இர்பானா தஸ்னீம் டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர். கல்லாப்பெட்டியில் அமர்ந்திருந்தார் பர்ஹான் முகமது. வயது 52. பருமனான உடல்வாகு. ஒரு டன் சோகத்தைக் கடித்து விழுங்கி தொண்டையில் வைத்திருப்பது போல ஒரு விசனமுகம். தாடியை மருதாணி டை அடித்திருந்தார். வெள்ளை வேட்டியும் வெள்ளை முழுக்கை சட்டையும் அணிந்திருந்தார்.
அப்துல் அஜீஸ் வாகிதி கடைக்குள் நடந்தார். பர்ஹான் முந்திக்கொண்டு “அஸ்ஸலாமு அலைக்கும்!”
“வஅலைக்கும் ஸலாம்!” அப்துல் அஜீஸ் வாகிதி நகரப்பள்ளியில் இமாமாக இருப்பவர். அனைவரும் அவரைச் செல்லமாக ‘ஜீன்ஸ் இமாம்’ என அழைப்பர். தொழுகை இல்லாத நேரங்களில் பல வண்ணமயமான ஆடைகள் அணிந்து நகர்வலம் வருவார். சென்ட் பிரியர். வீட்டில் ஆறு பூனைகள் வளர்க்கிறார். நகைச்சுவையாய் பேசுவதில் சமர்த்தர்.
“என்ன சகோ... உம்முனாம் மூஞ்சியாக உட்கார்ந்திருக்கிறீர்கள்... என்ன விஷயம்?”
கல்லாப்பெட்டியை, கடை சிப்பந்தியைக் கவனிக்க சொல்லிவிட்டுத் தனி அறைக்கு ஒதுங்கினர்.
“எனக்கு வாழவேப் பிடிக்கல ஹஜ்ரத்!”
“வாழை பிடிக்கலைன்னா, தென்னை வச்சுக்கங்க சகோ...”
“ஜோக் அடிக்க இதுவல்ல நேரம்… நான் இடிந்து போய் உட்கார்ந்திருக்கிறேன்… கடந்த ஐந்து வருடங்களில் கடையில் எண்பது லட்சம் ரூபாய் நஷ்டம். வியாபாரம் எட்டிக்காயாய்க் கசக்கிறது. சில சமயங்களில் தற்கொலை எண்ணம் மனதிற்குள் தலை விரித்து ஆடுகிறது”
“ஒரு மூமீனுக்கு தற்கொலை தடுக்கப்பட்ட விஷயம்…”
“இந்த வருட டிசம்பரோட கடை நஷ்டம் ஒரு கோடி ஆகிவிடும்… வீட்டை விற்று நகைகளை விற்றுப் பணம் சேர்த்தாலும் அம்பது லட்சம் சேராது. மஞ்சள் நோட்டீஸ் கொடுத்துவிட்டு ரோட்டோர குடிசைக்குப் போய்விடலாமா என யோசிக்கிறேன்!”
“சகோ.. அவசரப்படாதிங்க. எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு அல்லாஹ் வச்சிருக்கான்… நான் எம்பிஏ படிச்ச ஆலிம். நான் உங்களுக்கு உதவ முடியும்!”
“எப்படி?”
“உங்க டிபார்ட்மென்ட்டல் ஸ்டோரின் அனைத்து விஷயங்களையும் அடுத்த ஒரு வாரம் அலசி ஆராயப் போகிறேன். எட்டாவது நாள், உங்களிடம் ஒரு ரிப்போர்ட் கொடுப்பேன். அந்த ரிப்போர்ட்டை அப்படியே நீங்கள் அமுல்படுத்தினால் நஷ்டம் காணாமல் போய் லாபம் துளிர்த்து விடும்!”
“நடக்குமா?”
“இரண்டாயிரம் நாட்களில் 90லட்சம் நஷ்டம். அதாவது ஒரு நாளைக்கு 4500ரூபாய் நஷ்டம். மிக எளிதாகச் சரிப்படுத்திவிடலாம்!”
“என் நஷ்டத்தை சரிப்படுத்திக் கொடுக்கும் உங்களுக்குச் சம்பளம்?”
“சரிப்படுத்திய பின் கேட்டு வாங்கிக் கொள்கிறேன்!”
“மகிழ்ச்சி!”
