“தெற்கு உக்கடத்தின் நம்பர் ஒன் அத்தா நான்தானே?” மனைவியை வினவினார் சிராஜுல்ஹஸன்.
ஹஸனுக்கு வயது 65 முதன்மை மருந்தாளுநராக பணிபுரிந்து 2018ல் பணி ஓய்வு பெற்றவர். ஹஸனின் மனைவி பெயர் ஜமீலா. ஹஸன்-ஜமீலா தம்பதியினருக்கு இரண்டு பிள்ளைகள். மூத்தது மகள். கணவர் குழந்தைகளுடன் நியூசிலாந்தில் வசிக்கிறாள். மகள் முதுகலை மின்னணுப் பொறியியல் மற்றும் முதுகலை மேலாண்மை நிர்வாகம் படித்தவள். இரண்டாவது மகன். அவனின் பெயர் இப்னு பத்ர். ஸ்பீச் தெரபிஸ்ட்டாக கிளினிக் வைத்திருக்கிறான். அவனது மனைவியும் ஒரு ஸ்பீச் தெரபிஸ்ட்தான். இருவருக்கும் மூன்றே கால் வயதில் ஒரு மகன் இருக்கிறான்.
“என்ன சொன்னீங்க… காதுல விழல!” காதில் கை வைத்துக் கேலியாக வினவினாள் ஜமீலா.
“ஐ எம் தி பெஸ்ட் அத்தா இன் சௌத் உக்கடம். இல்லையா?”
வாயை மூடிக் கொண்டு சீமான் போலச் சிரித்தாள் ஜமீலா.
“அப்படியா? அப்டின்னா யாராவது சொல்லி உங்களுக்கு அவார்டு கொடுத்திருக்காங்களா?”
“யாரும் சொல்லனுமா என்ன? என் மனசுக்குத் தெரியாதா என்ன?”
“டெல்லில இருக்ற உங்க மகன்கிட்டச் சொல்லிப் பாருங்க. அவன் ஒத்துக்கிரானான்னு…”
“நேத்தைக்கிப் போன்ல சொன்னேன்… தற்பெருமை பீத்திக்காதே.. போனை வைத்தான்னுட்டான்!”
“பெஸ்ட் அத்தான்னு சொல்லிக்கிற மாதிரி பிள்ளைகளுக்கு என்ன செஞ்சீங்க?”
“மூத்தவளை நாலு டிகிரி படிக்க வச்சேன். ஒரு இமாமின் மகனை மருமகனாக்கினேன். பேத்தியை நாலு வருஷம் நம்மளோடு வச்சு கவனிச்சிக்கிட்டோம். மகள் கொடுத்த காசில மகளுக்கு ஒரு வீடு கட்டிக் கொடுத்தோம்…”
“சரி!”
“இப்னுபத்ர் ஒலியியல் மற்றும் பேச்சு மொழி நோயியலில் இளங்கலை பட்டமும், முதுகலை குழந்தை மனநல மருத்துவமும் படிக்க வச்சோம்…”
“ஆமா அதுக்கென்ன? மத்த அத்தாமார்கள் தங்கள் மகன்களைப் படிக்க வைக்காம மாடு மேய்க்கவா அனுப்புராங்க?”
“ஒன்றரை வருஷம் தமிழ்நாடு முழுக்க அலைஞ்சு அம்பதுக்கும் மேற்பட்ட பெண்கள் பார்த்து ஒரு சிறப்பான பெண்ணை இப்னுபத்ருக்கு மணம் முடித்து வைத்தோம்!”
“சரி!”
“பொண்ணு வீட்டுக்காரங்ககிட்ட வெக்கத்தை விட்டுக் கேட்டு ஆடியோ விஷுவல் எய்ட்ஸ் உடன் மகனுக்கு ஒரு கிளினிக் அமைச்சு தர வைச்சம்!”
“கிளினிக் வச்சதுல புல் கிரிடிட் சம்பந்தி வீட்டாருக்குதான்!”
“கிளினிக் திறப்பு விழாவை மிகப்பெரிய விஐபி வைத்து நடத்திக் கொடுத்தேன். கிளினிக் திறப்புச் செய்தியை எல்லாத் தினசரிகளிலும் பிரசுரிக்க ஏற்பாடு செஞ்சேன்!”
“அப்றம்?”
“பணி ஓய்வுக்கு பிறகு தனியாக இருந்த நாம், மகனின் குடும்பத்துக்குப் பாதுகாவலாக நிற்க அவன் குடும்பத்துடன் வந்து உறைந்தோம்!”
“இது பெரிய தியாகமா?”
“பேரன் பிறக்கிறப்ப பேரனுக்குப் பெயர் வைக்கும் உரிமையை மருமகளுக்கு விட்டுக் கொடுத்தேன்!”
