிமை முதலில் ஆலோசனை கேட்பவருக்கேச் சொந்தமானது. குழந்தையின் பால்குடியை மறக்கடிக்கக் கூட மஷுவரா தேவை. கனவு கண்டு மகனை குர்பானி கொடுக்க முடிவு செய்யும் முன் இப்ராஹீம்
நபியவர்கள் தன் மகனிடம் ஆலோசனை கேட்கிறார். இஸ்லாமிய ஆட்சித் தேர்வு முறை மஷுவராவின் அடிப்படையிலானது. அன்னை ஆயிஷா ரலி அவர்கள் மீது நயவஞ்சகர்கள் இட்டுகட்டிய போது நபிகள் நாயகம் தன்னை விட வயதில் குறைந்த ஹழ்ரத் அலி ரலியிடமும் உஸாமா ரலியிடமும் ஆலோசனை பெற்றார்கள். ஹுதைபிய்யா உடன்படிக்கையில் அதிருப்தி அடைந்த சஹாபிகளை நேர்வழிபடுத்த நபிகள் நாயகம் உம்மு ஸலாமா ரலியிடம் ஆலோசனை பெற்றார்கள். ஒன்று தெரியுமா? மனைவியிடம் கணவன் ஆலோசனை பெறுவது சுன்னத். உங்கள் அத்தாக்கள் உங்கள் அம்மாக்களின் ஆலோசனைகளை பெறுகிறார்களா?”
“எப்போதாவது ஒஸ்தாத்பீ”
“நான்கு பேர் சேர்ந்து ஒரு ஆலோசனையில் ஈடுபட்டால் நால்வரில் ஒருவரை அமீராக நியமித்துக் கொள்ள வேண்டும். அல்லாஹ்வை விசுவாசித்து நபிகள் நாயகத்தை பின்பற்றும் உம்மத்துகள் மஷுவரா செய்தால் ஒற்றுமையாக
இருப்பார்கள் ஹிதாயா பெறுவார்கள். மஷ்வராவில் ஒவ்வொருவரும் தூய இதயத்துடன் அமர்ந்து அனைவருக்கும் சரியான வழிகாட்டல் காட்ட அல்லாஹ்விடம் பிரார்த்திக்க வேண்டும். நேர்மையுடன் அமர்ந்தால் தவறு சரி
செய்யப்படும்.
மஷ்வராவில் கருத்து முரண்பாடோ கருத்து திணிப்போ டாமினேஷனோ கூடாது. தேன் கூட்டில் இருந்து தேன் எடுப்பதே மஷ்வரா. மஷ்வராவில் வளவளா கொளகொளாவென்று நீண்ட நேரம் ஒருவர் பேசக் கூடாது. எதிராளி கேட்கும் வரை கருத்து சொல்லக்கூடாது. ஒருவர் பேசும்போது முந்திரிக்கொட்டைத் தனமாய் குறுக்கேப் பேசக்கூடாது. மஷ்வராவில் கோபம் விரக்தி கூடவே கூடாது. மஷ்வராவில் நேர்மறை நோக்கம் அதிமுக்கியம். பிறர் ஆலோசனையைக் கேலி செய்து சிரிக்கக் கூடாது. ஆலோசனை முடிந்து காரியம் தவறாய்ப் போய் விட்டால் யார் மீதும் பழி சுமத்தாதீர்கள். தினமும் நூறு தடவை அஸ்தக்ஃபிருல்லாஹ் (நான் அல்லாஹ்விடம் மன்னிப்பு கோருகிறேன்) சொல்லுங்க!”
“அஸ்தக்ஃபிருல்லாஹ்!” சிறுமிகள் முணுமுணுத்தனர்.
“சரியான ஆலோசனை அமிர்தம் என்றால் தவறான ஆலோசனை ஆலகாலவிஷம். ஆலோசனைகளை மனத்தராசில் இட்டு எடைபோட்டு தெளிவடைய வேண்டும். ஆலோசனைக்குரியவர்கள் பெற்றோர், ஆசிரியர், மதக்குருமார்கள் மற்றும் நல்ல நண்பர்கள். பொதுவாக எந்தப் பிரச்சனை என்றாலும் அதில் நம் கண்ணோட்டத்தின் தரம் உயர வேண்டும் நான் என்கிற அகம்பாவம் அதளபாதாளத்தில் தலைகுப்புறத் தள்ளிவிடும்!”
“கபர்ஸ்தான் விஷயத்தில் நாங்கள் மஷ்வரா பண்ணலாமா?”
“ஓ!”
“ஏற்கனவே ஒரு கபர்ஸ்தான் இருக்கையில் புதுகபர்ஸ்தான் எதற்கு?
கபர்ஸ்தான் அமைக்கத் திட்டமிட்ட இடத்தில் இலவச நீட்கோச்சிங் சென்டர் அமைக்கலாம். அது எங்கள் அக்காமார்களுக்கு பேருதவியாக இருக்கும்!” என்றார்கள் சிறுமிகள் ஒரேக் குரலில்.
“மாஷா அல்லாஹ். இதே கருத்துதான் எனக்கும் தொடர்ந்து மஷ்வரா செய்வோம்!” என்றார் ஆமீனா முஹம்மது.