“எல்லாவற்றுக்கும் அல்லாஹ் போதுமானவன்!” ஆலாபித்தார் வாகிதி.
மறுநாள் காலை… தஸ்னீம் டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர் திறப்பதற்கு முன் போய் நின்று விட்டார் வாகிதி. கடை ஊழியர்களைத் தனித்தனியாக நேர்காணல் செய்தார். அவர்களது குடும்பப் பின்னணியைக் கேட்டுத் தெரிந்துக் கொண்டார். ஸ்டோரின் குடோவுனுக்கு போனார். காலடியில் ஒரு எலி புகுந்தோடியது.
கடையில் எத்தனை மின்விளக்குகள் உள்ளன என எண்ணினார். நாற்பது இருந்தன. டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர் திறக்கும் நேரம், மூடும் நேரம் கேட்டறிந்தார்.
அக்கம்பக்கத்தில் என்னென்ன கடைகள் உள்ளன என நோட்டமிட்டார்.
200அடி தூரத்தில் கீர்த்தி டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர்!
பெயர்ப்பலகை இல்லாத மூன்று மளிகை கடைகள்! இரு பெட்டிக்கடைகள்!
அனைத்துக் கடைகளிலும் விலைப்பட்டியல் கேட்டுச் சேகரித்தார்.
“சகோ! உங்க கடைல உறவினர்கள், நண்பர்கள் வந்து ப்ரீயா பொருட்கள் எடுத்துப் போவார்களா?”
“போவார்கள்!”
“ப்ரீயாக பொருட்கள் எடுக்க வராதீர்கள் எனச் சொல்ல வேண்டியதுதானே?”
“வாய்திறந்து சொல்ல சங்கோஜப்படுகிறேன்!”
“உங்க கடைப் பொருட்களை மொத்தமாக எங்கே வாங்குகிறீர்கள்?”
“மொத்த வியாபாரிகளிடமிருந்து...”
“எக்ஸ்பயரி பொருட்களைத் திருப்பி வாங்கிப்பாங்களா?”
“இல்ல...”
“உங்க கடைல டோர் டெலிவரி உண்டா?”
“இல்லை!”
“ஏன்?”
“அதைப் பொறுப்பா செய்ய ஆளில்லை!”
“உங்கள் டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர் ஊழியர்கள் வரும் வாடிக்கையாளரிடம் எப்படிப் பேசுகிறார்கள் என்பதனைக் கவனித்து இருக்கிறீர்களா?”
“இல்லை!”
“ஏன்?”
“அது பெரிய விஷயமில்லை என நினைக்கிறேன்!”
“அதுதான் மிகப்பெரிய விஷயம். கனிவான அனுசரனையான இதம். பதமான பேச்சு ஆயிரம் வித்தைகளைப் புரியும்…”
“இம்!”
“நீங்கள் முஸ்லிம் என்பதால் முஸ்லிம் அல்லாத வாடிக்கையாளரிடம் சற்று ரப் அண்ட் டப்பாக உங்கள் ஊழியர்கள் நடந்து கொள்ள வாய்ப்பிருக்கிறதா?”
“வாய்ப்பிருக்கிறது!”
“வியாபாரத்தில் மத உணர்வு குறுக்கிடக்கூடாது!”
“சரி!”
“தினசரிக் கணக்கைச் சரி பார்த்த பின்புதானே வீட்டுக்குப் போவீர்கள்?”
“அதற்கு ஒரு மணிநேரம் இரண்டு மணிநேரம் ஆகுமே... வாரம் ஒரு முறை கணக்கைச் சரி பார்ப்போம்!”
“ஹிமாலயன் தவறு. மூன்று மணி நேரமானாலும், தினசரி கணக்குப் பார்த்தேத் தீர வேண்டும்!”
தலையாட்டினார் பர்ஹான் முகமது.
தினம் காலையில் இரண்டு மணி நேரம். மாலையில் இரண்டு மணி நேரம். ஒரு வாரத்தில் மொத்தமாக 28மணி நேரம் வாகிதி கடைப் பிரச்சனைகளைத் தணிக்கை செய்தார்.
- எட்டாவது நாள்...
தேநீர் அருந்தியபடி அமர்ந்திருந்தார் வாகிதி.