“உங்களுக்கு உரிமை இல்லாத விஷயத்தை எப்படி விட்டுக் குடுப்பீங்க?”
“கோவையில் மகன் வாடகை வீட்டில் இருப்பது நெஞ்சுக்கு பொறுக்கவில்லை. சென்னையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு பிளாட் நமக்குச் சொந்தமாய் உள்ளது. அதனை மகளுக்குக் கொடுத்திடுவோம். மகனுக்குக் கோவையில் ஒரு இடம் வாங்கி வீடு கட்டிக் கொடுத்து விடுவோம் என ஐடியா பண்ணினேன்!”
“நீங்க பணியில் இருக்கும் போது சிக்கனமாக இருந்திருந்தா இப்ப நம்மகிட்ட நாலு வீடு சொந்தமாய் இருக்கும்!”
“கையிலிருந்த சேமிப்பு பணத்தை வைத்து ஒண்ணேமுக்கால் சென்ட்டில் இதிரீஸ் நகரில் ஒரு மனை வாங்கினோம். மனை வாங்க சம்பந்தி வீட்டாரும் உதவினர்!”
“ஆமாம்!”
“இருபத்தியைந்து லட்சம் ரூபாய் வங்கிக் கடன் வாங்கி மகனுக்கு வீடு கட்டிக் கொடுத்திட்டோம். வீட்டுக் கடனுக்கு மாதம் 42,000 ரூபாய் கட்டுகிறோம். இன்னும் ஆறே வருஷத்தில் வீட்டுக் கடனைக் கட்டி முடித்திடுவோம்!”
“இடுப்பு வேட்டியையும் கழற்றிக் கொடுத்திட்டு ரோட்ல நிக்ற மாதிரில பேசுறீங்க. உங்க பென்ஷன் 52,000 ரூபாய். உங்க கவுன்ஸலிங் வருமானம் மாதம் 15 ஆயிரம் ரூபாய். சென்னை வீட்டு வாடகை 7000 ஈஎம்ஐ கட்டியது போக உங்களுக்கு 32,000ரூபாய் மிஞ்சுது. உங்களுக்கும் எனக்கும் மாதமருந்து செலவு மூவாயிரம் ரூபாய். வாரம் அஞ்சு சினிமா போறீங்க. ஊர்ல உள்ள எல்லா ஒடிடிக்கும் பணம் கட்டி உலக சினிமா பூராவும் பாக்றீங்க. வருஷம் ஆறு சுற்றுலாக்கள் போறீங்க. உங்க சந்தோஷத்ல ஒரு சிறு சதவீதமாவது இழந்திருக்கீங்களா? வீட்டு வாடகை தராம மகன் வீட்டின் இருமாடி அறைகளை பயன்படுத்தி கொள்றீங்க. கரன்ட் செலவு சமையல் செலவு எல்லாம் நமக்குச் சேத்து மகன் பார்த்துக்கிரான்!”
“மகனுக்கு போஸ்டல் இன்ஷுரன்ஸ் கட்றேன். மகனின் பிஹெச்டி முதல் வருட கல்வி கட்டணம் ஒரு லட்சத்தை கட்டினேன். பேரக் குழந்தைகள் மூன்றின் பேரிலும் போஸ்டல் சிறுசேமிப்பு கணக்கு தொடங்கி பணம் கட்டி வருகிறேன்.
பேரனை ஒரு நாளைக்கு பத்து மணி நேரம் கவனிக்கிறோம் மொத்தத்தில் மகன் குடும்பத்துக்கு காவல் தேவதைகளாக ஊழியம் செய்கிறோம்!”
“தாய்ப்பால் இவ்வளவு கொடுத்தேன் என்று எந்த தாயாவது குழந்தைகளிடம் சொல்லிக் காட்டுவாளா?”
“பள்ளிவாசல் சந்தா நகர் சந்தா கட்ரோம். நகருக்கு தலைவராக இருந்து நகருக்கான அடிப்படை வசதிகளைப் போராடி நம் புதுவீட்டுக்கும் பெற்றுத் தந்திருக்கிறேன்!”
“அவ்வளவுதானா? இன்னும் இருக்கா?”
“தட்ஸ் ஆல் யுவர்ஆனர்!”
“மிஸ்டர் கணவர் உங்களை விடச் சிறப்பான அத்தாமார்களில் ஒரு சாம்பிளை உங்களுக்கு அருகிலேயேக் காட்றேன்!”
“ஸ்கூட்டியை ஸ்டார்ட் பண்ணவா?”
“இல்ல வெகுவெகு அருகில்தான்!”
எங்களது வீட்டிலிருந்து நூறடித் தொலைவில் ஒரு வீடு எழும்பிக் கொண்டிருந்தது. தலையில் செங்கல் சுமந்து கட்டப்படும் வீட்டுக்குள் நடந்தார் அவர்.