அழகிய முகமன்கள் பரிமாற்றம்.
“பர்ஹான் முகமது இங்கு நான் ஒரு மருத்துவன். நீங்கள் ஒரு நோயாளி. உங்களுக்கு வந்திருக்கும் நோயைக் கண்டறிந்து பிரிஸ்கிரிப்ஷன் எழுதி கொடுத்திருக்கிறேன்…” ஒரு சீட்டை நீட்டினார்.
அதில் -
1. உங்கள் கோடவுனில் எலித்தொல்லை அதிகம் இருக்கிறது. ரோடன்ட் கன்ட்ரோலை தொடர்பி எலி பிரச்சனையை நிரந்தரமாக ஒழியுங்கள்.
2. உங்கள் கடை மின்விளக்குகள் மின்சாரத்தைச் சாப்பிடுகின்றன. எல்.ஈ.டி பல்புகளுக்கு மாறுங்கள்.
3. புத்திசாலித்தனமான தரமான பொருள் கொள்முதல் தேவை. எக்ஸ்பயரி டேட் முடிந்த பொருட்களை ஒரு நாளும் விற்காதீர்கள்.
4. திருட்டு, சுயசுத்தமின்மை, மதவெறி, சோம்பேறி ஊழியர்களைக் கழித்துக் கட்டுங்கள். ஊழியர்களுக்குச் சீருடை வழங்குங்கள்.
5. மற்ற கடைகளை விட ஒரு ரூபாய் விலை குறைவாய் பொருட்ளை விற்றுப் பாருங்கள். லாபத்தில் சிறுதுளி குறையும். ஆனால் வியாபரம் செழிப்பமாகும்.
6. தினசரிக் கணக்கு பார்த்தல் கட்டாயம்.
7. உறவினர் நண்பர் தலையீடு தவிர்க்கவும்.
8. கடையை முன்னதாகத் திறந்து பின்னதாக மூடுங்கள்.
9. எல்லா வாடிக்கையாளரையும் சமமாக நடத்துங்கள்.
10. ஒவ்வொரு தொழுகையின் போதும், ஓய்வின் போதும், கீழ்க்கண்ட துஆவை ஓதுங்கள். ‘அல்லாஹும் மக்ஃபீனீ பி ஹலாலிக்க அன் ஹராமிக்க, வஅஃக்னினி பி ஃபள்விக்க அம்மன் ஸிலாக்க!’ (யா அல்லாஹ்! நீ விலக்கியதை விட்டும் நீ ஆகுமாக்கியதைக் கொண்டும் எனக்குப் போதுமாக்குவாயாக. மேலும், உனது கிருபை கொண்டு உன்னைத் தவிர உள்ள அனைத்தை விட்டும் என்னை தேவையற்றவனாக ஆக்குவாயாக!)
- ஆறு மாதங்களுக்கு பின்…
கடைக் கணக்கை நீட்டினார் பர்ஹான் முகமது. ஒரு நாளைக்கு பனிரெண்டாயிரம் லாபம் வீதம் 180 நாளைக்கு இருபத்தியோரு லட்சத்து அறுபதாயிரம் லாபம் வந்திருந்தது.
“சகோ.. இன்னும் இரண்டரை வருடங்களில் உங்கள் கடன் முழுக்க அடைந்து விடும்...”
“இமாம்.. மலையளவு கடன் அடைந்தது உங்கள் சீர்திருத்தங்களாலேயா? அல்லது நான் ஓதுன துஆவாலயா?”
“ஒரு தேநீர் தயாரிக்க பால், தேயிலை, ஜீனி, இஞ்சி தேவை. ஆனால், அனைத்தையும் நெருப்பால் சூடுபடுத்தினால்தான் சுவையான தேநீர் கிடைக்கும். உங்கள் சீர்திருத்த நடவடிக்கைகளுக்கான நெருப்பு உங்க துஆ மட்டுமே…”
“உங்கள் சம்பளம்?”
“பள்ளிவாசலின் இரண்டாம் மாடி கட்ட ஆகும் மொத்த சிமென்ட் செலவை ஸ்பான்ஸர் செய்து விடுங்கள் சகோ!”
கபர்ஸ்தானில் ஸ்கிப்பிங் கயிறு ஆட ஆரம்பித்தார் அப்துல் அஜீஸ் வாகிதி.