அவர் பார்க்க பழைய வில்லன் நடிகர் ஆர்.எஸ். மனோகர் மாதிரி இருந்தார். திமிசுகட்டை உடல்வாகு. கைவைத்த அழுக்கு பனியன். ரிக்ஷாக்காரன் எம்ஜிஆர் போல கால் பகுதி பேன்ட்டை சுருட்டி விட்டிருந்தார். முகத்தில் மருதாணி பூசிய தாடி. வயது 60 இருக்கும்.
“நீங்கள் பார்க்கும் நபரின் பெயர் அப்துல் ரகீப்தீன்!”
“இவர்தான் இந்த வீட்டு கொத்தனாரா?”
“இவர்தான் இந்த வீட்டு கொத்தனார் மேஸ்திரி மற்றும் சிவில் என்ஜினியர். டி ராஜேந்தர் மாதிரி ஆல் இன் ஆல் அழகுராஜா!”
“ஓஹோ!”
“இவர் ஒப்பணக்கார வீதி நடைமேடையில் மாற்றுச் சாவி செய்து தரும் நடமாடும் கடை வைத்திருக்கிறார். அதில் வந்த வருமானத்தை வாயைக்கட்டி, வயிற்றைக்கட்டி சிறுசுசிறுகச் சேர்த்து இந்த மனையை வாங்கினார். இந்த மனைக்கு
தானே ஒரு ப்ளூ பிரிண்ட் தயாரித்தார். கடந்த எட்டு மாதங்களாக இந்த வீட்டைத் தனியாளாக கட்டிக் கொண்டிருக்கிறார். காலையில் எட்டு மணிக்கு வேலையைத் தொடங்குவார். இரவு எட்டு மணிக்கு வேலையை முடிப்பார். சில நாட்களில் இவர் மனைவி வந்து சித்தாள் வேலை செய்து கொடுப்பார். 12 மணி நேர வீட்டு வேலையில் இரண்டு வடை ஒரு டீதான் இவர் உணவு. கடந்த எட்டு மாதங்களில் யாரின் முகத்தையும் ஏறெடுத்து பார்க்க மாட்டார். ஜின் மாதிரி பகபகன்னு வேலை பார்ப்பார்!”
“வாவ்!”
“நாம் சிவில் இன்ஜினியர் வச்சு 25 லட்சத்தில் கட்டின வீட்டை இவர் வெறும் 12 லட்சத்தில் தரமாகக் கட்டுகிறார். போன வாரம் பத்தடி உயரத்திலிருந்து விழுந்து காயமானார். மருத்துவம் பார்த்துவிட்டு பணியைத் தொடர்கிறார்!”
“இவரின் வீடு இப்ப எங்கிருக்கு?”
“மனைவியும் கணவரும் ஒரு குடிசையில் வாழ்கிறார்கள்!”
“அப்டின்னா இந்த வீட்டை யாருக்காக கட்டுராங்க?”
“மகனுக்காகக் கட்டுகிறார். வீட்டைக் கட்டி முடித்து பால் காய்ச்சி விட்டு வீட்டுச் சாவியை மகனிடம் கொடுத்துவிட்டு இவரும் இவரது மனைவியும் குடிசை வீட்டுக்கேத் திரும்பி விடுவார்களாம்!”
“மகன் என்ன செய்கிறான்?”
“தள்ளு வண்டி பழக்கடை வைத்திருக்கிறான் புதிதாகத் திருமணமானவன்!”
“இப்படிப்பட்ட தியாகத்தை மகன் கேட்டானா?”
“கேட்காமல் செய்வதுதான் தியாகம் இஸ்லாமியர்களில் மட்டுமல்ல பிறமதச் சகோதரர்களின் பல தந்தைமார்கள் பெற்ற மகன் மகளுக்காகப் பல தியாகங்களைச் செய்கின்றனர். தேடிப் போனால் நமக்கு ஆயிரம் ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. நான்தான் பெஸ்ட் அத்தா என்கிற இறுமாப்பு எதற்கு? நம் குழந்தைகளுக்கு நம்மால் ஆன வசதி வாய்ப்புகளைச் செய்ய இறைவன் நம்மை அனுமதித்தான் என்கிற சுய திருப்தி கொள்வோம். இன்று நீங்கள் உங்கள் மகனுக்குச் செய்றதை நாளை உங்கள் மகன், அவனது மகனுக்கு செய்வான்… எல்லாவற்றுக்கும் அல்லாஹ் போதுமானவன்!” என்றாள் ஜமீலா.
சிராஜுல்ஹஸன் “மகனுக்கு சிறு துரும்பை கிள்ளிப்போட்ட லட்சக்கணக்கான அத்தாக்களில் நானும் ஒருவன்! கர்வம் ஒழித்தேன்!” இறைவனின் தாள் பணிந்தார்.